ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
பார்த்தன் அறு சமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணி –
இவ்விபூதியில்-இவர் ஸ்தாபித்த வர்த்தம் ஏது என்ன –
சகல சேதன அசேதனங்களும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணினார் என்றும் –
அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான் -என்று பரம புருஷார்த்த சாம்ராஜ்யத்தை கொடுத்தார் என்றும் –சொன்னீர் –
அம் மாத்ரமேயோ -அவர் செய்தது என்னில் -அவ்வளவு அன்று –
சகல அபேஷிதங்களையும் –
1–அபேஷா நிரபேஷமாக கல்பகம் போலே கொடுக்குமவராய் –
2-சௌசீல்யம் உடையவராய் –
3-அத்ய ஆச்சரிய பூதராய் –
4–ஆர்ஜவ குண யுக்தரான ஸ்ரீ எம்பெருமானார் –சகல லோகங்களிலும் இருந்து உள்ள சகல ஆத்மாக்களும்
சர்வ ஸ்மாத் பரனுக்கே சேஷ பூதர் என்று இந்த லோகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
அறு சமயங்கள் பதைப்ப பார்த்து இவர் இவ்வுலகத்தில் நிலை நாட்டின பொருள்
ஏது என்ன –எல்லாப் பொருள்களும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்ற
இந்த நற் பொருளை நிலை நாட்டி யருளினார்-என்கிறார் .
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –
வியாக்யானம் –
என்னை அடிமை கொள்ளுகைக்காக நான் கிடந்த விடம் தேடி வந்த பரம உதாரராய் –
அறிவுடையார் ஆசைப்படும் படியான சௌசீல்யத்தை உடையராய் -அதி மானுஷமான செயல்களை செய்கையாலே –
ஆச்சர்ய பூதராய் ஆஸ்ரிதர் உடைய கௌடில்யதை பார்த்து-கை விடாதே –
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே தம்மை
அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான ஸ்ரீ எம்பெருமானார்
நினைக்கப் புக்கால் நினைத்து தலைக் கட்ட -அரிதாம்படி அஸங்க்யாதரான ஆத்மாக்களுக்கும் -அவர்களுக்கு வாசஸ்தானமாய் –
அஸங்க்யாதமாய் இருக்கிற சகல லோகங்களும் -சர்வ ஸ்மாத் பரனுக்கே சேஷம் என்கிற சீரிய அர்த்தத்தை-
இந்த லோகத்திலே ஒருவர் அபேஷியிதாய் இருக்கத் தாமே வந்து ஸ்தாபித்து அருளினார் .
கற்பகத்தைக் காட்டில் இவர்க்கு விசேஷம் -அடிமை கொள்ளுகையும் -இருந்த இடம் தேடி வருகையும்
காமுறுதல்-விரும்புதல்
பற் பல்லுயிர்கள்-பல பலவான உயிர்கள்-அசந்க்க்யாதரான உயிர்கள் என்றபடி
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்தேற்றம் வருகையால் அது சேராது –
ஆனால் பல்லுலகியாவும் -என்றால் எழுத்தேற்றம் வாராதோ என்னில்
உரைக்கின்றனனுமக்கியான் -49-என்கிற இடத்தில் போலவே –
பல்லுலகியாவும் -என்கிற இடத்தில் -இகரமும் குற்றியலிகரமாய் வண்ணம் கெடாமைக்கு-கழிவுண் கையாலே எழுத்தேற்றம் வாராது
நாட்டுதல்-ஸ்தாபித்தல்–
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்-நல் பொருள் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தாய் –
வந்தாய் மனம் புகுந்தாய் அதனால் சிந்தனைக்கு இனியாய் என்று அறிந்தேன் -ஸ்ரீ அமுதனார் இருந்த இடம் தேடி வந்தார்
காமுறு சீலர் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்ரீ உடையவர் திரு மேனியில் ஈடுபட்டதால் -ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் இரு கரையர் என்பர்
ஸ்ரீ கோபிந்த ஜீயர் யதி தர்மம் சமுச்சயம் -யாதவ பிரகாசர் மாறி உடையவர் திருவடி அடைந்து
என்னை யாள-
ஸ்ரீய பதியினுடைய திவ்ய ஆக்ஜ்ஜையாலே -சகல லோக உஜ்ஜீவன-விஷயமாக அவதரித்தாரே ஆகிலும் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய -என்கிறபடியே
லோகத்தார் எல்லாரிலும் -நீசனேன் நிறை ஒன்றுமிலேன் -என்கிறபடியே அத்யந்த நிஹினனான
என்னிடத்தில் கிருபை பண்ணி அருளி -அடியேனை அடிமை கொள்ளுகைக்காக –
வந்த கற்பகம் –
தம்மை ஒருவரை-ரஷிக்கைக்காக அவதரித்தார் என்று காணும் இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –
வந்த கற்பகம் –
நித்ய விபூதியில் இருந்து-லீலா விபூதிக்கு எழுந்து அருளின கற்பகம் –
கல்பகம் போலே அபீஷ்டார்த்த ப்ரதரானவர் -ஜடமாய் ஸ்தாவரமாய்-ஐஹிக புருஷார்த்த மாத்ர ப்ரதமாய் –
ஒரு தேச விசேஷத்தில் தானே நியதமாய் இறே அந்த கல்பகம் இருப்பது –
இந்த கல்பகம் அதில் நின்றும் –
1-அதி விலஷணமாய் –2-அப்ராக்ருதமாய் –3–அஜஹத்ரி வர்க்கமபவர்க்க வைபவம் -என்றும்
நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்றும் –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள் -என்கிறபடி
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கடவ ஔ தார்யத்தை உடையதாய் –
4–உபய விபூதியிலும் வியாபித்து இருப்பதாய் –
5–நித்தியமாய் நிற்பது ஓன்று இறே –
ஆகையால் -வந்த கற்பகம் -என்று
சாகா சந்திர நியாயேன புத்த்யாரோபத்துக்காக சொன்னார் இத்தனை –
நான் கிடந்த இடம் தேடி வந்து-விஷயீ கரித்த இது – மகா ஒவ்தார்யம் என்று வித்தராய் காணும் –வந்த கற்பகம் என்கிறார்
என்னை ஆள வந்த கற்பகம்-
கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற
ஆட் கொள்கையும் -இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –
ஸ்ரீ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு ஸ்ரீ எம்பெருமானார் வந்தது தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -ஸ்ரீ அமுதனார் –
என்னை-
இரக்கவும் அறியாத என்னை –
என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே ஸ்ரீ எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்
சௌசீல்யம் ஆச்சர்ய சேஷ்டிதம் ஆர்ஜவம் நேர்மை உடையவர் நாட்டினார்–
1-கற்பகம் வள்ளல் மறைத்து வைக்காமல் வெளி இட்டார்–
2-அஞ்ஞானம் போக்கி இந் நானிலத்தே வந்து நாட்டியத்தால் சௌசீல்யம் –
3-ஆச்சர்யம் -இங்கு வந்து நாட்டிய செயல்–
4-ஆர்ஜவம்-தத்வ த்ரயம் சொல்லி ஏக தத்வம் போன்றவற்றை/சாஸ்திரம் ஒத்து கொண்ட நல் பொருளை நாட்டினார்
சிலருக்கு ஒரு காலத்தில் உபதேசித்து போகாமல்-ஸ்ரீ கீதாசார்யன் போல அன்றிக்கே –
அடிமை கொள்கையும் இருந்த இடத்தே வருகையும் கற்பகம் விட ஏற்றம் ஸ்ரீ ஸ்வாமிக்கு-
என்னை ஆள வந்த கற்பகம்-
தன்னையும் விடாமல் கை கொண்டதை அருளி கொண்டு வருகிறார்–
கற்றவர் காமுறு சீலன் –
சகல சாஸ்திரங்களையும் அப்யசித்தாதாலே ஜ்ஞாநாதிகாராய்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -என்று கொண்டாடப்படுகிற
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்-முதலான ஸ்ரீ முதலிகள் வ்யாமுக்தராய்
ஆசைப் படும்படியான ஸ்வபாவத்தையும்-சத்வ்ரத்தியையும் உடையவராய் –
அன்றிக்கே –
பெரியவன் தாழ்ந்தவருடன் புரையறக் கலந்து பரிமாறுகை யாகிற சீல குணத்தை உடையவர் -என்றுமாம் –
காமுறுதல் -விரும்புதல் –
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ கோயிலிலே வாழுகிற காலத்தில் -ஒரு நாள் மாத்யாஹ்ன சமயத்திலே-திருக் காவேரியிலே நீராடித்
திரும்பவும் எழுந்து அருளிகிற அளவிலே வழியில் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி எதிரே-எழுந்து அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்த மணலிலே சாஷ்டாங்கமாக தண்டன் இட்டு நிற்க -ஸ்ரீ நம்பியும்-அவரைக் கடாஷித்து -எழுந்திரும் -என்று
அருளிச் செய்யாதே வெறுமனே இருந்தவாறே -அச் சேர்த்தியை-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கடாஷித்து அருளி –
ஸ்ரீ நம்பீ இவரைக் கொல்ல நினைத்தீரோ – என்று சீறு பாறு செய்து -மணலிலே சாஷ்டாங்கமாக விழுந்து இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை வாரி எடுத்துக் கொண்டார் -என்று நம் முதலிகள்-கோஷ்டியில் பிரசித்தம் இறே –
கற்றவர் காமுறு சீலன் –
புன்மையாளனான என்னை ஆள வந்தமை யின் சீலமுடைமை தோற்றுகிறது –
இத்தகைய சீலம் கற்றவர்களால் விரும்பப் படுகிறதாம் –
கற்றவர் இடம் சீலம் காண்பது அரிது அன்றோ –
அது கற்றவர் ஆகிய ஸ்ரீ எம்பெருமானார் இடம்-இருப்பதைக் கண்டு கற்ற மற்றவர்களும் அதனை ஆசைப்படுகிறார்களாம் –
காமம் உறுதல்-காமுறுதல் –காமமுறுதல் என்பதன் மரூஉ
தன்னை கற்றவர் கோஷ்டியில் சேர்க்க வில்லை ஸ்ரீ அமுதனார்
அற்புதம் செம்மை –
அதி மானுஷங்களான சேஷ்டிதங்களை பண்ணுகையாலே -அத்புதராய் –
ஆஸ்ரிதருடைய-கௌடில்யத்தை பார்த்து கை விடாதே நீர் ஏறா மேடுகளிலே -விரகாலே நீர் ஏற்றுமா போலே –
தம்மை-அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணத்தை உடையவரான –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
கருதரிய –
நினைக்கப் புக்கால் -நினைத்து தலைகாட்ட அரிதாம்படி –
பற்பல் உயிர்களும் –
பலபடியான –பல் பல்-என்கையாலே -ஒரு ஜாதியே -அஸங்க்யாதமாய் -அப்படிப்பட்ட ஜாதி குலங்களும் -அஸங்க்யாதங்களாய்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் -என்கிறபடியே -எண்ணிறந்த ஆத்மாக்களும் –
பல் உலகியாவும் –
அந்த ஆத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமாய் –அஸங்க்யாதமாய் -இருக்கிற சகல லோகங்களும் –
கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகியாவும் –
இத்தனை என்று கருதிப் பார்த்து எண்ணித் தலைக் கட்ட முடியாமையின் கருதரிய-பற் பல்லுயிர்களும் என்றார் .
சுருதியும் -இறைவன் ஒருவனே –பல -பஹூ-உயிர்களுக்கு விருப்பத்தை அளிப்பதாக ஓதி உள்ளமை காண்க .
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -அது சரி அன்று
ஓர் அடிக்கு பதினேழு எழுத்து ஆதலின் நேர் பதினாறு என்ற இலக்கணத்தோடு பொருந்தாமையின் என்க .
பல் லுலகியாவும் என்ற பாடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆதலின் அது தனி எழுத்தாக எண்ணப்படாது –
பல்லுலகியாவும் –
அந்த உயிர்களுக்கு இருப்பிடமான எல்லா உலகங்களும் என்றபடி
பரனது என்னும் –
பரபரானாம் -என்கிறபடியே -பிரம்ம ருத்ராதிகளுக்கும் பரனாய் -ஸ்ரீய பதியானவனுக்கே -சேஷ பூதம் என்றும் –
சர்வே சோபி ச நாத நாகில ஜகத் வ்யாப்தாவ போதாமல நந்தாகார யுதோப்ய நந்த சூ குணஸ் சர்வாத்மாநாம் சாஸிதா
தேஹீ தாரண சாசநேசன முகை -ஸ்வாதீ ந நித்ய ஸ்த்திதி ஸ்வாமீ நித்யம நோக்ய-மங்களவபும் ஸ்ரீ பூமி நீள அதிப -என்கிறபடியே –
போக்ய போக உபகரண போக ஸ்தான போக்த்தர்த்தவங்கள்-எல்லாம் -சர்வ ஸ்மாத் பரனான-ஸ்ரீ நாராயணனுக்கே சேஷ பூதம் என்கிறது –
பரனது –
பிரமன் தொடங்கி எல்லா உயிர் களுக்கும் மேற்பட்டு இருத்தலின் இறைவன் பரன் எனப்படுகிறான் .
நம்மிலும் மேற்பட்டவர்கள் ஆகிய பிரமன் முதலியோர்க்கும் மேற்பட்டவன் என்னும் கருத்தில்
ஸ்ரீ நம் ஆழ்வார் -முழுதுண்ட பரபரன்-என்றார் .
பர பரன் ஆதலின் -புரம் எரித்ததும் -அமரர்க்கு அறிவு இயந்ததும் பரபரன் செயலே என்று அவர் கருதுகிறார் .
இங்கும் பற் பல்லுயிர்கள் என்று
பிரமன் உட்பட எல்லா ஆன்மாக்களுக்கும் மேற்பட்டவனாக பரன் என்று சொல்லுகையாலே
ஸ்ரீ நம் ஆழ்வார் கூறிய பரபரனே இங்கு அமுதனாரால் கருதப் படுகிறான் .
அந்தர்யாமியாக எழுந்து அருளி இருந்து புரம் எரித்தல் –முதலிய செயல்களை செய்தது போலே-
எல்லாப் பொருள்கள் இடத்திலும் –
நீராய் நிலனாய்..சிவனாய் அயனாய் -என்றபடி அந்தர்யாமியாக அவன் இருத்தலின்
சிவன் முதலியோர்-போலே எல்லா பொருள்களும் அவன் இட்ட வழக்காய் உள்ளமை போதரும் .
போதரவே -பொருள்கள் அனைத்தும் -உள் நின்று இறைவனால் நியமிக்க படுதலின் இறைவனுக்கு உடல் ஆகின்றன –
இறைவன் பொருள் அனைத்திற்கும் ஆத்மா ஆகிறான்
பிரியாது நின்று நியமிக்கும் பொருள் ஆன்மா என்றும்
அங்கனம் நியமிக்கப்படும் பொருள் உடல் என்றும்
ஆன்மாவுக்கும் உடலுக்கும் இலக்கணம் கூறுவர்
அத்தகைய உடல் உயிர் என்னும் தொடர்பே பரனது -என்கிற இடத்தில் –
அது –என்கிற
ஆறாம் வேற்றுமை உருபினால் கருதப்படுகிறது
இத்தொடர்பினை பிரதான பிரதிதந்த்ரார்ர்த்தம் -பிற மதத்தவரால் ஏற்கப் படாது –
நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப் பட்ட முக்கியமான பொருள்-என்பர் .
அத்தகைய முக்கியமான பொருள் என்பது தோன்ற –நற் பொருள்-என்றார் .
நற்பொருள் தன்னை –
யதாவஸ்தித தசமீசீ நஜ்ஞா நத்தை -அன்றிக்கே இப்படிப்பட்ட சீரிய அர்த்தத்தை-
இந் நானிலத்தே வந்து –
இந்த லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கைக்காக தாமே வந்து அவதரித்து அருளி –
நாட்டினானே –
ஒருவரும் அபேஷியாது இருக்கச் செய்தே -நிர்ஹேதுகமாக பிரதிஷ்டிப்பித்து அருளினார் –
நாட்டுதல் -ஸ்தாபித்தல் –
சிலருக்கு ஒரு காலத்தில் உபதேசித்து போன மாத்ரமே அன்றிக்கே –
லோகத்தார் எல்லாரும்-சர்வ காலமும் அனுபவித்து உஜ்ஜீவிக்கும் படியாக –
ஸ்ரீ பாஷ்யாதி முகேன பிரதிஷ்டாபனம் பண்ணி அருளினார்-என்றது ஆய்த்து –
யதண்ட மண்டாந்தர கோசரம் சயத்த சோத்தரான்யவரனா நியா நிச – குணாம் பிரதான புருஷ-பரமபதம்
பராத்பரம் பிரமசதேவிபூதையே -என்று ஸ்ரீ ஆள வந்தாரும் அருளிச் செய்தார் இறே –
கல்பத்தைக் காட்டிலும் இவருக்கு விசேஷம் –
அடிமை கொள்ளுகையும் -இருந்த இடத்தே வருகையும் –
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்து ஏற்றம் ஆகையாலே அது சேராது –
ஆனால் பல்லுலகியாவும் என்றால் எழுத்து ஏற்றம் வாராதோ என்றால்
உரைக்கின்றனனுமக்கியான்-என்கிற இடத்தில் போலே பல்லுலகியாவும் -என்கிற இடத்திலும்
இகரம் குற்றியலிகரமாய் வண்ணம்-கெடாமைக்கு வழி உண்டாகையாலே எழுத்து ஏற்றம் வாராது என்று
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
இந்நானிலத்தே –
இந் நற்பொருளை அறிய மாட்டாத இருள் தரும் இவ்வுலகிலே அதனை ஏற்கும்படி
ஸ்ரீ பாஷ்யம் முதலிய-நூல்களினாலும் வாதங்களினாலும் -இந் நற்பொருளை நிலை நாட்டினார் -என்க .
இங்கு பற் பல்லுயிர் பரனது என்கையாலே ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே -அவ வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின்
பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஸ்ரீ ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின .
——–
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் இது ஓர் அற்புதம் கேளீர் -3-6-1-
முற்ற வுலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ -4-10-4–
பறவை ஏறும் பரம் புருடா 5-4-2-
பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை -14 -10–
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட் கொள்வான் -115-
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே -10-
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -5–
பற்பல ஆயிரம் உயிர் செய்த பரமா -3-2-6–
ஆளும் பரமனைக் கண்ணனை -3-7-2-
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை
விட்டு சித்தன் விரித்தனவே —பெரியாழ்வார் -4-3-11-
பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து 4-10-3-
கற்பகக் காவன நற்பல தோளற்கு -6-6-6–
அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10-
ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறையுடையோம் -10-4-3-
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே -10-8-10-
———————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply