ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -மூன்றாம் பத்து –

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—-21-

இதில் ஸ்ரீ திருமலையில் ஏக தேசஸ்தரான ஸ்ரீ அழகர் உடைய அழகை முழுதும்
அனுபவித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்-கீழ்
அயன் மலையோடு-புறமலையோடு-திருப்பதியோடு உத்தேச்யமாக ஸ்ரீ திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற
மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ வட மா மலை உச்சி -என்கிற படியே
அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும்
அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற
மேலிரும் கற்பகமான ஸ்ரீ அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும்
வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும்
அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
முடிச் சோதியில் அர்த்தத்தை -முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

—————–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

இதில் சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு-ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழ்- ஸ்ரீ அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து-வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட
முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

———————

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

இதில்-கைங்கர்யத்தில் பெரிய பாரிப்பை பேசினபடியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரகிருதி சம்பந்தத்தின் உடைய கொடுமையை அனுசந்தித்து-2-2- சோகாவிஷ்டர் ஆன இவருடைய கிலேசத்தை
மாற்றுகைக்காக தான் வடக்கு ஸ்ரீ திருமலையில் நிற்கும் நிலையைக் காட்டிக் கொடுக்க
நிலை பெற்றேன் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்று அவனைக் கிட்டி தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்து வாழ வேணும் -என்று சீலாதிகனான ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
வழு விலா வடிமை செய்து வாழப் பாரிக்கிற
ஒழிவில் காலத்தின் தாத்பர்யத்தை ஒழிவிலாக் காலம் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

——————-

புகழ் ஓன்றும் மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

கீழ் பாரித்த கைங்கர்யத்துக்கு அனுகுணமாக அவன் சர்வாத்மபாவத்தைக் காட்ட அத்தைப் பேசி அடிமை செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக
ஒருப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும்
வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற
புகழு நல் ஒருவனில் -அர்த்தத்தை -புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

—————-

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

அடிமை செய்வாரை ஸ்துதித்தும் செய்யாதாரை நிந்தித்தும் போருகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி வாசிகமாக அடிமை செய்யப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷத்தாலே-இவ் வடிமையைக் காற்கடைக் கொண்டு
உடம்பை வளர்த்துக் கொண்டு திரியும் கழனி மிண்டரைப் பொடிந்தும்
பகவத் குண அனுபவத்தால் வந்த களிப்பிக்கு போக்கு விட்டு ஆடுவதும் பாடுவதும் ஆகிற அடிமை செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டாடியும்
ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற மொய்ம்மாம் பூம் பொழிலின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மொய்ம்பாரும் மாலுக்கு -இத்யாதியாலே-

——————

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

———————

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——27-

இதில் ததீயரை பத்தும் பத்தாக உத்தேச்யராக அனுசந்தித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –கீழே-சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்-காற்கடை கொள்ளுகையான
சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி – தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற
படியைக் கொண்டாடி அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற
பயிலும் சுடர் ஒளி யின் தாத்பர்யத்தை பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –-கச்சதா மாதுலகுலம் -இதிவத் –

——————-

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—28-

இதில் கரணங்களும் தாமும் பெரு விடாய் பட்டு பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரஸ்துதமான பகவத சௌந்தர்யாதிகள் விடாய்க்கு உத்தகம்பாய்
அத்தாலே விடாய் கரை புரண்டு அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களை சொல்லி
தாமும் தம்முடைய கரண க்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற
முடியானே யின் அர்த்தத்தை-சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -முடியாத ஆசை மிக -இத்யாதியால் -என்கை-

———————–

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

மாறும் சன்மம் கிட்டும் -குருகூர் மன்னன் அருளால் –

இதில் அசேவ்ய சேவை அநர்த்தம் என்றும்-பகவத் சேவை பிராப்தம் என்றும் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்–முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல்
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு-ஹிதம் அருளிச் செய்ய
மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற
சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து-சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

———————

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

இதில் பகவத் அர்ஹனான எனக்கு ஒரு குறைகளும் இல்லை என்ற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –-இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே
பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற-சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -சன்மம் பல செய்து -இத்யாதியாலே -என்கை-

—————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading