நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால்
ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.
கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-
இவருடைய தசையை -நிலையை -அனுசந்தித்தால் -நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?
கண்டு –நமக்குத் தஞ்சம் என்று அனுசந்தித்து -நினைத்து.
இரவு பகலில் வினை போம். இராப் பகல் மோதுவித்திட்டு’ என்ற துரிதம் -துயரம் போம்.
——————-
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.
———————
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே
மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.
——————-
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.
குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
ஸ்ரீ பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.
(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)
——————
நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவ் வாழ்வார் தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
அப்படித் தெளிவது தேச விசேஷத்திலே போனாலோ?’ என்னில்,
பாபத்தை பா என்று கடைக் குறைத்தலாய்-பாபம் நிறைந்திருக்கிற-பூயிஷ்டமான – தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேஷத்தே போனால் பெறக் கடவ தெளிவை அதற்கு எதிர்த் தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல
இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-
—————————–
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித்
ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-
கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண பரிசர்யைகளை கைங்கரியங்களை யடைய இப் பத்தை அப்யசித்தவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதி முக மடந்தையர்.
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
தொக்கு -திரண்டு /கவரி -சாமரம் /ஏழையர் -ஸ்ரீ பாகவத கிஞ்சித்கார சபலைகளான மதி முக மடந்தையர் –
————————-
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-
நித்யானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலென ஸ்ரீ பகவத் குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான
யோக்கிதையை யுடைய ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல் ஸ்ரீ அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவர்.
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பர்யாயம் என்று இருக்கிறார் காணும்.
அன்றிக்கே,
‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
ஸ்ரீ பகவத் அபசாரம் ஸ்ரீ பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே,
ஸ்ரீ பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்?
பிரளயம் கோத்தால் போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
———————–
அங்குத்தைக்குத் தகுதியாக ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-
இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஸ்ரீ ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.
அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.
என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.
————————–
நிகமத்தில் இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-
ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.
இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது?
இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய்
அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை
ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ தைத். ஆன.-இந்த ஸ்ரீ இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே,
எப்பொழுதும் ஸ்ரீ பகவானுடைய அனுபவத்தால் பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.
—————————-
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-
இந்தப் பத்தைக் கற்க வல்லவர்களை–ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வான், ஸ்ரீ சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை
நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து.
தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.
மனைவிமார்களும் தாங்களுமாக ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு அடிமை செய்து,
மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின பிரீதியின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே ஓடம் ஏற்றிக்
கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கனக்கத் தங்கள்
பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர்.
ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் தசையாகிறது, ஸ்ரீ பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது
எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
ஸ்ரீ சரம ஸ்லோகம் ரஷித்துக்கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி
அதாவது ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி தமக்கு அத்யந்த ரஹஸ்யமாக உபதேசித்த
ஸ்ரீ சரம ஸ்லோக அர்த்தத்தை ஸ்ரீ தெற்கு ஆழ்வார் திரு முன்பே எடுத்துக் கை நீட்டினவர்களுக்கு
அவர்கள் விஷயத்திலே உகப்பாலே அருளிச் செய்தார் இறே அத்தைச் சொல்கிறது
அபர்வணி ‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றால் போலே,
அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து என்கிறார். வைகல் – காலம்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ –திருவாய். 3. 3 : 1.-என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற ஸ்ரீ அடியார் விஷயத்திலே நித்ய ஸூரிகள் அடிமை செய்வார்கள்
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply