ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
வந்து கலந்தான் என்கிறார்.

அந் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அந் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள;
செந் தாமரைத் தடங்கண்; செங் கனி வாய் செங் கமலம்;
செந் தாமரை அடிகள்; செம் பொன் திரு உடம்பே–2-5-1-

—————————————

தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி,
தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன் தான்,
என் உடம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இரா நின்றான்’ என்கிறார்.

திரு உடம்பு வான் சுடர்; செந் தாமரை கண் கை கமலம்;
திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ!
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே–2-5-2-

————————–

ஸ்வ வ்யதிரிக்த- தன்னின் வேறுபட்ட -ஸமஸ்த வஸ்துக்களும் -எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி
உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்,
தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’ என்கிறார்.

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்;
மின்னும் சுடர் மலைக்குக் கண்,பாதம், கை கமலம்;
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள;
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே–2-5-3-

————————-

‘நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன,
‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ்விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய –
வல்லிகோளே- வல்லீர்களோ?’ என்கிறார்.

எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம் ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்;
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுது என் ஆரா அமுதமே–2-5-4-

—————————–

இத்தனை போதும் தாமரையைச் சிக்ஷித்து உபமானமாகச் சொல்லிப் போந்தார்;
விஷயத்திலே-அவகாஹித்தவாறே – இறங்கிப் பார்த்தவாறே-
நேர்கொடு நேரே உபமானமாய் நின்றது இல்லை;
அவற்றைக் கழித்து உபமேயத்தையே சொல்லுகிறார்.

ஆரா அமுதமாய் அல் ஆவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம் பவளம்; கண் பாதம் கை கமலம்;
பேராரம் நீண் முடி நாண் பின்னும் இழை பலவே–2-5-5-

———————————-

என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு –
என்ன அனுபவியா நின்றான்’ என்கிறார்.

பல பலவே ஆபரணம்; பேரும் பல பலவே;
பல பலவே சோதி வடிவு; பண்பு எண்ணில்
பல பல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்;
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ!–2-5-6-

——————————-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், ஸ்ரீ ஷீராப்தியில் -ஸ்ரீ திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி,
ஸ்ரீ இராமன் ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ என்கிறார்.

பாம்பணை மேற் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே.–2-5-7-

——————————

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது,
என்னோடே வந்து கலந்த இம்மஹா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடந்தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச்
சொன் முடிவு காணேன் நான்; சொல்லுவது என்? சொல்லீரே–2-5-8-

————————–

பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து,
‘என் நாயனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.

சொல்லீர் என் அம்மானை; என் ஆவி ஆவி தனை;
எல்லை இல் சீர் என் கரு மாணிக்கச் சுடரை:
நல்ல அமுதம், பெறற்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரை ஒத்து ஆணல்லன் பெண் அல்லனே–2-5-9-

————————–

‘என்னோடு கலந்த எம்பெருமான் படி பேசப் பெரிதும் மிறுக்குடைத்து,’ என்கிறார்.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே–2-5-10-

———————-

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில்,
அவர் ஸ்ரீ பரமபதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply