ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-8–

தலையான பேரை நெற்றிக் கையிலே விட்டுக் காட்டிக் கொடுக்க ஒண்ணாது’ என்று,
மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒரு முகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது.
அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி
ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித் தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து
நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே–7-7-8-

கோள் இழைத் தாமரையும்-
ஜாதி ஒன்றாய் இருக்கச் செய்தேயும்,
பொற் கால் தாமரை, நூற் கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில் சில பேதங்கள் உள அன்றோ?
அதில் நூற் கால் தாமரை என்னுதல்;
அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்;
அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாக வுடைய தாமரை என்னுதல்;
அன்றிக்கே, தேஜஸ் -ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல்.

திருக் கண்ணும்-
திருக் கண்களும்,
கொடியும் –
திருமூக்கும்.
பவளமும்-
திரு அதரமும்,
வில்லும் –
திருப் புருவமும்.
கோள் இழைத் தண் முத்தமும்-
தன் தேஜஸே -ஒளியே ஆபரணமாக வுடைய குளிர்ந்த பற்களின் நிரையும்.
அன்றிக்கே, ‘இழையிலே கோப்புண்ட முத்துப் போலே இருக்கிற குளிர்ந்த பற்கள்’ என்னுதல்,
தளிரும் –
திருக்காதும்.
குளிர் வான் பிறையும்-
திருநெற்றியும்.
ஆக, நேத்திரமானவரும்
மூக்கு வலியோம்’ என்றவரும்,
வாய் சொல்லிப் போனவரும்,
கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக் கொடு போனவரும்,
வாய்க் கரையிலே இருந்தவரும்.
தாம் செவிப் பட்டவாறே போனவரும்,
இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும் எல்லாம் ஒரு முகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல்-
கொள்ளப்ட்ட ஆபரணத்தை யுடைத்தான ஜோதி மண்டலமோ உருவகம் இருக்கிறபடி?
அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாய் இருக்கது ஒரு ஜோதி மண்டலமோ?’ என்னுதல்.

கண்ணன் கோள் இழை வாண்முகமாய்-
கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு.

கொடியேன் உயிர் கொள்கின்றதே-
வாழும் காலத்தில் கெடும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது,

கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல்?
உயிர் பெறும் காலத்திலே உயிர் இழக்கும்படியான பாபத்தைச் செய்தேன்’ என்பாள், ‘கொடியேன்’ என்கிறாள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply