ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-6–

நாம் செவிப்பட்டிருக்க இவற்றை முன்னே போக விட்டிருந்தோம்’ என்று திருக் காதில் அழகு வந்து
நலிகிற படியைச் சொல்லுகிறது. காதாட்டிக்கொண்டு சொல்லுவரே.
(அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்)

உய் விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ் விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பை விடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே–7-7-6-

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் –
அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் -அபலைகளுக்கும் -பெண்களுக்கும் தப்பிப் போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று
உஜ்ஜவலமாய் -விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே?
அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்க மாட்டாமல் முடிவர்கள்;
பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள்.
பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் ஸ்னேகத்தை விளைத்துப் பாதகம் ஆகா நின்றன’ என்று
ஒரு தமிழன் கூறி வைத்தான் என்று கூறியதனை ஜீயர் கேட்டருளி,
இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷ தர்மம்;
அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகா நின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே?
ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச் செய்தாராம்.

பை விடம் பாம்பு அணையான் திருக் குண்டலம் காதுகள்-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே -விகசிதமாகா -விரிந்திருக்கிற படங்களையும்,
உகவாதார் முடியும் படியான விஷத்தை யுமுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவனுடைய
திருக் குண்டலக் காதுகளே.
திருக் காதுகளில் அழகு பாதகம் ஆமாறு போலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும் பாதகம் ஆகிறபடி.
அன்றிக்கே, பெறுகைக்கு அநந்த புருஷகார முண்டாய் இருக்கக் கண்டீர், நான் நோவு படுகிறது!’ என்னுதல்.
காதுகளே
மேலே பாதகமாகக் கூறுப் பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது,
அவை, தண்ணீர்ப் பந்தல் வைத்தது என்னும் படியாக ஆயின,’ என்றபடி,
மாலை. . . . . . . நல்கிற்றை எல்லாம்’திருவிருத்தம், 35.-என்னுமாறு போலே.

கை விடல் ஒன்றும் இன்றி –
ஒரு காலும் கைவிடாதே; என்றது, ‘ஒரு கால் விட்டுப் பற்றுமது அன்றிக்கே’ என்ற படி.

அடுகின்றன-
முடியா நின்றன.

காண்மின்களே –
அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;
வாயுந் திரையுகளில்’ ஆழ்வார் அன்றோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply