ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-5–

இம் முகத்துக்கு வாய்க் கரையிலே நாம் இருக்க இவை முற்படப் போவதே என்று
திரு முறுவலின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார் –

என்று நின்றே திக ழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங் கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்-
என்றும் ஒக்க மாறாதே விளங்கா நிற்பதாய்,
செய்ய சுடரை ஈனா நின்றுள்ள வெண் மின்னோ?
திருப் பவளத்தில் சிவப்பும் திரு முத்து நிரையில் வெளுப்புமாய்க் கலந்து தோற்றுகிற போது,
திருப் பவளத்தின் சிவப்பை அது ஈன்றால் போலே ஆயிற்று இருக்கிறது.
இதனை ‘அசிராம்ஸூ;’ என்பர்களே.
பிறரை நலிய என்றவாறே பல் இறுகிக் கொண்டு வருகிறது காணும்.

அன்றி
அன்றிக்கே-

என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-
என் உயிரை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ?
யானை அணி செய்து வந்து தோன்றினால் போலே இருத்தலின், ‘அணி முத்தம்’ என்கிற்று.
அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல் –
மேலே ‘வெண் மின்னுக் கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சமசர்க்கத்தாலே -சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று;
இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-
மலையை எடுத்து மழையிலே நோவு படாதபடி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.
பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’- ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.
மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபி மார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து பரிஹரித்து -நீக்கி, அவர்கள் ஆர்த்தி -துன்பம் எல்லாம் போம்படி
புன் முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.
ஆனால், இது வாராதபடி இடம் தேடி உஜ்ஜீவிக்கப் பார்த்தலோ?’ என்ன,

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே –
எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடா நின்றேன்;
இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன்.
அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது.
ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply