ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-2–

இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற் படுகை யாவது என்?
அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று
திரு மூக்கில் அழகு நலிகிற படியைச் சொல்லுகிறது.

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்!என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு என தாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே–7-7-2-

ஆட்டியும் தூற்றியும் –
ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை.
தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை

நின்று –
அச்சம் உறுத்தி மீட்கலாமோ? என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று.

அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் –
ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே,
என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?
என் உகப்பே பேறாக நினைத்திருக்கக் கூடிய நீங்கள் நலிகிறது என்?
நலிந்து என்
அந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்யலாம் என்றோ,
என்னை மீட்கலாம் என்றோ?
ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது,
அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.
நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன,

மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் –
வல்லீர் கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள்.
ஒரு கடல் அருகே அக் கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று.
திருக் கண்களுக்கு அருகே திரு மூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு.
ஸூசி ஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம் லலாட பர்யந்த விலம்பிதாலகம்’-ஸ்தோத்திர ரத்தினம், 32.
உந்நஸம் – உயர்ந்த மூக்கை யுடைய’ என்கிற படியே‘உயர்’ என்கிறது. ‘
ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய்,
ஸ்ரத்தை -ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்ற தாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது.
இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது.-
ஸர்வதா சாம்யம் – ‘முற் றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப் போமோ?
இதிலே உட் புக நின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –
அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே
வெண்ணெய் களவு காணப் புக்குக் கொண்டியிலே பிடி உண்டு,
பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே;
அவ் வெண்ணெயிலே முடை நாற்றமும் -உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு.
அப்போதை முடை நாற்றம் உபலப்தமாய் படி -தோற்றும்படி யாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய்.
நீ சஷூர் விஷயமாக -காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என,

எனது ஆவி யுள்ளே –
என் மனதிற்குள்ளே.

மாட்டிய –
சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல்,

வல் விளக்கின் சுடராய்-
பெரிய விளக்கின் ஒளியை யுடைத்தாய் –
விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று.
ஏற்றிய பெரு விளக்கு’ என்று ஒரு தமிழ் புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச் செய்வர்.

நிற்கும் வாலியதே –
வலிதாய் நின்று நலியா நிற்கும்.
தீபம் -விளக்காகிறது தான் க்ஷணிகமுமாய் -சிறிது நேரம் இருப்பதுமாய்–ப்ராதேசிகமுமாய் – ஓர் இடத்திலே
இருப்பதுமாய் அன்றோ இருப்பது?
இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:
பாதகத்வத்தில் உறைப்பை அனுசந்தித்து -நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?
மாட்டிய வாலியதான வல் விளக்கின் சுடராய் நிற்கும் / வாலிமை -பெருமை / வன்மை -ஸ்தைர்யம்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply