ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-1–

ஏழாம் பத்து -நான்காந்திருவாய்மொழி – ‘ஆழி எழ’-பிரவேசம்

கீழ் திருவாய் மொழியிலே, பகவத் விஷயத்திலே இவர் அபஹ்ருத சித்தரான -கவரப்பட்ட மனத்தினை
யுடையரானபடி சொல்லிற்று:
கீழ் திருவாய் மொழியில் இவர்க்குப் பிறந்த அவசாதம் -துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று பார்த்தருளி,
ஒன்று கொடுக்கலாவது இதற்கு மேல் இல்லை இறே என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப்
பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
வளவேழ் உலகின்’ என்ற திருவாய் மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர் தாம்!
தம்மை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் ப்ரக்ருதி -தன்மையினை அறியுமவ னாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக் கட்டுகிறார்.
பூத -இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்தில் போலே கண் கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர் தாம் எல்லாவற்றையும் -சாஷாத்காரிக்க -கண் கூடாகக் காண வல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே!
ஆகையாலே, இவர்க்கு ஒரு குறைகள் இல்லையே!

அன்றிக்கே, மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்ற பிரான்’ என்று
ராமாவதாரத்தில் செய்த வெற்றிச் செயல் சொல்லப் பட்டமையாலே,
அவ் வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
ராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவஸூ தேவரைப் போலவும்
இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.

அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.
அஹம் புந;- -என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப் போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப் போக’ என்கிறது?
இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க,
கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ருஷி கரி பூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறம் காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆவ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்ட படியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலே யாயிற்று,
நாடோறும் நாடோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்தில் போலே காணும் பிரயோஜனம், ஸதாபஸ்யந்தி’ அன்றோ?
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடி யானான்.
காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.

மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.
ஸ்ரீவஸூ தேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தால் போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவஸூ தேவரும்?

அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு
இத் தலையில் தோல்விக்கு எதிர்த் தலையான அத் தலையில் விஜயங்களை- வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’
என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி-

—————————–

அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின
பெரிய விஜயத்தை -வெற்றிச் செயலை அருளிச் செய்கிறார்.

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது
ஜாம்பவான் மஹாராஜர் பறை யறைந்த படியாம்.
தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்;
அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ் வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,
தனக்கு ஆக்கிக் கொண்ட செயல் அன்றோ?
ராவணனைப் போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே
நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி.
நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்?

ஆழி எழ –
மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக் கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது
சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி.
காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையே யாயிருக்க.
இளைய பெருமாள் முற்பட்டால் போலே.
ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத-சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
புண்ய சீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளைய பெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும் பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்’ என்கிறபடியே,
போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக் கொண்டு நின்றார் அன்றோ?

ஆழி எழ –
தோற்றத்திலே அரசு போராயிற்று; ஹேதி ராஜன் அன்றோ?
திவ்ய ஆயுதங்களுக் கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி?
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தால் போலே;
அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரி வர கண மத்யே ராம பார்ஸ்வம் ஜகாம.’- யுத். 40:29
பையல் முடியும் தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?
அத ஹரிவர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசிசர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். பிறப்புக்கு ஈடாகச் செய்தார்.
தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’ என்று
பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ –
ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.
அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள், அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால்
வாளா இரார்களே அன்றோ?
பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?
துரியோதனன் கோஷ்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு,
அச்சம் கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?
ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’- என்பது, பாரதம், உத்யோக.
மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே,
கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?
பிள்ளை யுறங்காவில்லி தாசர் ‘மஹா மதி என்றது, மதி கேடர் என்றபடியோ?’ என்றார்,
பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ –
இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று
அஞ்சித் திருவாழி யாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-
தூசி ஏறினவர்கள் போரப் புக்கவாறே நின்ற இளவணி-காலாள்.- கலங்கி மேலே நடக்குமாறு போலே,
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.
அன்றிக்கே, இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக் கூடியவர்கள் இரையுள்ள இடத்தில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் அன்றோ?’ என்னுதல்;
இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே,
மற்றைத் திவ்ய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்.
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.-
இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது நின்று ஆர்ப்ப.
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று
நெருப்பினை உமிழ்ந்து கொண்டு நமுசி முதலானவர்களை வாய் வாய் என்றது திருவாழி.
விடம் காலும் தீவாய் அரவு
கிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ -திருவனந்தாழ்வானாலாவது?
அரவணை மேல் தோன்றல் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய பிரதானன்.
திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-
ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?
பூவை இட்டுப் பூவைக் கொண்டான் காணும்.
அப் படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தை யுடையவன் இக் காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப் புக்கால்,
இவர்களுக்கு இப்படிப் பட வேண்டாவோ?
அவன் இப்படி அளவா நின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?

வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:-ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு க்ஷண நேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற
திவ்ய ஆயுதங்களை யுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ
அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.

திசை வாழி எழ –
அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்ய ஆயுதங்கள் கிளர்கின்றன!
அவை தமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு,
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னா நிற்பார்கள் அன்றோ?
நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரிய வேண்டி இருக்கு மன்றோ?
அன்றிக்கே, திக்குகள் தோறும் அநுகூலருடைய’ வாழி வாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல்.
திவ்ய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார்,
திவ்ய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.

தண்டும் வாளும் எழ-
தூசித் தலையில் அவர்களே கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று
பேரணியும் குலைந்து மேல் விழுமாறு போலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி;
ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப் படுமாறு போலே காணும் இவர்கள் படுகிற பாடு.
அநுகூலன் வந்து புகுர, வத்த்யதாம் -‘கொல்லத் தக்கவன்’ என்கிறவர்கள்
பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’
என் இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.-
என்று நமுசி வந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்க வேணும்’ என்று
திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிடந்தான் அன்றோ?
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய?
ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி.
சீரால் பிறந்து’ என்கிறபடியே, ‘உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது
இப்படிப் பட வேணுமோ?’ என்கிறார்.பெரிய திருவந். 16.
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாக்ஷித்துப்
பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ –
இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது?
கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து,
அண்ட கடாஹத்திலே திருவடி சென்று,
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப’ என்கிறபடியே கீழே யுள்ள அண்ட கடாஹத்தை உருவி நிற்க,
கீழே யுள்ள ஆவரண ஜலம் மேலே எழ.
ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல் போலே மிதக்கு மித்தனை அன்றோ அண்டம்?
ரஷகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி.

முடி பாதம் எழ-
திரு அபிஷேகத்து யளவும் திருவடிகள் கிளர.
முடி மேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.

அப்பன் ஊழி எழ –
மஹா பலி அபிராப்தமாக தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய்,
நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக் காலம் கிளரும்படி யாகவும்.

அப்பன் உலகம் கொண்டவாறே –
மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:
அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று ஹ்ருஷ்டராகிறார் -உவகை அடைகிறாராகவுமாம்.
அப்பன் –
இந்திரனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்த செயலாலே
எனக்கு சத்தையை -ஆத்மாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading