இனிக் கிட்ட மாட்டாளோ!’ என்னும்படி அவசன்னையான – துக்கத்தை அடைந்திருந்த இவள்,
பெரிய பெருமாள் திருவடிகளை ஸம்ஸ்லேஷிக்க – கலக்கப் பெற்றாள் என்கிறாள்.
‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே–7-2-10-
இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் –
பெண் பிள்ளை வார்த்தையைத் திருத் தாயார் அநு பாஷிக்கையாலே,
இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.
இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல்
அன்றிக்கே, ‘முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.
மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –
இதனை ‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற,
வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, திருமலை யாண்டான் வையதிகரண்ய மாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.
‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:
மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
வாசனையை யுடைத்தான கொன்றையை ஜடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று
அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்;
அவர்களோடு இவ் வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனா யிருக்கிற நான்முகனாகிய
தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.
வடிவுடை வானோர் தலைவனே என்னும்-
பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்ய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.
வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு,
‘மூவுல காளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு,
‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசி யற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:
மயர் வற மதி நலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே;
சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்கு மவராயிற்று இவர்.
வண் திருவரங்கனே என்னும் –
நித்ய ஸூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்ய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ
இங்கு வந்து திருக் கண் வளர்ந்தருளுகிறது?
இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெற வேண்டாவோ?’ என்னும்.
வண்மையாவது, ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.
அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-
ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்து கொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்;
அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து கிரமத்திலே
கிட்டிக் கொண்டு நின்றாள்’ என்று அருளிச் செய்யும்படி.
இது தான், மானச அனுபவித்தில் ஒரு வைஸத்யத்தை -தெளிவினைச் சொன்னபடி.
அடி அடையாதாள் போல –
இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்:
இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்து கொடு நின்றாள் என்னுதல்.
இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி அவசன்னையான -துக்கத்தை யடைந்தவளான இவள்,
கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காள மேகம் போன்ற நிறத்தை யுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply