‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
என் திரு மகள் சேர் மார்பனே என்னும் –
என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது -விசேஷ அம்சத்தில் -திரு மகளுக்கு அடைமொழி.
விசிஷ்டத்தில் -மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.
அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திரு நாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திரு வுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ் வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ என்று வேண்டிக் கொண்டார்,
‘சேர் மார்பன்’
என்பது, நிகழ் கால வினைத் தொகையாலே ரஹஸ்யத்தில் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
அவள் ஒரு ஷணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே
இத் திருவாய் மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப் பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்க நாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியை -வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது -பிராப்தி -அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி யிருந்தேன்,’ என்று ஜீயர் அருளிச் செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு வாயு -காற்று விசேஷம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திரு மகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே என்னும்
பிரணயிநிகளுக்கு காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறி யன்றோ காரியம் செய்வது?
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ
நின் திரு எயிறு’
என்னும் இத்தனை அழகுக்கு?
இடந்து நீ கொண்ட –
நீ இடந்து கொண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபனானவனே!
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே என்னும் –
ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற ரிஷபங்கள் ஏழனையும் தழுவி.
அவள் திருமுலைத் தடத்தை அணைத்தால் போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.
உருவென்பது – இடி. ‘இடி போலே பயங்கரமான குரலையுடைய ஏறு’ என்னுதல்.
அன்றிக்கே, உரு வென்று மிடுக்காய், மிடுக்குத் தான் வடிவு கொண்டால் போலே என்னுதல்.
உருவுட்கு’ என்பது உரிச்சொல்.
நீ கொண்ட –
நீ கைக்கொண்ட.
ஆய் மகள் அன்பனே என்னும் –
என்னைக் கை விட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்?’ என்னும்.
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே –
தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வாசஸ் ஸ்தானமாக வுடையவனே!
எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகம் காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்ய வாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?
‘கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம்’- பாரதம்.
தன்னுடைய மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று.
தெளிகிலேன் –
அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டு நீ கிடந்தால்,
ஸ்த்திதோஸ்மி கதஸந்தேஹ:’ ஸ்ரீகீதை, 18:73.
ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ண முடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.
இவள் தனக்கு முடிவு தெளிகிலேன் –
இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப் போமோ?
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply