ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-11–

இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திரு வடிகளைக் கிட்டி அங்குத்தைத் திரு வருளைப் பெற்றுத் தரித்தர்.
பூர்வ அவஸ்தையில் -முன்னைய நிலையில் சத்தையும் அழியும் படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .

மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூ நீர்ச் சேர்ப்பன் –
வலியை யுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூ நீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் –
துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன்.
மொய்ப்புனல்’ என்னா நிற்கவும், ‘தூநீர்’என்கிறது,
பெரு வெள்ளமாய் இருக்கச் செய்தே தெளிந்திருக்கும் படியைப் பற்ற.
‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’- பால. 2:5.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.
சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி யெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலை யுடைத்தாய் வண்மையை யுடைய திருநகரிக்கு நாதன்.

முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
காளமேகம் போன்று நிரதிசய ஸுந்தர்ய -மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்த
சப்தாத்மகமான -சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப் பத்தையும் பாவ விருத்தியோடே –
கருத்தோடு அப்யஸிக்க வல்லவர்கள்.
பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று;
திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக் கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப் பலகையில் அமுது படியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து
கொடுக்குமாறு போலே’என்று பிள்ளை அருளிச் செய்வர்.

முகில் வண்ணம் வானத்து-
அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன் படியாய் இருக்கிற வானம் என்னுதல்;
முகில் வண்ணனுடைய வானம் என்னுதல்

இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

கங்குல் பகலாதி கை விஞ்சி மோக முற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்திங் கிவள் பால்
என் செய நீர் எண்ணுகின்ற தென்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம் –திருவாய்மொழி நூற்றந்தாதி-62-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading