ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-4–

இவளுக்கு பிரதி க்ஷணம் பேதித்து ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற அவஸ்தா பேதங்களை அறிவித்து,
இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்‘திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப் போதவுணன் உடலிடந்தானே!அலை கடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-

சிந்திக்கும் –
உம்முடைய ஸூந்தர்யாதி அழகு முதலானவற்றையும் உம்முடைய கலவியையும் நினைக்கும்.
முன்பு இவ்வநுஸந்தானமும் -இந்த நினைவும் இன்றிக்கே யாயிற்றிருந்தது;
மோகத்தைப் போன்று இதுவும் ஒரு விக்ருதியாய் -வேறுபாடாய் இருக்கிறபடி.

திசைக்கும்-
அப்போதே காணப் பெறாமையாலே மோஹிக்கும்,

தேறும் –
ஒரு ஹேது -காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இது தானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிற தாயிற்று;
மோஹம் செல்லா நிற்க, அபேக்ஷிதம் -விரும்பினதைப் பெற்றாரைப் போலே தெளிதல் அச்சம் கொடுக்கும் அன்றோ?
சரம தசையில் -முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்ச வேணுமே?
உய்ந்த பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று ஜீயர் அருளிச் செய்வராம்.

கை கூப்பும்-
இது இவளுக்கு இயல்பு.
கீழே -‘மயங்கும் கை கூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கை கூப்பும்’ என்றது: அல்லாதவை திரிதலாய்ச் செல்லா நிற்க,
இது ஒன்றும் நிலையாய்ச் செல்லா நிற்கும்;
ஸ்வரூபத்தோடு அனுபந்தி -சேர்ந்தது ஆகையாலே.நித்ய அஞ்சலி புடா –
எப்பொழுதும் கை கூப்பிக் கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவ தன்றோ?
மோஹத்திலும் உணர்த்தியிலும் சத்தை உண்டே;
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்பதன்றோ நிலை நின்ற ஸ்வரூபம்?
அநுவார்த்தமானது இ றே- தொடர்ந்திருப்பது ஆன தன்றோ -பரமார்த்தம் -உண்மையானது?

திருவரங்கத் துள்ளாய் என்னும்-
‘பெருமாளே என்னும்’ என்று ஜீயர் பணிப்பர்.
அவ் வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.

வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு,
ஒருமுகமே, முறுவலே, ஒருவளையமே’ என்று ஸ்துதிக்கின்றாள் என்னுதல்;
அன்றிக்கே, பஃன அபிமானியாய் -அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’என்னுதல்.

ஆங்கே-
அந்த அவஸ்தையில் -நிலையிலேயே
மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்று என்கிற மயங்கும் –
குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாய் என்று சொல்லி, அச் சொல்லோடே அறிவு கெடும்.
‘நினைத்த போதாத வரப் போமோ?’ என்ன,

அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –
அவன் வரத்துக்கு விருத்தமாய் -மாறுபட்டதாய் இருப்பது ஒரு காலத்திலே,
அசுரத் தன்மை வாய்ந்த ஹிரணியனுடைய சரீரத்தைப் பிளந்து பொகட்டிலையோ?
மத்த: ஸர்வம் அஹம் ஸர்வம்’ விஷ்ணு புரா. 1. 19:85.
‘எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாயின; எல்லாப் பொருள்களும் நானே’ என்று
தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது?அறிவு கெடுவார்க்கு உதவலாகாதோ?
தமப்பன் பகையானாலோ உதவலாவது? நீர் பகையானால் உதவலாகாதோ?
இவ் வளவில் உதவாமைக்கு மேற்படப் பகை இல்லை அன்றோ?
அது ஒரு கால் சிறுக்கனுக்கு உதவின்மை உண்டு; அது தப்பியதே அன்றோ?’ என்ன, பின்போ நீ உதவாதது?

அலை கடல் கடைந்த –
ப்ரயோஜனாந்தர பரர்க்கும் வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்றவர்களுக்கும் அகப்படக்
கடலைக் கடைந்து கொடுத்திலையோ?
உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?
உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?

ஆர் அமுதே ‑
இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –
உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சார வேணும் என்று வியவசியையாய் -அறுதி யிட்டவளாயிருக்கிற
இவளை இப்படி அறிவு கெடுப்பதே!
வலித்த
பிராணனை பலாத்காரத்தால் தரித்த –
அன்றிக்கே, உன்னைக் கிட்டிச் சந்நிதியிலே முடியுமித்தனை என்று உயிரைத் தரித்திருக்கிறவளை
இப்படி அறிவு கெடுப்பதே!’ என்னுதல்.
வலித்த -அத்யவசித்த-‘தாவத்த்யஹம் தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய’சுந். 36:30. 2‘என்னை அழைத்துக்கொண்டு போவதற்குறிய முயற்சியை
எத் துணைக் காலத்திற்குள் கேட்பேனோ அத் துணைக்காலம் வரை பிழைத்திருப்பேன்’ என்று காணும் இருக்கிறது.

மையல் செய்தானே
உம்மை ஆசைப் பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்து விட்டது?’ என்பாள்,

திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர்நீர்க்
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்கென்று செப்புவாய்.’-கம்பராமாயணம்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading