சர்வேஸ்வரன் தன் கிருபையாலே சப்தாதி விஷய ப்ராவண்யத்தை – ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை
அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹோபகாரத்தை அனுசந்தித்த -நினைத்த
க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.
ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-
ஆளுடையான் ஆனான்-
என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒரு வார்த்தை சொன்னேன்.
என்ற அஃதே கொண்டு-
ன்று கூறிய இந்த யுக்தி -வார்த்தை மாத்திரத்தையே கொண்டு.
நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான்,
இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்.
உகந்து –
பலத்தை போக்தாவான -அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, சந்தோஷமும் தன்னதே ஆயிற்று.
வந்து-
வருதலும் மாறாடிற்று.
தானே இன் அருள் செய்து-
நான் அர்த்தியாது- வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன் பேறாகத் திருவருளைச் செய்து.
என்னை முற்றவும் தானானான்-
உள்ளோடு புறம்போடு வாசி – வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்;
எனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல்.
அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல்.
ஆக முற்றும் அகத்து அடக்கி” என்றாரே அன்றோ முன்னரும்.
(“என்னை முற்றவும் தானானான்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருள், என்னை-என்னோடு, முற்றவும் – உள்ளும் புறம்புமான எல்லாவிடத்திலும், தான் ஆனான் – தான் என்னோடு கலந்தான் என்பது.
இரண்டாவது, என்னை – எனக்கு, முற்றவும் – எல்லா விதமான இனிய பொருள்களும் தானானான் என்பது.
மூன்றாவது, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களுமாகக் கொண்டான் என்பது.
ஈற்றிலே கூறிய பொருளுக்குப் பிரமாணம், “ஆக முற்றும்” என்பது. இது, திருவாய்மொழி. 4. 3 : 3.
பல காலம் எதிர் குழல் புக்குத் திரிந்தவதனாதலின், கூடும் )
மீனாய் –
உலகில் விஸாஜாதீயன் -உள்ள சாதிகட்கு எல்லாம் வேறுபட்டவனான தான், ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டு-
ஞான ப்ரதான அர்த்தமாக -ஜல சர -தண்ணீரில் சஞ்சரிக்கின்ற ஜாதியன் ஆனான்.
(சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங் கேசர் படைப்பவன் தன்
ஊழிப் பொழுதொரு சேலாய் ஒரு செலுவுட் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே–என்றார் திவ்ய கவியும்.
அரு மறையார் இருக் கெசுர் சாமத்தி னோடும்
அதர்வண மாகிய சதுர்வேதங்கள் தம்மைத்
திருடி எடுத்துக் கொண்டே உததி சேரும்
தீயனுக்கா மச்சாவதார மாய் நீ
ஒரு செலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே வைத்து
உக்கிரத்தாற் சோமுகாசுரனைக் கொன்றிட்டு
இருளறவே விதி படைக்க அவ் வேதத்தை
இரங்கி அளித்தனை அரியே! எம்பி ரானே!- என்றார் பிறரும்.)
ஆமையும் ஆய் –
தாரண அர்த்தமாக -எல்லாவற்றையும் தாங்கும் பொருட்டுக் கூர்மத்தின் வடிவை யுடையவன் ஆனான்.
(திரிக்கின்ற பொற் குன் றழுந்தாமல் ஆமைத் திரு வுருவாய்ப்
பரிக்கின்ற திற் பெரும் பார முண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தந்திரு மேனியின் மேல்
தரிக்கின்றது மகரக் கடலா டைத்தரா தலமே– திருவரங்கத்துமாலை. 24.)
நரசிங்கமும் ஆய் –
சடக்கென -உடனே விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான்.
குறள் ஆய் –
கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான்.
கான் ஆர் ஏனமும் ஆய் –
சம்சார ஆர்ணவத்தில் -பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா அத்ருஸ்யத ததா ராமோ பாலசந்த்ர இவோதித:- ஆரண். 38 : 15.
ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு
அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே,
காடு அடங்க மயில் கழுத்துச் சாயல் ஆக்கும் படியான வடிவை யுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார்.
காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.
(தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்–என்ற பரிபாடல் பகுதியையும்,
இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண் அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி
மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’ என்ற அதன் உரை)
இன்னம் கற்கி ஆம் –
மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?”
என்று கொண்ட குதை மாறுகின் றிலன் என்றபடி.
நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும்.
நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.
கார் வண்ணனே-
வர்ஷுக வலாகஹம் போலே நீர் கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை.
மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.
வண்ணம் –
ஸ்வபாவம்.
மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என்று அந்வயம்-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply