ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-1-11–

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

கார் வண்ணன் –
காளமேகம் போலே ஸ்ரமஹரமான வடிவையுடையவன்.

கண்ண பிரான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வடிவை என்னை அநுபவிப்பித்தவன்.

கமலத் தடம் கண்ணன் தன்னை –
உத்ப்புல்ல புண்டரீக -மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக் கண்களை யுடையவன்.
அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி.
கீழே “நிறமுடை நால்தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.
ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சினபோது, ஸ்ரமஹரமான வடிவைக் காட்டித்
தன்னை முழுக்கக் கொடுத்துத் திருக் கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.

ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-
சம்ருத்தமான -நிறைந்த ஏர்களை யுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி.
வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது.

சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் –
சீரியதான பிரகாரத்தை யுடைய அழகிய தமிழ் என்னுதல்;
கவிக்கு உறுப்பான சீரையும் வண்ணத்தை யுமுடைய அழகிய தமிழ் என்னுதல்.
சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை.

ஆர் வண்ணத்தால்-
பூர்ணமாக -நிறைவாக என்னுதல்.
ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,
அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.

பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –
விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமே யாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.

கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக்கே இருக்கப்
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனைப்
போற்றினனே மாறன் பொலிந்து–திருவாய்மொழி நூற்றந்தாதி–41-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply