அவன் கிருபையாலே தாம் பெற்ற பேற்றினைக் கண்டு விஸ்மிதராய் -ஆச்சரியத்தை அடைந்தவராய்ப்
பகவானுடைய கிருபை நடையாடா நிற்க, சிலர்க்கு ‘நான் அயோக்யன் -தீவினையேன்’ என்று
இழக்க வேண்டா -கிடிகொள் என்கிறார்.
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே–5-1-7-
அம்மான் –
சர்வேஸ்வரன்.
ஆழிப்பிரான் –
கையும் திருவாழியுமான அழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவன்.
அவன் எவ்விடத்தான் –
அவன் எவ்வளவில் உள்ளார் பரிமாறுபவன் -எத்தகைய பெருமை பொருந்திய நித்ய ஸூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.
யான் ஆர் –
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.
பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.
எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எல்லா வழியாலும் மஹா பாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும் பகவானுடைய கிருபை பெருகப் புக்கால்
தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.
நீர் கிட்டினபடி என்? என்ன,
கைம் மா துன்பு ஒழித்தாய் என்று-
ஜென்ம வ்ருத்த ஞானங்கள் -உயர்ந்த பிறவி ஆசாரம் ஞானம் இவைகள் ஒன்றும் இன்றிக்கே இருக்கின்ற யானையானது –
முற்பிறவியின் வாசனையாலே, முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவு பட்டவாறே திருவடிகளை ஸ்மரிக்க -நினைக்க,
சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல் மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து,
இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று அந்த உபகாரத்தின் நினைவாலே
அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.
கை தலை பூசல் இட்டே –
தலையிலே கையை வைத்து வாயாலே கூப்பிட்டு என்னுதல்;
மாறாதே அஞ்சலி செய்து என்னுதல்;
தலையிலே வைத்த கை மாறாமல் என்னுதல்.
(கை தலை பூசல் இட்டே” என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருள், பூசலிடுதல்-கூப்பிடுதல்.
இரண்டாவது பொருள், பூசலிடுதல் என்பது, கூட்டுகையாய் தலையிலே கையையும் கையையும் கூட்டி அஞ்சலி செய்து என்றபடி.
மூன்றாவது பொருள், தம் எளிமை தோன்றக் கையைத் தலை மேலே கூட்டி வைத்து என்றபடி.
“இட்டே” என்ற ஏகாரத்திலே நோக்காக ‘மாறாமல்’ என்கிறார்.)
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் –
யானைக்கு உதவினது தங்களுக்கு உதவி செய்தது என்று இருக்கும் பர சம்ருத்தி யேகப் பிரயோஜநர்
அந்த உபகாரத்திற்குத் தோற்று உபகாரத்தின் நினைவாலே அஞ்சலி செய்து சொல்லும் பாசுரத்தை,
அஹ்ருதயமாக -மனத்தொடு படாமலே சொல்லி அது நெஞ்சிலே ஊற்றிருந்து
பொய்ம் மால் போய் மெய்ம் மாலாய் விழுந்தது.
நன்று; அவன் உம்மளவில் செய்தது என்? என்ன, அருளிச் செய்கிறார் மேல்:
எம்பிரானும் என் மேலோனே-
எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டால் போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான். என்றது,
நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற என்றும் ஒக்க
மெய்ம் மாலாய்ப் போருகின்றவன் விடுவானோ என்றபடி. இது இருந்த படியால்,
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எவ்வளவு மஹா பாவத்தைப் பண்ணினார்க்கும் பகவானுடைய கிருபை பெருகா நின்றுள்ள இடத்தில்
தப்ப விரகு இல்லை அன்றோ?
பூசல் இடுதல் –
பிரசித்தமாகக் கூப்பிடுகைக்கும், ஒன்றோடு ஒன்று சம்பந்திக்கிறதற்கும் பேர்.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply