ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-1-5–

‘நீர் “மலினம்” என்கிறது எதனை?’ என்ன, இன்னதனை என்கிறார் இதில் –

கண்ண பிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே ஓர் உடம்பி லிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே–5-1-5-

விண்ணோர் கருமாணிக்கத்தைக் கண்ணபிரானை –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ரு வாம்சஸ் சமிந்ததே – அந்தப் பரமபதத்தில் மேதாவிகளும், துதித்துக் கொண்டிருத்தலையே
இயல்பாக வுடையவர்களும், எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடினவர்களாய்க் கொண்டு பிரகாசிக்கிறார்கள்” என்கிறபடியே,
நித்ய ஸூரிகளுக்கு அநுபவிக்கக் கூடியதான வடிவழகை எனக்குக் கொடுப்பதற்காக -உபகரிக்கைக்காக –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

அமுதை –
இப்படி அவதரித்துத் தன்னுடைய -போக்யதையை -இனிமையை ஆயிற்று இவரை அநுபவிப்பித்தது.

நண்ணியும் நண்ணகில்லேன் –
பெற்று வைத்தே பெறாதார் கணக்கானேன்.
பிறந்த ஞான லாபத்தை நினைத்து ‘நண்ணியும்’ என்கிறார்.
சரீர சம்பந்தத்தோடே இருக்கிற இருப்பை நினைத்து ‘நண்ணகில்லேன்’ என்கிறார்.

நடுவே ஓர் உடம்பில் இட்டு –
ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை -சம்பந்தம் -அநாதியாக இருக்கச் செய்தேயும்,
அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார்.
சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை,
பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றா நின்றதே அன்றோ?
அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ?
ராஜ புத்திரன் வழியிலே போகா நிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு
போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி –
தேவோஹம் -“நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?

திண்ணம் அழுந்தக் கட்டி –
அவித்தை முதலியவைகளாலே திருடமாக -உறுதியாகக் கட்டி.

பல செய் வினை வன் கயிற்றால் –
தாம் பலவாய்ச் செய்யப்பட்டிருந்துள்ள வினைகளாகிற வலிய கயிறுகளால் உறுதியாகக் கட்டி.-த்ருடமாக பந்தித்து

புண்ணை மறைய வரிந்து –
தோலை மேவிக் கைப்பாணி இட்டு மெழுக்கு வாசியிலே மயங்கும்படி பண்ணின இத்தனை ஒழிய,
அகவாய் புறவாய் ஆயிற்றாகில் காக்கை நோக்கப் பணி போருமித்தனையே அன்றோ?

என்னை –
ஸ்வ ரக்ஷணத்தில் -என்னைக் காப்பாற்றிக் கொள்வதில்
அசக்தனாய்-அப்ராப்தனாய் – சம்பந்தம் இல்லாதவனுமாய் இருக்கிற என்னை.

போர வைத்தாய் புறமே –
ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோக வனத்திலே இருந்தால் போலே தோன்றா நின்றதாயிற்று,
ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு.

புறமே –
உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய்.
தம்முடைய ஸ்வரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும்
பரம வைதிகர் ஆகையாலே ‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.

என்பினை நரம்பிற்பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயிலாக்கி ஊன் பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்.–என்பது, சிந். 1577.

மாக்கேழ் மடநல்லாய்! என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக் கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.–என்பது, நாலடியார்.

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பராய்”–என்பது, மணிமேக. பளிக்கறை. 113 – 121.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply