ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-7–

அபேக்ஷிதம் அப்போதே கிட்டாமையாலே, ‘பேறு தம்மதான பின்பு தாமே முயற்சி செய்து வருகிறார்,’
என்று இறைவன் நினைத்தானாகக் கொண்டு, ‘எல்லாப் பொருள்களும் உனக்கு அதீனமான பின்பு
நீயே உன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேண்டும்,’ என்கிறார்.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே–4-9-7–

ஆயே –
தாயே! என்றபடியாய்,
மாதா பிதா’ என்கிறபடியே, ‘எனக்கு சர்வ விதமான பந்து வர்க்கம் ஆனவனே!’ என்கிறார்.
அன்றிக்கே, ‘இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே ஆய்’ என்று கொண்டு கூட்டி,
இந்த உலகத்திலே ஸ்தாவரங்களாயும் ஜங்கமங்களாயும் கூடியிருக்கின்ற எல்லாப் பொருள்களும்
‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளே ஆம்படி -பிரகாரமாய் -சரீரமாய் அற்று, நீ ஒருவனுமே -பிரகாரியாய் -சரீரியாய்’ என்றுமாம்-
ஆத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத்-பிரு. உப. 6 : 5.-உலகம் பரமாத்மாவுக்குச் சரீரம் என்ற புத்தி எப்பொழுது இவனுக்கு உண்டாகிறதோ,
அப்பொழுது தனித்த ஒரு சாதனத்தாலே, தனித்த ஒருவனைப் பார்க்கக் கடவன்,’ என்றும் சொல்லுகிறபடியே

மற்று ஒரு பொருளும் இன்றி –
நேஹ நா நாஸ்தி—-கடவல்லி, உப, 2. 4 : 11-இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன என்று
எவன் எண்ணுகிறானோ, அவன் நனி பேதை ஆவான்;
(ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே, –
அப்ரஹ்மாத்மகமாய்– பரம்பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச் –ஸ்வதந்திரமாய் – இருப்பது
ஒரு பொருளை ஆயிற்று, ஈண்டு ‘இல்லை’ என்கிறது.

நீ நின்றமையால் –
நீ இப்படி நின்ற பின்பு.

நோயே மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவை ஒழிய –
சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்மா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று,
எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம்படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு,
பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து.
நோயும் பிணியும் – ஆதி வியாதிகள்.

கூயே கொள் –
இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கொடு உலகம் –
உன்னை விட்டு சப்தாதிகளால் – ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.

காட்டேல் –
த்ருஷ்ட்டி விஷம் போலே காணில் முடிவன். இந்த லோக யாத்திரை -உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு
ஆகாதொழிய வேண்டும் என்கையாலே, இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.
ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,
‘பரஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்;
‘இதுதான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இதில்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading