ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —-1-2-3–

‘தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்; காலம் அநாதி;
அக்காலத்தில் ஈட்டிய வினைகளும்-அநந்தரமாய்- முடிவின்றி இருக்கின்றன;
ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன,
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் -பகவத் சமாஸ்ரயணத்தையும் சொல்லுகிறதுக்கு பிரயோஜனத்தை
சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
பீஜம் -அஞ்ஞானம் கர்மத்துக்குக் காரணம் –
நீர் நுமது என்கையாலே சம்சார பீஜம் -வேர் முதல் மாய்த்து -பேஷஜம்

———————–

நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

நீர் நுமது –
அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.
ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை
‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி
‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.
நன்று ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; ‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில்,
இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு
அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே!

இவை வேர் முதல் மாய்த்து –
இவற்றை வேர்முதல் மாய்க்கையாவது என் என்னில்
இதை அ புருஷார்த்தம் – உறுதிப்பொருள் அன்று -என்னும் நினைவு உண்டாதல்.
இரண்டு மரங்கள் சேர நின்றால், ஒன்றிலே தொளைத்துப் பெருங்காயத்தை வைக்கச் சில நாள் ஒன்று போலே நின்று,
பின்னைப் பட்டுப் போகா நின்றது;
அப்படியே,அகங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் – யான் எனது என்னும் செருக்கு விடத்தக்கது- என்னும் நினைவு உண்டாகத்
தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும் என்றபடி.
அநாத்மந் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வ மிதி யா மதி அவித்யா தரு சம்பூதி பீஜ மேதத் த்விதா ஸ்திதம்
(‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும்,
அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, ) என்று சம்சார பீஜமும் –
அச்யுதாஹந் தவாஸ் மீதி சைவ சம்சார பேஷஜம் ( ‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய்
இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’,_)என்று பரிஹாரமும் –
அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஆதலால்,ரக்ஷகனானவன் – அளிக்குமவன்-அவசர பிரதீஷகனாக – ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

இறை சேர்மின் –
அபிராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.
சேர்மின்
சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு,
முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்–
உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.
சம்சார ஆர்ணவ மக்நாநாம் (‘பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால்
இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு,)
விஷ்ணு போதம் ( எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத்) தவிர, சிறந்த சாதனம் வேறு ஒன்று இல்லை,’
எங்கும் நிறைந்த ஓடம் ஆகையால், இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு கடத்தும் என்பது பெறுதும்.
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேராதார்,’ என்ற திருக்குறள் நினைத்தல் தகும்

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

பீஜம் பேஷஜம் என்றதுக்கு பிரமாணம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-அம்சம் காண்டிக்யம் ப்ரதிகேசித்வ ஜோக்தமிதம்
அன்றிக்கே இறை சேர்மினே -என்றதையும் கடாக்ஷித்துக் கொண்டு யுக்த அர்த்தத்துக்கு பிரமாணமாகவுமாம்
த்யாஜ்யத்துக்கு பிரதிகோடி இறை சேர்க்கை
பற்றுங்கோள் என்னாதே சேர்மினே என்றது ஈடுபாடு –
மரக்கலத்தை ஆலம்பநமாகக் கொண்டு அன்றோ வாயு வசாத் கரை சேருகிறது —
அப்படியே ஸ்ரீ விஷ்ணு போதுமான சர்வேஸ்வரனும் க்ருபாவானாய்க் கொண்டு கடத்தும் -என்றபடி –
சீர்மையாய் நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒத்த சீரியது இல்லை என்றபடி –
நேர் –ஒப்பு -நிறை -பூர்த்தி
ரக்ஷகனானவன் அவசர பிரதீஷனாய் இருக்க –
வேங்கடங்கள் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் –
கெடும் இடராய வெல்லாம் –
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரா –
ஒடுங்கலும் எல்லாம் விடும் –
விஷயேந்த்ரிய சம்யோகாத் யத் தத் அக்ரே அம்ருதோபமம்-என்றும்
சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம் -விஷ்ணு போதம் விநா நான்யத்
கிஞ்சித் அஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம்
விஷ்ணு -வியாப்தவ் என்கிற தாத்பர்யம் –
இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருக்கு கடத்தும் ஓடம் -என்றவாறு –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading