அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-8-

எட்டாம் திருவாய் மொழி -ஓடும் புள் பிரவேசம் –
இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய
லீலா விபூதி சம்பந்தம் அடியான செவ்வைக் கேட்டைப் பார்த்து வைஷம்ய பிரதிபத்தி பண்ணாதே –
அவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வை யாம்படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக –
1-அதுக்கு பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும்
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும்
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும்
4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும்
5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும்
6-இது சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும்
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம்படி கலக்கும் என்னும் இடத்தையும்
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும்
9-அவதாரங்கள் ஆஸ்ரித அநு பாவ்யமான அசாதாரண சிஹ்ன யுக்தங்கள் என்னும் இடத்தையும்
10-ஏவம் வித ஸ்வ பாவந் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

——————————————–

முதல் பாட்டில் நித்யரோடு பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

அம்மானே –நிருபாதிக ஸ்வாமி யானவன்
ஓடும் புள்ளேறி –பெரிய திருவடி நினைவுக்கு ஈடாக அவனை மேற்கொண்டு உலாவும்
சூடும் தண் துழாய்–ஸ்ரமஹரமான திருத் துழாயை செவ்வி குலையாமல் தன் திவ்ய அவயவங்களிலே சூடும்
இப்படி
நீடு நின்றவை ஆடும் -கால தத்வம் உள்ளதனையும் நிலை நிற்கிற நித்ய வஸ்துக்களோடே பரிமாறும்
நெடும் காலம் அவற்றோடு நின்று பரிமாறும் என்று புள்ளு-துழாய் -என்று ப்ரஸ்துதத்தைச் சொல்லிற்றாகவுமாம் –
அங்குத்தை திர்யக் ஸ்தாவர ஜென்மம் கர்ம நிபந்தம் அல்லாமையாலே ஈஸ்வர இச்சா அதீனம் என்றுகருத்து –

——————————————————————–

அநந்தரம்-லீலா விபூதியில் ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

அம்மானாய்–சர்வ ஸ்மாத் பரனான ஸ்வாமியாய் வைத்து –
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே — வெவ்விய குதிரையை வாயைப் பிளந்த சிவந்த பெரிய கண்ணையுடைய ஸ்ரீ கிருஷ்ணன்
பின்னும் எம்மாண்பும் ஆனான்-அவ்வளவும் அன்றியே பின்னையும் எல்லா மாட்சியையும் யுடையவன் ஆனான் –
எல்லா அவதாரங்களில் அழகுடையவன் ஆனான் என்றபடி –
அன்றியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தன்னிலேயாய் மாட்சிமை என்று தர்ச நீய சேஷ்டிதங்களாக வுமாம் –

——————————–————————————–

அநந்தரம் -உபய விபூதி சாதாரணமான திருமலையில் ஸ்திதியை அருளிச் செய்கிறார் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

மண்ணோர் விண்ணோர்க்கு-மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்
கண்ணாவான் என்றும் -என்றும் ஓக்க கண்ணாமவன்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –குளிர்த்தியால் மிஞ்சி இருப்பதாய் திரு வேங்கடம் என்று
பேரான ஸூரி ஸேவ்யமான திருமலையை யுடையவன் –

———————————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித விஷயத்தில் ஆபத் ஸகத்வத்தை அருளிச் செய்கிறார்-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

வெற்பை ஓன்று எடுத்து –இந்திரன் ப்ரவர்த்திப்பித்த அஸ்ம வர்ஷத்தில் ரஷ்ய வர்க்கம்
இடர் படாதபடி -ஒரு மலையை -எடுத்து –
ஒற்கமின்றியே-ஒடுக்கம் இன்றியிலே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –நிற்கிற ஸ்வாமியினுடைய ஆபத் ஸகத்வ கீர்த்தியை
கால தத்வம் உள்ளதனையும் அப்யஸியா நிற்பன்-
ஒற்கம் -ஒல்குதலாய் பல சங்கோசத்தைக் காட்டுகிறது –

———————————————————————————-

அநந்தரம் -ஏவம் பூதனான ஸ்ரீ கிருஷ்ணன் தம்மோடு ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்–என்றும் ஓக்க வெண்ணெயை கை யுள்ள அளவும் நீட்டி உண்டவன்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –காரியப்பாடான பொய் கலவாதபடி விரும்பி என்னுடைய
ஹேயமான சரீரத்தில் ஒன்றுபடக் கலந்தான்
கை கலந்து என்று -இரண்டு கையும் கலந்து என்னவுமாம்

——————————————————————————————

அநந்தரம் லோகத்தை அநந்யார்ஹம் ஆக்கினால் போலே என் ஆத்மாவையும் அநந்யார்ஹம் ஆக்கினான் என்கிறார் –

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1-8-6-

கலந்து என்னாவி -ஒரு நீராகக் கலந்து என் ஆத்ம ஸ்வரூபத்தினுடைய
நலம் கொள் நாதன் —ஸ்வ அசாதாரண சேஷத்வம் ஆகிற நன்மையை தனக்குப் பிரயோஜனமாகக் கொண்ட சேஷியானவன் –
புலன் கொள் மாணாய் –இந்திரியங்களுக்கு ஆகர்ஷகமான வாமன ப்ரஹ்ம சாரி வேஷத்தை யுடையவனாய்
நிலம் கொண்டானே –பூமியை தன்னதாக்கிக் கொண்டவன்
நிலம் என்று லோகாந்தரங்களுக்கும் உப லக்ஷணம்-

————————————————————————————

அநந்தரம் -என் நினைவே தனக்கு நினைவானான் -என்கிறார் –

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

கொண்டான் ஏழ் விடை -அபிமத விரோதியான ஏழு விடைகளையும் ப்ராணனைக் கொண்டவனாய் –
உண்டான் ஏழ் வையம்–ஆபத்தில் சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்
தண் தாமம் செய்து -சாம்சாரிக தாப சாந்தி கரமான-பரமபதத்தில் விருப்பத்தைச் செய்து –
என் எண் தானானானே –என் பக்கலிலே பண்ணி என்னுடைய மநோ ரதத்தின் படியே
தான் மநோ ரதிக்கத் தொடங்கினான் –
அதாவது நான் பரமபதத்தில் தன்னை அனுபவிக்க எண்ணுமா போலே
தான் இங்கே என்னை அனுபவிக்க எண்ணா நின்றான் என்றபடி –
என் எண்ணிலே தான் கைப் புகுந்தான் என்றுமாம்

———————————————————————-

அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமான அவதாரத்துக்கு எல்லை இல்லை என்கிறார் –

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

ஆனான் ஆனாயன் –கோ ரக்ஷண ஸ்வ பாவமான கோப ஜாதியை யுடைய தான்
மீனோடு ஏனமும் தான் ஆனான் –ஆபத் ரக்ஷண அர்த்தமாக மத்ஸ்யாவதாராதி ரூபேண அவதீர்ணன் ஆனான்
என்னில் தானாய சங்கே –என்றும் சொல்லும் அளவில் விலக்ஷண ஸ்வரூபனான தன்னுடையவான
அவதாரங்கள் சங்கு என்கிற ஸங்க்யைக்குப் போரும்
அன்றியே
எண்ணில் தானாய் சங்கு என்று என் பக்கல் தான் பண்ணின சங்கத்தால் ஆனாயனான தான் மீனோடு ஏனமும் ஆனான் என்றுமாம்
அன்றியே
எண்ணில் என்று அஞ்சாம் வெறுமையாய் என் நிமித்தமாகப் பண்ணின அங்க்யா தங்கள் என்றுமாம்
சங்கு பேர் இலக்கம் -சங்கமுமாம் –

———————————————————–

அநந்தரம் அவதாரங்கள் எல்லாவிதத்திலும் அசாதாரண சிஹ்ன யுக்தன் என்கிறார் –

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

எங்கும் தானாய் நங்கள் நாதனே –எல்லா பிரதேசத்திலும் அவதார முகத்தால் தான் சந்நிஹிதனான நம்முடைய நாதன்
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்-வெறும் புறத்திலே அழகிய திருக் கையிலே
ஆஸ்ரிதற்கு அனுபாவ்யமான சங்க சக்கரங்களை கொண்டான் –

——————————————————————

அநந்தரம் ஏவம் வித ஸ்வ பாவன் வேதைக சமதி காம்யன் என்கிறார் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே —1-8-10-

நாதன் -நிருபாதிக சர்வ சேஷியாய்
ஞாலம் கொள் பாதன் -அந்த சேஷித்வ நிர்வஹணத்துக்காக ஸமஸ்த ஜகத்தோடும்
தாரதம்யம் பாராமல் செறிந்த திருவடிகளை யுடையனாய்
என்னம்மான்-அத்தாலே-எனக்கு அசாதாரண சேஷியானவன்
ஓதம் போல் கிளர் வேத நீரனே —சமுத்திரம் போலே கிளர்ந்து ஸ்தோத்ரம் பண்ணி ஹ்ருதயத்தை வெளியிடுகிற
வேதங்களால் சொல்லப்பட்ட நீர்மையை யுடையவன் –

———————————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழி ஆர்ஜவ குணத்தினுடைய நிரூபண ரூபம் என்று அருளிச் செய்கிறார் –

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

நீர் புரை -ஒருக்கின இடத்தில் சென்று பாயும் நீரின் செவ்வை போலே இருக்கிற
வண்ணன் சீர் சடகோபன்-ஸ்வ பாவத்தை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆழ்வார்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –நேர்ந்து அருளிச் செய்த ஆயிரத்தில் இவை ஓர்தலை வடிவாக உடைத்தாய் இருக்கும்
இது குறள் அடி வஞ்சித்துறை –

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading