ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –
——————————————–
முதல் பாட்டில் உன்னை லபிக்கைக்கு சாஸ்த்ர உக்தங்களான உபாயங்கள் எனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே-
உன்னை ஒழியச் செல்லாதபடி அபி நிவிஷ்டனான நான் ஆஸ்ரித சம்ச்லேஷத்தாலே உபகாரகனாய்
அவசர பிரதீஷானான உனக்குப் புறம்போ என்கிறார் –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-
நோற்ற நோன்பிலேன் -பல வ்யாப்தமாம்படி அனுஷ்டித்தமான கர்ம யோகம் உடையேன் அல்லேன்-ஆகையால்
நுண்ணறிவிலேன் -ஸூஷ்ம ரூபமான ஜீவ பர விஷய ஞான யோகத்தை உடையேன் அல்லேன் -ஆகையால்
ஆகிலும் –உபய சாத்தியமான பக்தி இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இனி -உன்னுடைய குண அனுசந்தானம் பிறந்த பின்பு
உன்னை விட்டு -ரக்ஷண ஏக சீலனான உன்னை ஒழிய
ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்-ஒரு சாணமும் ஆற்ற மாட்டு கிறிலேன்
அரவின் அணை அம்மானே!-ஆஸ்ரிதனான ஆதி சேஷனை அணையாகக் கொண்டு அவனுக்குத்
திரு மேனியை உபகரித்த அசாதாரண ஸ்வாமியாய்
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்–சேற்று நிலத்து தாமரையானது செந்நெலூடு கலந்து
மலரும்படி தர்ச நீயமான ஸ்ரீ வர மங்கல நகரிலே
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் அவசர ப்ரதீஷை தோன்றும் படி
வ்யாவ்ருத்தமான இருப்பாலே எனக்கு உபகாரகனானவனே அங்கு நீ இருக்கிற இருப்பில்
ரக்ஷண சீலனான உனக்கு ரஷ்ய பஹிர்பூதன் அல்லேன் –
————————————————————————
அநந்தரம் என்னை அங்கீ கரிக்கைக்கு பிரதிபந்தயமான அநிஷ்டம் யுண்டாகிலும் அதுக்கு நிவர்த்தகன்
நீயாகையாலே எனக்கு கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார் –
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-
அங்குற்றேனலேன் –நிஷ்பன்ன உபாயனாய்க் கொண்டு நீ இருக்கிற ப்ராப்ய அத்தலத்தில் புகுந்தவன் அல்லேன்
உபாய ஸூந்யர் ஆறி இருக்கை அன்றோ யுள்ளது என்று நிரபேஷனாய்
இங்குற்றேனலேன் -இருந்த இடத்தில் இருக்கிறேன் அல்லேன்
உன்னைக் காணும் -நிரதிசய போக்யனான உன்னை அனுபவிக்க வேணும் என்கிற
அவாவில் வீழ்ந்து நான்-அபி நிவேசத்திலே அகப்பட்டு ஆற்றாமையையுடைய நான்
எங்குற்றேனுமலேன் -அந்நிய பரரான லௌகிகர் நிலை ஒன்றிலும் அல்லேன்
இலங்கை செற்ற அம்மானே!-ஆஸ்ரித விஷயத்தில் பிரதிபந்தயகமான இலங்கையை அழியச் செய்து
பிராப்பித்துக் கொண்ட அசாதாரண ஸ்வாமியாய்
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை-பிரபாட்டார்க்கு உதவுக்கைக்காக சந்திரனோடு சேரும்படி
மாணிக்யமயமான மாடங்கள் வளர்கிற ஸ்ரீ வர மங்கல நகரிலே நித்ய வாசம் பண்ணுமவனாய்
சங்கு சக்கரத்தாய்!–ஆஸ்ரித விரோதி நிரசனகரமாயும் போக்யமாயுமுள்ள திவ்ய ஆயுத விசேஷங்களை யுடையவன்
தமியேனுக்கு அருளாயே- உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு
உன் உபகார சீலமான கிருபையைப் பண்ணி அருள வேணும் –
————————————————
அநந்தரம் அதிசயித பரத்வ ஸூசகமான ஆகாரங்களை யுடையையாய்க் கொண்டு என்னை அங்கீ கரித்து அடிமை கொண்ட
உபகாரத்துக்கு நான் ஒரு பிரதியுபகாரம் செய்தேனாக அறிகிறிலேன் -என்கிறார்
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா-கருடனாகிற பஷியை கொடியாகவும் -திருவாழியை ஆயுதமாகவும் –
கருளப் புள் என்று கறை யணி மூக்கு என்னுமா போலே கறுத்த திருமுகமுடையவன் என்னவுமாம்
பரமபதத்தை நாடாகவும் யுடையையாய் -இப்படி பரம ப்ராப்யனான உன்னை எதிர்த்தலையில் தரம் பாராதே
யுபகரிக்கும் காளமேகம் போலே எனக்காக்கின திருவடிவை யுடையையாய் -அவ்வழகாலே
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்–ஒரு வஸ்து வென்று புத்தி பண்ண ஒண்ணாத படி அவஸ்துவான என்னை
லப்த ஸ்வரூபனாம் படி அங்கீ கரித்து -அதுக்கும் மேலே -வாசிகமான கைங்கர்யத்தையும் கொண்டவனாய் -அது முழுக்க நடத்துகைக்காக
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு-ஞானாதிசயத்தை யுடையராய்க் கொண்டு
நாலுவகைப்பட்ட வேதங்களையும் தங்கள் நினைத்தபடி நிர்வகிக்க வல்லவர்கள் பலரும் பகவத் அனுபவத்தால்
சம்பன்னராய் வர்த்திக்கிற ஸ்ரீ வர மங்கல நகருக்கு
தெருள் கொள் நான்மறை என்று வேத விசேஷணம் ஆகவுமாம்
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –நிரவதிக கிருபையைப் பண்ணி அங்கே இருக்கிறவனே-இப்படி இதுக்கு முன்பு
நீ பண்ணின உபகாரத்துக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறிலேன்
ஆனபின்பு மேலும் நீயே அருள வேணும் என்று வாக்ய சேஷமாய் தமியேனுக்கு அருளாய் -என்று கீழோடே அந்வயிக்கிறது
———————————————
அநந்தரம் ஆஸ்ரித சம்ரக்ஷண ஏக ஸ்வ பாவனான யுன்னை என் அபேக்ஷை சாயநாமாகப் பெறுவது எங்கே என்கிறார் –
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி–சத்ருக்களாய்க் கொண்டு சேர்ந்த சேனையை யுடைய
துர்யோதனாதிகள் நூற்றுவரும் நசிக்கும்படி தனியரான பாண்டவர்கள் ஐவருக்கும் ஸஹாய பூதனாய்க் கொண்டு
துர்யோதனாதிகளாலே பீடிதரான அன்று பகலை இரவாக்கினது முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்தை பண்ணி
நீறு செய்த எந்தாய்! -எல்லாச் சேனையும் என்கிறபடியே ஸமஸ்த பரிகரத்தையும் தூளி சேஷமாம் படி பண்ணின மஹா உபகாரகனாய்
நிலம் கீண்ட அம்மானே!-அவர்களோபாதி வியாபார க்ஷமை யும் அல்லாத பூமியை பிரளய ஆபத்தில் இடந்து எடுத்த ஸ்வாமியாய்
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்-அவ்வஸ்தைகளுக்குப் பிற்பட்ட என் போல்வாருக்காக
ப்ராப்ய ப்ராபக விஷயமாகத் தெளிந்த ஞானத்தை யுடையரானவர்களுடைய வைதிகமான பகவத் சமாராதனம்
இடைவிடாமல் நடக்கக் கடவதான ஸ்ரீ வர மங்கல நகரத்திலே
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–அவர்களோடு ஓக்க ஏறி அவர்களுக்கு ஆராத்யனாகக் கொண்டு
வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவன் இப்படி அபேஷா நிரபேஷமாக ஸ்வயமேவ ரக்ஷணத்திலே ப்ரவ்ருத்தனாய்
அநந்ய சாத்யனான உன்னை எங்கே பிராப்பிப்பதாக நான் கூவுவேன்
நீ கூவுதல் வருதல் செய்கை யன்றோ அநு ரூபம் என்று கருத்து –
—————————————————————–
அநந்தரம் ஆஸ்ரித விரோதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளை அந்தர் பேதம் பண்ணி அழிக்கும் ஸ்வ பாவனான நீ
ஆஸ்ரிதற்கு அநு பாவ்யனாய் வந்து இருக்கக் கண்டேன் –
இப்படி இருக்கிற உன்னைப் பெறுகைக்கு நான் ப்ரவர்த்திக்கை அநு ரூபமோ என்கிறார் –
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? -அநந்ய ரஷ்யமான ஸ்வரூபத்தை யுடையேனான எனக்கு புருஷார்த்த ப்ராப்திக்கு
சாதனமாக அபேக்ஷிக்கை அநு ரூபமோ
எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று–அபேஷா நிரபேஷமாக ஆஸ்ரித விரோதிகளான எவ்வகைப்பட்ட சத்ருக்கள் ஆகிற
அஸூரா வர்க்கத்துக்குள்ளே புத்தாதி விக்ரஹ பரிக்ரஹம் பண்ணிக் கலந்து நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!-வைதிக ருசியைக் குலைத்து பாஹ்ய ருசியைப் பிறப்பிக்கை யாகிற க்ருத்ரிமங்களை செய்யும்
அவர்கள் நெஞ்சைக் கலக்கும் ஸ்யாமள விக்ரஹத்தை யுடைய ஸ்வாமி யானவனே
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!க்ருதக்ருத்யராய் பூமியிலே ஞானாதி ஐஸ்வர்யத்தாலே
ஸூரி சமானரானவர்கள் காய் விடாதே வர்த்திக்கிற ஸ்ரீ வர மங்கல நகர் இருந்ததே குடியாக சேஷ வ்ருத்தி பண்ணும்படி சேஷியாய் இருந்தாய்
அவர்களோடு ஒத்த சேஷத்வ ஞானத்தையுடைய நானும் அந்த இருப்பை கண்டேன் -ஆனபின்பு என் விரோதியையும் நிரசித்து
அனுபவிப்பிக்கையும் உனக்கே கர்த்தவ்யம் என்று கருத்து –
——————————————————————–
அநந்தரம் ஆஸ்ரித உபகாரகதவத்தாலே அத்யுஜ்ஜ்வல ஸ்வ பாவனான நீ உன்னை நான்
அனுபவித்து சேஷ விருத்தியைப் பண்ணும்படி வந்து அருள வேணும் என்கிறார் –
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! –பிரளய ஆரணவத்துக்கு நிலவனாம்படி ஸ்ரீ வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு
பூமியை கீண்டு எடுத்த அப தானத்தால் எனக்கு உபகாரகனாய்
கண்ணா! -இப்படி ஏக விஷயம் அன்றியே -ஸர்வ விஷய உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனாய் -இஸ் ஸுலப்யாதி குண பிரகாசத்தாலே
என்றும் எனை ஆளுடை வான நாயகனே! –என்றும் ஓக்க என் சத்தை அழியாமல் அடிமை கொண்டு பரமபத போகம் போலே
வாசிக கைங்கர்யம் கொண்ட நாயகனாய்
மணி மாணிக்கச் சுடரே!–விலக்ஷணமான மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலமான தேஜஸ்ஸை யுடையவனாய்
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை–தேனையுடைத்தான மாம் பொழிலை யுடைத்தாய் ஸ்ரமஹரமான
ஸ்ரீ வர மங்கலத்தில் யுள்ளார் சேஷவிருத்தி பண்ணும்படியாக நித்ய வாசம் பண்ணா நிற்பானாய்
வான மாமலையே! .–பரம வ்யோம வாசிகளுக்கு அபரிச்சேதயமான மலை போலே ஸூஸ்த்திரமான திவ்ய வடிவை யுடையவனே
வான மா மலை -என்று ஆகாசத்தில் கிட்டும்படி ஓங்கின அஞ்சன கிரி போலே என்றுமாம் –
அடியேன் தொழ வந்தருளே-சேஷ பூதனான நான் சேஷ விருத்தி பண்ணும்படியாக அவ்விருப்புக் குலைந்து வந்து அருள வேணும்
——————————————-
அநந்தரம் சகல சத்தா ஹேதுவான நீ என்னை விஸ்லேஷிப்பித்து சத்தை அழியாது ஒழிய வேணும் என்கிறார்
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! -பரமபத -ஷீராப்திகளை விட்டு -வந்து அருளி –
உன் பக்கல் அபேக்ஷையற்று விமுகனாய்ப் போந்த என் நெஞ்சை வாஸஸ் ஸ்தானமாகக் கொண்டு என் சத்தையை நோக்கி
பரமபாத வாசிகள் சத்தையும் அபி வர்த்திப்பிக்குமவனாய்
உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! -இந்த லோகத்துக்கு சத்தா ஹேதுவாய்க் கொண்டு அத்விதீயனாய்
பிரதமபாவியான மாதாவும் பிதாவுமாய்
முழு ஏழுலகும் உண்டாய்!-பிரளய ஆர்ணவத்திலே அழுந்தாதபடி சகல லோகத்தையும் அமுது செய்து
திரு வயிற்றிலே வைத்து சத்தையை நோக்கினவனாய்
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்-அநந்ய பிரயோஜனமாய் கைங்கர்ய ரூபமாகையாகிற ஆர்ஜவத்தையுடைய
வ்ருத்தி விசேஷத்தை யுடையரானவர்களுடைய வைதிகமான பகவத் ஆராதனம் மாறாமல் நடக்கிற ஸ்ரீ வர மங்கல நகரிலே
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–முடிவு அற்ற குண பிரபையை யுடையனாய் இருக்கிறவனே
அகற்றினாலும் அகற்றப் போகாதபடி அநந்யார்ஹமான ஸ்வரூபத்தை யுடையேனான என்னை அகற்றாது ஒழிய வேணும்-
—————————————
அநந்தரம் அகலுகைக்கு ஹேதுவான இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரம் உனக்கு விதேயமாய் இருக்க
அதிலே வைத்தது அகற்ற நினைத்தது அன்றோ என்கிறார் –
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-உன் பக்கல் விமுகரை அகற்றுகைக்காக
நீ உண்டாக்கி வைத்தவையாய் ஒன்றோடு ஓன்று சேராத ஆச்சர்ய ஸ்வ பாவங்களாய் ஒருவராலும் வெல்ல அரிதான
ஐந்து இந்த்ரியங்களாம வற்றை உள்ளபடியே நன்றாக அறிந்தேன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்-இப்படி அறிவு பிறந்து அஞ்சி இருக்கிற என்னையும் உன் பக்கல் நின்றும்
அகற்றி நீ கால் வாங்கிக் கரையேற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே தள்ளுவுதி என்று அஞ்சா நின்றேன்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை! -விளங்குகிற ஒளியையுடைத்தானா மாணிக்கங்களை யுடைய மாடங்கள் ஓங்கி இருக்கிற
ஸ்ரீ வர மங்கைக்கு நிர்வாஹகனாய்
பகர் என்று -விளங்குதல் –
என்றும் புகற்கரிய எந்தாய்! -நீ நினையாதார்க்கு ஒரு நாளும் பிரவேசிக்க அறிய என் ஸ்வாமியாய்
புகற்கரிய வென்று -புகலுதற்கு அரியது என்றுமாம் –
புள்ளின் வாய் பிளந்தானே!–நீ நினைத்த கோபிமாருக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு விரோதியான பகாஸூரன் வாயைப் பிளந்தவனே –
இப்படி சக்தனாய் இருக்க விரோதியைப் போக்காது இருந்தது அகற்ற நினைத்தது என்று கருத்து
——————————————-
அநந்தரம் ஆஸ்ரித விரோதி நிராசனத்தாலே அத்யுஜ்ஜ்வல ஸ்வ பாவனாய் இருக்கிற நீ
நான் உஜ்ஜீவிக்கும்படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-
புள்ளின் வாய் பிளந்தாய்! -ஆஸ்ரிதருடைய ப்ரக்ருதி சம்பந்தத்தை அழிக்கைக்கு ஸூசகமாக பகாஸூரனை நிரசிப்பானாய்
மருதிடை போயினாய்! -த்வந்த துக்கத்தைப் போக்குகைக்கு ஸூ சகமாக யாமளார்ஜுன நிரசனம் பண்ணுமவனாய்
எருதேழ் அடர்த்த -அவஸ்தா சப்தகங்களை அழிக்கைக்கு ஸூ சகமாக சப்த ருஷபங்களையும் மர்த்திப்பானாய்
என் கள்ள மாயவனே! -இப்படி ஒருவருக்கும் அறிய ஒண்ணாத படி குஹ்யமான ஸ்வ பாவங்களை எனக்கு பிரகாசிப்பித்த ஆச்சர்ய பூதனாய்
கருமாணிக்கச் சுடரே!-இந்த விரோதியை நிரசித்த ப்ரீதியாலே கறுத்த மாணிக்கத்தின் சுடர் போலே இருக்கிற வடிவழகை யுடையனாய்
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை- யுள்ளிருந்தாய் -எந்தாய் அநந்ய ரஷ்யமாம் படி
தந்தாமுடைய ஸ்வரூபத்தில் தெளிவை யுடையவராய்
தெளிவுக்கு ஊற்றாம் படி பகவத் ஸ்வரூபாதி ப்ரதிபாதனம் ஆகிற ஸ்ரீ யை யுடைத்தான நான்கு வேதங்களினுடைய தாத்பர்யங்களும்
தங்கள் இட்ட வழக்காம்படி யானவர்கள் நெருங்கி வர்த்திகையாலே சாம்சாரிக தாபா பிரசங்கமே இல்லாதபடி ஸ்ரமஹரமான
ஸ்ரீ வர மங்கையின் உள்ளே என்னை அநு பவிப்பைக்காக எழுந்து அருளி இருந்த உபகாரகனே
உய்யுமாறு எனக்கே.–அநந்யகதியான எனக்கு உன் திருவடி யடிமையைப் பெற்று உஜ்ஜீவிக்கும் பிரகாரம் கிருபை பண்ணி அருள வேணும் –
———————————————
அநந்தரம் நம்மைப் பெறுகைக்கு நம் சரணங்களே காணும் உபாயம் என்று பிரகாசிப்பிக்க
இவ்வுபகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லை -என்கிறார்
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் -எனக்கு ப்ராப்திக்கு வழி உன் திருவடிகளே
புகலிடமான உபாயமாக தந்து விட்டாய் இப்படி யுபகாரகனான உனக்கு
கைம்மாறு நான் ஒன்றிலேன் -ஒருபடியாலும் பிரதியுபகாரமானது அகிஞ்சனான நான் ஓன்று இன்றியிலே இரா நின்றேன்
என தாவியும் உனதே-என்னுடைய ஆத்மாவும் பாண்டே உன்னதாய் இரா நின்றது
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை–சேற்று நிலத்திலே இடம் கொள்ளுகிற கரும்பும் அதிலும்
பெருக்க வளருகிற செந்நெலும் நெருங்கி ஸ்ரமஹரமான ஸ்ரீ வர மங்கையில் இருப்பானாய்
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–பரிமளோத்தரமாய் செவ்வியையுடைய ஸ்ரமஹரமான திருத் துழாயாலே
அலங்க்ருதமான திரு முடியை யுடையனாய் நித்ய ஸூறி களுக்கு நிர்வாஹகானானவனே
உன்னுடைய போக்யத்தையாலும் சேஷித்தவத்தாலும் விபூதி பூர்த்தியாலும் பிரதியுபகாரத்துக்கு யோக்யதை இல்லை என்று கருத்து
——————————————————–
அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு
நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான சர்வேஸ்வரனாய்
நிருபாதிக சம்பந்த யுக்தமான வாத்சல்யத்தை யுடையனாய் -ஸ்வ சேஷ வஸ்துவுக்கு அந்நிய அபிமானம் வராதபடி
அளந்து கொள்ளுமவன் திருவடிகளில்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்- செய்த -கொய்து கொள்ளும்படி சம்ருத்தமான பூக்களை யுடைய
பொழில்களாலே சூழப்பட்ட திரு நகருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்–ஆயிரம் திருவாய் மொழியினுள்ளே ஸ்ரமஹரமான
ஸ்ரீ வர மங்கையை மேவிய இவை பத்தையும் அர்த்தத்தோடு உடன்பட்டு
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–பாட வல்லவர்கள் பரமபத வாசிகளுக்கு
எப்போதும் ஆராத அம்ருதம் போலே நித்ய போக்யமாவர்கள்
இது முதல் அடியும் மூன்றாம் அடியும் எழு சீராய் அயலடியும் ஈற்றடியும் நாள் சீரான ஆசிரியத் துறை –
————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply