பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–7-

இப்படி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப சேஷ்டித்த ஐஸ்வர்ய யுக்திகளை அநு கரித்ததனாலும் ஒரு ஆலம்ப மலபமானரான ஆழ்வார்
தன்னை விஸ்லேஷித்து நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே என்னை எம்பெருமான் உபேக்ஷித்து இருக்கிறது
ஸ்வ சம்ச்லேஷ உபாய ரூப கர்ம யோக ஞான யோக பக்தி யோகங்கள் இல்லாமை யாகாதே –
என்று பார்த்து அருளிச் செய்யும் திருவாய் மொழி –

—————————–

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும்
நான் தரிக்க மாட்டாமையாலும்
அடியேனை விஷயீ கரிக்கைக்காக நீ ஸ்ரீ வர மங்கல நகரிலே வந்து புகுந்து அருளுகையாலும் –
உனக்கு அடிமையான இவ்வாத்மாவை நீ போகிடில் இழவு உன்னதாகையாலும் அடியேனைப் பொகட்டு அருள ஒண்ணாது –
ஆதலால் அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்

———————————

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

உன் திருவடி மலர்களைப் பெற்றேன் அல்லேன் -பெறுகைக்கு ஈடான உபாயம் உடையேன் அல்லேன் –
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் இனி மேல் ஒரு உபாயம் அனுஷ்ட்டிக்க ஷமன் அல்லேன்
ஆகிலும் அசோகா வனிகையிலே பிராட்டியுடைய பிரதிபந்தகத்தை அன்று போக்கினாப் போலே
அடியேனுடைய பிரதிபந்தகத்தையும் நீயே நிர்ஹேதுகமாகப் போக்கி தமியேனுக்கு அருளாய் -என்கிறார் –

————————————————

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

இப்படி நிர்ஹேதுகமாக உம்முடைய அபேக்ஷித்தத்தைச் செய்தால் பிரயோஜனம் என் என்னில்
தயா நீயானான நீ அவஸ்துவாய் இருந்த என்னை ஸ்வ விஷய ஞானதயா வஸ்துவாய் த்வத் கைங்கர்ய ரதியுமாய் இருக்கும்படி
பண்ணி அருளிற்று என் பக்கல் என்ன பிரயோஜனம் கொள்ளுகைக்காக —
ஒரு பிரயோஜன அபேஷையால் செய்து அருளினாய் யல்லை இறே
உன்னுடைய நிரதிசய உதார காருண்யாதிகளாலே செய்து அருளினாய் அத்தனை இறே
இன்னம் குறையும் அப்படியே செய்து அருளாய் என்கிறார் –

—————————————————-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

இப்படி ஸ்வ ப்ரயோஜன நிரபேஷமாக வன்றோ ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணி அருளிற்று –
ஆனபின்பு அடியேனுடைய அபேக்ஷிதத்தையும் அப்படியே செய்து அருளாய் என்கிறார் –

————————————–

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

பிரதிகூலர்க்கு அன்றோ அவர்கள் நடுவே புகுந்து வைத்தே உன்னைக் காட்டிக் கொடாது ஒழிவது-
உன்னை ஆசைப்பட்டார்க்கும் அரியையோ -ஆனபின்பு அடியேனுடைய அபேக்ஷிதத்தைச் செய்து அருளாய்
உம்முடைய அபேக்ஷிதம் பெறுகைக்கு உடலான யுபாயத்தை நீர் செய்யலாகாதோ என்னில்
உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு ஈடாய் இருப்பதோர் உபாயம் என்னால் செய்ய முடியாது
இனித்தான் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -மத் ஏக போகராய் இருப்பார் எல்லார்க்கும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்பாடி
ஸ்ரீ வர மங்கல நகரிலே புகுந்து இருந்தோம் இறே என்ன அது நானும் கண்டேன் -எனக்கு அது அமையாது என்கிறார்

——————————————–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

மற்று உமக்குச் செய்ய வேண்டுவது என் என்னில் -அடியேன் தொழ வந்து அருள வேணும் –
அது நிர்ஹேதுகமாகச் செய்யக் கடவதோ என்னில் -நிர்ஹேதுகமாக வன்றோ ரஸாதலஸ்த்தமான ஜகத்தை
எடுத்து அருளிற்றும் இதுக்கு முன்பு அடியேன் திறத்தில் செய்து அருளினை செயலும்
இன்னம் குறையும் இப்படியே எனக்குச் செய்து அருளாய் -என்கிறார் –

——————————————————–

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

வானவர் கொழுந்தாய் வைத்து வந்து அருளி என்னெஞ்சு இடம் கொண்டு அருளினவனே
உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே
ஸர்வ லோகத்தையும் உன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளின பரம காருணிகனே
கைங்கர்ய ஏக ரதித்வ நிரூபணீய ஸ்வரூபரான ஜனங்களாலே அனவரதம் தொழும் சரண யுகளனாய்க் கொண்டு
ஸ்ரீ வர மங்கல நகரிலே எழுந்து அருளி இருந்த அசங்க்யேய கல்யாண குணங்களை யுடையவனே
அடியேனை அகற்றேல் என்கிறார்

—————————————————-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

உம்மை அகற்றினோமோ -என்ன -த்வத் பிராப்தி பரிஹரிக்கக் கடவதான சப்தாதி விஷயங்கள் கையிலே
என்னை விட்டு வைத்த போதே அகற்றினாய் அல்லையோ –
இப்படி நீ அரியையாவது பிரதிகூலர்க்கு அன்றோ -அநு கூலர்க்கும் அரியையே என்கிறார்

———————————-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

உன்னுடைய அதி மநோஹர திவ்ய சேஷ்டிதங்களாலும் நிரதிசய ஸுந்தர்யத்தாலும் என்னைத் தோற்பித்து
உனக்கு அடிமை யாக்கி யருளினவனே
சாங்க சகல வேத வித் அக்ரேஸராய் த்வச் சரணாரவிந்த யுகளை கோபாயராய் இருந்த திவ்ய ஜனங்களாலே சம்ருத்தமான
ஸ்ரீ வர மங்கையுள் இருந்த அருளாய் உய்யுமாறு எனக்கு -என்கிறார் –

————————————————-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் உன் திருவடி மலர்களே என்று இருக்கும் இவ்வத்யாவசாயத்தை
எனக்கு ஸ்வ பாவமாம் படி தந்து அருளினாய்
இதுவே அமையாதோ -இம் மஹா உபஹாரத்துக்கு உனக்கொரு கைம்மாறு செய்யப் பெறுகிறிலேன்-
இவ்வாத்மாவைக் கைம்மாறாகத் தந்தாலாகாதோ என்னில் எனதாவியும் உனதே –
ஸர்வ பிரகாரத்தாலும் பரிபூர்ணனான உனக்கு என்னால் செய்யலாவது ஓன்று உண்டோ என்கிறார் –

——————————————————————-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

பராத்பரனாய் இருந்த நாராயணனுடைய திருவடிகளில் -கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு காலதத்வம் எல்லாம் புஜித்தாலும் ஆராத போக்யம் என்கிறார் –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading