பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–8-

இப்படி ஸ்ரீ வர மங்கல நகரிலே அலப்ய மநோ ரதராய் அத்யந்தம் அவசன்னரான ஆழ்வார்
தமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமான் திருவடி மலர்களே என்றுள்ள திவ்ய ஞானத்தைப் பெற்ற
இந்த லாபத்தை யநுசந்தித்து அதனாலே விஸ்ராந்தராய்
திருக் குடந்தையில் போய்ப் புக்கு அங்கும் எம்பெருமானோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலே கிடந்தது அலற்றுகிறார்-

————————————————-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

உன்னோடு பிறரோடு வாசி இன்றியே எல்லார்க்கும் ஓக்க சர்வ காலமும் அனுபவித்தாலும் ஆராத போக்யமே
உன்னுடைய நிரவாதிக ஸுந்தர்யாதி கல்யாண குணங்களாலே அடியேனுடைய அசேதனமான இந்த தேகமும் கூட
உன் பக்கல் உள்ள நிரதிசய அநு க்ரஹத்தாலே நீராய் உருகும்படி பண்ணி வைத்து எனக்கு
அரியையாய் இருக்கிறவனே –சீரார் செந்நெல் கவரி வீசும் செலு நீர்த் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -கண்டேன்
என்னை உன் திருக் கண்களால் பார்த்து அருளுதல் -ஒரு வார்த்தை அருளிச் செய்து அருளுதல் -காண்கிறிலேன்-என்கிறார் –

———————————–

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

எம்பிரான் -திவ்ய ரூபனே-அந்த திவ்ய ரூப அதி ஸுந்தர்யத்தாலே என்னைத் தோற்பித்து உனக்கு அடிமை யாக்கினவனே
ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக இச்சா அநு குண திவ்ய ரோபோ விசிஷ்டானாய்க் கொண்டு பிறந்து அருளுமவனே
நிரதிசய தீப்தி யுக்தனானவனே
திருக் குடந்தையில் தாமரைகள் எல்லாம் மலரா நிற்கச் செய்தே உன்னுடைய திருக் கண்கள் ஆகிற தாமரைகள் அலருகின்றன வில்லையே
நான் என் செய்கேன் என்கிறார் –

——————————————————————-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்னால் ஒரு செயலில்லை–நீ யல்லது எனக்கு மற்றொரு மதி இல்லை -என்னுடைய யத்தனத்தாலே உன் திருவடிகளைப்
பெறக் கடவனாகவோ பார்த்து அருளுகிறது –
உன்னுடைய கிருபையால் உன் திருவடிகளைப் பெறுகை ஒழிய வேறொரு உபாயத்தால் பெறிலும் வேண்டா –
ஆனபின்பு இனி இவ்வாத்மா உள்ள காலமும் உன் திருவடிகளைப் பிரியாதே இருக்கும்படி பார்த்து அருள வேணும் -என்கிறார் –

———————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

சர்வாத்மாக்களையும் உன் அழகாலே தோற்பித்து அடிமை யாக்கிக் கொள்ள வல்ல திரு யுடம்பை யுடையவனே
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான் அலமந்து-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றி அருளினால் போலே
வந்து தோற்றாய் -என்று கொண்டு ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்கிறார் –

——————————————————

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–5-7-5-

அழுது காண்பன்-தொழுது காண்பன் -ஆடிக் காண்பன் -பாடிக் காண்பன் -அலற்றிக் காண்பன் -பின்னையும் நீ வரக் காணேன்
காணாது ஒளிந்தவாறே இந்த லோகத்தார் உன் பக்கலிலே குண ஹானியைச் சொல்லா நிற்கிறாரே என்று
லஜ்ஜித்துத் தலை எடுக்க மாட்டாதே என்னுடைய பாபம் என்று இருப்பன்-
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-உன் திருவடிகளைச் சேர்வதொரு விரகு பார்த்து அருளாய் -என்கிறார்

————————————————-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

என்னுடைய பிரதி பந்தகத்தைப் போக்கி உன் திருவடிகளைச் சேர்வதொரு உபாயத்தைச் செய்து அருள வேணும் –
செய்து அருளும் இடத்தில் நீ செய்து அருளுகிற உபாயத்தை அறிந்து அதில் அகப்படாதே தப்பிலும் நான் அறியாததொரு படி
செய்து அருள வேணும் என்று அபேக்ஷித்த படியே செய்து அருளக் காணாமையாலே
ஆஸ்ரித வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்ய போக்யதாத் அபரிமித கல்யாண குண கணனாய் இருந்த உன் திருவடிகளோடுள்ள
சம்ச்லேஷம் ஆகிற மஹா ரசத்தை அறிந்து வைத்தே துஷ் பூரமான இந்த்ரியங்களாலே இந்த பிராகிருத விஷயங்களையே
புஜித்து இன்னம் எத்தனை காலம் உன் திருவடிகளை அகன்று இருக்கக் கடவேன்-என்கிறார் –

——————————————————–

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

உன்னுடைய கிருபையால் உன் அழகைக் காட்டி என்னை ஆத்மாந்த தாஸ்ய ஏக ரதியாகப் பண்ணி அருளினாய் –
இனி உன் திருவடிகளைப் பிரிந்து ஒரு க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டேன் –
ஆனபின்பு முந்துற உன் திருவடிகளைத் தந்து பின்னை என்னுடைய பிரதி பந்தகத்தைப் போக்கி அருள வேணும் -என்கிறார் –

———————————————-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

களைவாய் துன்பம் -களையாது ஒழிவாய் -திரு உள்ளமான படி செய்து அருளாய் -எனக்கு நீ யல்லது மற்றொரு கதி இல்லை
அடியேனுடைய துக்கங்களைப் போக்குகைக்காக வன்றோ திருவாழியை ஏந்திக் கொண்டு இருந்து அருளுகிறதும்
திருக் குடந்தையில் புகுந்து அருளிற்றும்
ஆனபின்பு உடலம் தளர்ந்து என்னாவி சரிந்து போகா நின்றது
இவ்வாத்மா முடிவதற்கு முன்னே ஈண்ட உன் திருவடிகளில் வாங்கி அருள வேணும் என்கிறார் –

————————————————

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

இவ்வாத்மா உனக்கே அடிமை என்னும் இடத்தை என்னை சம்வதிப்பித்து என்னை சேஷபூதான் ஆக்கினவனே
சேஷ சேஷாசன நித்ய ஸூ ரிகளுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
ஸர்வ ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாகத் திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிறவனே -காண வாராய் -என்கிறார் –

—————————————-

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

கண்கள் உகக்கும்படி வராதே என் நெஞ்சுக்குத் தோற்றும்படி வருமவனே –
உன்னுடைய நிரவதிக ஸுந்தர்ய நிதியான திவ்ய வடிவைக் காட்டி எனக்கு நிரதிசய போக்யமானவனே –
த்வத் ஏக போக்த்வ விரோதியாய் ஒருவராலும் தீர்க்க ஒண்ணாத விரோதிகளைத் தீர்த்து அருளினவனே –
இப்படி அடியேனை விஷயீ கரித்து அருளுகைக்கு ஈடாகத் திருக் குடந்தையில் புகுந்து அருளினவனே –
உனக்கு ஆள் பட்டும் இன்னம் உழல்வேனோ -என்கிறார் –

—————————————————

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

ஆஸ்ரித விரோதி நிரசன ஏக போகனாய் இருந்த எம்பெருமானுடைய திருவடி மலர்களையே ப்ராப்யமும் ப்ராபகமுமாகக் கொண்ட
குருகூர்ச் சடகோபன் வண்டுவரைப் பெருமாளுடைய திருக் குழலோசையில் காட்டிலும் இனியாவாகச் சொன்ன
ஆயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் மானேய் நோக்கியார்க்கு ப்ரியதமர் போக்யராமா போலே
எம்பெருமானுக்கு போக்யராவர்-என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading