துயில் எழ ஒட்டாய் காண் தகவன்று என்று பெண்கள் ஆற்றாமையாலே
நம்மை சில குற்றம் சொன்னார்களே யாகிலும்
திரு உள்ளம் பார்த்து இடம் பெற்ற போதிலே விண்ணப்பம் செய்ய வேணும் என்று
நப்பின்னை பிராட்டி பேசாதே பள்ளி கொண்டு அருள
இவளைப் பற்றினாலும் கார்யம் செய்யக் கடவனான அவன்
இவள் தன்னையும் திறக்க ஒட்டாதே போக ப்ரஸக்தனாய்
பேசாதே கிடந்தாய் என்றவாறே
சிவிட்க்கு என்று கிடக்கிறானாகக் கூடும் என்று பார்த்து
நீ முன்பு ஆர்த்த ரக்ஷணம் பண்ணி (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்றுகப்பம் தவிர்)
ஆர்ஜித்த குணங்கள் எல்லாம் (செப்பமுடையாய் திறல் உடையாய்)
இப்போது எழுந்து இராமையாலே
இழக்கக் கிடாய் புகுகிறாய் என்ற இடத்திலும்
அவன் வாய் திறவாமையாலே
நப்பின்னை பிராட்டி திறத்தில் ப்ரணய ரோஷத்தால் சொன்னதையும் இவனுக்கு
அஸக்யம் போலே இருந்தது என்று புரிந்து
(மீண்டும் )
இவளுடைய தேஹ குணங்களையும் (செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்)
ஆத்ம குணங்களையும்(நப்பின்னை நங்காய்) சொல்லி ஏத்தி
அவன் தனக்கு உரியனோ –
பரதந்த்ரனானவனை நலிகிறது என் (உன் மணாளனை) என்று
எங்களுக்கும் (எம்மை நீராட்டேலோ) அவனுக்கும் கடவையான நீயே
எங்கள் அபேக்ஷிதம் தலைக் கட்டித் தர வேண்டாவோ என்று
நப்பின்னை பிராட்டியை அர்த்திக்கிறார்கள்-
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-
பதவுரை
முப்பத்து மூவர் அமரர்க்கு–முப்பத்து முக் கோடி தேவர்கட்கு
முன் சென்று–(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி-இடம் காலம் இரண்டாலும் முன்
கப்பம்–(அவர்களுடைய) நடுக்கத்தை
தவிர்க்கும்–நீக்கி யருள வல்ல
கலியே–மிடுக்கை யுடைய கண்ண பிரானே!
வெப்பம்-(பயமாகிற) ஜ்வரத்தை
கொடுக்கும்–கொடுக்க வல்ல
விமலா–பரி சுத்த ஸ்வபாவனே!
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
அமலன் விமலன் நிமலன் நின்மலன்
போழ்ந்த புனிதன் போல்
துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்தருள்
’செப்பு அன்ன –பொற் கலசம் போன்ற
மென் முலை–விரஹம் பொறாத முலைகளையும்
செம் வாய்-சிவந்த வாயையும்
சிறு மருங்குல்-நுண்ணிதான இடையையுமுடைய
நப்பின்னை நங்காய்-நப்பின்னைப் பிராட்டியே!
திருவே-ஸ்ரீ மஹா லக்ஷ்மியே!
’துயில் எழாய்–படுக்கையினின்றும் எழுந்தருள்
செப்பம் உடையாய்-(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே
திறல் உடையாய்-பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே!
நல்லவனாயும் வல்லவனாயும் இருக்க வேண்டுமே
செற்றார்க்கு–சத்துருக்களுக்கு
(துயிலெழுந்த பின்பு.)
உக்கமும்–(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்)
தட்டொளியும்–கண்ணாடியையும்
உன் மணாளனை-உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்
தந்து-கொடுத்து
எம்மை-(விரஹத்தால் மெலிந்த) எங்களை
இப்போதே-இந்த க்ஷணத்திலேயே
நீராட்டு–நீராட்டக் கடவாய்’-கண்ணனுடன் அனுபவிப்பிக்க வேண்டும் என்றபடி
ஏல் ஓர் எம் பாவாய்-.
முப்பத்து மூவர் –
நீ ரஷிக்கும் இடத்தில்
சங்க்யா நியதி வேணுமோ –
க்ரம விவஷை தான் உண்டோ
அஞ்சு லக்ஷம் குடியில் உள்ளாருமாய் -நோவு பட்டால் உதவலாகாதோ –
ஆண்களுமாய் பிரபலரும் ஆனாலோ ரஷிக்கலாவது-
பெண்களும் அபலைகளும் ஆனால் ரஷிக்கல் ஆகாதோ –
சமிதை பாதியாய் சாவித்ரி பாதியாய் -ஸ்வ ரக்ஷணத்தில் அதிகரிப்பார்க்கோ உதவலாவது-
உன்னையே பற்றி தம் தாமும் ஒரு தலைப் பற்றாதார்க்கு உதவலாகாதோ
ஈஸ்வரோஹம் என்று இருப்பார்க்கோ உதவலாவது –
அடியோம் என்று இருப்பார்க்கு உதவலாகாதோ
அநந்ய பிரயோஜனரைப் போலே பதர் கழித்து கார்யம் தலைக் கட்டினவாறே
அஞ்ஞதை கொண்டு எதிர் இடுமவர்களையோ ரஷிப்பது –
கார்யம் செய்யா விடிலும் அகதிகளாய் அநந்ய ப்ரயோஜை களாய் இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாதோ
நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் (திரு விருத்தம் 92)-என்று
உன்னை எழுப்பி அம்புக்கு இலக்காகுவார் கார்யமோ செய்வது
உன் அழகு காண ஆசைப்பட்டார் கார்யம் செய்யலாகாதோ
அமரர் –
கொன்றாலும் சாவாதார்க்கோ உதவல் ஆவதோ –
வியதிரேகத்தில் பிழையாதே நாங்கள் இருக்க
உன்னை ஒழிய வேறு ஓன்று தாரகம் என்று முகாந்தரத்திலே ஜீவிப்பார்க்கோ உதவுவது –
உன் முகமும் உன் நோக்கும் ஜீவனமாய் இருப்பார்க்கு உதவல் ஆகாதோ
சக்தர்க்கோ கார்யம் செய்வது -அசக்தர்க்கு கார்யம் செய்யலாகாதோ-
நோவு பட்டு ஆற்ற வல்லார்க்கோ கார்யம் செய்யலாவது
முன்
நோவு வருவதற்கு முன்னே -ஏற்கவே பரிஹரிக்கக் கடவ நீ –
நோவு பட்ட எங்களை ரஷியாது ஒழிகிறது என் –
நினைவுக்கும் முற்படக் கார்யம் செய்யக் கடவ நீ –
எங்கள் நினைவைக் குற்றம் ஆக்கினாயோ –
சென்று
நீ இரந்து சென்று கார்யம் செய்வார்க்கோ செய்யலாவது –
நாங்கள் வந்து இரந்தால் ஆகாதோ –
உன்னை அழைத்து விட்டு கார்யம் கொள்வார்க்கோ உதவல் ஆவது –
உன் வாசலிலே வந்து நின்று துவளுகிற எங்கள் கார்யம் செய்யலாகாதோ
நாங்கள் உன் வாசலிலே வருகை குற்றம் என்று இருக்கிறாயோ –
ஸ்மராமி என்னுமவனுக்கு -நினைக்கை குற்றம் –
உவாசா என்னுமவனுக்கு வார்த்தை சொல்லுகை குற்றம் –
பத்ப்யாம் அபிகமாத் -என்னுமவனுக்கு வருகை குற்றம்
(அஹம் ஸமாராமி மத பக்தம் -வராஹ சரம ஸ்லோகம்
உவாசா ச மஹா ப்ராஞ்ஞா -விபீஷணன் வந்ததே அதிகம் பேசவும் செய்தானே
ஸ்னேஹ சந்தர்த்த -குக ஸஹ்யம்)
உன் மனத்தால் –(திருவிடவெந்தை )
வார்த்தை என்னே -(பாம்பணையான் வார்த்தை என்னே )
திருமாலும் போந்தானே-
எழுதும் என்னும் இது மிகையாய் யன்றோ (9-3 )அவ்விடத்துக்கு இருப்பது –
(நினைவுக்கும் வார்த்தைக்கும் வருகைக்கும் பிரமாணங்கள் காட்டிய அழகு )
கப்பம் தவிர்க்கும்-
கப்பம் -என்கிறது கம்பம் -என்கிறபடி -அதாவது நடுக்கம் –
கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துக் கிடக்கிறது –
தேவாஸ் ஸ்வர்க்கம் பரித்யஜ்ய -என்று
அஸூர ராஷசராலே குடி இருப்பு உள் பட இழந்து
புகலிடம் அற்றுப் படுகிற நடுக்கைத்தை தவிர்க்கை –
நாட்டார் நடுக்கத்தை தவிர்க்கக் கடவ நீ –
எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்
அவர்கள் நடுக்கத்துக்கும் எங்கள் நடுக்கத்துக்கும் வாசி அறிய வேண்டாவோ –
அவர்கள் நடுக்கம் எதிரிகள் நிமித்தமாக
நீ உணரும் படி காணாது ஒழியப் புகுகிறோமோ –
உன்னைக் கிடையாது ஒழியப் புகுகிறதோ -என்று எங்களுக்கு நடுக்கம்
கப்பம் -என்று இறை யாகவுமாம் –
ராவணாதிகளுக்குப் பணிப் பூ விட்டு திரியாமைக்காக
கலியே
மிடுக்கு உடையவனே –
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேரமா போலே உன் மிடுக்குக்கு எங்கள் பல ஹானியும் நேர் அன்றோ –
அபலைகளான எங்களுக்கு கிருஷ்ண பலா -என்கிற உன் மிடுக்கு அல்லது உண்டோ –
துயில் எழாய்
தேவதைகளுக்குப் போலே எங்களுக்கு குடி இருப்புப் பண்ணித் தரவும் –
மார்பிலே அம்பு ஏற்கவும் வேண்டா –
உணரும் போது அருகு காண்கையே -எங்களுக்கு குடி இருப்பும் ஜீவனமும்
துயில் எழாய்-
நீ யுகக்குமவர்களான முப்பத்து மூவராக நினை —
ஆண்களாக நினை –
பிரயோஜனாந்த பரர்களாக நினை –
மருந்து தின்று சாவதாரக நினை –
உன்னை ரஷ்யமாக நினையாதே ரக்ஷகனாக நினைக்கும் பேராக நினை
எங்களுக்கு நீ உணரும் படியும் –
நீ நோக்கும் படியும் –
நீ வார்த்தை சொல்லும் படியும் தொடக்கமான வற்றை காண்கையே வேண்டுவது என்கிறார்கள் –
முப்பத்து மூவர் இத்யாதி
அஷ்ட வஸூக்கள் –
ஏகாதச ருத்ரர்கள் –
துவாதச ஆதித்யர்கள் –
அஸ்வினி தேவதைகள் இவர்கள் தொடக்கமாக ப்ரஹ்மா எல்லையாக யுண்டான தேவதா வர்க்கம்
கிருஷ்ணன் திரு அவதரித்த போதே தொடங்கி தொட்டில்கள் தொடக்கமான பிள்ளைப் பணிகள் வரவிட்டு-
தாங்களும் மந்தர மா மலர் கொண்டு சிலநாள் மறைவது வெளிப்படுவதாய் திரிந்து –
ஆயர்பாடி நிறையப் புகுந்து இடைச்சிகள் பின்னாக ஒதுங்குகையாலும் –
இவர்கள் கார்யம் கிருஷ்ணனே செய்து திரிகையாலும்
இடைப் பெண்கள் அறிகையாலே இவ் விருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –
கலி -என்று மிகுதியாய் –
சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகனானே -என்றுமாம்
இப்படி தேவ கார்யம் செய்து வியாபரியா நின்றால் தனக்கு ஒரு தீங்கு வரும் படி இருக்குமோ என்னில்
செப்பமுடையாய்
தனக்கு ரக்ஷை யுண்டாம்படி வியாபாரிக்கு அரணிமையை யுடையவன் என்கிறார்கள் –
அன்றிக்கே
செப்பம் -என்று செவ்வையாய் –
ஆஸ்ரிதரோடு செவ்வி அழியாமே பரிமாறும் ஆர்ஜவ குணத்தை யுடையவன் என்னுதல் –
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிற சாமான்ய தர்மத்தால் வந்த தரம் அழிந்தாலும் –
ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா -என்கிற இவ் விஷயத்தையும் இழக்கவோ-
எங்கள் செவ்வைக் கேடும் உன் செவ்வையாலே நிரப்ப இருந்தோம் –
அது தன்னையும் அசத் சமம் ஆக்கா நின்றாய்-நாங்கள் வரக் கிடந்து உறங்குகையாலே
விரகாலே நீரை மேட்டில் ஏற்றுமா போலே உன்னுடைய வாத்சல்யம் எங்கள் பக்கலிலும் ஏறிப் பாய வேண்டாவோ
இச் செவ்வை தானே அநாஸ்ரிதர் விஷயத்திலும் ஒக்குமாகில் பாதகமாம் இறே –
அது வாராமைக்காக
திறல் உடையாய்
என்கிறார்கள் –
திறல் ஆவது பராபிபவன சாமர்த்தியம் –
ஆஸ்ரிதரோடு செவ்வியனான செயல் தன்னிலே அநாஸ்ரிதர்க்கும் அனபிபவ நீயன் ஆனவனே
பாண்டவர்கள் விஷயத்தில் செவ்வியனான நிலையிலே துர்யோத நாதிகளை அழிக்கும் படியை நினைக்கிறது
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும்
பகலை இரவாக்குகையும் தொடக்கமானவை –
(இவை திறல்
செப்பம் -ஆஸ்ரித பக்ஷபாதமே
ராமர் தர்மம் படி நடக்க
கிருஷ்ணன் நடந்த படி தர்மம் ஆகும் )
அனுகூலர்களான எங்கள் பக்கலிலோ திறல் காட்டுவது –
அது எங்களுக்கு அணுக ஒண்ணாத படியாயோ –
அத் திறலால் பலித்த அம்சம் சொல்லுகிறது மேல் –
செற்றார்க்கு-வெப்பம் கொடுக்கும் –
செற்றார் ஆகிறார் சத்ருக்கள் –
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்று இருக்கிற தனக்கு சத்ருக்கள் இல்லை இறே –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே இறே தனக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் –
ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணிக் கொடுக்கும் –
செற்றார்
ஸாத்ரவம் இருவருக்கும் பொதுவாய் இருக்கும் படி –
இவர்கள் சத்ரோஸ் ஸகாசாத்-என்பார்கள் -(சுக்ரீவன் சத்ருக்கள் இடம் இருந்து வந்தான் -)
அவன் த்விஷ தன்னம் -என்னும் (சத்ருக்கள் வீட்டில் உண்ண மாட்டேன் )
வெப்பம் கொடுக்கும்
பய ஜ்வரத்தைக் கொடுக்கும் –
பாண்டவர்களுடைய கலக்கம் எல்லாம் அவர்களுக்கு எதிரிகள் பக்கலிலே யாக்குகை –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் —
சந்தம் மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி-
கொடுக்கும்
அருள் கொடையான உதார குணம் இருந்த படி
விமலா
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஆஸ்ரிதற்காக கண்ணற்று முடிக்கையாலே
வந்த சுத்தியைச் சொல்லுகிறது
செய்குந்தா வரும் தீமை -இத்யாதி –
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-
ஆஸ்ரிதர் கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கை-
போழ்ந்த புனிதன்-
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
அநாஸ்ரிதற்கு முடிகைக்கு வேண்டுமவற்றை கொடுத்து
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவான தன்னைக் கொடுக்கும் சுத்தி
துரியோதனனுக்கு பரிகரத்தைக் கொடுத்து
அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்ததை நின்ற நிலை –
துயில் எழாய்-
பிரயோஜனாந்தர பரர்க்கு கார்யம் செய்ததால் வந்த புகழும் –
ஆஸ்ரித ரஷணத்தால் வந்த ஏற்றமும் எல்லாம் அழியக் கிடாய் புகுகிறது –
சடக்கென எழுந்து இருந்து அவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாய் –
அவன் தாழ்ந்து இருந்தவாறே அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே
தன்னைப் பிரியில் தரியாதவனை சிறையிலே இட்டு வைத்து
முரட்டு தேவர்கள் கார்யம் செய்து திரியுமவனை கிடீர் என்று
திரியவும் நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள்
செப்பன்ன மென்முலைச்
பரதந்த்ரனான இவனைக் கிடந்து நலிகிறது என் –
நம் ஆர்த்த த்வனி கேளாத படி உள்ளே பொதித்துக் கிடக்கிறவளை சொல்லாதே
செப்பன்ன
செப்புக்கு உள்ளே பொதிந்து வைத்த ஆபரணம் நினைத்த போதே பூணக் கிடையாதாப் போலே
செப்பு போலே இருக்கிற ஸந்நிவேசத்தை யுடைத்தான அவள் முலையிலே அழுந்திக் கிடக்கிறவனை
நமக்கு கிடைக்கப் புகா நின்றதோ –
மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்-
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி–3-
ஷாம காலத்துக்கு அஞ்சினார் கடற்கரையைப் பற்றிக் கிடத்தல்
பர்வதத்தை பற்றிக் கிடத்தல் செய்யக் கடவதே
இவனும் கடலும் மலையும் விடான் –
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனது உடலே*
அருமாமாயத்து எனது உயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒரு மா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
செப்பன்ன
விலக்ஷணமான பண்டம் இட்டு வைக்கும் செப்பு அவன் –
அவன் தன்னை அடக்கும் செப்பு இவள் முலைகள்
சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை திருமங்கை மணாளனை -(பெரிய திருமொழி -7-10 )
மென் முலை –
விரஹ ஸஹமான முலை படைத்தாள் ஆகில் இறே இழந்து இருக்கலாவது –
அவன் உணரவும் வினவவும் உள்ள விளம்பம் பொறாத முலை –
செவ் வாய்ச்
அம் முலையிலே வர்த்திப்பார் நுகரும் கனியும் தேனும் –
தொண்டை யம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்னும்படியே
செவ் வாய்
கிருஷ்ணனையும் தனக்கு ஆக்கிக் கொண்ட அதரமும் ஸ்மிதமும் –
கோவை வாயாள் பொருட்டு –
தள வேழ் முறுவல் பின்னைக்காய் –
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பொசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தம் என் நெஞ்சமே –4-3-1-
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை யருவினையேன்
கள வேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா வென்பன் பின்னையும்
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இள வேறு தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-
இவ் வதரமும் முறுவலும் புஜிக்கைக்கு இறே ஏறுகள் பொறுதது –
காந்த ஸ்மிதா –
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி –
(கோதாவரி நீச்சல் போட்டியில் வாய் விட்டு சிரித்தது
திரும்ப கொண்டு வந்து கொடுக்க விட்டால் ஜகத்தையே புரட்டி விடுவேன் என்றாரே பெருமாள் )
அவன் நெஞ்சை வருத்துமது எந்த அம்பாலே என்னில் –
நாட்டை அழிப்பன் என்று கலங்கப் பண்ணுவது இவ் வதரமும் முறுவலும் இறே
ஈஷ துன்னம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -என்று இருக்குமவனைப் பெற்றால் விடு மோ –
செவ்வாய்
செம் பவள திறல் வாயன் தோற்ற வாய்
சிறு மருங்குல்
அம் மலையில் இருந்து பக்குவ பலத்தை புஜிப்பார்க்கு ஸூகமாய் இருக்க ஒண்ணாத படி இருக்கிறதோ –
முடிகிறதோ என்று துணுக் என்னப் பண்ணும் பய ஸ்தானமும் சந்தேக ஸ்தானமும்
மேலும் கீழும் கொண்டு நடுவு யுண்டு என்று அநுமிக்கும் அத்தனை –
இது ஒரு நிராசர்ய ஸ்திதி இறுக்கியபடி –
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-
நப்பின்னை நங்காய்
அநுக்த ஸுந்தர்ய சமுச்சயம் –
சொல்லிச் சொல்லாத ஸுந்தர்யங்கள் எல்லா வற்றாலும் பூர்ணை யானவளே
நங்காய்
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பியினுடைய பூர்த்திக்கும் அடியான பூர்த்தியை யுடையவளே –
திருவே
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே-என்னும்படியாய் இருக்கை –
அழகு அவளாலே –
குணங்கள் அவளாலே –
மேன்மை அவளாலே –
நீர்மை அவளாலே –
நிரூபித்தால் அனைத்தும் அடங்கலும் அவள் தோயலாய் இருக்குமே –
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை –
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -1-7-8-
செப்பன்ன மென்முலை என்று தொடங்கி
இச் சுழிகளிலே அகப்பட்டவன் தப்பி ஏறினால் இறே நம் கார்யம் செய்வது
(இருவரையும் திருத்துவது உபதேசத்தால் உபதேசத்தால்
மீளாத போது அவனை அழகாலே திருத்தும் நம்மை அருளாலே திருத்தும் )
திருவே –
இனி அவ்வருகு இல்லை என்னும்படி யாதொரு பதார்த்தம் சர்வதோ உத்க்ருஷ்டம் –
அதுக்கு வாசக சப்தம் இது போலே
(யத் யத் விபூதி மத் சர்வம் ஸ்ரீ மத் ஊர்ஜிதம் ஏவ வா –மம அம்சம் -ஸ்ரீ கீதா ஸ்லோகார்த்தம்)
சர்வாதிகனானவன் தனக்கும் ஏற்றம் சொல்லும் போது இச்சப்தம் இட்டாய்த்து சொல்வது –
கச் ஸ்ரீஸ் ஸ்ரீய –
ஸ்ரீய ஸ்ரீய-
திருவுக்கும் திருவாகிய என்றும் சொல்லக் கடவது இறே
யஸ்யா கடாக்ஷணம் -இத்யாதி –
கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-12-
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —-பெரிய திருமொழி-7-7-1-
யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வரானாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீ நமேதத்
ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ
தம் ஹி ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு ரு தாரவாச ––ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்-69 –
உதார வாக்குகள் ஆகிறார் –
திருமங்கை ஆழ்வாரும்
ஆளவந்தாரும்
ஆழ்வானும்
பட்டரும்
யஸ்யா கடாக்ஷணம் –யாவள் ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வை யானது
ஈஸ்வரானாம் -அநு க்ஷணம்-
ஐஸ்வர்ய ஹேதுரிதி ஏதத் சர்வ ஜநீ நம் –ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி
ஐஸ்வர்ய ஹேது வாகிறது என்பது நிர்விவாதமாய் இருக்கின்றதோ
சா ஸூந்தர நிஷே வணதோ ஸ்ரீ இதி நிராஹூ -அந்தப் பிராட்டி தானும் அழகரை ஆஸ்ரயிப்பதானாலேயே
ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றனர்
திருவே –
உன்னாலே அவனுக்கு பெருமை யுண்டாம்படியான ஏற்றம் யுடையவளே
திருவே துயில் எழாய்
அவள் பேர் படைத்தாள் செய்வதும் அவளை போலே இருக்க வேண்டாவோ –
அவளுடைய வாசக சப்தத்தை
உனக்குச் சொல்லும் போது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் யுண்டானாலும்
பத்து மாசம் ஆஸ்ரித அர்த்தமாக உறங்காது இருந்த அவள் படி உனக்கும் உண்டாக வேணும் காண் –
திருவே துயில் எழாய்
பெண்ணின் வருத்தம் அறியாதவனைப் போலே உறங்கலாமோ சஜாதீயையாய் பிறந்த உனக்கு
நீ உணர்ந்து எழுந்து இருந்து எங்கள் சத்தையை யுண்டாக்காய் –
நான் உறங்குகிறேன் அல்லேன்-
அவனை விடுவித்து உங்களுக்கு தருமவை மநோ ரதிக்கிறது அத்தனை
நான் எழுந்து இருந்து செய்ய வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –
ஆகில் அவற்றைக் கேள் என்கிறார்கள்
உக்கமும் தட்டொளியும் தந்து
ஆல வட்டமும் கண்ணாடியும் –
நோன்புக்கு வேண்டும் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்
உன் மணாளனை
இவற்றோபாதி உனக்கு உபகரண கோடியிலேயாய்-
தன் கார்யம் உன் புத்தி அதீனமாம் படி இருக்கிறவனை
நீ புருவம் நெறித்த இடத்தே கார்யம் செய்யும் படி பவ்யன் ஆனவனை –
இப்போதே
அனந்தர க்ஷணத்தில் ஊராரும் இசையார் –
நாங்களும் ஜீவியோம் –
எம்மை
பிற்றைப் போதைக்கு இராத எங்களை
எம்மை
ஏஹி பஸ்ய சரீராணி -என்று வசனம் சொல்ல வேணுமோ -என்று
விரகம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்
எம்மை
என்ற இந்த பன்மையாலே –
பேய்ப் பெண்ணே -என்னுதல் –
பிள்ளாய் -என்னுதல் –
நாயகப் பெண் பிள்ளாய் என்னுதல்
எத்தனை இழிச்சம் சொன்னார்களே யாகிலும் பல தசையில் எல்லாரும் ஒத்து இருக்கிறபடி
எல்லார்க்கும் உபாயம் ஒன்றே ஆனால் போலே
உபாயமும் ஒன்றாயே இருக்கை
ஒருத்தன் திருவடிகளை பலர் ஆஸ்ரயித்தால் ஸூஹ்ருத தாரதம்யத்தாலே விளம்பம் உண்டானாலும்
பலம் எல்லாருக்கும் ஓத்தே இறே இருப்பது
எம்பெருமான் பக்கல் ந்யஸ்த பரனானால்
தேஹ யாத்திரையில் அல்பம் சத்தற்கும்
அவனை ஒழியச் செல்லாதார்க்கும்
இங்கு உள்ள வைஷம்யம் ஒழிய பல தசையில் ஒப்புச் சொல்லா நின்றது இறே
(கோவிந்த ஸ்வாமிக்கு அல்பம் ஆசை இருக்க இருந்து அனுபவித்து வரச் சொன்னார் அன்றே
சாதனாந்தர பரருக்கு கொஞ்சம் வாசி உண்டே பலத்தில் )
உன் மணாளனை -எம்மை – நீராட்டேலோ ரெம்பாவாய்
எங்களையும் அவனையும் கூட முழுக் கூட்ட வேணும்
நீராட்டு
தாரா பித்ரு க்ருதா இதி-என்று
பெருமாள் பிராட்டி யுடைய ஸுந்தர்யங்கள் எல்லாம் கிடக்க -ஐயர் செய்வித்த விஷயம் -என்று
பிராட்டியை ஆதரித்தால் போலே –
கிருஷ்ணனை நீ தந்த விஷயம் என்றாய்த்து நாங்கள் விரும்புவது
உன் மணாளனை -எம்மை நீராட்டு
ஏஷ ப்ரஹ்மஸ் ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவஹ்ரதம் –
அப்பன் திருவருள் மூழ்கினள்-(8-9 )
எங்கள் விடாயும் கெட்டு-எங்களை எல்லாரும் கொண்டாடும்படி பண்ணு
புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும்,
நினையும் நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப் புக்கால்,
சுனுயி னுள் தடந் தாமரை மலரும் தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.
திருவே –எம்மை நீராட்டு
எங்களையும் அவனையும் ஒரு துறையிலே சேராத போது
நீ திருவாகைக்கு உபாயம் உண்டோ
ஸ்ரீயதே ஸ்ரயதே -என்று இறே ஸ்ரீ யாயத்து –
ஸ்வ தந்திரரோடு பரதந்த்ரரோடு வாசி இல்லை –
இவள் கை பார்த்து இருக்க வேணும்
உன் மணாளனை எம்மை
உனக்கு ஒருக்கால் எழுதித் தந்து பிரதி க்ஷணம் எழுத்து வாங்குகிறவனை –
நீராட்டம் அமைத்து வைத்தேன் -என்று
உனக்கும் அவனுக்கும் கூட குளிக்கச் சமைத்த நீரிலே எங்களையும் கூட முழுக்கூட்டு
உக்கம் -இத்யாதி
எங்கள் சிரமத்தை ஆற்றும் பரிகரத்தையும் –
எங்கள் வை லக்ஷண்யத்தை நாங்கள் கண்டு உகக்கும் பரிகரத்தையும் தந்து
எங்கள் விரஹ தாபம் ஆறும்படி
வாஸத் தடத்தில் அவகாஹிக்கும் படி பண்ண வேண்டும்
ஞான
தர்சன
ப்ராப்திகளை பண்ணித் தர வேணும் என்றபடி –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply