ஸ்ரீ திருப்பாவை —குத்து விளக்கு எரிய–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி –
சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்றவாறே எழுந்து இருந்து கதவைத் திறக்கப் புக்காள் –

நம்மை ஆஸ்ரயித்தவர்களை இவள் தன்னுடையார் என்று இருக்குமோபாதி –
இவளைப் பற்றினார் நம்முடையார் என்று அன்றோ இவனும் இருப்பது –

நம்முடையார்க்கு இவள் முற்பட்டவளாக ஒண்ணாது –
இவளைத் திற என்றார்க்கு
நாம் முற்பாடராக கார்யம் செய்தோம் என்னும் தரம் பெற வேணும் என்று –
இவளைத் திறக்க ஒட்டாதே பின்னிட்டு வந்து
மல்கட்டாக கட்டிக் கொண்டு போய் படுக்கையிலே விழ விட்டு

இவளுடைய ஸ்பர்சத்தாலே தானும் மயங்கி
இவர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க

அவனை எழுப்பின அளவிலே அவன் எழுந்து இருந்து
இவர்களுக்கு பிரதி வசனம் பண்ணாத படி அவனுக்கு முற்பட்டு கொடாதே
கட்டிக் கொண்டு கிடந்து உறங்குகிறவள் தன்னையே
திரியட்டும் எழுப்புகிறார்கள் மீளவும் அவனை உணர்த்துகைக்காக

இத்தால்
ஆஸ்ரிதற்கு மாறி மாறி ஒருவர்க்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்குத் தஞ்சமாய் இருபத்தொரு மிதுனம் உண்டு என்கிறது –

இப்படிக்கு ஒத்த மிதுனத்தையே
தனித் தனியே பற்றுமவர்கள் ராவண சூர்பண கைகளோடு ஒப்பர்

பெருமாளைப் பற்றி திருவடி
பிராட்டி திருவடிகளில் செல்ல அவனைக் கடாக்ஷித்து
இளைய பெருமாள் அறியாத காக வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்தாள்

பிராட்டியைப் பற்றி வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை –
விபீஷணர்க்கு வேறாக நல்லான்(பெரிய திருமொழி-6-8-5 ) -என்னும் படி
விசேஷ ஸ்நேஹம் பண்ணி அருளினார் பெருமாள்

ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவளையும் –
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்னுமவனையும் காண்
நாம் தஞ்சமாக பற்றி இருக்கிறது-

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து(திருவாய் 9-2-1 ) -என்றார் இறே ஆழ்வார்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம் வாள் கெண்டை ஒண் கண் –(திருவாய் 10-4 )
கூர் அம்பன் (நான்முகன் )என்று
பகவத் பிரபன்னர் அம்பின் கூர்மையையும் புகரையும் நினைத்து இருப்பார்கள்-

த்வய நிஷ்டர்
இவள் கண்ணின் கூர்மையையும்
புகரையையும் நினைத்து இருப்பார்கள்-

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
விசாலம் என்றுமாம் -ஐந்து லக்ஷம் பெண்களும் கலக்கலாம் படி -பஞ்சாலான படுக்கை என்றுமாம் –
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வைத்தபடியாலே மலர்ந்த மார்பன் என்றுமாம்
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்-
இதுவே உபாயப் பிரார்தனை -பிராட்டி பரிகரமான உடன் தைரியமாக பிரார்த்திக்கலாம் அன்றோ –
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

தத்துவமும் அன்று -ஸ்வரூபத்துக்கும்-புருஷகார பாவத்துக்கும் சேராது
தகவும் அன்று -ஸ்வ பாவத்துக்கும் -கிருபைக்கும் சேராது

குத்து விளக்கு எரிய
நம்மைப் போல் வூரார் இசைவும் வேண்டாதே-
விடிகிறது என்கிற பயமும் இன்றிக்கே-
இருள் தேடவும் வேண்டாதே –
பகலை இரவாக்கவும் வேண்டாதே
விளக்கில் கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து படுக்கை படுத்துக் கொண்டு
கிடக்கப் பெறுவதே இவள் ஒருத்தி –
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள்

காணில் ஒட்டார்-(நாச்சியார் )என்னும் படி தங்களுக்கு ஊரார் இசைவும் தேட்டமாய்-
கீழ் வானம் வெள்ளென்றது என்கிற பயமும் நடந்து
நள்ளிருட்கண் (நாச்சியார் 12 )-என்று இருளும் தேட்டமாய் –
இரா பகலாம் படி விஸ்லேஷத்தோடே கிருஷ்ணன் முகத்தில் விழிக்கவும் பெறாதே
தறைக் கிடை கிடப்பதாய் இறே நாங்கள் படுகிற பாடு –
சோரார்க்கு (திருடருக்கு )விளக்கும் நிலவும் பகை இறே

இவளுக்கு பிரசித்தமான முறை யுண்டாகையாலே விளக்கில் படுக்கை படுக்க தட்டில்லையே –

கிருஷ்ணனைப் பற்றினவர்கள் அவனோடே சாதர்ம்யம் பெறுமோ பாதி –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய என்று
உன்னுடைய மாளிகையோடு சாதர்ம்யம் பெற்று
எங்களுடைய மாளிகைகளில்
உன்னைப் பற்றின நாங்களும் உன்னோடு சாதர்ம்யம் பெற்று
கிருஷ்ணனும் நாங்களும் எங்கள் அகங்களும் இப்படி விளக்கும் படுக்கையும் ஆனால் அன்றோ
உன்னுடைய அனுபவத்துக்கு பிரயோஜனம் உள்ளதும் –
இது உனக்குப் பொறுப்பதும்-

(கடி மா மலர் பாவையுடன் சாம்யம் ஆறும் உண்டே
அவன் உடன் சாதர்ம்யம் எட்டு உண்டே
ந பின்னை பிரியாமல் இருப்பதே நம்மை சேர்ப்பதற்காகவே
போக மயக்குகளால் மயங்கப்பண்ணி இருக்க வேண்டாமோ )

இரா உண்ணாதார்க்கு உண்டார் அடியர் அன்றோ

குத்து விளக்கு
வேண்டின இடத்திலே பேர்த்து வைக்கலாம் விளக்கு —
நீயும் அவனும் கண் வளரும் போது வேண்டும் இடங்களிலே
எடுத்து வைத்து அடிமை செய்கைக்கு நாங்களும் வேண்டாவோ –
ரம மாணா வநே த்ராய -என்னும் படியே –
(தண்டகாரண்யத்தில் மூவருக்கும் – சமமான ஆனந்தம் )

எரிய
புறம்பே ஒரு கொடி விளக்கு புகர் அழிந்து கிடக்க-
ஒரு நிலை விளக்கு உள்ளே நின்று பிரகாசியா நின்றது –

எரிய
அப்ரகாசகமுமாய்-
அந்நிய அதீன பிரகாசமுமாய் இருபத்தொரு விளக்கு யுண்டாம் படி
ஸ்வயம் பிரகாசமுமாய்
பர பிரகாசமுமாய் நின்று எரிகிற தொரு விளக்கு
(முதலில் சொன்னது கண்ணன் -அடுத்து சொன்னது இவள்
நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்து )

தன்னையும் காட்டாதே –
தன்னைக் கொண்டு காணக் கடவ அவனையும் காட்டாதே இருப்பதே இவள்

பாஸ்கரேண பிரபா யதா-
பிரபை தன்னையும் காட்டி ஆதித்யனையும் காட்ட வற்றாய் இறே இருப்பது

ஆயர் பாடிக்கு அணி விளக்கு
பிரகாசிகைக்கு இட்ட நிலை விளக்கு இறே இவை (இவள் )தான்

ஓன்று ஸ்வயம் பிரகாசமுமாய் பர பிரகாசமுமாய் இருக்கும் –
ஓன்று அப்ரகாசமுமாய்-அந்நிய அதீன பிரகாசமுமாய் இருக்கும் –

தன்னைத் தான் காட்டாமையால் அப்ரகாசம் என்கிறது –
கிருஷ்ணன் பார தந்தர்யத்தாலே அந்நிய அதீன பிரகாசம் என்கிறது –

இவள் தன்னைக் காட்டுகையாலே ஸ்வயம் பிரகாசம் என்கிறது –
ஸ்வ ஆஸ்ரயத்தை விளக்குகையாலே பர பிரகாசம் என்கிறது-

அவனுக்கு விளக்கு ஆனவள் இறே இவள் –
அதீவ ராமஸ் ச சுசுபே -என்கிறவனுக்கு
பிரகாசகையாய்
ஓஜ்ஜ்வல் யாவஹையாய் இறே இவள் இருப்பது –
திகழ்கின்ற திரு மார்வில் திருமங்கை தன்னோடும் –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

கோட்டுக் கால் கட்டில் மேல்
இருள் தேட்டம் இன்றிக்கே பிரகாசம் பொறுத்து நிலை விளக்கு எரிகிறதுக்கு மேலே –
எங்களைப் போலே
ஸ்ரீ ப்ருந்தாவனமும் மணல் குன்றும் தேடித் போக வேண்டாதே
உள்ளகத்துக்கு உள்ளே படுக்கை படுத்து கூச்சம் அற கிடக்கப் பெறுவதே
இது என்ன பாக்ய பலன் –

கோட்டுக்கால்
ஆனைகளை உயிர்ப் பிடியே பிடித்து –
அவற்றின் கொம்புகளைப் பறித்து –
அவற்றை ஆதாரமாகக் கடைந்து மடுத்துச் செய்த கட்டில்

வீர பத்னி யாகையாலே இப்படி சமைந்த கட்டில் ஒழிய
மற்றையவற்றில் கண் உறங்குவது ஆகாதே

கஜம் வா விஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா அபி வரா நநா-நாஹாரயதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய –
பிராட்டிக்கு காட்டிலே ஆனை உள்ளிட்டன கண்டால்
அபூர்வ தர்சனத்தாலே வந்த முக விகாசம் போக்கி –
ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சம் குடி போய்த்து
அதுக்கு அடி என் என்னில் –

பாஹு ராமஸ்ய சம்ஸ்ரிதா –
தனக்கு என்ன தோள் படைக்கையாலே –
உயிரோடு பிடித்த கொம்பை வாங்க வல்ல வீரருடைய பத்னிக்கு அஞ்ச வேண்டாவே –

வீர பத்னிக்கு நாயகனோடு அணையும் போது கையிலே நாண் தழும்பால் வந்த சரசரப்பு கண்டதில்லை யாகில்
தங்களோட்டை பெண்களை அணைத்தால் போலே இருக்கும் –

பர்த்தாரம் பரிஷஸ் வஜே -என்று
பிராட்டி பெருமாளுடைய வீரக் கோலம் கண்ட பின்பு இறே ஆண்-என்று அணைந்தது –
மற்ற போது ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் -என்று இறே இருப்பாள் –
ஜ்யாகிண கர்க்கசமான தோளால் அணைக்க வேணும்

மாதங்க இவ ஸிம்ஹயேண –
ராவணன் ஆகிற யானையை உயிர்ப் பிடி பிடித்த ஸிம்ஹம் இறே பெருமாள் –
உபதாய புஜம் தஸ்ய லோக நாதஸ்ய-என்னும்படியான தோள்கள் யாயத்து –

லோக நாதஸ்ய -என்கிறது
பதிம் விஸ்வஸ்ய-என்கிறபடியே அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்து
இருப்பார்க்குப் பயப்பட வேண்டாம் -என்கிறது

ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் -வீர பத்னிகள் படி பிரபன்னர் படி போலே –

தம்தாமுக்கு என்ன மிடுக்கு அற்றவர்களுக்கு அவனுடைய பலமே பலமாக வேண்டாவோ –

ஆனு கூல்யத்தில் தாரதம்யம் கொண்டு தியாக ஸ்வீகாரம் பண்ணுவது அவன் அபரி பூர்ணன் ஆகில் இறே
பரி பூர்ணன் மானவனுக்கு இவன் விலக்காமையே இறே வேண்டுவது
(ஆத்ம ஞானமும் அப்ரதிஷே தமுமே பேற்றுக்கு வேண்டுவது )

இவன் பண்ணின பிராதி கூல்யத்துக்கு அபுத்தி பூர்வகமான பிரபத்தி பிராய்ச சித்தமாம் போது
சரண்யன் நீர்மையே இறே பலிக்கிறது அத்தனை –
பலத்தோடு சந்திப்பிக்குமதே இறே உபாயம் ஆவது –

சர்வ ஸ்வதானம் பண்ணின வெறுவியனுக்கு நன்மை யுண்டாம் போது
வேறே ஒருவன் அனுக்ரஹத்தால் பலமாக வேண்டாவோ –

இரண்டு கிரியையாலும் அன்றிக்கே இருந்தது இறே பலம்
(நிர்ஹேதுக அனுக்ரஹம்
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிதானதே )

அத்தாலே இறே ஆர்த்தோவா யதிவா த்ரூப்த-என்கிறது –

அங்கனே யாகில் பிரபத்தி தான் என் என்னில் –
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே –

இவனுடைய சத்தை உபாயமாம் அன்று இறே ஸ்வீகாரமும் உபாயத்தில் புகுவது –

ரஷித்வய க்ருதாத்மா -அவன் க்ருதாத்மா வாகையாலே
இவன் பக்கல் பெற்றது கொண்டு தன நீர்மையாலே ரஷித்து விடும் அத்தனை –

கோட்டுக் கால் காட்டில்
குவலயா பீடத்தின் கொம்பை பறித்துக் கொண்டு போந்து சமைந்த காட்டில் –

ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று பார்த்து கொண்டு நின்ற பெண்கள் எல்லாம் கிடக்க
கோடுகள் கொண்டு கட்டில் சமைப்பது
ஒக்கப் பட்டம் கட்டின பிரதான மஹிஷியான இவளுக்கு இறே –
கோட்டிடை யாடிற்றும் இவளுக்கு –
கொடுத்ததும் இவளுக்கு –
வேழமும் யேழ் விடையும் (பெரியாழ்வார் -1-5 )

கோட்டுக்கால்
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு(திருவாய் -10-4 ) -என்று மிதுனத்தின் காலிலும் –
அம் மிதுனத்தை சுமக்கிற காலிலே தலையை மடுக்கிறார்கள்

கிருஷ்ணன் படுக்கையின் காலைப் பற்றினவர்கள் இறே

பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் கால் இட்டு ஏறுவார்கள் –
ஆசனத்தின் காலைக் கட்டின சர்ப்பம் ஆசனத்தின் ஆகத்திலே ஏறினால் போலே

கட்டில் –
பெரு விலையனான பொன்னாலும் ரத்னத்தாலும் சமைத்தாலும்
இடையர் ஆகையால் கட்டில் என்று ஜாதிப் பேச்சு

கட்டில் மேல்
ப்ரஹ்மாதிகள் வர விட்ட சிறு தொட்டில்கள் ஆகில் இறே கிழிய உதைத்து பொகட்டுவது
படுக்கை பற்றில் படுக்கையாகையாலே ஆதாரத்தோடு பேணிக் கொண்டு போரும்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை

மெத்தென்ற
நாங்கள் ஆர்த்தைகளாய் வந்து கிடக்க
படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடி கண் உறங்குவதே

மெத்தென்ற
நாங்கள் புறம்பே நின்றால் படுக்கை கடினமாக வேண்டாவோ –
அவனோடு கிலாய்த்த போது சீறுவது அவன் படுக்கையை இறே

தம் பாம்பு போலே (நாச்சியார் -10-3 )–
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்று
திருவனந்த ஆழ்வானை
பெரிய ஆழ்வாரோ பாதி நினைத்து இருப்பது

பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

சயனத்தில் மேல் ஏறி –
நாங்கள் உள்ளுப் புகுரப் பெறாதே புறம்பே நின்றால்
படுக்கை காலிட்டு ஒண்ணாத படி உறுத்த வேண்டாவோ –

புத்ராதிகள் துகையாத படுக்கை பித்ராதிகளுக்கு அஸஹ்யமாம் போலே நாங்கள் துகையாத படுக்கை
வெம்பள்ளி (திருவாய்-9-9 )ஆகாமல் தண் பள்ளி யாவதே –

அவர்களுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உன் கையில் உண்டே

மேல் ஏறி
நாங்களும் மிதித்து ஏறினால் அன்றோ நீ ஏறுவது –

பாதே நா த்யாரோஹாதி-என்று ஸ்ரீ யபதியினுடைய
பர்யங்க வித்யையில் சொல்லுகிற படியே குறைவற்ற படுக்கையிலே சென்று ஏறக் கடவன் -இந்த முக்தாத்மா

அவன் கோசி என்னக் கடவன் –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்னக் கடவன் –

யஸ்யாஸ்மி என்கிறவன் ப்ரஹ்மாஸ்மி என்கிறது
ப்ரஹ்ம பிரகார பூதன் நான் என்றபடி –
இவர்களும் அத்தை இறே கணிசிக்க்கிறது-

(யாருடைய சொத்தோ நான் அவனைத் தாண்ட மாட்டேன் என்பவன்
நானே ப்ரஹ்மம் என்றது
அவனுக்கு பிரகாரம் -விட்டுப்பிரியாமல் சார்ந்து இருப்பதால்
இரண்டும் சொல்லலாம் என்றபடி )

ஏறி
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து உறங்குகிறவன்
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -இங்கே ஏற வர –
விட்ட படுக்கை –
இங்கே தனக்கும் முற்பட அந்த விஸ்மயத்தைக் கண்டு
ஆச்சர்யத்தாலே ஸ்திமிதனாய்-
அதிலே ஏறின வருத்தத்தைச் சொல்கிறது –

இப்படிக்கொத்த படுக்கையிலே துகைக்கைக்கு நிதானம் சொல்லுகிறார்கள்

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை-
திருக் குழல் ஸ்பர்சத்தால் கொத்துக் கொத்தாக அலரா நின்றுள்ள
பூவை யுடைத்தான குழலை யுடைய நப்பின்னை

கொத்தாக பறித்து குழலிலே சூட்டினால் தன்னிலத்திலே போலே குழலிலே இருந்து
செவ்வி மாறாமல் அலருமாய்த்து-

கொம்பினின்றும் போந்து குழலிலே இறே அலருகிறது –

இவள் மயிரில் பூ அலருகைக்கு
காலத்தோ பாதி யாகாதே –
கால கலயதாமஹம் -என்றவனுடைய ஸ்பர்சம் –

கொத்தலர்
ஒரு பிரளய கலகத்திலே எடுப்பும் சாய்ப்புமாக மஹா பாரதம் நடவா நின்றால்
பூ அலராது ஒழியும் படி எங்கனம்

பூங்குழல்
மலரிட்டு நாம் முடியோம் -என்று
எங்கள் குழல் பூவும் மாறி செவ்வித் பூவை வாக்கிலும் தொங்காதே-
தொங்கின பூ விரஹ அக்னியால் சரு காம் படி இருக்க
நீ முடிப்பது எங்கள் தலையில் பூ பொறுத்தால் அன்றோ

இவளை இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவார்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவார்கள்
அவளுக்கு இரண்டு தலையும் விட ஒண்ணாது

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த
பூங்குழல் நப்பின்னை விலக்ஷணமான நிரதிசயமான குழலை யுடையவள்
கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –
இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது
பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து

கொங்கை மேல் வைத்துக் கிடந்த
நப்பின்னை பிராட்டியினுடைய திரு முலைத் தடத்தை தன் மேலே வைத்துக் கிடந்த என்னுதல்-
கொங்கை மேல் தன்னை வைத்துக் கிடந்த என்னுதல் –

ந சாஸ்த்ரம் நசைவ க்ரம-என்று இறே ப்ரணயம் இருப்பது
பர்யாயேண ப்ரஸூப்த்த-என்னக் கடவது இறே

மலராள் தனத்து உள்ளான் -(மூன்றாம் 3 )
பர்வத பார்ஸ்வத்தை ஜீவிப்பாரைப் போலே

கிடந்த
திறக்க கணிசித்தவன் நஞ்சுண்டாரைப் போலே பரவசனாய் மயங்கிக் கிடக்கிறபடி

மலர் மார்பா
அவன் அண்டை கொண்ட அரணும்-
இவள் ஜீவனமும் –

முலையைப் பற்றி அவன் கிடைக்கும் –
மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –

இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –

முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே

மலர் மார்பா
திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே
பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்

சதைக ரூப ரூபாய -என்னச் செய்தே
மலர் மார்பா -என்கிறது இறே

இவ்விகாரத்தோடு விரோதியாமையாலே
கர்ம நிபந்தனாய் வரும் வ்ருத்தி ஹ்ராசங்கள் தோஷாவஹங்கள் ஆகையால்
அவை இல்லை என்கிறது அத்தனை –

நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே –
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை –
மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –

யசோதை பிராட்டி காட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
புடைக்கலந்தானை —
வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)
(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )
இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –

அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள்
நித்ய கிங்கர –
கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் –
அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது

சேஷியை விகசிப்பிக்கும் போது சேஷ வஸ்து வேணும்-
இல்லையாகில் ஸ்வதந்திரமாய் இருபத்தொரு வஸ்து யுண்டாய் விகசிப்பிக்கிறது அன்றே
இச்சானுகுணமாக விளையுமது சைதன்ய ப்ரயுக்தம் இறே

வாய் திறவாய்
அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க இவர்கள் தான் ஆரை எழுப்புகிறது –

வாய் திறவாய்
கிடந்த இடத்தே கிடந்து உன் கம்பீரமான மிடற்று ஓசை கேட்க்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்
அனன்யா -என்கிறபடியே

ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே
ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்

வாய் திறவாய்
ஆர்த்தோவா யதிவா த்ருப்தா-
(ஆர்த்தனோ திருப்தனோ பிராணனை விட்டாவது விரோதியைக் கூட ரஷிப்பேன் )
என்று சொல்லி வைத்து
உன்னால் அல்லது செல்லாது இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என் –

திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே
நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்
கிடந்த இடத்தே கிடந்து மாஸூச என்று சொல்லுமதும் அரிதோ

மலர் மார்பா வாய் திறவாய்
மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –

கொங்கை மேல் இத்யாதி -(நாச்சியார் 8-7)
மார்பது முலையானால் வாயது முத்தோ

வாய் திறவாய் என்றத்தைக் கேட்டு போர நொந்தார்கள் ஆகாதே என்று
அவன் மறு மாற்றம் சொல்லப் புக
ஆர்த்த விஷயத்தில் நம்மில் முற்பாடானாக ஒண்ணாது என்று
கண்ணாலே வாய் வாய் என்று கழுத்தைக் கட்டி அமுக்கிக் கொண்டு கிடந்தாள்

மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
நாம் ஆரேனையும் இன்னாது ஆகிறது என் –
நம் பரிகரம் நமக்கு உதவாதே கண்ணாலே வாயை நெரியா நிற்க

நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்-
உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே

மைத்தடம் கண்ணினாய்
மையிட்டு எழுதோம் என்று இருக்கிற எங்களையும் மையிடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மையிடுவது –
இரண்டு கண்ணுக்கும் ஒரு மை இறே இடுவது –
மைப்படி மேனி இறே
(அஞ்சன வண்ணனே மை -பக்தி ஸித்தாஞ்சனம் )

மைத்தடங்கண்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் கண் இறே

தடங்கண்
இக் கடலைக் கரை கண்டால் இறே அவன் நம்மைப் பார்ப்பது –

நீ யுன் மணாளனை
அவன் நினைவே நினையாய் இருக்கும் நீ –
உன் நினைவே நினைவாய் இருக்கும் அவன் –

அவனை பெறுகைக்கு அடியான நீ –
உன் புருவம் நெறித்த இடத்தில் குட நீர் வார்க்கும் படி பவ்யனாய் இருக்கிறவனை விலக்கக் கடவையோ –

உன்னுடைய யோக்யதையிலே அவன் துவக்குண்கிறது
உனக்கு இஷ்ட விநியோக அர்ஹனாய் எங்களுக்கு பெறுகைக்கு உடல் என்று இருந்தோம்
இனி உனக்கே சேஷம் என்றே இருக்கிறோம்

பண்டு இருவரும் கூட தங்களுக்கு ஸ்வம் என்று இருக்கையாலே கூடச் சொல்லிப் போந்தார்கள்-
இப்போது அந்யத்வம் தோற்ற பிரணய ரோஷத்தாலே வேறு இடுகிறார்கள் –
பேறு அவளாலே யானால்
இழவும் அவளாலே யாகத் தட்டில்லை இறே

உன் மணாளனை
லோக பர்த்தாரம் -என்கிற நாட்டுப் பொதுவைத் தனித்து -புஜிக்கக் கடவையோ-
(ஏக தாரா விரதனை லோக பார்த்தா -சர்வ ஸ்வாமி -உலக மணாளன் )
கோபீ ஜன வல்லபன் -என்று விருது பிடிக்கிற ஊர் பொதுவை உன்னாலே உண்டு அறுக்கலாமோ

உன் மணாளனை
இவளை இட்டு இறே அவனை இவர்கள் அறிவது –
என் திருமகள் சேர் மார்பனே -(7-2 )
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய
அவனும் அவ்வழியாலே இறே உகப்பது

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
ஒரு க்ஷணமும் அவனை எழுந்திருக்க ஒட்டுகிறிலை
சம்போக வர்த்தமாக கட்டின கை நெகிழ்க்கிலும் உடம்பு வெளுப்புதி-
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காக பிரிவிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி –
இவர்கள் புகுந்தாலும் போகத்துக்கு வர்த்தகர் என்று அறிகிறிலை –
இவர்கள் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரிக்க ஆசைப்பட்டு இறே வருகிறது
இருவருக்கு ஒருவர் அடிமை செய்தாக இறே உத்தார்த்தத்தில் சொல்லுகிறது –

கொண்டு புறப்பட்டாள் ஆகில் உத்தரார்த்தில் படியே அடிமை செய்கைக்கு உடலாகிறது –
உள்ளே கிடந்து தாழ்த்தால் ஆகில் பூர்வார்த்தில் படியே புருஷகாரத்துக்கு உடலாகிறது –

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
ஒரு க்ஷணம் பிரியில் புறம்பு நிற்கிற நாங்கள் பட்டது படா நின்றாய் –
நாங்கள் அகல நின்று படுகிறது எல்லாம் கூடி இருந்து படா நின்றாயீ –
நெகிழ்த்து அணைக்கில் பத்து மாசம் பிரிந்தவள் பட்டது படா நின்றாய் –
இவ்விடத்தில் இவள் வைலக்ஷண்யம் சொல்லுகிறது –

ஆற்ற கில்லாயால்
உனக்காக அன்றோ அவன் புறப்பட மாட்டாது ஒழி கிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்கில் ஒன்றாக முடியும்
உன்னை இழவாமைக்கு எங்களையும் (உள்ளே )விட்டு
உன்னோடே பணி (கைங்கர்யம்)போரும்படி யாக்குவதே

தத்துவம்
இது உண்மை சொல்லுகிறோம் –
எங்கள் ஆற்றாமையால் கண்ணும் சுழலை இட்டுச் சொல்லுகிறோம் அல்லோம்

தகவன்று
இது மெய்யே -நீர்மைக்கு உடல் அல்ல தர்மமன்று

தத்துவம் தகவன்று
சத்யமே கிருபை அன்று –
மெய்யே உனக்கு கிருபை இல்லை என்னுதல் –
தகவு தத்துவம் அன்று என்னுதல்
உனக்கு நீர்மை யுண்டு என்று சொல்கிறது பரமார்த்தம் அன்று
ந கச்சின் நபராத்யதி -என்னாலாவது அவன் பரிகரம் நலிகிற போதோ –
உன் பரிகரம் அவனாலே நோவு படப் பார்த்து இருக்கும் எத்தனையோ

ஷிபாமி என்றவனோடு
ந கச்சின் நபராத்யதி
தகவேலோ ரெம்பாவாய் என்ற உன்னோடு வாசி இல்லை –

அஹத்வா ராவணம் சங்க்யே-என்று
கொன்று அல்லது படைவீட்டில் புகோம் என்றவனோடு
அவன் தனக்கே மித்ர மௌ பயிகம் -என்ற
உன்னோடு வாசி இல்லை என்று இருக்கிறோம் –

பதிம் விசுவஸ்ய-என்று அவன் நினைத்து இருக்குமோபாதி –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -என்கிற முதன்மையே உள்ளது என்று நினைத்து இருக்கிறோம் –

இவளுக்கு குறை சொல்லுகையாவது
அவனோடு ஒக்கும் என்னும் இத்தனை இறே

நீர்மையால் விஞ்சினாரை –
நீர்மையால் குறைந்தவர்களோடு ஒப்பர்கள் -என்னும் இத்தனை இறே குற்றம் –
(லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி அன்றோ
ஈஸ்வரீம் பதிம் விஸ்வஸ்ய-ஸ்வ தந்திரம் உள்ளவனோடே ஓக்க பேசுவது இழுக்கு அன்றோ)

த்விதா பஜ்யேயம் -என்று இருக்குமவனோடு
சரணம் கத -என்று இருந்தவனோடு வாசி அறக் கைக் கொள்வன் என்றவனை
கபோத ஸ்தாநீயனாக்கினால்
கபோதியில் கெட்ட பிராட்டி இல்லை இறே –
அரை க்ஷணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமல் சொல்லுகிறவை இறே இவை –

(ராவணனையும் விபீஷணனையும் ஏற்றுக் கொள்வேன் என்றானே –
புறா கதை அறிவோம்)

அன்றிக்கே
தத்துவம் அன்று தகவும் அன்று
உன்னுடைய ஸ்வரூபத்துக்கும் போருமது அன்று –
ஸ்வ பாவத்துக்கு போருமது அன்று
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும் ஸ்வபாவத்துக்கும் சேருமதோ இது

அகில ஜெகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது —
அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும் சேராது –
தேவ தேவ திவ்ய மஹிஷீம்-என்று கட்டின பட்டத்துக்கு சேரும் அத்தனை –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading