ஸ்ரீ திருப்பாவை —உந்து மத களிற்றன்–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

கீழ் நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்பி நின்றது –
இந் நேரத்தி எல்லாம் பட்டால் பிரயோஜனம் என்
பேற்றுக்கு அடியானவள் தன்னைப் பற்ற வேண்டாவோ –
இவ்விட்டு நீட்டுதலால் பிரயோஜனம் உண்டோ –

உறங்காது எழுந்திராய் என்ற இடத்திலும் எழுந்திராது ஒழிந்தது
திருவாசல் காக்கும் முதலிகள் ஸ்ரீ நந்தகோபர் உள்ளிட்டார் தொடக்கமானவர்களை எழுப்பினாலும்
பல வியாப்தியாவது நப்பின்னையை முன்னிட்டால் அன்றோ என்று
கிருஷ்ணன் இருந்தானாகக் கொண்டு

பேற்றுக்கு அடியானவள் தன்னையே பற்றுவோம் என்று நப்பின்னை பிராட்டி தன்னை எழுப்புகிறார்கள் –
எம்பெருமானைப் பற்றுகைக்கு பிராட்டி புருஷகாரமாக வேணும் –
இவள் திருவடிகளை பற்றுகைக்கு அவன் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையே அமையும் –

நமோஸ்து ராமாய ச லஷ்மணாய தேவ்யை சதஸ்யை ஜனகாத் மஜாயை -என்று
ஸ்ரீ ஜனக ராஜனுக்கு நீயே யுன்னைக் காட்டினால் போலே
அடியேனுக்கும் நீயே வந்து உன்னைக் காட்டி அருள வேணும் என்கிறாள் –

நெருப்பை ஆற்றுகைக்கு நீர் வேணும் –
நீரை ஆற்றுகைக்கு நீர் தானே அமையும்

பல தேவா என்று கீழ் இவர்கள் எழுப்பின கிருஷ்ணனுடைய தமையனார் தாம்
தம்பியாய் பிறந்த அவஸ்தையிலே-
ஸீதாம் உவாசா தியசா ராகவஞ்ச மஹாவ்ரதம் -என்று
பிராட்டி முன்னிலையாக சரணம் புக்கு
பெருமாள் போக ஒண்ணாது -நீ நில் -என்ற சங்கல்பத்தையும் அழித்து-
அவரைப் பெற்றுப் போனான் இறே-

காகம் அபராதத்தினுடைய எல்லையில் நின்றும் -பிராட்டி சந்நிதி உண்டாகையாலே
பிரபன்னர் பெறும் பேற்றைப் பெற்றது –
வாதார்ஹம் அபி காகுத்ஸ்த –

மஹா ராஜரும் -அராஜராய் -நாலு முதலிகளும் தானுமாக இருக்க பிராட்டி தன் திரு ஆபரணத்தை
திரு உத்தரீயத்தில் கட்டி விழ விட -அது முன்னாக இறே பெருமாளை பற்றினார் -திருவடியும்
இத்தால் பெருமாளைக் கண்டு வீரத்துக்கும் அழகுக்கும் தோற்றார்

பிராட்டி ஒழிய பெருமாள் அழகுக்குத் தோற்ற சூர்ப்பணகை அநர்த்தப் பட்டு ஒழிந்தாள் இறே

பிராட்டி ராவணனைக் குறித்து அருளிச் செய்த ஹிதத்தை சிம்சுபா வருஷத்தில் மறைந்து இருந்து கேட்டு –
ஸீதாம் ஆச்ரித்ய தேஜஸ்வீ-என்று
அதிகாரி சுத்தி யுண்டாய் –
தன் ஸ்வரூபம் பெற்று முறை அறிந்து அடிமை புக்கு
தூதோ ராமஸ்ய என்ற வாயாலே
தாஸோஹம் கோச லேந்திரஸ்ய-என்பதும் செய்து
தன் ஸ்வரூபமும் பெற்று –
ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து -என்று
ஸ்வரூப அனுரூபமான பலம் பெற்றதும் பிராட்டியை ஆஸ்ரயித்த பின்பு இறே

புருஷகார பூதையான பிராட்டியை பேர வைத்து பூஜிக்க வந்த சூர்ப்பணகை துறை அறியாமல் அநர்த்தப் பட்டாள்
தன்னை நயந்தாளை -என்கிறது குற்றம் உண்டாய் அன்றே –
கொல்லை அரக்கி யாகையாலே இறே அநர்த்தப் பட்டது –

பிராட்டி தன்னை முறை தப்பப் பற்றின ராவணன் முடிந்து போனான் –

இருவரையும் சேரப் பற்றின விபீஷணன் அல்லல் தீர்ந்து வாழ்ந்து போனான் –

மா சதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா (2-7-1 )-என்றார் இறே ஆழ்வார்
தன்னுடைய கர்மா ஞானாதி உபாயங்களாலே எம்பெருமானை பெற இருக்குமது இளிம்பு –
அவற்றை விட்டு எம்பெருமானுடைய கிருபையால் பெறுகை சதிர் –
அந்த கிருபைக்கு அடியான பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெறுகை மா சதிர்

எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் (2-7-6 )-என்ற ஆழ்வார் –
அதற்கு அடி-
மாதவன் என்று என்றதே என்றார் இறே

உபாயத்தில் வந்தால் யுக்தி மாத்திரமே அமைந்தது –
பலத்தில் வந்தவாறே சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்ல வாழ்ந்து போய்த்து என்கிறார்

திருக் கண்டேன் என்று தொடங்கி-
தேனமரும் பூ மேல் திரு –சார்வு நமக்கு என்றும் -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானாரும் இவை அடியாக இழிந்து –
கத்யத்திலே முதலிலே தமக்கு த்வய நிஷ்டை யுண்டாக வேணும் என்று பிராட்டியை சரணம் புக்கார்

இவர்களும் அப்படியே ஒரு பாட்டாலே நப்பின்னை பிராட்டியை சரணம் புக்கு –
அனந்தரம்
அந்தப்புர பரிகரமாய் நின்று பயம் கெட்டு-
ஒரு பாட்டாலே
உபாய சித்திக்கு உடலாக அவனைப் பற்றி
ஒரு பாட்டாலே
உபேய சித்திக்கு உடலாக அவனையும் அவளையும் பற்றி –

ஆக மூன்று பாட்டாலே
நப்பின்னை பிராட்டியை எழுப்பி –
அவள் வழியாக எம்பெருமானை எழுப்புகிறார்கள் –

அபி நிவேச பிரேரிதைகள் ஆகையால் கலகத்தாலே கிருஷ்ணன் பக்கலிலே மேல் விழுந்தார்கள் –
ஆச்ரயண தசையும்
போக தசையும்
பேதிக்க ஒட்டாத படி உபக்ரம தசையில் கலக்கும் இறே விஷய ஸ்வ பாவம் –

பிராட்டி முன்னாக சரணம் புக அன்றோ பிரமாணங்கள் சொல்லிற்று
இங்கு நப்பின்னை பிராட்டியை அன்றோ சரணம் புகுகிறது என்னில்
பெரிய பிராட்டியாருக்கு அல்லாத நாய்ச்சியார்
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதி உபகரண கோடிகள் ஆகையாலும்
இவர்களை அவயவ கோடியிலே அவள் நினைத்து இருக்கையாலும்
பிராட்டிக்கு திருவடிகளோபாதியாக நினைத்து இருக்கையாலே இவளைப் பற்றுகிறார்கள் –

பர தசையில் நாய்ச்சிமார் மூவரையும் முன்னிடக் கடவது–
கூந்தல் மலர் மங்கை இத்யாதி
(ஏவம் பூத பூமி நீளா நாயக என்றார் அன்றோ )

வ்யூஹ அவஸ்தையில் நாய்ச்சிமார் இருவரையும் முன்னிடக் கடவது –
சந்தணி மென் முலை மலராள் தாரணி மங்கை -என்னக் கடவது இறே

ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையுமாய் இருக்கும் –

ஸ்ரீ வராஹ ப்ராதுர்பாவத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டியை முன்னிடும்

கிருஷ்ணாவதாரத்துக்கு பிரதான மஹிஷி இவள் ஆகையால்
நப்பின்னை பிராட்டியை முன்னிடுகிறார்கள் –
(ருக்மிணி சத்யபாமை சமேத கிருஷ்ணன்
அங்கு எல்லாம் இள -பால கிருஷ்ணன் மஹிஷி அல்லவே
இவள் தானே இளைய வயசில் -ஏக குல ஜென்மம்
ஆகவே ஆழ்வார்கள் இங்கேயே ஈடுபட்டு அருளிச் செய்கிறார்கள் )

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்

உந்து மத களிற்றன்
கிருஷ்ணனை -நந்தகோபன் குமரன் என்று ஆதரிக்குமா போலே –
இவர்கள் பற்றுவார்க்கும் இவள் உகப்பது சொல்ல வேண்டுகையாலே
ஸ்ரீ நந்த கோபரை பிரசங்கித்து
அவரை சிலாக்கிக்கை இவளுக்கு உகப்பு என்று அவர் மிடுக்கை சொல்கிறாள்

நாங்கள் வந்து பற்றும் படி வாரணம் பைய நின்று ஊர்வது போல்
மகன் செருக்குத் திரிந்தது இவர் வயிற்றில் பிறப்பு இறே

உந்து மத களிற்றன்-
மத்த கஜத்தின் மிடுக்கு போலே ப்ராபல்யம் கனக்க உண்டாகையாலே
களிற்றைத் தள்ளா நின்றுள்ள மிடுக்கை யுடையவர் என்றுமாம் –

ஆனைகளோடு பொருது அவற்றை நூக்கும் படியான மிடுக்கை யுடையவர் என்கை –

கிருஷ்ணன் ஆனை கொன்றது சர்வ சக்தித்வத்தால் அன்று இறே –
இவர் மகன் ஆகையால் இறே

உந்து மத களிற்றன்
மத்த கஜங்களை யுடையவர் என்றுமாம் –

ஆனை யுண்டோ இவர்க்கு என்னில் –
ஸ்ரீ வஸூ தேவரும் தாமும் ஒரு மிடறாய் இருக்கையாலே
அங்குள்ளது இங்குள்ளதாய் இங்குள்ளத்து அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும் –
தத்த புத்திரனுக்கு இரண்டிலும் பிராப்தி யுண்டாகையாலும்
ஆனை யுண்டாகத் தட்டில்லை –

வாரணம் ஆயிரம் சூழ -என்று திருவாய்ப்பாடியிலே
ஆனைகளும் பசுக்களும் கலந்து திரியும் அத்தனை இறே –

ஓடாத தோள் வலியன்-
யுத்தே சாப்ய பலாய நம் -என்கிறபடியே
எதிரிகளைக் கண்டால் பிரதிபக்ஷம் இறே என்று பிற்காலியாத தோள் வலியை யுடையவன் –

கம்சன் மாளிகைக்குக் கீழே பிள்ளை வளர்க்க வல்ல வலி இறே –
குடியுடன் பட கடமை கொண்டு இருந்தான் ஆகில் இருக்கிறான்
மிகைத்தான் ஆகில் உழக்கோல் கொண்டு தகர்க்கிறோம் என்று இருப்பர் –

அவனும் அது அறிந்தே
புகுந்து அபிபவித்தல்-
விட்டுக் காட்டுங்கோள் என்னுதல் செய்யாதே
தான் முடியும் தனையும் களவிலே நலியப் பார்த்தது –

அங்கோர் ஆய்க் குலம்-என்று அஞ்சினான் புகலிடமூர் இறே –
கம்சன் படை வீடு என்று அஞ்சினார் அச்சம் கெடுவது இவ் விடைச் சேரியை நினைத்து இறே –

தோள் வலியன் –
நித்ய சம்சாரியானவன் தன்னுடைய அநீதிகளை நினைத்து அஞ்சினால் –
நபிபேதி குதச்சன–என்றும்
அதஸோ பயங்கதோ பவதி-என்று
எம்பெருமானுடைய குணங்களை அனுசந்தித்து புத்தி பூர்வகமான பாபத்துக்கு பயம் கெட்டு
மார்பிலே கை வைத்து உறங்குமா போலே
கிருஷ்ணன் தீம்பை அனுசந்தித்து அஞ்சின பெண்களுக்கு இவர் தோள் மிடுக்கை நினைத்து
அச்சம் கெட்டு இருக்கலாய் இருக்கை –

பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்று பிராட்டி
பெருமாள் தோளை அண்டை கொண்டு அச்சம் கெட்டு இருக்குமா போலே

தோள் வலியன்
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
மங்களா சாசனம் பண்ணுமவர்கள் ஆகையால்
கிருஷ்ணன் போலே பின்னை நெடும் பணைத் தோளை விரும்புதல்
அல்லாத பெண்களை போலே பின்னை தன் காதலன் தன் தன் பெரும் தோள் நலம் பேணுதல் செய்யாதே
தங்கள் தனமான அம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று
இவருடைய தோள் மிடுக்கை அனுசந்திக்கிறார்கள் தங்கள் பய நிவ்ருத்திக்காக

ஓடாத தோள் வலியன்
கிருஷ்ணன் தோளில் சாந்து அழியாமல் மல்லரை தகர்க்க வல்லனாய்த்து-
புஜ பலமுடைய இவர் வயிற்றில் பிறப்பு இறே

ஓடாத
நாட்டில் நடையாடாத தோள் வலியை யுடையவன் என்றுமாம்

நந்த கோபாலன்
ஐஸ்வர்யத்தாலும் புஜ பலத்தாலும் உண்டான மேன்மைக்கு தமக்கு அவ்வருகு இல்லாதாப் போலே
நந்த கோபாலா எழுந்திராய் என்று
பெண்களோடு ஓக்க எழுப்பலாம் படி தாழ்ந்தாருடைய ரக்ஷணத்திலே
அதிகரித்து தம்மை அமைத்த நீர்மையைச் சொல்கிறது

மருமகளே
ஸ்ரீ கும்பர் மகளே-என்றால் அறியாள்-
ஸ்ரீ நந்தகோபர் சம்பந்தமே யாய்த்து அறிந்து இருப்பது –

ஸ்ரீ நந்த கோபர் மாமனாய் –
கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் –
இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் –
இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் –
இவள் உகக்குமது ஆகையாலும்
இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –

மருமகளே
முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் –
புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –

மனிசர் நோவு அறிந்து கார்யம் செய்யும் இடத்தில் –
அறம் செய்யும் நந்த கோபாலனுக்கு மருமகள் -என்னலாய் இருக்கும்

ஸ்னுஷா தசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந -என்று
எங்கள் மாமனார் இருந்தார் ஆகில் நான் இவர்கள் நடுவே
இவ் விருப்பு இருக்கவும் –
இவ் வார்த்தை சொல்லவும் வையார் இறே – என்றாள் பிராட்டி

திருவாய்ப்பாடியில் கிருஷ்ணன் பிறந்ததுக்கு பின்பு கம்புக் கற்றையும் ஒழிந்தார் –
இந்த பிராப்தி இல்லாதார் யுண்டோ –
பஞ்ச லக்ஷம் குடியில் கோபிகள் எல்லார்க்கும் சாதாரணம் அன்றோ –
நமக்கு விசேஷணம் என் என்று பேசாதே கிடந்தாள்

நப்பின்னாய்
என்கிறார்கள் –
தங்களுடைய கிலேசம் தீர்க்கைக்கும் –
தங்களுடைய ஆர்த்தி இவள் நெஞ்சிலே படுத்துகைக்காகவும்
நப்பின்னாய் -என்று பேரைச் சொல்கிறார்கள் –

தங்கள் ஆர்த்தைகளாய் -நம் வாசலிலே வர நம்முடைய நீர்மையால் உள்ளது தாங்கள் பெறாத படியால்
ஹே கிருஷ்ணா ஹே யாதவ ஹே ஸஹ என்று
அர்ஜுனன் கிருஷ்ணனை அஸத் கரித்து வார்த்தை சொல்லுமா போலே –
நப்பின்னாய் -என்று சிவிட்க்கு என்கிறார்கள் –

இங்கு வெறும் கிருஷ்ணனே யாய் நாம் இல்லை என்னும்
இடம் தோற்ற வேணும் என்று பேசாதே கிடந்தாள்

கந்தம் கமழும் குழலீ
என்கிறார்கள் -நீ இல்லையாகில் உள்ளு இப்படி யாமோ –
சமுதாய பரிமளமும் வ்யாவ்ருத்த பரிமளமும் நாங்கள் அறியோமோ –

சர்வ கந்த என்கிற வஸ்துவுக்கும்
வாசம் செய் பூம் குழலாள் ஆகையால் நாற்றம் கொடுக்கும் குழலை யுடையவள் அன்றோ –

கந்தம் கமழும்
நீ பிரதி வசனம் பண்ணிற்று இல்லை யாகிலும்
உன் குழலில் பரிமளம் பிரதி வசனம் பண்ணா நின்றது காண்-

கந்தம் கமழும் குழலீ
பரிமளம் தான் நிறம் பெறுவது இவள் குழலில் சேர்ந்த பின்பு –
வாசப் பூங்குழல் பின்னை தோள் மணந்ததும் (6-4-2)-என்னக் கடவது இறே

கடை திறவாய்
மலரிட்டு நாம் முடியோம் -என்கிற ப்ரதிஞ்ஜைக்கு விபரீதமாக
பூ முடித்தோம் என்று நினைக்கிறார்களாக கொண்டு பேசாதே கிடக்க
நாங்களும் எங்கள் சென்னிப் பூவை சூடும் படி வாசலை திறவாய் என்கிறார்கள் –
அமரர் சென்னிப்பூவை சூடும்படி (திரு நெடும் தாண்டகம் )

அப் பரிமளத்தை தலை நீர்ப் பாட்டிலே அனுபவித்து
அப் பரிமளத்தினுடைய வெள்ளத்திலே அழுந்திக் கிடந்து-அவனைத் தனியே அனுபவிக்க அமையுமோ –
வாசலைத் திறந்து எங்களையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்கப் பாராய்

கடை திறவாய்
கிண்ணகத்தை அணை செய்து கொடு கிடப்பாரைப் போலே
அடைத்துக் கொடு கிடவாதே கிருஷ்ணனுடையவும் உன்னுடையவும்
தேங்கி நிற்கிற பரிமளத்தை கடை வெட்டி விட்டு எல்லாரும் வாழும் படி புறப்பட விடாய்

பெரு வெள்ளத்தை அணை செய்வார் உண்டோ —
எங்கள் ஆர்த்தி தீராய் ஆகில் பெரு வெள்ளத்திலும் போக்கு விட வேண்டாவோ
உன்னுடைய போக்யதையில் அவன் அழுந்திக் கொடுக்கும் –
அவனை அனுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ –
அனுபவிப்பார் தான் -அவயவங்களோடும் ஸ்ரக் சந்த நாதிகளோடும் அன்றோ அனுபவிப்பது –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (10-3)-என்னக் கடவது இறே –

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
மத்திய ராத்திரியில் எழுப்புகிறது என் –
கதவு திறக்கும் போது விடிய வேண்டாவோ என்ன –

போது விடிந்தது காண் -என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ கோழி கூவுகிறது என்ன –

ஒரு கோழி கூவிற்று ஆகில் விடிந்ததாக வேணுமோ என்ன –

திரள் கூவா நின்றது என்ன –

ஒன்றினுடைய சப்தத்தைக் கேட்டு பலவும் உணர்ந்தது என்ன

எங்கும் –
சர்வோதிக்கமாக கோழி கூவா நின்றது காண் என்ன

உணர்ந்தவை எல்லாம் கூட எங்கும் ஒக்கக் கூப்பிட்டு
பின்னையும் உறங்கும் ஆகையால் இப்போதே கூப்பிட்டு அடங்கும் என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
என்கிறார்கள் –
வாசலைப் பற்றி திற என்பாரைப் போலே அன்றோ அழைக்கின்றன

கோழி அழைத்தன காண்
கோழி கூவும் என்னுமால் -என்று
உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே

எங்களைப் போலே கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே
உனக்கு எங்கும் சாமக் கோழி கூவக் கடவதாய் அன்றோ இருப்பது –

அவை இப்போதே கிளர்ந்து அடங்கும்
இது அடையாளம் ஆக மாட்டாது –
வேறே அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன –

மாதவிப்-பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-
குயில் கூவினது அடையாளம் அன்றோ என்ன –

ஒரு குயில் கூவும் காட்டில் விடிந்ததாக வேணுமோ என்ன –

குயில் இனங்கள் கூவிற்று என்ன –
ஒரு திரளாக ஒருக்கால் கூவும் போது விடிவுக்கு உடலோ என்ன –

திரள் திரளாக பல கால் கூவுமது உடலன்றோ என்ன –

உறக்கத்தாலே அனந்தலிலே பலகால் வாய் வெருவிற்று அத்தனை காணுங்கோள் என்ன

மாதவிப் பந்தல் மேல்
இப்பூம் படுக்கையினின்றும் இவை யுணரும் போது விடிந்ததாக வேண்டாவோ –
நோ பஜனம் ஸ்மரன் -என்று
முக்தன் சம்சார யாத்திரையை மறக்குமா போலே
படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்குகிறவையும் உணரும் போது விடிந்ததாக வேண்டாவோ

பல் கால்
உன் நோக்கும் உன் பேச்சுமே தாரகமாக இருக்கக் கடவ இவை
உன்னைக் காணாமே கதறி நாக்கு ஓட்டக் காண் புகுகிறது –
தயிர்ப் பழம் சோற்றோடு –

இனங்கள்
மேலே ஒரு திரள் கூவா நின்றது –
கீழே ஒரு திரள் கூவா நின்றது –
இவை ஒன்றும் கேளாதே உறங்குகிறாய் நீயே இறே

கண் படை கொள்ளும் இளங்குயிலே (5-6)-என்று
உறங்குகிற குயில்களையும் எழுப்பிக் கூவச் சொல்லுமவர்கள் ஆகையால்
கூவாத போது நீங்கள் இங்குத்து நின்றும் துரத்தி விடுவிகோள் (5-10 )என்று
ஊரில் இருக்கிறத்தைக் கூலியாகக் கொண்டு கூப்பிடுகிறது இத்தனை –
விடிந்தது அன்று என்று பேசாதே கிடந்தாள்

பந்தார் விரலி
நாங்கள் சொன்னவற்றுக்கு எல்லாம் ஒரோ உத்தரம் சொல்லி
உள்ளே கிடக்கிறது உன் குறை அறுகை இறே

பந்தார் விரலி
நாங்கள் சொன்னது எல்லாம் உன் நெஞ்சில் படாது ஒழிகிறது உன் செருக்கு இறே
கிருஷ்ணனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் காணும் அணைத்துக் கொண்டு கிடக்கிறது –
லீலா உபகரணங்களை உறங்கும் போதும் கை விடாத படி யாய்த்து மௌக்த்யம் இருந்த படி –

இவளுக்கு போக உபகரணம் கிருஷ்ணன் –
பந்து லீலா உபகரணம் –

அவன் செண்டை ஒரு கையாலும் இவளை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
அவனுக்கு லீலா யஷ்டி போலே இவளுக்கு பந்து –

ஒரு கையாலே விபூதி –
விபூதிமான் ஒரு கையிலே —

நாரம் ஒரு கையிலே
அயனம் ஒரு கையிலே –

சேஷி ஒரு கையிலே
சேஷம் ஒரு கையிலே –

போக்யம் ஒரு கையிலே –
போக ஸ்தானம் ஒரு கையிலே

பந்தார் விரலி –
நாங்களும் அசேதனம் ஆனோம் ஆகில்
பந்தோபாதி-எங்களையும் பேணி உன் கைக்கு உள்ளே கிடக்கலாய்த்தே-

நீயும் அவனும் கூட இருந்த சேர்த்தியிலே நாங்கள் கிட்டி
எங்கள் கையில் இருக்க வேண்டாவோ பந்து –
எங்கள் கையிலும் பண்ணி பந்து பிடிக்க வேண்டாவோ உனக்கு

உனக்கு சேர்த்தியாலே பந்து கையிலே பொருந்திற்று –
எங்களுக்கு தழும்பும் கூட மறைந்து போயிற்று –

ஜ்யா கிண கர்க்கஸை -என்று
அவனுக்கு வில் பிடித்த தழும்பு போலே
இவளுக்கு பந்து பிடித்த தழும்பு –

செருக்காலே யுங்களை நினைத்திலேனாகச் சொல்லா நின்றி கோள்-
நீங்கள் தான் வந்த கார்யம் ஏது-
என் செய்ய நினைக்கிறது என் என்ன

உன் மைத்துனன் பேர் பாடச்
நீயும் அவனும் மைத்துனமை கொண்டாடி –
ஒருவருக்கு ஒருவர் உத்தரம் சொல்லி –
ஒத்து நில்லாமே
உன் பக்ஷத்தில் நின்று உனக்காக அவனை ஒத்தனை சொல்ல

நீ ஒன்றுக்கு ஒன்பது சொல்லும் போது –
நாங்கள் அவனுடைய தோல்வியும் உன்னுடைய வெற்றியும் தோற்ற
(அவனுக்கு பரிஹாஸமாக ) உனக்கு வேண்டுவன எல்லாம் சொல்லி உபகரிக்க வந்தோம் –

இருவரும் ஒன்றாய்ச் செல்லும் அன்றும் பிரிந்த அன்றும்
தாய் கூற்றிலே இறே பிரஜைகள் நிற்பது –

அஸ்மின் மயா ஸார்த்தம்-என்று
பெருமாள் தோல்வியைப் பிராட்டி இளைய பெருமாளுக்கு அருளிச் செய்ய
அவர் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே

உன் மைத்துனன்
த்வயத்தில் பிரதம பதத்தில் படியே சொல்லுகிறார்கள்

பேர் பாட –
நாமும் பலவுடை நாரண நம்பி இறே –
இன்னாள் அடியான் இன்னாள் அடியான் -என்று
படைத்த பேருக்கு ஒரு அவதி இல்லை இறே

நாரணன் நம்பி
நீர் ஊர் பொதுவாம் படி சர்வாதிகர் அன்றோ –

நம்பி
உனக்கு நாங்கள் வேணுமோ –
எங்களை ஒழியவே பூர்ணர் அன்றோ என்று
இப்படி அவனுக்கு உள்ளன சொல்லிக் கொடுக்க –
ஆகில் கிருஷ்ணா திற என்றாள்

உன்னுடையாருக்கு நான் திறப்பேனோ என்றான்

நீங்கள் வருவுதி கோள் என்று யந்த்ரத்தால் திறக்கலாம் படி வைத்தேன் –
திறந்து கொண்டு புகுருங்கோள் -என்றாள் –

எங்களால் பெற இருக்குமவர்களோ நாங்கள் –
உன்னாலே பெற இருக்குமவர்கள் அன்றோ –
உன் கை பார்த்து இருக்கிறவர்கள் அன்றோ நாங்கள்

செந்தாமரைக் கையால்
மாஸூச என்னும் கை பார்த்து இருப்பவர்களோ நாங்கள் –
பவேயம் சரணம் ஹிவ என்னும் கை பார்த்து இருப்பவர்கள் அன்றோ நாங்கள்

‘மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா
ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா’

நீங்கள் பண்ணின பாவத்துக்கு அஞ்ச வேண்டா என்கிறது –
பெருமாளுடைய அஞ்சேல் என்னும் திருக்கை –

ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு அஞ்ச வேண்டா என்கிறது
பெரிய பிராட்டியார் வைத்த அஞ்சேல் என்ற கை-

அவனும் ஆசைப்படும் கை இறே

தன் கை மேல் என் கை வைத்து -என்று
அணி மிகு தாமரைக் கைக்கு (10-3 )மேலே இருக்கும் கை –

செந்தாமரைக் கையால் –
பந்து பிடித்து சிவந்த கை –
இவர்கள் உறாவி இருக்க வளை ஓசை செவிப்பட ஒண்ணாது என்று
வளையை ஏற கடுக்கி திறக்கப் புக்காள்-

சீரார் வளை ஒலிப்ப
மேகம் முழங்கி வர்ஷிக்குமா போலே

சீரார் வளை
கலியார் சோற்றை வர்ணிக்குமா போலே
வளையைக் கொண்டாடுகிறார்கள் –

வளைக்கு சீர்மை யாவது –
கையில் நின்றும் கழலாது ஒழிகை –
விஸ்லேஷ வியசனம் அநுபவியாத வளை –

சங்கு தங்கு முன்கை —
ஒண் டொடியாள் திரு மகள் என்னக் கடவது இறே
இரு கையில் சங்கிவை நில்லா இறே –
கழல் வளையே ஆக்கினார் என்று வெறுக்கிறவர்கள் அன்றோ இவர்கள் –

சூடகமே தோள் வளையே -என்று
இவர்கள் பிரார்த்தித்த படியே அவர்கள் பூட்டினால் இறே இவர்களுக்கு வளை உள்ளது –

ஒலிப்ப —
கிருஷ்ணனும் ஓசையிலே உணர்ந்து –
நாங்களும் இத் த்வனி கேட்டு வாழும்படியாக வேணும் –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்துக்கு விரோதமாக ஒண்ணாது என்று கிடந்த இடந்ததே கிடந்து திறக்கப் புக்காள்

வந்து திறவாய்
எங்களுக்காக நாலடி வந்தாய் என்னும் தரம் நாங்கள் பெறும்படி வந்து திறக்க வேணும் –
நாலடி போய் வந்தாகிலும் திறக்க வேணும்
அவனும் நாங்களும் உன் நடை அழகைக் கண்டு வாழும் படி வர வேணும் –

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பெண்கள் ஆர்த்தர்களாய் வந்தார்கள் என்று சாஸ்த்ரார்த்தம் கொண்டாட ஒண்ணாது –
உகந்து வந்து திறக்க வேணும்

மகிழ்ந்து-
மார்கழி நீராட என்று நாங்கள் நோற்ற நோற்றுக்கு
உன்னுடைய மகிழ்ச்சி காண்கை அன்றோ யதோ உபாசனம் பலமாக வேண்டாமோ –

மகிழ்ந்து –
தர்மத்துக்கு திறக்க ஒண்ணாது –
பேறு உன்னதாக வேணும் –

அவன் பக்கலிலும் காட்டில் அவனுடையார் பக்கல்
நீ இருக்கும் இருப்பு உன்னுடைய முக விகாசங்களிலே தோற்றும்படியாக-

வந்து திறவாய்
கண்ணுக்கு இரை இட வேணும் வேணும் –

வளை ஒலிப்ப –
செவியின் பட்டினி தீர வேணும்

பேர் பாட
நாக்குப் பட்டினி ஒழிய வேணும்

செந்தாமரைக் கையால் –
ஸ்பர்ஸ இந்திரியம் வயிறு நிறைய வேணும் –

கந்தம் கமழும் குழலீ
க்ராண இந்த்ரியத்துக்கு இரையிட வேணும் –

மகிழ்ந்து
இப்படி சர்வ இந்திரியங்களுக்கும் விடாய் தீர்ந்தால்
மாநஸமான உகப்பு உன்னதாக வேணும் –

எம்பெருமானார் விசேஷித்து உகந்து இருக்கும் பாட்டு இப்பாட்டு

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading