பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-5-மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா-

இத் திருமொழி ஒரு விலஷணமான அனுபவம் -ஏக காலத்திலே இரண்டு பிராட்டிமார் யுடைய நிலையில்
ஒருத்தி ஏசி சௌலப்ய குணத்தை பேசியும்
ஒருத்தி ஏத்தி பரத்வ குணத்தை பேசியும் -பேசி அனுபவிக்கிறார்-

என்னாதன் தேவிக்கு -பெரியாழ்வார் திருமொழி -ஒருத்தி ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும்
ஒருத்தி ஸ்ரீ ராமாவதாரத்தையும் பேசி அருளினது போலேயும்-

கதிராயிரம் தேவி -பெரியாழ்வார் -சர்வேஸ்வரனைக்  கண்ணாலே காண வேண்டும் என்பாராயும்
அவனை யுள்ளபடி கண்டார் உளர் -என்பாராயும் இரண்டு வகையாக பேசினது போலேயும்-

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியும் பட்டி மேய்ந்தோர் காரேறு திரு மொழியில் -இங்கே போதக் கண்டீரே -என்று கேட்பதும்
விருந்தாவனத்தே கண்டோமே -என்று விடை கூறுவதுமாக அருளிச் செய்தார் இறே-

ஏக காலத்திலே இரண்டு அவஸ்தைகள் -எம்பெருமான் அருளின் மிகுதியால் 
ஞானத்தில் தடை யற்றால் பொருந்தாது ஓன்று இல்லையே
நித்ய முக்தர்கள் பரமபதத்தில் ஏக காலத்திலே அவன் அருளாலே கைங்கர்யங்கள் செய்ய
அனுரூபமாக பல சரீரங்களைப் பரிஹரிப்பது போலே –

————————–

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-

முன்னடிகளால் சௌலப்ய திருக் குணமும் பின்னடிகளால் பரதவ திருக் குணமும் வெளியிடப்படுகிறது
உபய விபூதி நாதன் ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப –
மேன்மையாக விளங்காமல் இருள் தரும் மா ஞாலத்தில் அவதரிக்க வேண்டுமோ
அரசு உரிமையை இழந்து பெண்டாட்டியையும் கூட்டிக் கொண்டு கல்லும் முள்ளுமான காட்டிலே கால் நோவ நடந்து சென்றானே
பரத்வத்துடன் கூடின இடத்தில் சௌலப்யமும் கொண்டாடத் தகுந்ததே என்பதை அறியாயோ
அப்படி நடந்த திருவடிகளையே வானவர்கள் தங்கள் சென்னிக்கு மலர்ந்த பூவாய்க் கொள்ளுகிறார்கள்
ஆஸ்ரித ரஷண  அர்த்தமாக அன்றோ நடந்தன -கை தொட்டு செய்து நிறம் பெற வேணும் என்று அன்றோ
அசூர வர்க்கம் இருந்த இடம் தேடித் திரிந்து கார்யம்

————————————————-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்–
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –

பிறப்பிலி ஒருத்தி மகனாய் ஓர் இரவில் பிறந்து –ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
சர்வ ரஷகனாக ஆகக் கூடுமோ –
நான்முகனை நாராயணன் படைத்தான் -அஜாயமானோ பஹூதா விஜாயதே –
மகானுபாவன் மனுஷ்ய பாவனைக்கு சேரத் தானே ஒளிந்து வளர்ந்தான்-

——————————————————-

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும்  உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அவாப்த சமஸ்த காமன் தயிர் வெண்ணெய் வாரி யுண்டானே
உண்டு நிறைத்து விடுகிற திரு வயிறோ -கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானாய் இருப்பவன்
ஆஸ்ரிதர் ஹஸ்த ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது தரியாதவனாய் இருக்கும்
மகா குணத்தை வெளிட்டு அருள- தாழ் குழலார் வைத்த தயிர் யுண்டான் -கொண்டாடத் தக்க எளிமை அன்றோ –

————————————————-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

தயிர் வெண்ணெய் யுண்ட ப்ரேமமே பின்னாட்டுகிறது
அறிவு இல்லாதவர்களுக்கு உள்ளே இடையனாகி
ஆன் ஆயனாகி -மாடு மேய்க்கும் இடைக் குலத்தவனாய்
களவு செய்து யுண்டு உகந்தான்
திரு வயிற்றுக்கு கடல் சூழ்ந்த உலகங்கள் எல்லாமே போதாதது   ஆச்சர்யம் அன்றோ –

——————————————————

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-5-

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு
இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய்மொழி -1-3-1-
இமையோர் தமக்கும் -தனிப்பெரும் மூர்த்தி தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே-திருவிருத்தம் -98

—————————————————-

கன்றப் பறை கறங்கக் கண்டவர்  தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும்   சாழலே -11-5-6-

மரக்கால் கூத்து -என்பது அல்ல -மரத்தை காலிலே கட்டி ஆடினான் காண் -வியாக்யானம் – குடக் கூத்து போலே-

———————————————————

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே -11-5-7-

பாண்டவ தூதன் -சிறியாத்தான் பட்டர் சம்வாதம் -இன்னார் தூதன் என நின்றானே
அவனே பிரளயத்தில் திரு வயிற்றினுள் வைத்து நோக்கி அருளினவன்
கோதை -அரசு உரிமையை  இழந்து இருந்தாலும் பூச்சூட ஸ்வரூப யோக்யதை யுடைய பாண்டவர்களுக்காக –
சொல்லுண்டான் -பீஷ்மத் துரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மது ஸூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் –
துரியோதனாலும் புண்டரீகாஷா என்று விழிக்க வேண்டும்படியான பெருமை படைத்தவன் –

—————————————————————

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே–11-5-8-

ராஜாதி ராஜஸ் சர்வேஷாம்
ஆஸ்ரித ரஷண  அர்த்தமாக அசத்ய பிரதிஜ்ஞன் ஆவதும் அவனது திருக் கல்யாண குணம் –

————————————————————-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு  ஏழ்   உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

வண் தாராளான் -ஔதார்ய குணத்துக்கு தனி மாலை இட்ட மா வலி-
ஸ்ரீ வாமனனாயும்
ஸ்ரீ த்ரிவிக்ரமனாயும்-பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினான்-

——————————————————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
இவரைப் பெறவே அங்கு எல்லாம் இருந்து வந்தவன் -பரம உத்தேச்யம்
இது சித்தித்து விட்டால் அங்கு ஆதாரம் மட்டமாய் விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன  கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading