ஸ்ரீ யபதி -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து வெண்ணெயும் பெண்களையும் ஒக்க களவு செய்து
அருளிய சேஷ்டிதங்களை அனுபவிக்க இழிகிறார் –
அது தான் மகா பாரதமாய்ச் செல்லும் இறே
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றால் எறிந்தான் -என்று முறையிடுவாரும்
வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தான் என்று முறையிடுவாரும் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீம்புகள் செய்கின்றானே -என்று முறையிடுவாரும்
தொத்தார் பூங்குழலி கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை
புணர்ந்து வந்தான் என்று முறையிடுவாரும்
திருவாய்ப்பாடியில் முழுதும் பேர் ஆரவாரமாய்ச் செல்லும் பருவம் இறே
ஊரில் உள்ளார் அடங்கலும் முறையிட அவை கேட்டு யசோதை பிராட்டியார் சொல்லும் பாசுரமும் முறையிடுவார் பாசுரமுமாக
அவர்கள் அவர்கள் பாவனையாகவே தாம் பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியில் –
ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள் தவிர வேறு அவதார லவலேசமும் கலசாத திரு மொழியாய்ச் செல்லுகிறது –
———————————————–
மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-
அவனைத் தண்டிக்கும் வன்மை எனக்கு இல்லையே
குல மரியாதைக்கு இழுக்கு என்று பிரார்த்திக்கத் தான் முடியும்
நந்த கோபரும் வாய் விட்டுக் கண்டித்து அறியார்
கீழ் அண்டை அகத்தில் ஓர் இளம் பெண்ணுடன் உட்கார்ந்து அவளும் தானுமாக தயிர் கடைவதாகத் தெரிகிறது –
உங்கள் ஆயர் குலம் மானமுடைத்து -கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழவில்லை -பெரியாழ்வார்
உரப்பகில்லேன் – அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -உரப்புதல் -அரட்டுதல்
நானும் உரைத்திலேன்-கீழே உரப்பகில்லேன் -என்றதன் அனுவாதமே இதுவும் –
———————————————————
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண் உறங்காதே இருந்து கடைய -பெரியாழ்வார் -3-8-9-
மோர் விற்கப் போக நடு வழியிலே கண்ணன் எதிர்பட –
வீட்டில் புகுந்து என்ன அனர்த்தம் செய்யப் போகிறானோ -சிந்தனை பண்ண
வந்து பார்த்த அளவில் வெண்ணெயும் காணோம் பத்துப் பானை பாலையும் காணோம்
நான் முறையிட்டு என்ன பலன் -தண்டிக்க கடமை பட்டவர்களே ஆணாட விட்டிட்டு இருக்க என் செய்வேன் –
வெறுத்து உரைக்கிறாள் ஒருத்தி
வெண்ணெயும் பாலையும் இழந்த வயிறு எரிச்சல் இருக்கச் செய்தேயும் மாலை நறுங்குஞ்சி
நந்தி மகன் -பரம போக்யமாகப் பேசுகிறாள்
தருனௌ ரூப சம்பன்னௌ-போலே வயிர உருக்கான வடிவு அழகு படுத்தும் பாடு
அரக்கியே அப்பாடு பட்டாள் -இங்கே பேசுவதோ இடைச்சி -பேசப் படுகிறவனோ கண்ணபிரான் –
வைய வந்த வாயாலே வாழ்த்த வேண்டி அல்லது இராதே –
மேலை யகத்து நங்காய் -யசோதை பிராட்டியை விளிக்கிறது-என்னவுமாம் –
வேறு ஒரு அயல் வீட்டு இடைச்சியை விளிக்கிறது என்னவுமாம்
நங்காய் -ஜாத்யேக வசனமாய்க் கொண்டு பன்மைப் பொருள் கொள்ளலாம் -காண்மின்கள் -என்ற பன்மை முற்று இருக்கையாலே
அன்றி
நங்காய் -ஒருத்தியை அழைத்தவாறே தீம்புகளைக் கேட்கும் ஆவலினால் பல பெண்கள் எழுந்தோடி வர –
வந்து காண்மின்கள் -என்று அவர்கள் எல்லாரையும் நோக்கிச் சொல்கிறாள் என்னவுமாம்
———————————————
தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –10-7-3-
யசோதை தானே முறையிட்டு பேசும் பாசுரம் இது
வெள்ளி மலை இருந்தால் போன்ற வெண்ணையை அள்ளி விழுங்கி விட்டு -ஒன்றும் அறியாதவன் போலே
உறங்குவதாக பாவனை செய்கிறான்
கழவு கற்றானே ஒழிய கழவை மறைக்க கற்றான் அல்லன் -கை எல்லாம் நெய்யாக இருக்கின்றதே
வாரி நின்றும் வயிறு நிரம்பின படி இல்லையே
பேதையேன் என் செய்கேன் -ஜீரணம் ஆக வேண்டுமே என்ற கவலையே –
தெள்ளியவாய்ச் சிறியான் -கண்ணுக்கு இருக்கிறபடியும் செயல் இருக்கிற படியும் காண் –
கள்ளத் தனம் முகத்துக்கு தோற்றாமல் –
தெள்ளிய வா சிரியா -பாட பேதம் -நாளிளம் திங்களை கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தோடு யுண்ட –
திரு முத்துக்களின் ஒளி புறப்படவே அதையே கை விளக்காகக் கொண்டு வாரி விழுங்குவான்
தெள்ளியவா -தெளிவாக –சிரியா -சிரித்து என்றபடி –
முந்தின பாடமே வ்யாக்யானத்துக்குக் சேரும்
வாயிலோ கையிலோ வெண்ணெய் இருக்கக் கண்டால் அன்றோ களவு வெளிப்படும் -கையிலும் வாயிலும் இல்லாதபடி ஆக்கி
உடம்பிலே தடவிக் கொள்வானாம் -அதி மானுஷ ஸ்தவம்
இங்கு நெய்யை நக்கியும் உண்ணாமல் உடம்பிலும் தடவிக் கொள்ளாமல் கையிலே தோய வைத்துக் கொண்டு
இருப்பது மௌக்யத்திலும் மிக்க மௌக்யம் –
என் செய்கேன் என் செய்கேனோ -அத்யாபகர்கள் இதிலும் ஓதுவார்கள் -யாப்புக்கு சேராது –
———————————————-
மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ -10-7-4-
கள்வம் பொதி அறை -கள்ளத் தனத்துக்கு கொள்கலமாய் இருப்பவனான இக்கண்ணபிரான்
முன்னலோர் வெள்ளிப் பருமலைக் குட்டன் -சூது வஞ்சனை கள்வம் ஒன்றும் அறியானவன் –
மை நம்பு வேற்கண் நல்லாள் -தேவகி ஆகவுமாம் –ரோகிணி -ஆகவுமாம் -மையை விரும்புகின்ற கண்களை யுடையவள்
நம்பும் மேவும் நசையாகுமே
வளை வண்ண நன் மா மேனி -வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -என்பார் கீழும் –
வெள்ளிப் பருமலைக் குட்டன் -என்பர் பெரியாழ்வார்
நம்பி நம்பியும் -நம்பி மூத்தபிரான் -தன் நம்பி நம்பியும் -என்றதை நம்பி தன் நம்பியும் -என்று அந்வயம்
இந் நம்பி நம்பியா நம்பியால் -என்ற பாடம் மறுக்கத் தக்கது -நம்பியா -என்றது நம்பியாக -என்றபடி
நிரபேஷனான இவன்–இவனாக–இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவன் இவனாக என்றது -இவன் இப்படி தீம்பில் குறையற்றவனாக இருக்கையாலே -என்றபடி –
——————–
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ -10-7-5-
காரார் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை வாரார வீக்கி மணி மேகலை திருத்தி
ஆராரயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து சீரார் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் -சிறிய திரு மடல்
எந்த பெண் எங்கே தனியாக இருப்பாள் ஆராய்பவன் அன்றோ
தீமைகளை விவரிக்க முடியாமல் படிறு செய்தான் என்றே சுருங்கச் சொல்லலாம் படி -படிறு -தகாத கார்யம் –
————————————-
மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-6-
கீழ்ப் பாட்டில் சம்போக உபக்ரம மாதரம் -இது சம்போகம் தலைக் கட்டினபடி
மணமகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் -இவனுக்கு என்ன கேடு -அகாலத்திலே நம்மை நம் மனையிலே
வந்து இப்பாடு படுத்த வேணுமோ
அன்றிக்கே கண்ணனைத் தாலாட்ட தாய் சொல்லும் வார்த்தைகளை அனுவதிக்கிறார்கள்
இரவில் வந்து இலைக் குழலூதி என் மகளைக் கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமலச் செவ்வாய் வெளுப்ப
விவரணப் படுத்துவதும் தகுதியோ
அல்லிற்றான் பாடமே பொருந்தும் -குழலையும் ஊதிக் கொண்டு ராத்ரியிலே வந்த பின்னை
அல்லுற்றான் பாடம் பொருந்தாது-
————————————————-
ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-
நல்லன பாசனம் -நல்ல பாத்ரங்களால்
பண்டிகளால் -பல பல வண்டிகளால்
அசோதை பெரிய வயிறு தாரியான ஒரு பிள்ளையைப் பெற்றாயே -என்று ஏசுவது வெளிப்படை
கோவலரையும் கோ நிரைகளையும் காத்து அருளின பெருமான் அன்றோ
தனது சௌலப்யம் காட்டி அருள செய்த சேஷ்டிதங்களை பழித்தல் தகுதியோ -உள்ளுறை போரில்
அதனை எல்லாம் –இரண்டாம் அடியிலும் ஈற்று அடியிலும் இரட்டிப்பு
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறுமாக திரட்டின திரளிலே
ஒரு சிறு அவிழும் மிச்சம் ஆகாதபடி அடங்கலும்- துற்றினான் என்பதைக் காட்டவே –
—————————————————-
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–10-7-8-
இடைச்சிகள் எல்லாம் திரண்டு முறையிட்டால் நான் வருந்தாமல் இல்லை
கண்ணபிரானை தண்டிக்க முடியாதே
ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொள்ளத் தானே முடியும்
பூதனையை முலையுண்டு முடித்த பின்பு இவனைப் பொடிந்து ஓன்று சொல்ல அஞ்சிக் கிடக்கின்றேன்-
—————————————————————————————————————————————————————————————————————————–
ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே ———————–10-7-9-
பாலுக்கு அழுகிற பாவனையில் தன சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்து அச் சகடாசுரனை சின்னா பின்னம் ஆக்கி அருளிய பிரான்
ஈடும் வலியும் யுடைய
ஈடு -தேக பலம்
வலி -எதிரிகளை அநாயாசமாக அடர்க்கும் வலிமை -சௌர்யம் வீரம் பராக்கிரமம் போலே
ஏழு திங்களில் சாந்திர மாந ரீதி -மிக்க சிறிய பிராயத்தில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி -இதழ் விரிகின்ற மாலையை அணிந்த இப்பிள்ளையை கண் வளரச் செய்து விட்டு –
சேடன் -மிக்க இளைய பிள்ளையாய்
——————————————————————————————————————————————————————————————————————-
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –10-7-10-
அஞ்சுவனே என்று சொன்னது திண்ணமே
ஆயிரம் பிள்ளைகளும் களவு கொள்ளும் விதம் நீர் அறியீரோ -பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் -பூனை போலே
ஓசைப்படாமல் புகுந்து களவு செய்கிறார்கள்
உண்கின்று-அமரர் கோன் அர்ச்சிக்கின்று -திருவாய் -10-2-5- போலே -உண்ணும் போது என்றவாறு
கஞ்சனுக்கு தீர்வை கட்டும் நாளும் வந்ததே -கறவு -கப்பம்
வருஷத்துக்கு ஒரு முறை கப்பம் கட்டுவது ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப் படுகிறதே-
————————————————————–
அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் -10-7-11-
அவன் அறியாத பொய்கை தேடி ஆய்ச்சிகள் போக இருளன்ன மேனி அவர்கள் நிழலைப் பற்றிக் கொண்டு
முன்னமே போய்ச் சேர்ந்தான்
கோழி அழைப்பதன் முன்னம் -நாச்சியார் -திருமொழியின் சுருக்கம் இப்பாசுரம்
இருந்தாய் போலும் -தான் நேராக கண்டது இல்லையே –
அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பி என்னும்
பங்கய நீர் -தாமரைத் தடாகம்-
——————————————
அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் -10-7-12-
ஆண்மையும் சேவகமும் -சௌர்யமும் வீர்யமும்
நம்பி மூத்த பிரானை கூட்டிச் செல்லாமல் தன்னுடனும் வார்த்தை சொல்லாமல் மடுவுக்கு சென்று காளிய நிரசனம் பண்ணி அருளினான்
ஆயிர வாய் நாகத்தினோடு -சில இடங்களில் ஐந்தலை நாகம் -பயங்கரம் தோற்ற
கண்ணபிரான் திருவடி ஸ்பர்சத்தால் பச்சிலை பூம் கடம்பு ஆயிற்று-
————————————————-
தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-
ரிஷப வடிவு கொண்ட அசுரன் அரிஷ்டாசுரன்-அரிஷ்ட நேமி என்றும் பெயர் சொல்லுவர் இந்த அசுரனுக்கு
நப்பின்னை பிராட்டிக்காக ஏழு ரிஷபங்களையும் அடக்கியதும் ஆகவுமாம்
தம்பரமல்லன-தன்னாலே தாங்க முடியாதவற்றை-
————————————————————–
அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே —10-7-14-
குவலயா பீட நிரசனத்தை சொல்லி நிகமிக்கிறார்
இப்பதிகம் கற்று வல்லார்க்கு துன்பம் சிறிதும் இல்லையாம்
யசோதைப் பிராட்டியைப் போலே அனுபவத்தில் குறை இல்லாத இன்பமே அதிகரிக்கப் பெறுவார்
தொல்லை இன்பம் பெறுவார்கள் என்றபடி-
————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply