இத் திரு மொழி -புணர்ந்து பிரிந்து பிரிவாற்றாதாருடைய ஊடல் திறத்தை பேசி அனுபவிப்பதாக செல்லுகிறது –
சிறிது காலம் தாழ்ந்து வந்ததால் பிரணய ரோஷம் -மின்னிடை மடவார் -திருவாய்மொழி போலேயும்
ஏர்மலர் பூங்குழல் -பெருமாள் திருமொழி போலேயும்
ஆய்சிகளின் பாவனையில் முதிர்ந்து அனுபவித்து பேசுகிறார் —
————————————————————-
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிது வென் யிது வென்னொ –10-8-1-
கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாம் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் -என்றும்
மகரக் குழை கொண்டு வைத்தேன் வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்-என்றும்
இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து சுண நன்றணி முலை யுண்ணத் தருவன்
நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்றும்
சொல்லியும் குத்தாமல் பருவம் நிரம்பியவாறே பெண்டுகள் -விடு காது அழகியார் -சுனை காது அழகியார் -என்று
பரிஹாசம் பண்ணத் தொடங்கவே காது குத்திக் கடிப்பிட்டு வரத் தொடங்கினான் –
கலிங்கம் யுடுத்து -கறுப்புத் திரு பரிவட்டம் -போர்வை பொத்திக் கொண்டு பிறருக்குத் தெரியாமல் வந்தான்
மேல் பாட்டில் துவராடை யுடுத்து -முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்கு மேலே சிவப்பு நிறப் புடைவையை
சிமிழ்த்துக் கொண்டு வந்தான் ஆயிற்று
பிரணய ரிஷம் நீங்கிக் கடுக அனைத்துக் கொள்வாள் என்னும் விருப்பத்தாலே அலங்கரித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று –
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து –என்பதால் முகம் கொடுத்து பேச மாட்டிற்று இலள்
அதுவே ஹேதுவாக இவனும் விரைந்து செல்லாமல் கதவின் புறமே கவிழ்தலை இட்டு நிற்க வேண்டியவன் ஆனான்
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ-வெறும் காதே பரம போக்யமாக இருக்க
காதில் கடிப்பிடுவான் என் -இது என் –
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனியை காணப் பெரிதும் உகப்பார் நாங்களாய் இருக்க
கலிங்கம் யடுத்து அத திரு மேனி அழகை மறைப்பான் என் -இது என் –
சர்வகந்த என்கிறபடியே திருமேனி தானே பரிமள பிரசுரமாய் இருக்க திருத் துழாய் பரிமளம் ஏறிடுவான் என் –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்காக அலங்கரித்து வர வேண்டுமோ -ஏதுக்கு இது –
கொடும் பசி வேளையில் கிடையாத சோறு ஏதுக்கு
உம் அழகை நீரே கண்டு கொண்டு உம் உடம்பையும் நீரே தொட்டுக் கொண்டு நீரே மோந்து கொண்டு
நீரே கட்டிக் கொண்டு நீரே மகிழ்ந்து இரும்
எங்களுக்கு ஏதுக்கு வேண்டா வேண்டா -கதவு அடைக்கிறாள் –
———————————————
துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ–10-8-2-
கையிலே பூஞ்செண்டையும் சிலுப்பிக் கொண்டு வந்தான் ஆயிற்று
கவர் ஆக முடித்து -கவர் -இரண்டாக பிரிகை -மயிரைப் பகுந்து முடித்து -அலகலகாக வாருதல்
வலிய கச்சுப் பட்டையை அறையிலே இறுக்கிக் கட்டிக் கொண்டும் ஆற்று வெள்ளத்தில் இழிவாரைப் போலே வந்தான்
ஆய்சியினுடைய முகக் குறிப்பைக் கண்டவாறே சுவரார்ந்த கதவுக்கு புறம்பே நின்றான்
அத்தை அறிந்து அவள் சொல்ல அதுவே பற்றாசாக அணுகிச் சென்று மடி பிடிக்கப் புகுந்தான் –
புகவே -இவராரிது வென் யிது வென் யிது வென்னொ –
————————————————
கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ-10-8-3-
நீர் பெரியீர் -நாங்கள் உனக்கு லஷியமோ
இப்படி குழைச் சரக்காக நினைத்து உபேஷிக்கிற நீர் எங்களை நெஞ்சிலும் இட்டு எண்ணாதே இருந்திடல் ஆகாதோ
பெண் பிறந்தார் எல்லாரும் நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியான பண்ணை நுணுங்கிக் கொண்டு
அபர ராத்ரியிலே இங்கு வந்து புகுந்தீரே -இது ஏதுக்கு போம் போம்
மருளைக் கொடு பாடி -பாடம் பிழை
மருள -வினையெச்சம்
கொடுபாடி -பாடிக் கொடு பாடிக் கொண்டு என்பதன் சிதைவு-
——————————————
நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ -10-8-4-
நாமம் பலவுமுடை நாரண நம்பீ -பேராயிரம் யுடைய பீடுடையீர் பொருள் அன்று இங்கே –
இன்னாளுக்கு சேஷ பூதன் -இன்னாளுக்கு சேஷ பூதன் -என்று நீ படைத்த பேருக்கு எல்லை உண்டோ – சொல்ல வேணுமோ
நீர் ஊர் பொது அல்லீரோ நீர் நிரபேஷர் அல்லீரோ –
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -நாச்சியார் -4-11-எம்பார் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூகதிகள் –
ஆய்ச்சிகளுக்கு நிறை புகழாவது கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள் –
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் என்னும் புகழ் காணும் –
வாசுதேவன் வரவு பார்த்து கூர் மழை போலே பனிக்கு ஊதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணல் குன்றில் புலர நிற்க
இன்னம் என் கையகத்து தீங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திரு -6-8-
அவர்கள் யுடைய தேக குணம் ஆத்ம குணம் பற்றி பட்டினி கிடப்பான் அவனும் –
இன்னாளுக்கு அடியான் இன்னாளுக்கு அடியான் என்று பெயர் பெற்றவன் –
தாமத் துளபம் மிக நாறிடுகின்றீர்-விரஹ அக்னியால் துளப மாலை கருகிப் போயிருக்க வேணுமே -இப்படி பரிமளிக்க பிரசக்தி யுண்டோ
ஏமத்து இதுவென் -ஏமம் -இரவுக்கு பெயர் -காவலுக்கும் பெயர்
கட்டுக் காவலுமான இடத்துக்கு ஏதுக்கு வந்து சேர்ந்தீர் -இரவிலே நீர் தேடி போக வேண்டிய இடம்
வேறாய் இருக்க இங்கே ஏதுக்கு வந்தீர் –
————————————————
சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5-
இரண்டாம் பாட்டில் கவராக முடித்து -வந்தும் ஈடுபடக் காணாமையாலே
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட -குழல்களைத் தாழ விட்டான்
சுரிகை -இடுப்பில் அழகுக்கு சொருகும் கத்தி -உகப்பாருக்கும் உகவாதாருக்கும் கருவி ஒன்றாயிற்று –
சத்ருக்களை இரு துண்டமாக விட்டு முடிக்கும் அனுகூலரை அழகாலே கொல்லும்-
மற்றும் பல ரத்ன பூஷணங்களையும் பொன் ஆபரணங்களையும் சாத்திக் கொண்டு வந்தீர்
முற்றத்தளவில் நின்று புன்முறுவலும் செய்தீர்-
———————————————-
ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-
வேட்டையாடப் போவது போலே பாவனையில் வில் கையில் ஏந்தி
கள்ள விழி இட்டுப் பார்த்துக் கொண்டே வந்தீர்
அது கண்டு இவ் ஊர் ஓன்று புணர்க்கின்றதே -பெரியாழ்வார் -3-4-3-என்னும் படியான விரோதிகளின் கண் வட்டத்திலே
வீண் பழியை மாத்ரம் விளைப்பதான இவ்வருகை ஏதுக்கு-
இங்கே புகாதே எழுந்து அருளீர்-ஏனோர்கள் -பிரதிகூலர்கள் –
——————————————
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-
உம்முடைய தோள்களை அணைக்க மல்லர் -முரட்டு ஆண்களே இட்டுப் பிறந்தவர்கள்
அவர்களை பொடி பண்ண வேண்டி பொருதேன் என்ன -அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை –
நினைவு ஓன்று செயல் ஓன்று -செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே
சொன்ன போதினில் வாரீர் -ஊர்ப் பொதுவான நீர் ஏதுக்கு சமயம் குறிப்பிட்டு போவது
துடிக்க வைத்து விட்டு இருக்கவே சொல்லிச் சென்றீர் தாமதமாக வந்தீர் -பேச்சுக்கும் செயலுக்கும் சேர்த்தி இல்லையே
அல் -இரவு நேற்று இரவு என்றபடி-
——————————————–
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-
காளியனை முடித்து அருளிய உம்முடைய மிடுக்குக்கு நாங்கள் இலக்கோ
உமக்கு நாங்கள் ஒரு சரக்கோ -தேவிமார் தக்கார் பலர் சால வுடையீர்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் நாங்கள்
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணர் அல்லீரோ
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானே கண்டார் உளர் -என்றும்
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் -என்றும்
மதுரம் ப்ராப்ய கோவிந்த சதம் கோகுலமேஷ்யதி -நகர ஸ்திரீ கலாலாபமது ஸ்ரோத்ரேண பாச்யதி-
உன்னுடைய அபி நிவேசங்களை நாங்கள் அறியோமோ –
—————————————–
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ -10-8-9-
என் சாயத்தை வெளியிட வேண்டா என்று காலைப் பற்றிக் கொள்ள
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்ல -கடக்க நில்
கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்த்தி
அவளுக்கும் மெய்யன் அல்லை மருது இறுத்தாய் உன் வளர்தியோடே வளர்கின்றதால்
உன் தன் மாயை தானே -பெருமாள் திருமொழி
குரவை புனைதல் -ஆய்ச்சிகள் யுடன் கை கொத்தாடுதல் -ராசக் கிரீடை என்றுமாம்
இவனை உள்ளே புகவிட்ட தோழியை அன்றோ பொடிய வேண்டும்
கோமளப் பிள்ளாய் இந்த வார்த்தையும் முகத்தைப் பார்த்து சொல்ல ஒண்ணாதே –
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே -நாச்சியார் -13-9-
பெருமையாக நினைத்திடுவானே-தோழி முகத்தை பார்த்து குறை வார்த்தையும் கூறினாள்-
தருண மந்திர க்ருத்வா–துரும்பை நடுவிலே இட்டு பிராட்டி பேசினால் போலே
——————————————–
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே -10-8-10-
அல்லிக் கமலக் கண்ணனை -பரமானந்தம் அவனுக்கு இத்தால் -காமம் புணர்தலின் ஊடல் இனிது
திரு உள்ளத்தில் ஹர்ஷம் திருக் கண்களில் புற வெள்ளம் இட்டமை தோன்றுமே
துக்கம் இன்றி இன்பமாக வாழப் பெறுவார்கள் -பலன் சொல்லித் தலைக் கட்டு அருளுகிறார்-
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply