சப்பாணி கொட்டுதல் –சப்பாணி -சஹ பாணி -ஒரு கையுடன் கூட -பொருள் -ஒரு கையோடு மற்று ஒரு கை
வைத்து சேர்த்துக் கொட்டுதல் –
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப -பெரியாழ்வார் திரு மொழி போலே –
யசோதா பாவனையிலே பேசி அருளுகிறார் இதிலும் –
————————————-
பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி –10-5-1-
பூங்கோதை யாய்ச்சி-தன்னையே படர்க்கையாக சொல்லிக் கொள்கிறாள் -சீதக்கடலில் இது போலே பல இடங்கள் உண்டே
கடை வெண்ணெய்-முக்காலத்துக்கும் பொது -கடையப்பட்ட -கடையப் படுகிற -கடையப் போகிற -வெண்ணெய்
பிரகரணத்துக்கு நிகழ் காலப் பொருள் சிறக்கும்
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே–கடைகிற போதே நிழலிலே ஒதுங்கி
களவு கண்டாயிற்று அமுது செய்வது –
ஏங்கி இருந்து -பெரிய திரு நாளில் கள்ளர்களை சிறைப் படுத்தினால் போலே தீம்பு செய்ய முடியாதபடி
கட்டிப் போட்டு இருக்கிறாள் என்ற ஏக்கம் தான்
யசோதை தானும் ஆணாட விட்டிட்டு இருப்பள்
வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின் எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –
என்று வயிறு பிடிப்பவள்–சீராட்டத் தொடங்குவள் -அவனும் விளையாட்டில் கை வைக்கத் தொடங்குவான் -சிணுங்கி விளையாடும் –
————————————————
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2-
நெய்யும் வெண்ணெயும் உண்டால் ஜரிக்குமோ என்று தாய்மார் நெஞ்சு துடிக்கும்படி களவு கண்டு புஜித்தும்
ஏய்-பொருத்தமான கார்யம் செய்ததாக நினைத்து இருக்கும் எம்பெருமானே
ஏய்தல் -பொருந்துதல் -நிறைதலுமாம்
அரவிந்தமாயவனே -பாட பேதம்
மால் வண்ணனே -மால் -கருமை -வ்யாமோஹம்-வ்யாமோஹமே வடிவு எடுத்தவன் என்னவுமாம் –
———————————-
தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி -10-5-3-
மோர்குடத்தை வெறுத்து உருட்-மோரார் குடமுருட்டி -சிறிய திரு மடல்
ஒன்றும் அறியாதவன் போலே தவழ் நடை இட்டு இருப்பான்
தாம்புகளால் கட்டியும் கையால் அடித்தும் நலிவுகளைப் பண்ண காய்ப்புக் காய்த்து இதுவே நிரூபகமாக தாமோதரன்
முதலடியில் தாவி -எனபது தா -என்று குறைந்து கிடக்கிறது
தாம் மோதரக் கையால் -அலங்க்ருதமான கையால் கட்ட –
தாம்மோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை
மோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை
படாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –
இப்படி வ்யாக்யானத்தில் புகுந்து இருக்கலாம்
ஆய்ச்சியர் தாம்பினால் ஆர்க்க -கையால் மோதர -என்பதே பழைய வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்-
——————————————————-
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -10-5-4-
மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் –
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருள் கண் வந்த வெந்தை –
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்
பேர்ந்து -நாகபர்யாங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
அயலிடத்து உற்றார் -சமீப பந்து
பெற்றார் தளை கழல-அங்கு -வடமதுரையில் நின்றும் -அயலிடத்துப் பேர்ந்து
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -திரு வாய்ப்பாடிக்கு சென்று என்னவுமாம் –
கன்று ஆயன் கற்றாயன் –
————————————————————
சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி–10-5-5-
அப்பம் கொடுக்கும் ஆய்சிகளுக்காக சப்பாணி கொட்டாய்
ஆயிரம் சப்பாணி -ஆயிர கணக்கான ஆய்ச்சிகள் அப்பம் கொடுப்பதால்
அஞ்சலி பண்ணுபவர்கள் தாழ்ச்சி தோற்ற சோத்தம்
அவர்க்காகச் சாற்றி -நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -என்றது போலே –
—————————————————————–
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –10-5-6-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க பொட்டத் துற்றின திரு வயிற்றுக்கு
அப்பப் பணியாற வகை ஓன்று போருமோ –
பேழை வயிற்று எம்பெருமான் நீ
அதற்கு ஏற்றவாறு அவலும் அப்பமும் தருவேன் -சப்பாணி கொட்டாய்
நான் வலவப்பம்-பாட பேதம் -தப்பானது
கருவிளைப் பூவலர் -கருவிளைப் பூவை அலர்விப்பவன் – தனது திருமேனி நிறத்தினால் விளங்கச் செய்பவன்-
————————————
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7-
அடியேன் முலை நெருடும் -பரத்வ சௌலப்யங்களில் தோற்று அடிமைப் பட்டமை
ஆழ்வார் சமாதியும் கூட கலசி என்றுமாம்
ஆழ்வார் சமாதியால் பின்புள்ள சேஷ்டிதங்களை சொல்லி சப்பாணி கொட்டச் சொல்வதும் பொருந்தும்-
———————————————-
யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி -10-5-8-
தொட்டில் பருவத்திலே நடந்த சிறுச் சேவகம் என்பதால் பூதனா நிரசனத்தை மீண்டும்மீண்டும் அனுசந்தித்து
அவள் உயிரைக் கவர்ந்துண்ட பிரானே சப்பாணி கொட்டாய் என்கிறாள்
யாய் -மோய்-தாய்க்குப் பெயர்
அலவை -கெட்டுப் போனவள் -பஹூ வாக ஜல்பிதம் பண்ணிக் கொண்டு வருபவள்
என் குட்டனே வா -என்முத்தமே வா -என் செல்லமே வா -போன்ற போலி பிதற்றல்களைச் சொல்லிக் கொண்டே வந்தாள் என்றபடி
————————————————-
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-
பாலுக்கு அழுத பாவனையிலே சிறிய திருவடிகளை தூக்கி உதைத்து சகடத்தை சின்னா பின்னம் ஆக்கினாய் –
பூதனையை நிரசித்தாய்
அருமையான கார்யங்களை செய்து அருளின நீ எளிதான சப்பாணி கொட்டுதலையும் செய்து அருளுவாய்-
————————————————
காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-
நிகமன பாசுரத்திலும் வழக்கத்துக்கு மாறாக யசோதை பாவனை தொடருகிறது
என் நெஞ்சிலே போலேவே திரு மங்கை ஆழ்வார் திரு உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கும் திருமாலே
சப்பாணி கொட்ட வேணும் -என்று யசோதை பிராட்டி சொல்வதாகவே அமைந்துள்ளது
இப்படிப் பட்ட பிரார்த்தனையே பயன் என்று ஸூசிப்பித்து வேறு பயன் சொல்லாமல் தலைக் கட்டி அருளுகிறார்-
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply