பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-4-சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே–

இனி ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவம்
த்வேஷத்தின் எல்லையில் நின்றவர்களின் பாசுரத்தால் ஸ்ரீ ராமாவதாரத்தை அனுபவித்தார் இது வரை –
பிரேமத்தின் எல்லையில் நின்றவர்களின் பாசுரத்தால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கிறார் இப்போது –
பகவத் விஷயத்தில் த்வேஷம் ஆகவுமாம் -ப்ரீதி ஆகவுமாம் -ஏதேனும் ஒரு படியால் பகவத் குணங்களை
எடுத்து உரைக்கப் பெறில் அது உத்தேச்யமாகக் குறை இல்லை -என்பதே சூசகம்
ராஷசர் நிலையை ஏறிட்டுக் கொண்டதோடு யசோதை பிராட்டியுடைய நிலையை ஏறிட்டுக் கொண்டதோடு வாசி இல்லை
ஆழ்வார் யசோதை பிராட்டியாகவே பாவித்து முலை யுண்ண நிர்பந்திக்கும் படியாகச் செல்லுகிறது இத் திருமொழி –
பெரியாழ்வார் -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே -திரு மொழியோடு ஒக்கும்
உச்சிப் போதில் முலை யுண்ண அழைத்தது அத் திருமொழி –
அந்தியம் போதிலே முலை யுண்ண அழைக்கிறது இத் திரு மொழியில் -எனபது வாசி –

——————————————-

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே -10-4-1-

சந்த மலர்க் குழல் -என்பதால்-செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும்
கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா –
என்று ஏற்கனவே திருக் குழலிலே சூட்டி இருக்கின்றாள் –
குழல் தாழ வர வேணும் என்றது தன்னைப் பேணாதே -ஓடி வர வேணும்
தன்னேராயிரம் பிள்ளைகள் உடன் விளையாடுகிறான் ஆகையாலே அவர்களையும் பலராமனையும்
விட்டு தனியே வர வேணும் -என்கிறாள்
அவன் தானே பிடித்து வாயில் மடித்து உண்ணப் பெறில் அதிலே ஒரு போக்யாதிசயம் கண்டவள் –
முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து -என்கிறாள் –

நந்தன் பெறப் பெற்ற நம்பி -பெற்ற நம்பி -என்னாமல் -பெறப் பெற்ற நம்பி -என்றது அலாப்ய லாபம்
நந்தன் -பெயரிலே ஆனந்தம் -நிர்ஹேதுகமாக விஷயீ காரத்துக்கு இலக்கான ஏற்றம்
தனக்குக் கிடையாத பிறப்பைப் பெற்றானே –தான் வேண்டித் தேவர் இரக்க -என்றபடி
நான் உகந்து உண்ணும் அமுதே -உப்புச் சாறு இல்லையே -அமுதிலும் ஆற்ற இனிய அமுதம் அன்றோ
அப்படிப் பட்ட அமுதுக்கு அமுதூட்டப் பாரிக்கின்றாள்
அம்மம்  உண்ணத் துயில் எழாயே -உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -போலே
சேமம் -ஷேமம்-பிரபுகளுக்கு காவலோடு வரும் சோறு -சேமத்தளிகை-என வழங்கப்படும் –

————————————

வங்கமறி கடல் வண்ணா  மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

கடல் போலேயும் காள மேகம் போலேயும் விளங்குபவனே –
அவயவ சோபை ஒரு தட்டும் -கண் அழகு ஒரு தட்டும்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய திருக் கண்களை யுடையவன் அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன்
செங்கமலப் பூ போன்ற திரு வாயை யுடையவனே
கூவி அழைத்தும் வாராது இருக்கிறாயே
இதுவா விளையாட்டுக்கு சமயம் –

—————————————————

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து  வாய் முலை உண்ண நீ வாராய்–10-4-3-

தன்னேராயிரம் பிள்ளைகளுடன் திரு வீதியிலே
கன்றுகளோடே   செவியில் கட்டெறும்பு பிடித்து இடுவதும் –
இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழிப்பதும் -விளையாட
சீறாமல் -அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு  இருக்கும்
உள் மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியினால் இன்னமுதம் விஞ்சி பால் சுரக்கப் பெற்று -அந்த நிலையை வாய் விட்டுச் சொல்லி
என் குடம் காலில் இருந்து பாலுண்ண வாராய் -என்கிறாள் –
திருவில் பொலிந்த எழிலார் -தன்னுடைய அழகுக்கு தகுதியான பிள்ளைகள்
தீமைகள் கண்டித்து உருகி பிரேமத்தால் ஏற்கனவே பெருகின பல தீமைகள் செய்யும் படிகளைக் கண்டு
உள்ளுருகி வெள்ளம் இடுகின்றது –
தீம்பால் -மதுரமான பால்
ஓட்டந்து -ஓட்டம் தந்து -பிரவஹித்தலைச் சொன்னபடி –

————————————————-

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

வையத்து வாழும் மடவார் -பிறர் மக்கள்  கண்ணுக்கு -மக்கள் பெறு தவம்-ஒக்கும் முதல்வா -என்று அந்வயம்-
போலும் -அசை சொல்
திவ்ய ஸூந்தர மங்கள விக்ரஹம் படைத்தவனே
மதக் களிறன்னாய்-யானை போலே நடக்கும் நடை நெஞ்சைக் கவருமே
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சந்த மாமா வா வா -அழைத்து குழந்தைக்கு சொல்வதும் இயற்க்கை
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த விருப்பத்தையும் கொண்டு இருந்தான் -தன் முகத்து சுட்டி -பெரியாழ்வார் -1-4- போலே-

————————————-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5-

நீ உத்தமன் அன்றோ
உனது நோவைக் காட்டிலும் தாயின் நோயை  அறியுமவன் அன்றோ –
உலகு அளந்தாய் -யாருமே அபேஷிக்காமல் இருக்க நீயே உலகை அளந்தாயே
நான் அபேஷிப்பதும் உனக்கு மிகை அன்றோ
விகிர்தா -விலஷணனே
வித்தகன் -ஆச்சர்யப் பட்ட குண சேஷ்டிதங்களை யுடையவன்-

விரையாதே வெண்ணெய் விழுங்கும் -ஆரப் பொறுத்து மெதுவாகச் சென்று வாரி விழுங்கு வானாம்

—————————————–

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –10-4-6-

பல்லாயிரவர் இவ் ஊரில்  தீமைகள் செய்வார் -இருந்தாலும் நீ செய்கிற தீம்புகள் விலஷணம் ஆனவை
மிடுக்குடையாய் நீ
கள்ள நெஞ்சன் –
சிஷிக்க நினைப்பாரும் கண்டு வியக்கும் படி தீமைகள் செய்கிறாய்
தீமைகளைக் காணவே ஹர்ஷம் மிக்கு முலை வழிய  தீம் பால் பெருக
நீயோ முலை உண்ணாமல் கண்கள் சிவப்பது -மூரி நிமிர்ப்பது -கொட்டாவி கொள்வது –
உறக்கம் குறிகளைக் காட்டிக் கொண்டு இருக்கிறாய்
நீ செய்யும் தீமைகளை பாசுரம்  இட்டுச் சொல்ல முடியாமல் -பிள்ளைகள் செய்வன செய்யாய் -என்றும்
பேசில் பெரிதும் வலியை -என்றும் சொல்லுகிறார்கள் –

————————————————–

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-7-

உன்னைக் கண்ட பின்பும் நெஞ்சு நெகிழாத வன்மை யுடைய பூதனை
நப்பின்னைப் பிராட்டிக்கும் பூமிப் பிராட்டிக்கும் வல்லபன்
நன் மகள் -ஸ்ரீ மகா லஷ்மி என்னவுமாம்
என் மகனே -சௌலப்யத்தையே பற்றாசாகக் கொண்டு பிரார்த்திக்கிறேன்-

————————————————-

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள்  தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8-

அஞ்ச யுரைப்பாள்  அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச் -3-8-
இவளைக் கண்டால் தீம்பு  பத்தாக பணைக்கும்
உந்தம் அடிகள் சீறுவர் முனிவர்
மாலைப் பொழுதில் துர்தேவதைகள் யுண்டே -கண் பட்டால் என்னாகும்
அஞ்சாதே அம்மா கையிலே திரு ஆழி யுண்டே என்ன
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐ யுற வில்லை காண் வாழ வுறுதியேல்
மா மதி  மகிழ்ந்தோடி வா –பெரியாழ்வார் -1-4-9-என்று சொல்லி இருக்கிறாயே
ஆழியங்கையனே வாராய் -என்கிறாள் -திவ்ய ஆயுத  சேர்த்திக்கு
பல்லாண்டு -வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்னுமவர்கள்
இதில் அம்மம் உண்ண -சொல்ல வில்லை கீழ் பாசுரங்கள் போலே -வாராய் -அவத்யம் விளையாத படி
அவ்விடம் விட்டு வந்தாலே போதும் என்றபடி-

——————————————————

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

அவன் மேல் விழுந்து வந்து முலை யுண்ண புகழ்ந்து பேசுகிறாள்
பசுக்களுக்குத் தலைவனே -ரஷகனே –
அவற்றில் வாசி அற்ற எங்களுக்கும் ரஷகனே
பேர் அருளாளன் மதலாய்  -பசும் புல்லில் நடந்தாலும் தரையில் காலூன்றாதே எந்த ஜந்துக்கு என் வருமோ –
கண்ணபிரான் திருக் குமாரனாக வரும் வரையில்
பின்பு தான் கூர் வேல் கொடும் தொழிலன் ஆனான்
முன்னைய நிலை பற்றி பேர் அருளாளன் -காதில் தோடு கழற்றினாலும் தோடு இட்ட காது-என்னலாம் இறே
சுற்றக் குழாத்து இளங்கோவே -வான் இளவரசு வைகுண்ட குட்டன் -இளவரசாக குலாவப் படுபவன்
தோன்றிய தொல் புகழாலா-தாய் தந்தையர் சொல் கேட்பவன் என்றி பண்டே ஸ்ரீ ராமாவதாரத்தில்
அனுஷ்டித்து காட்டி அருளி புகழ் பெற்றவனே
நான் அழைக்க வந்து முலை உண்ணா விடில் அதற்கும் அவத்யம் விளையுமே
கானம்  தோறும் கற்றினம் மறித்து திரிந்த களிறே-காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து
மறியோடிய விடாய் தீர நீ முலை யுண்ண வேணும்
நான் தரிப்பதற்கும் முலை யுண்ண வேணும் –

———————————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10-

மெய் அன்புடன் அனுசந்திப்பவர்கள் நித்ய சூரிகளோடே ஒக்கும் படியான தரம் பெறுவார்
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading