பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-3-ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்-

கீழ் திரு மொழி போலே இத் திரு மொழியும் இலங்கை அரக்கர்கள் தோல்விக்கு ஈடாக ஆடுவதொரு கூத்து –
குழ மணி தூரம் –
அக்கூத்தை ஆடும் அரக்கர்களின் நிலைமையிலே நின்று ஸ்ரீ ராமபிரானின்  விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் —

————————————————-

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே  –10-3-1-

பாசுரம் தொடங்கும் பொழுதே ஏத்துகின்றோம் நாத் தளும்ப இராமன் திரு நாமம் -அழகாய் என் சொல்வோம்
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா -ராம பூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –
இலங்கையும் ஸ்ரீ  ராம நாமமயம் ஆயிற்றே
வார்த்தை பேசீர் -நீர் எங்களுடன் அனுகூல வார்த்தை அருள வேணும்
அந்தரங்கர் என்று நினைத்து வானர முதலிகள் அனுகூலிப்பார்கள் அன்றோ
குரங்குகள் யுடன் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றுமாம்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்த வேளையில் இடையூறு   செய்தவர்களில் தலைவர் ஸூ க்ரீவ மகா ராஜர
என்பதால் அவனையே கால் கட்டுகிறார்கள்-

———————————————–

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே –10-3-2-

அனுமான் ஸூக்ரீவன் அங்கதன் நளன்-நால்வரையும் சேர்த்து பேசுகிறார்கள்
எம்பிரானே என்னை ஆள்வாய் -என்று சொல்வது பிராப்தமாய் இருக்க செய்ய மாட்டாதே
அம்புக்கு இலக்காகி மாண்டனர்-

———————————————

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-

உங்களுக்கு  மங்களா சாசனம் செய்வதையே யாத்ரையாக கொண்டோம்
நீலனுக்கு பல்லாண்டு -ஸூ ஷேனனுக்கு பல்லாண்டு -அங்கதனுக்குப் பல்லாண்டு -என்கிறார்கள்
வாலிக்கு மாமனார் ஸூ ஷேனன் –

——————————————-

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4-

இளைய பெருமாள் திருக் குணங்களைப் பாடி குழ மணி தூரம் ஆடுகின்றோம்
கணம் -கழுகு போன்ற பறவைகள் -பிசாசு கட்கும் பெயர்-

——————————————–

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5-

மானம் வேண்டாம் -அஹங்காரத்தைக் கை விட்டோம்
எங்கள் ஜீவனம் நீங்கள் இட்ட வழக்கு -ஆயுஸை தாரை வார்த்து தத்தம் செய்து அருளுவீர்
நீங்கள் கண் படைத்த பிரயோஜனத்தை நாங்கள் ஆடும் இந்த கூத்தை காண வேண்டும் அதற்க்கு ஜீவனம் வேண்டுமே
இந்த கூத்தை கண்ட பின் இரக்கம் வந்து கொள்ளாமல் விடுவீர்கள்
குன்று போலே ஆடுகின்றோம் -குன்று ஆடாதே -உருவத்துக்கும் அணி வகுத்து நிற்கும் நிலைமைக்கும் குன்று உவமை-

——————————————————

கல்லின் முந்நீர் மாற்றி  வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்  குழ மணி தூரமே –10-3-6-

இறுமாந்து  இருந்தோம்
அமிழ்ந்து  போகக் கடவ மலைகளைக் கொண்டு அணை கட்டி வந்தீர்கள்
இலங்கை சுடுகாடு ஆயிற்று என்னும்படியாக வாயால் சொல்ல ஒண்ணாத அனர்த்தம் பட்டோம்
எங்களை விட்டு விட பிரார்த்திக்கிறோம்-

———————————————-

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

சேவகம் பேசாதே -செருக்கி மிடுக்குச் சொல்லைப் பேசாதே
கீழ்த் திரு மொழியில் தடம் பொங்கத் தம் பொங்கோ என்றும் இதில் குழ மணி தூரமே -என்றும் ஆடும் குழுவில் சேராதே –
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்-என்று ராவணன் ரீதியில் உள்ளாரை
தங்கள் திரளிலே வந்து புகுமாறு அழைக்கிறார்கள் -வம்மின் அரக்கர் உள்ளீர்
மாற்றம் -வாய் வார்த்தை
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் -பிறந்த உடனே சூர்யனை பசிக்க ஆஞ்சநேயர் கிளம்பியதால் தொல் பிறப்பின் -ஆற்றல் என்கிறார்
ஆஞ்சநேயரை வாழ்த்தினால் மற்ற முதலிகள் பிரசன்னராய் விடுவார்கள் சூசகம் –

——————————————————

கவள யானைப்  பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர்  குழ மணி தூரமே –10-3-8-

இதிலும் அரக்கர் உள்ளீர் -வருவித்துக்  கொண்டு குவளை வண்ணரான அந்த சக்கரவர்த்தி திருமகன் கண்டு மகிழும் படி
எங்கள் உடன் குழ மணி தூரம் ஆட வம்மின்
தவலம் -சிறந்த சுண்ணாம்பு பூசப் பெற்று வெண்ணிறமாய் இருக்கின்ற மாட மாளிகைகள் யுடைத்தான
அயோத்யா புரிக்கு இறைவனான தசரத சக்கரவர்த்தி திருக் குமாரன்

—————————————————-

ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9-

ஏடு ஒத்த -பனையோலை விரிந்தால் போலே அகலமாயும் –
நாங்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கிறோம் என்பதை போர் புரிய -என்று நீங்கள் நினைக்கல் ஆகாதே
குழ மணி தூரம் ஆடுதற்கே திரள் திரளாக இருக்கின்றோம் –
யம லோகத்துக்கே இராவணன் ஓடிப் போனான்
உயிர் உடன் இருந்தாலும் இல்லை என்று சொல்லும்படியாக ஆகி விட்டான்
உய்வதோர் காரணத்தால் நாங்கள் எய்த்தோம்
உய்வதோர் காரணத்தால் உங்கள் கோமான் ஆணை சூடிப் போந்தோம் -நடுநிலைத் தீபமாக முன்னும் பின்னும் அந்வயிக்கும்-

———————————————

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த  குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற  வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10-

குன்று போல் ஆடுகின்றோம் குழ மணி தூரமே என்று பல சொல்லிக் கூத்தாடி
உயிர் தப்பிப் பிழைத்தபடி யைத் திரு மங்கை ஆழ்வார்
எடுத்து உரைத்த இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பாடி ஆடுங்கோள் என்கிறது  –
அரக்கர் ஜீவனம் பெற ஆட -நீங்கள் உஜ்ஜீவனம் பெற ஆடுமின் –
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் —
மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்துச்
சொன்ன ஐந்து பாசுரங்கள் -பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading