பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -10-2-இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்-

ஸ்ரீ யபதி இன்னமும் இவ் வாழ்வாரைக் கொண்டு லோக உஜ்ஜீவனார்த்தமாக
இன்னமும் பல பாசுரங்களை வெளியிட திரு உள்ளம் பற்றி
இவருடைய அபிமதத்தைத் தலைக்கட்டி செய்யாதே -தன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களை அனுபாவ்யமாகக் காட்டிக் கொடுத்தேன்
ஸ்ரீ ராம ஜெயத்தை ராஷசர் வாயாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராஷச யோனியில் பிறந்து இருந்தாலும் சாத்விகராய் இருந்து உத்தேச்யரானாப் போலே
இந்த அரக்கர்களும் இராவணன்   தோல்வியையும் ஸ்ரீ ராமபிரான் ஜெயத்தையும் சொல்வதால் உத்தேச்யம் –
இதிலே -தமக்கு அபிமதமான -ஸ்ரீ ராம விஜயத்தை எதிரிகள் மேல் எழுத்திட்ட பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
அங்குத்தை விஜயம் தமக்கு இஷ்டம் ஆகையாலே அந்த விஜயத்துக்கு இலக்காய்த்-தோற்ற ராஷசர் தசை பிறந்து-
பிராட்டிமார் தசை பிறந்து பேசுமா போலே -தாமான தன்மை தோற்றாதே-
தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -ஸ்ரீ ராம விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் –
இத் திரு மொழியும் மேல் உள்ள திரு மொழியும் இங்கனே செல்லும்-

நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –
எதிரிகளை வென்று அவ் வெற்றியாலே தூரய கோஷத்தைப் பண்ணுவித்து  அதுக்கீடாக ஆடும் கூத்துப் போலே –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு  கூத்துண்டு – 
அந்த சப்த அநுகாரம் -பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-
பொங்கத் தம் பொங்கம்-என்ன தொடங்கின வாய் அஞ்சினபடிக்கு — ஸூசகமாய் பொங்கோ என்று குறைத்து நிர்த்தேசித்தார்-

———————————–

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல்விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1-

அத்யுத்  கடை புண்ய பாபை இஹைவ பலம் அஸ்நுதே -இந்த சாஸ்திரம் தங்கள் திறத்திலே பலித்து விட்டது
எங்கோன் இரக்கமின்றிச் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணப் பிராப்தமாய்  
இருக்க மிதுனத்தைப் பிரித்த கொடுமை
இதன் பலன் நமது சம்பந்தம் உள்ளார்கள் அளவிலும் பலிக்கும் என்று அறிந்தும் இரக்கம் இன்றி செய்தானே –
கொடுமையை வாயாலே சொல்ல மாட்டாமையால் எங்கோன் செய்த தீமை -என்கிறார்கள்
இராவணன் பட்டனன் -மேல் ஏழாம் பாட்டில் -ஏழையை இலங்கைக்கு இறை தன்னை
எங்களை  யொழியக் கொலையவனை-என்று
குற்றம் செய்யாத எங்களை விட்டு இராவணனை மாத்ரம் கொள்ள வேண்டிக் கொள்கிறார்கள்
இங்கே பட்டனன் -என்றது இவனுக்கு மரணம் சித்தம் -பிழைப்பது  கிடையாது -ஜீவச்சவம் என்பதால் பட்டனன் –
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை -ஆடு -வெற்றி -ஆடு போலே கூப்பிடுவாரும் இல்லை
தோற்றோம் தோற்றோம் என்று சொல்லுவார்கள் தான் உண்டு விஜயத்தை சொல்லுவார்  இல்லை –

———————————

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்   ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-2-

விசித்ரா  தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் –பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன்  ஹஸ்த பாதாதி சம்யுதா —
தொழுது உய்வதற்கே சரீரம் -தலையானது தலை -தலை வணங்கி கை தொழுது உஜ்ஜீவிக்கலாம் –
அது செய்யாதே மாண்டு போனானே-
இந்த்ரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா ஸ்மரித் பிரிவ தத் வைரம்
அத்ய தைரேவ நிர்ஜித -மண்டோதரி புலம்புவாள் –
அது போலே மங்கையர் பால் சித்தம் வைத்துக் கெட்டான்
வாழ்ந்தோம் -விபரீத லஷனை கெட்டோம் என்றபடி  –
ஒத்த தோள் இரண்டும் -இந்து இந்துரிவ ஸ்ரீ மான் -என்னுமா போலே ஒரு தோளுக்கு மற்றது ஒன்றே உவமை-

——————————

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

குற்றம் அற்றாரை நலியாத இஷ்வாகு  குலத்துக்கு விளக்கே
சூர்ய குலத்தில் மனு அரசனின் குமாரர் இஷ்வாகு -நூற்றுவர் பிள்ளைகளில் கடைசி பிள்ளை
மூடம் மூர்க்கன் துஷ்டன் -தண்டன் -என்பவன்
விந்திய  மலை -சைவல  மலை -இடைப்பட்ட இடம் -மதுமந்தனம் பட்டணம் அமைத்து தன் புரோஹிதர் சுக்ராச்சார்யர்
மகள் அரசை என்பவளை காதலித்து கற்பழிக்க சாபம் பெற்று -குடம்பதோடும் சேனையோடும் அழிவான் –
நாடு மண் மழையால் ஜீவ ஜந்துவும் இல்லாமல்  பாழாகும்-சாபம் பெற்று–ஏழு நாள்களில் ஆனது -தண்டகாரண்யம்
அண்ட வாணர் -அண்ட வாழ் நர்-

——————————————————-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

எங்கள் கண் முகப்பே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஹித உபதேசம் செவியில் புகாமையாலே தேவதைகளின்
கோரிக்கை நிறைவேறப்   பெற்றது
எஞ்சல் இல் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் -குறை இல்லாத-
விஞ்சை வானவர் -வித்யா என்ற சொல் விஞ்சை -வித்யாதரர்கள் -தேவ ஜாதிக்கு உப  லஷணம்
ச ஹி தேவை ருதீர்ணச்ய ராவணச்ய வதார்த்திப -அர்த்திதோ மானுஷ லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் சநாதன –
என்ற வேண்டுகோள் நிறைவேறப் பெற்றது
அஞ்சு அல் ஓதியை -ஓதியை கூந்தலை -அல் இருண்ட கூந்தல் -மிருது -குளிர்ந்து -நறு மணம் -கறுத்து -நீண்டு
அஞ்சலோதி -அன் மொழித் தொகை -ஐம் பாலோதி -திரு எழு கூற்று இருக்கை –

——————————————-

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-5-

கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி –
இராவணன் மானிடரை ஒரு பொருளாக மதியாமல் பெற்ற வரம் மானிடரைத் தவிர்த்து சாவு வாராமை –
அவன் உபேஷித்த மானிட உருவத்தில் திரு வவதரித்தான்
தங்கள் சாதி மொழிக்கு ஏற்ற கூடம் என்கிறார்கள்
உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாகக ஆக்குவதால் கூற்றம் காரணப் பெயர்-

————————————–

ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

ஆதர -அவிவேகிகளான நாங்கள்
தோன்றல் -ஸ்வாமி-

—————————————-

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை  யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம்  பொங்கோ —10-2-7-

தாழம் இன்றி -கால தாமதம் இல்லாமல்
தகைந்ததே கண்டு -அணை செய்தத்தையே பார்த்தும்
சூழும் ஆ நினை -தேவரீரை சூழ்ந்து பிரார்த்திக்கிற இத்தனை திரு உள்ளம் பற்ற வேணும்
பிராட்டி யுடைய கண் அழகையும் வடிவு அழகையும் அனுபவிக்க பெருமாளே உரியவன் என்று எண்ணாமல்
வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை –
மாழை -அறிவின்மை -அழகுமாம்
ஏழை -தகாத விஷயத்தில் வீணான சாபல்யம் கொண்டவன்-

————————————————

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-8-

மாதர்க்குச் செல்வம் தனம் ஆதலால் -தனம் கொள் மென்முலை –
தஞ்சமே சில தாபதர் என்று -மரவுரியும் சடையுமான சில தாபச வேஷம் பூண்டவர் இவளுக்கு தஞ்சமோ
என்று எண்ணினான் இராவணன்
புன்மையாளன் -அற்பன்
அநங்கன் -மன்மதன்-

————————————————-

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைபோதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு  எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம்  தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

ஸ்ரீ ஜாம்பவானை புருஷகாரமாகக் கொண்டு -ஆதித்யன் புதல்வனான -ஸூ க்ரீவ மகா ராஜரை சரணம் புகுகிறார்கள்
இந்த்ரன் புத்திரன் வாலி –
ஒரு மாத்திரைப்  போதில் -கண் இமைப் பொழுதும் கை நொடிப் பொழுதும் மாத்ரைக்கு அளவாம்-

—————————————————–

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10-

பொங்கு மா வலவன் கலிகன்றி -கிளர்த்தியையுடைய ஆடல் மா குதிரையை நடத்த வ்ல்லரான ஆழ்வார்
இத் திருமொழியைக் கொண்டு பாடி ஆடுமின்
இம்மையிலே இடர் இன்று வாழப் பெறுவீர்
இறந்த பின்பு மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
இதனை எல்லாரும் அறியச் சொன்னோம்
அங்கவ்வானவர்க்கு -பாட பேதம்
பொங்கத்தம் -தடம் பொங்கத்தம் பொங்கோ-என்றதன் ஏக தேச அநுகாரம்
கீழ் ஒன்பது பாசுரங்களில் ராஷசர்கள் ஸ்ரீ ராமபிரான் விஜயத்தை சொல்லி 
இதில் ஆழ்வார் அத்தை தாமே சொன்னபடி-

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading