பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-9-பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்-

திரு நறையூர் திருப்பதி -ஆறாவது-மங்களா சாசன திருப் பதிகம்-

பாசுரம் தோறும் நெஞ்சை விளித்து திரு நறையூர் நம்பியின் திருவடிகளை வணங்க உபதேசிக்கிறார் –

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே –6-9-1-

பெடை அடர்த்த மட வன்னம் -நெருங்கி இருத்தலும் -சண்டை செய்தாலும் -பிரணய கலஹம் சொன்னவாறு
முடையடர்த்த -துர்நாற்றம் உடைய என்றபடி
பலி -பிச்சை

——————————————————

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

சக்ரவர்த்தி திருமகனே இவன்-

—————————————————

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

வளை  கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -சங்கு போல் வெளுத்த நிறமுடைய பலராமனுடைய தம்பியாயும் –
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக்குட்டன் மொடு மொடு விரைந்தோடப்
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்  குட்டன் – பெரியாழ்வார் -1-7-5-

—————————————————

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

செல்வம் மிகுந்த திரு நறையூரில் குடக் கூத்தாடின ஸ்ரமமும்
கோவர்த்தன் கிரியை குடையாகத் தூக்கி அருளின ஸ்ரமமும்  தீர
இங்கே எழுந்துஅருளி இருக்கிறான் -அவனது நூபுர அலங்க்ருதமான திருவடிகளை தொழுவாய்
குரை கழல்  -குரை கழலை யுடைய கழல் -கழல் -ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர்-

—————————————————

அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான்  இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே   அடை நெஞ்சே–6-9-5-

பகல் கரந்த சுடராழிப் படையான்  –
நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜோ பதார்த்தத்தை மறைத்தான் ஆயத்து
ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம்
திரு ஆழி ஆழ்வான் உடைய தேஜஸ்ஸூ கண் கொண்டு முகக்க ஒண்ணாத படி
இருக்கையாலே இருண்டு காட்டிற்று ஆயிற்று –

————————————————

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

சிங்கங்கள் யானைகளோடு பொருது கும்ப ஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்த முத்துக்களையும்
மலைகளில் உண்டான பொன்களையும்
சிங்க நகங்களையும்
யானைக் கொம்புகளையும்
நீர் வாக்கிலே கொணர்ந்து  தள்ளி  பெறுகின்ற பொன்னி யாறு பெருகும் திரு நறையூரிலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் வாழ்கின்றான்
அவனுடைய பொன்னடியே அடை நெஞ்சே-

————————————–

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7-

கரும்பு விளையும் நிலத்தில் கருப்பங்கட்டைகளை   வெட்டி செந்நெலை நடுவார்கள்
இடையில் தாமரை களையாக விளையும்
பழைய வாசனையாலே கருப்பங்கட்டைகளும்   விளையும்
நிலவளம் சொன்ன படி
காள மேகத் திரு உருவன் -நித்ய ஸூரி நாதன் -திருத் துழாய் முடியன் -பாத பல்லவங்களை பணி நெஞ்சே-

————————————————–

குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

சோலை வளம் வாய்ந்த திரு நறையூரிலே
ஒரு மலை போன்று விலங்கா நின்ற மணி மாடக் கோயில்
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்று அருளும் எம்பெருமானுடைய நீள் கழலே அடை நெஞ்சே
மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் போலே
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை மேல்
பொன்னியலும் மாடம் –பெரிய திருமடல் அருளிச் செயல் –

————————————–

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9-

யஞ்ஞ யாகங்கள் அனுஷ்டிக்கும் வைதிக பிராமணர்கள் வாழும் இடம்
மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான் புகைப் போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர் -திருவாய் -8-9-8-
ப்ரஹ்மாதிகள் பணிந்து வந்து போற்றும் ஸ்வாமி நம்பியின் இணை திருவடிகளை அடை நெஞ்சே  –

————————————-

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே–6-9-10-

திண் களக மதிள் -திண்ணியதாக சுண்ணாம்பு சாந்து இடப் பெற்ற திரு மதிள்
வண் களகம் -அழகிய அன்னப் பறவைகள் –
களகம் -நெல் கதிர் -கம் நீரை -களம் இடமாகக் கொண்டது என்றுமாம் -மருத நிலம்
பண்கள் அகம் பயின்ற -பண்களிலே சாரமான பண்ணிலே
விண்கள் அகத்து -மேல் உலகங்களுள் முக்கியமான பரம பதத்திலே
இப்பதிகம் கற்றார் நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக எம்பெருமானை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் —

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading