பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-7-ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை-

நான்காவது திரு நறையூர் மங்களா சாசன திருப் பதிகம் —

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே—6-7-1-

ஆளும் பணியும் கொண்டான் -சேஷ பூதனாயும் -கிங்கரனாயும் திரு உள்ளம் கொண்டான் –
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும் தந்து அருளினவன் என்றது ஆயிற்று
வேளும் சேயும் அனையாரும் -மன்மதனோடும் சுப்பிரமணியனோடும் ஒத்த அழகிய புருஷர்கள்
விண்ட -பொருந்தி வராமல் எதிர் அம்பு கோத்த -அப்படிப் பட்ட நிசாசரரை தோளும் தலையும்
துணிவெய்த சுடு வெஞ்சிலைவாய் சரம் துரந்தான்
இன்னமும் அடியார்களை ஆளும் பணியும் கொள்ளவும்
ஆசூர பிரக்ருதிகளை தொலைப்பதற்கும் நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்   இங்கே –

———————————————-

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட  தாரார் தோளான்  வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-2-

துஷ்டர்களை அழித்து-சிஷ்டர்களை ரஷிக்கக் கடவேன் என்று தனி மாலை இட்டவன் -தாரார் தோளான் –
அழகிய மாதர்கள் வாழும் திவ்ய தேசம் -முல்லை அரும்பு போன்ற பல் அழகும் –
கரும் குவளை பூ போன்ற கண் அழகும் -செந்தாமரைப் பூ போன்ற முகத்தின் அழகும் –
நனி சேர் வயலுள் முத்தலைக்கும்-என்ற பாடமே சிறக்கும்-

———————————————————

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான்  வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-3-

திரு வநந்த ஆழ்வான் அதி சங்கித்து விஷத்தை உமிழா நிற்கும் திருப் பாற் கடல்   -விடவாய சின வாளரவில்-
அங்கு இருந்து தேவர்கள் கூக்குரல் கேட்டு திரு வவதரித்து செய்து அருளிய ஒரு கார்யம் -துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்

———————————————-

ஒளியா வெண்ணெய்  உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான்   மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

தாம்பினால் கட்டுண்டு விம்மி அழுத பரம ஸூலபன்
வங்கிபுரத்து நம்பி பலகாலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் —–அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்–
ஆப்புண்டு விம்மி அழுதான் -தாம்பினால் கட்டி  வருத்துகின்றாள்-துன்பம் பொறுக்காமல் விம்மி அழுதான் அல்லன்
தயிர் பால் வெண்ணெய் பெண்கள் களவு செய்து திரிய வேண்டிய காலம் பாழாய் போகிறதே
கட்டுண்டு இருக்கும் அளவும் அந்த தொழில்களைத் தவிர்ந்து இருக்க வேண்டியதாயிற்றே -என்று விம்மி அழுதான் –

மென்மலர் மேல் கழியா வண்டுகள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்-இதில் ஒரு அர்த்த விசேஷம் ஸ்புரிக்கும்
வண்டு -ஸ்ரீ வைஷ்ணவனை சொன்னதாய் -விதி வசத்தால் மது பானம் பண்ணி விட்டான்
நாட்டிலே அலர் தூற்ற -பழி தூற்ற -அலர் -புஷ்பமும் பழியும் -புறப்பட்டான் என்றும்
இவை இரண்டையும் கண்ட ஒரு சாத்விகன் -ஏதோ விதி வசத்தால் மது பானம் பண்ணினால் இதை தூற்ற வேணுமோ –
இது  சஹஜம் என்று வாளா இருத்தல்  ஆகாதோ
வாய் விட்டு சிரிக்காமல் இவை என்ன உலகு இயற்க்கை என்று புன்சிரிப்பு செய்கிறான் –
லௌகிக சந்நிவேசம் உணர்த்தியவாறு-

——————————————-

வில்லார் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

பகவத் கதைகளை அனுசந்திப்பதில் ஆழ்வார்கட்கு ஒரு அடைவு இல்லை -பக்தி பிரகர்ஷம் பேசுகிறபடி எல்லாம் பேசுவார்கள்
வேத அத்யயன நிஷ்டர்களையும் யஞ்ஞ சீலர்களாயும் உள்ள அந்தணர்களை வாழ்விக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்-

———————————————————–

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-

பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே-
பட்டர் அருளிச் செய்ய குறிப்பாக கேட்டு இருப்பதொரு பாட்டு -என்று அருளிச் செய்வர் –
பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –
நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக  போந்த அலவன் ஆனது  தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே
உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –
இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு
ராத்திரி தங்கின படியாலும்
உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை பட்டர் அருளிச் செய்த அநந்தரம்
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி   பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்  –

—————————————

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே —6-7-7-

குடையாய் வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் -என்ற உடனே கூராழிப் படையான் -என்றது
இந்த்ரனை திரு ஆழி கொண்டு தலை அறுத்து ஒழிக்கலாம்
ஆயினும் அது செய்திலன்
அவனுடைய உணவைக் கொண்ட நாம் உயிரையும் கவரலாகாது
பசிக் கோபத்தாலே நலிகிறான் -நலியட்டும் -கை சலித்த வாறே தானே ஓய்கிறான்
என்று பொறுத்து இருந்து ரஷ்ய வர்க்கங்களை நோக்கிக் கொண்டான் -என்பதைக் காட்டி அருள –

————————————————————-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –6-7-8-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது த்ரௌபதியினுடைய மங்கள ஸூத்ரத்துக்காக –
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை
கந்தார் களிறு -கந்து கட்டுத் தறி -அதையும் முறித்துக் கொண்டு திரியும் மத்த கஜம்-

——————————————————

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா  வாச நீர்  வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே -6-7-9-

என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்க முத நீர் திரு மார்பில் தந்தான் -1-5-8-என்றும்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் -5-9-4-என்றும் இவரே அருளிச் செய்து
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த -திருச் சந்த விருத்தம் -42– என்றும் உண்டே-

—————————————————–

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

அநந்ய பிரயோஜனராய் பல்லாண்டு பாடுவதையே யாத்ரையாக கொண்டவர்கள் வாழும் திரு நறையூர்
இத் திரு மொழியை ஆராய்ந்து கற்பார் எவரோ அவர்கள் அருகில் பாபங்கள் அணுக மாட்டா
அவர்கள் இவ் விபூதியிலே நெடு நாள் வாழ்ந்து இருந்து இஹ லோக போகங்களை எல்லாம் புஜித்து
பின்னை பரம பதத்தே போய் நித்ய ஸூ ரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading