பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-6-அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்-

இது மூன்றாவது திரு நறையூர் திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

கொம்பு அமரும் -கிளைகள் பொருந்திய
வம்பு -புதுமையும் பரிமளமும் –
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் -துர் மாநியுமாய்-ஸ்நேஹமும் இன்றிக்கே-இருக்கிற ராஜா தான்-
ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி-அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து பக்ன அபிமானனாய்-திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து
ஐஹிக  ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –
நம்பி ஒரு வாள் கொடுத்து அருள அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் –
என்று ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

திரு நறையூர் மணிமாடம் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடம் -என்றும் –
தென் நறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை -என்றும்
பெரிய திரு மடலில் அருளிச் செய்து இருத்தலால் –
நம்பி சந்நிதிக்கு மணி மாடக் கோயில் என்ற திரு நாமம் வழங்கி வந்தது என்று அறியலாம்
திரு நாங்கூர் மணி மாடக் கோயில் வேறே-

———————————————————–

கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி   வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

நைமித்திக பிரளயத்தில் ஹயக்ரீவன் என்னும் அரசன் வேதங்களை அபஹரித்துப் போக மத்ஸ்ய அவதாரம் –
தவத்தின் பெருமையால் கிருதமாலா நதிக் கரையில் சத்யவ்ரதன் ராஜ ரிஷி -ஏழு நாள்களில் பிரளயம் வருவதை சொல்லி
லஷம் யோஜனை நீளமும் -பதினாயிரம் யோஜனை பருமனும் -ஒற்றைக் கொம்பும் -ஸ்வர்ண வர்ணமும் –
சகல லோக மநோ ஹர ரூபமும் கொண்ட மத்ஸ்ய –
அண்டகடாத்தளவும் சென்று மீட்டுக் கொண்டு வேதங்களை உபகரித்து அருளினான் –
வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து 
உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

—————————————–

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-

செவ்வி மாதரம் எட்டும் தோள் ஆ -அழகிய திசைகள் எட்டையும் புஜங்களாகக் கொண்டு –
எம்பெருமான் ஜகத் ஸ்வரூபியாய்  இருக்கும் நிலைமையை உருவகத்தால் அனுபவிக்கிறார் –
கடல் நீர் -அரையில் உடுக்கும் ஆடை
பூமிப் பரப்பு திருவடி
வாயு ராசி திருமேனி
திசைகள் எட்டும் திருத் தோள்கள்
அண்ட கடாஹம் திரு அபிஷேகம்
கவ்வை மா களிறு -ஆரவாரத்தை யுடையனவாய் -பெரியவையான யானைகளை
தெய்வம் வாள் வலம் கொண்ட  சோழன் -திவ்யமான வாள் படையைக் கொண்ட சோழ ராஜன்
வெண்ணி ஏற்ற -விண்ணி ஏற்ற பாட பேதம் -கோயில் வெண்ணி -கோயில் உண்ணி – என வழங்கும் சோணாட்டூர்
படை எடுத்து வந்த மாற்றரசர் போர் செய்த இடம் இது
மேல் பாட்டிலும் இங்கனே
முடி மேல் காகம் ஏற -என்றது பிணம் ஆக்கின படி
இவ்வரசன் திரு நறையூர் நம்பி பக்கல் வாள் பெற்று வெற்றி பெற்றான் என்பர்-

———————————————————–

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணியேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே—6-6-4-

பைங்கண்  ஆள் அரி யுருவாய் -பசுமையான திருக் கண்களை யுடைய நரசிம்ஹ ரூபியாகி
சிங்கத்துக்கு கண்ணில் பசுமை ஜாதி ஸ்வ பாவம் ஆதலால் பைங்கண் -எனப் பட்டது
வரம் பரு தோள் இரணியன் -பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களை யுடைய இரணியனை –
அன்றிக்கே –
பருவரைத் தோள் -பருத்த மலை போன்ற தோள் என்றுமாம்-

—————————————————————

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-5-

காவேரி சஹ்ய பர்வத்தில் நின்று பெருகும் போது வருமிடையே தடையாக நிற்கும்
மலைகளை யுடைத்து கொண்டு பெருகுகின்றமை -விலங்கல் பாய்ந்து -என்கிறார்

——————————————————————

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்-
ஸ்வ இச்சையாலே
தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை
உண்டு பண்ணிக் கொண்ட
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையனாய் –
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்-
தன்னுடைய சங்கல்பத்தாலே
ஸ்வ ஸ்வ ரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக் கொண்டவன்
தானான நிலைமையில் சம் ரஷித்தும் ப்ரஹ்மாதிகள் அந்தர்யாமியாய் சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்தியும்
தான் ஆயன் ஆயினான் –
இடையர்களில் ஒருவன் இவன் என் மகன் என்று அபிமாநிக்கும் படி கிருஷ்ணனாய்  வந்து திரு வவதரித்து அருளி
விளந்தை வேளை-சரியான பாடம் -ஊருக்கு விளந்தை என்னும் பெயர் என்பர்-
விளைந்தை வேளை விண் ஏற -விளைந்தை வேள் என்னும் ஓர் அரசனை வீர ஸ்வர்க்கம் அடையும்படி

—————————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே-6-6-7-

முது துவரை -பிராசீனமான ஸ்ரீ துவாராபதிக்கு
இலை குழல் -இலையாலே செய்யப் பட்ட குழலை
கண்ணபிரான் திருவடிகளில் சேர வேண்டி இருப்பீர் ஆகில் இங்கே வந்து சேர்மின்கள்-

———————————————

முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-8-

முருக்கம் பூ போலவும்
விளங்குகின்ற கோவைப் பழம் போலவும்
சிவந்து இருக்கும் அதரத்தை  யுடைய நப்பின்னை பிராட்டிக்கு நாயகன்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு-புருஷ ஸூ க்தம் முதலிய பாகங்களை
வாயிலே யுடைய எட்டு புஜங்களை யுடைய ருத்ரன்
இந்த சோழன் சிவபக்தனாய் இருந்து வைத்து பிறகு பகவத் பக்தனாய் –
இச் சோழன் பல சிவாலயம் செய்ததாக சேக்கிழார்
செங்கணான் அந்தமில் சீர் சோணாட்டில் அகனாடுதொரு மணியார்
சந்தரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தான் -பெரிய புராணம்
முடிவில் திரு நறையூர் திரு மாலுக்கு அடியனாய்ச் சிறப்புற்றான் –
தர்ச நீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தம்முடைய அபிமதம் கிடையாமையாலே
அவ் வபிமத சித்யார்த்தமாக -அவன் வந்து ஆஸ்ரயிக்கிற தேசம் -பெரியவாச்சான் பிள்ளை -ஸ்ரீ ஸூக்திகள் –

——————————————————-

தாராளன்  தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

தேர் அழுந்தூரில் வந்து எதிர்ந்த மன்னரை வென்ற வீரம் சொல்லுகிறது-

————————————————–

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி  யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-

வியாச பதம் செலுத்த  வல்லவர்கள் வாழும் திவ்ய தேசம் -வேத வாணர் -வேத வாழ் நர்-வேதங்களைக் கொண்டு வாழ்பவர்
இத் திரு மொழியை உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலத்திலே அதிகரிக்குமவர்கள்
யமபடர்கள் கடும் சொற்களைக் கேட்டு வருந்த அவகாசம் இல்லாமல்
திரு நாட்டிலே புகுந்து -சூழ் விசும்பு அணி முகில் திருவாய் மொழிப் படியே
நித்யசூரிகள் தாழ இருந்து திருவடி விளக்கி   கொண்டாடும்படியான பெருமையைப் பெறுவார்கள்-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading