பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-5-கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்-

இரண்டாவது திரு நறையூர் மங்களா சாசன திருப்பதிகம் —

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம்    உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே -6-5-1-

ஆஸ்ரித விரோதிகள் அஞ்சுவதற்கு உறுப்பாகவும்
ஆஸ்ரிதர்கள் பல்லாண்டு பாடுவதற்கு உறுப்பாகவும்
திருவாழி திரு சங்கு ஆழ்வார்களை ஏந்தி சேவை சாதிக்கிறான்
தனது பள்ளியான கடலையும் கடைந்து அமுதம் அளித்த மகா குணம் -முந்நீர் கலங்க கடந்து
நல்கு சோதிச் சுடராய் -அவன் திருமேனியில் பெற்ற புகர்-அமுதம் அளித்ததால் -தேவர்கள் துயரம் நீங்கப் பெற்றதால்
நலம் கொள் வாய்மை அந்தணர் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் -நன்மையாகவே
தலைக் கட்டும் சத்தியமே சொல்பவர்கள் –
அன்றிக்கே
உண்மை உரையான வேதத்தை சொன்னபடி -வேதம் வல்ல அந்தணர் வாழும் இடம் –

—————————————————————-

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட  வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

திரு நகங்களால் விரோதியைத் தொலைத்த புனிதன் வாழும் இடம்
செந்தளிர்களை குயில்கள் கொந்து கூவுதல் செய்யப் பெற்ற பூ மொட்டுக்கள் நிரந்த சோலைகளால் சூழப் பட்ட தேசம்
ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் அவகாஹித்து – -அனுபவித்து -அர்த்தங்களை உபன்யாசம் செய்யும் -உள்ளுறை பொருள்-

——————————————————-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே —6-5-3-

மள்ளர்க்கு -உழவர்களுக்கு
நானம் புதலில் -மஞ்சள்
வயல் வளத்தை யுடைய திரு நறையூர்-சேனைத் திரளை எல்லாம் பொடி பொடியாக்கி இலங்கா புரியைப் பாழ் படுத்தன பெருமாள் வாழும் இடம் –

——————————————————-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரத்வ சௌலப்யங்களை  வெளியிட்டுக்  கொண்டு சேவை சாதிக்கும் திவ்ய தேசம்

——————————————————

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே-6-5-5-

தவழுகிற நடையினாலே நிலைத்து நின்ற இரட்டை மருத மரங்களை விழத் தள்ளினவன்
எருதுகளை வலி யடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் செய்து அருளினவன் இவன்-

—————————————————-

பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-

பகுவாய் -பெரிய வாய்-

—————————————————-

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே —6-5-7-

முந்து நூல் -அநாதியான வேத அஷர ராசி
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே   கொடுத்தான்
ஷத்ரிய ஜாதி என்பதால் வேதம் ஓத வேண்டுமே -பிராமணர் ஷத்ரியர் வைசியர் -த்விஜர்
முப்புரி நூல் ஈந்த -உப நயனம் செய்வித்த-

————————————————–

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த  விமலனூர்
கொள்ளைக் கொழு மீன்  உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8-

சிந்து கோன் -சிந்து தேசத் தலைவன் ஜயத்ரதன்
அர்ஜுனன் தேர் குதிரைகள் வெண்ணிறம்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை  முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டு அருளர் -பெரியாழ்வார் -4-1-7

————————————————–

பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

திருவவதரித்து பார்த்த சாரதியாய் இருந்து பூமி பாரங்களை எல்லாம் போக்கி  அருளினவன்
தாரையூரும் -பூவைத் தோற்கடிக்கும் தளிர்களை யுடைத்தான வேலியாலே சூழப் பட்டும்
தேன் ஒழுகு கின்ற வேலி என்றதாகவுமாம்-

——————————————–

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10-

சகல சரா சரங்களையும் நிர்வஹிக்க வல்லவன் என்று திருத் துழாய் மாலை அணிந்த திரு அபிஷேகத்தை யுடையவன்
ஓதவல்லவர் களுக்கு   எம்பெருமான் எஞ்சான்றும் உடன் இருந்து வேண்டிய நன்மைகளை எல்லாம் செய்து அருளுவான் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading