பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-4-கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்-

கீழ் திரு மொழியிலே -கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே -என்ற இடத்தில்
திரு நறையூர்ப் பெருக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று பட்டர் அருளிச் செய்தாரே –
இது முதல் பத்து பதிகங்கள் -திருச் சேறை பதிகம் வரையில் -திரு நறையூரில் ஈடுபட்டு அருளிச் செய்யும் திரு மொழிகள் –
ஆழ்வார் திரு நாடு போகப் பாரித்தார் கீழே -திரு நாட்டுக்குப் போலியான திருப்பதிகள் இங்கே இருக்க அங்கே போகத் துடிப்பது ஏன்
நாளடைவிலே போகலாம் -திரு நறையூர் போக்யதை பாரும் -இதைக் காட்டிலும் அங்கே விசேஷம் உண்டு என்று நினைக்கிறீரோ என்ன
அப்படியாகில் இங்கே பரக்க அனுபவிக்கிறேன் என்று தொடங்குகிறார்-

அகிஞ்சனன் அநந்ய கதித்வம் தோன்றவும்  -சம்சார விரக்தி தோன்றவும்  -அங்கே போக த்வரை மிக்கும்  கூப்பிட
நம்பி திரு மந்த்ரம் உபதேசித்து அருளுகிறான் –
அருளின அநந்தரம் திருமந்திர தாத்பரார்த்தம் -பாகவத சேஷத்வம் அறிந்து- திருச் சேறை பதிகம் அருளுகிறார் மேல்-

——————————————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே -6-4-1-

விஷயாந்தரங்களில் கை வைப்பது ஒரு நாளும் ஷேமப் படுவதற்கு உறுப்பாகாதே-
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்  திரு நறையூரைத் தொழுவது நன்று -என்கிறார் –

——————————————————

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2-

அவர்கள் பரிஹசித்து தள்ளச் செய்தேயும் இப்படியும் ஒரு கூந்தல் அழகு யுண்டோ என்று
காமுகர் சொல்வதால் கொங்குண் குழலார் —

———————————————————–

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-3-

செங்கோல் வலவன் -செங்கணான் கோச் சோழன் இத் திவ்ய தேசத்தில் அபிமானியாய் பணிகள் பல செய்து உய்வு  பெற்றான்-
அம்பரமும் பெரு நிலனும் பதிகத்தில் இதை பாசுரம் தோறும் அருளிச் செய்கிறார் மேல்-

————————————————————-

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4-

அசக்தி மேலிட்ட காலத்திலும் தடி ஊன்றி அங்கே சாபல்யத்தால் சென்று துவண்ட இடை இருக்கும்
அழகு என் கொல் என்பரே
வாசல் கதவை நெருக்கி அடைத்து துரத்துவார்கள்
இப்படிப் பட்ட பரிபவங்களுக்கு பாத்ரம் ஆகாமல் இங்கே வந்து ஆஸ்ரயிக்க அருளுகிறார்-

——————————————————————–

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும்   வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய்  வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
வெகுண்ட பார்வைக்கு மான் நோக்கு
மிளிர்ந்த தன்மைக்கு மீனும் -மலங்கு -வரால் -வாளை -மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்
கூர்மைக்கு வேலும்
வண்ணத்துக்கு செங்கழு நீர் பூவும் கண்ணுக்கு ஒப்புமை சொல்வர்
சலம் -கபடம் –

————————————————–

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

விலங்கெரி -விலங்கால் எரி ஊட்டினான்  -திருவடியால்
இலங்கு எரி -ஜ்வலக்கிற -முன்பு அக்னி இலங்கையில் புக அஞ்சி நடுங்க இப்பொழுது ஜ்வலிக்கிற படி-

———————————————————

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-7-

வளைவான நெற்றிக்கு வில்லையும்
கடைக் கண் பார்வைக்கு அம்பையும் ஒப்பு
பொல்லான் -குரூபி
திரிந்தான் -தோல் சுருங்கிப் போதல்
இங்கு உள்ளார் வேதமார்க்க பிரதிஷ்டாபனாச்சார்யர்கள்-

————————————————————-

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

நாசமான பாசங்களை விட்டு திருநறையூரில் தொழுங்கோள்
கேண்மின்கள் பாடத்தை விட கேளுங்கள் -சிறந்த பாடம்
கேள் உங்கள் -உங்கள் கேள் -உங்கள் உறவு என்று ஒருவருக்கு ஒருவர் பரிஹசித்து சொல்வது
சந்நிதியில் உத்சவ கோஷங்களும்
திரு மாளிகைகளில் யஞ்ஞ கோஷங்களும் மலிந்து இருக்கும்-

—————————————————

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

நனி சேர் நறையூர்-அவனது பெருமைக்கு தக்க நறையூர்

——————————————————-

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே  –6-4-10-

நித்ய சூரிகளின் திரு நாட்டுக்கு நியாமகராய் ஆவார்கள்

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading