ஆழ்வார் ஒரு கால் சொன்னது போல் ஒன்பதின் கால் விண்ணப்பம் செய்தாலும்
எம்பெருமான் இன்னமும் இவரைக் கொண்டு கார்யம் செய்யத் திரு உள்ளம் கொண்டு
கடுக வந்து சம்சாரம் தவிர்ந்து தன்னைக் கொடுத்து அருளினன் இலன்
தமக்கு மெய்யே ஆர்த்தி விளைந்த படியையும்
அநாதி காலம் சம்சாரத்தில் உழன்ற படியையும்
பல யோனிகளில் பிறந்து வருந்தினபடியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரியங்களுக்கு வசப் பட்டு ஒழிந்தபடியையும்
மேல் வரக் கூடியதான நரக வேதனையை நினைத்து அஞ்சின படியையும்
பரக்க விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ள கூடியவையாய் இல்லை
குற்றம் பாராதே
இங்கு ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தையே பார்த்து
பிராட்டியின் பரிக்ரஹமாய் இருக்கிறேன் என்பதையும் திரு உள்ளம் பற்றி
அடியேனை ஸ்வீகரித்து அருள வேணும் என்று திரு விண்ணகரப்பன் திருவடிகளில்
விழுந்து கதறுகிறார் -இத் திரு மொழியிலும் -மேலில் திரு மொழியிலும்-
——————————
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-
ஆபாச பந்துக்கள் பேசும் இழிவான சொல்களை தாங்கிக் கொண்டு இருந்தேன் -இராவணன் -விபீஷணனை சொன்னது போலே
அன்றிக்கே -நீசர்களை கவி பாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக் கொண்டு இருந்தேன்
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்-கடனைக் கொடுத்தே தொலைப்பாரைப் போலே
அர்த்த காமங்களை இந்த்ரியங்களுக்குச் செலுத்தினேன்
ஆர்வம் செற்றம் வாயிலொட்டி அறுத்தேன் -அனுகூலர் பக்கல் உண்டாகும் ப்ரேமம் ஆர்வம் –
ப்ரதிகூலர் பக்கல் உண்டாகும் த்வேஷம் செற்றம்
பிரதிஞ்ஞை செய்து கார்யத்தாலும் தலைக் கட்டி விட்டேன்
வாயில் -வாயினால் -ஒட்டி -பிரதிஞ்ஞை செய்து -அறுத்தேன் -செய்து முடித்தேன் –
இவை முந்திய நிலைமை
அவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் –
அவை என்றது -பொருள் இன்பங்களை -ஆர்வச் செற்றந்களை
அர்த்த காம நசை ஒழிந்து ராக த்வேஷங்களை தவிர்ந்து உன்னை அடைந்தேன்-
—————————————————
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-2-
மறந்தேன் உன்னை முன்னம் -முதல் முதலாக -அநாதி காலமாக
த்யேயோ நாராயணஸ் சதா -சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும்
அறிந்து மறந்தாரா -உன்னை என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே
அந்த சம்பந்தம் ஸ்வாபாவிகம் ஆகையாலே
சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருந்ததே
மறந்து ஒழிந்தோம் என்கிற அனுதாபமும் இல்லையே –
மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் -சைதன்யம் கெட்டு அசேதனமாகப் பெற்றேன்
எத்தனையும் இறந்தேன் -அசித்தைக் காட்டிலும் -அதற்கு அடியோடு ருசி இல்லாமையாலே
பகவத் விஷயத்தை மறப்பது சஹஜம்
எய்த்து ஒழிந்தேன் -இன்னமும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை யுண்டே யாகிலும்
பிறக்கைக்கு த்ரவ்யம் இல்லாதபடி ஆனேன்
கர்ம வாசனை கிடந்து பிறக்க வேண்டினாலும் பிறக்கைக்கு ஷமன் அல்லேன் –
திரு மார்பா -குற்றங்களை நற்றமாக உபபாதிக்கிற பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று நித்ய வாஸம் செய்து
புருஷ காரம் செய்யும் பொழுது இனி எனக்கு என்ன குறை -உன் திருவடிக்கு தகுந்தவனே-
————————————————————–
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடல் -தகாது என்று நன்கு உணர்ந்தேன் –
அது தொலைய உன் திருவடிகளில் வந்து சேர்ந்தேன்
வானே -நித்ய விபூதி நாதத்வம் -மா நிலம் -லீலா விபூதி நாதத்வம்
வந்து வந்து -இரட்டை கிளவி –பலகாலும் வந்து -விலக்காமைக்கு சமயம் பார்த்து
வந்து உவந்து -பாரித்து கொண்டு -அபிமான விசேஷம்-
———————————————————————
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டதாகில் சொல்லு சொல்லு சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-
ஆபாச பந்துக்கள் துணையும் சார்வுமாகுவார் போலே அட்டை போலே சுவைப்பர்
நல்வழிக்கு சிறிதும் உதவார்கள் -இவற்றை விட்டு நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்
இடர் தீர எறிந்து வந்து -என்று வெறிந்து வந்து -என்றும் பிரிக்கலாம்
அகிஞ்சனனாக -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் என்றபடி
வாடினேன் வாடி –கூடினேன் கூடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி –என்னுமா போலே –
——————————————–
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-
ப்ராக்ருதமான செல்வம் நிலை நிற்காதே
கைங்கர்யமே -அப்ராக்ருதமான செல்வமே நிலை நிற்கும்
இப்போது ஆள்பவர் முன்பு ஆண்டு மாண்டவருடைய கணக்கிலே பதிவு பெறுகின்றனர்
நித்ய ஐஸ்வர்யம் பெற உன்னை அடைந்தேன் –
————————————————
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்ய கில்லென்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-6-
விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா –
பூணார மார்பனை புள்ளூரும் பொன் மலையை காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே –
தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே –
மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் உண்டு இறே-மல்லல் -மிகுதி -வளம்-
————————————————–
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-
யான் இரந்தேன்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கல் அம்மான் திரு விக்ரமனையே –
நீ இரக்க -மறுத்துத் திரிந்த நான் அன்றோ இப்போது இரக்கிறேன்
நம்மை அலஷியம் செய்தவன் இப்போது நிர்பந்திப்பது ஏன் என்று சீறாமல் –
எந்தையான முறைமையால் -எந்தாய் -வெகுளாது மனக் கொள்
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத பிராப்தியைக் கொண்டு பொறுக்கை ஒழிய
செய்த குற்றத்தைக் கணக்கிட்டு கைவிடலாம் படியோ தேவரீர் உடன் உண்டான ப்ராப்தி இருப்பது –
சீற்றத்தின் மிகுதியால் ஐவர் உயர் திணை பிரயோகம்
குடிவிட்டவரை -உன்னை வழி படுவதற்கு பாங்காக உன்னால் குடி இருக்கச் செய்யப் பட்ட இந்த்ரியங்கள்
தேறாது -இவற்றை நம்பாமல் உன்னை வந்து பணிந்தேன் -இந்த்ரியங்களை வென்றேன் என்றபடி –
———————————————–
தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-8-
இட உற்று -சரியான பாடம்-நரகத்தில் இடக்கருதி என்றபடி
இடருற்று -பிழை
கீழ் பாட்டில் ஐவர் -பஞ்ச இந்த்ரியங்கள்
இதில் வல் வினையார் -பாப ராசிகள் -வல் -அனுபவித்தே தீர வேண்டியவை
தீ வாய் -அக்னி போன்ற அவற்றின் கொடுமையை காட்டும்
மூவா -என்றது -வானவருக்கும் வானவர் தம் தலைவனுக்கும் விசேஷணம்-
நித்ய சூரிகளை நிர்வஹிப்பது போலே அடியேனையும் நிர்ஹகிக்கலாகாதோ –
——————————————————
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே-6-2-9-
போதார் தாமரையாள் புலவி -பூ மன்னு மாது -பூமிப் பிராட்டிக்கும்
குலம் வானவர் தம் கோதா -சிறந்த நித்ய சூரிகளுக்கும் விரும்பத் தக்கவனே -கோதா -பிரியனே என்றபடி -கௌதுகம் அடி
புலவி-பிரிவுக்கும் பெயர் -பிரணய கலஹத்தால் – பிரிந்த காலத்திலும் சேர்த்து வைத்த அடியார்கள் இடம் பிரியமானவனே
மன்னரிடை நடந்த தூதா -துரியோதனாதிகள் இடை -பாண்டவர்களை மன்னர் என்றதாகவுமாம்
பாண்டவர்கள் இடம் பரிவு தோற்ற வார்த்தை அருளி -தூ மொழியாம்
இப்படிப் பட்ட ஆஸ்ரித பஷ பாதம் அறிந்ததனால் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் -ஒலைப்புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே காணலாம் படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி இருக்கும் இருப்பில் சரணம் புகுந்தேன்-
————————————————————–
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே -6-2-10-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று இத் திருமொழி கற்றார் கோனாய்-ஆவார்கள்
திரு நாடு இவர் இட்ட வழக்காய் இருக்கும் -என்றபடி-
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply