திரு விண்ணகர் திருப் பதியை மூன்று திரு மொழிகளால் மங்களா சாசனம் செய்யத் திரு உள்ளம் பற்றி
அவற்றுள் முதல் திரு மொழியால் தமக்கு சம்சாரத்தில் பிறந்து இருக்கும் அருசி வாச மகோசரம் –
இனி நீ என்னை வைத்து இருக்கத் தகாது என்று
தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ருசியையும் சம்சார வாழ்ச்சியில் உண்டான அருசியையும் பரக்க விண்ணப்பம் செய்கிறார் –
——————————————————————–
வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-
திருவடிகள் பரப்பி இலச்சினை பட நடந்து ஆட்கொண்டது போலே அடியேனையும் ஆட்கொண்டு அருள வேணும் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அடியேன் சாஷாத் கரித்து அனுபவிக்கும் படி அருள் புரிய வேணும்
இவ்வளவே அடியேன் வேண்டுவது -இப் பாழும் சம்சாரத்தில் இனி வாழ்வு வேண்டா –
திரு விண்ணகரிலே சந்நிதி பண்ணி அருளியது சபலமாம் படி இத்தனை அருள் செய்ய வேணும்
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் -தேவர்கள் புஷ்பங்களைப் பணிமாறி வழிபாடு செய்தார்கள்
வஞ்சி விருத்த பாசுரம் -அத்யாபகர்கள் இரண்டு அடியாகக் கொண்டு இயல் சாதிப்பார்கள்-
—————————————————————————–
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-
அண்ணல் செய்து -தானே சர்வ ஸ்வாமி என்பதைக் காட்டிக் கொண்டு -ஔதார்யத்தைக் காட்டிக் கொண்டு என்னவுமாம்
நஞ்சு நுதல் கண் உண்ண கண்டவனே -நியமித்தவனே
புறவமுது உப்புச் சாறு தேவர்களுக்கு அருளி
உள்ளமுது -சீதக் கடலில் உள்ளமது -பிராட்டியாகிய உள்ளமுது தன்னாலே ஸ்வீகரிக்கப் பட்டதே
பகவத் விஷய பிராவண்யத்திலும் விஷயாந்தர விரக்தியில் தமக்கு உள்ள உறுதியையும்
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாக உரைக்கிற படி-
—————————————————————————
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-
நண்ணார் நகரம் விழ -திரிபுரம் எரித்த -சிவனுக்கு அந்தர்யாமியாயும் -அம்பாகவும் இருந்து செய்வித்து அருளினான்
புரம் ஒரு மூன்று எரித்து -திருவாய் -1-1-8-
நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் -வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -திருவாய் -1-3-9-
தாமசர்கள் இடத்திலும் சௌசீல்யம் காட்டி அபிமானித்து கார்யம் செய்து அருளுகிறாயே
பரம பக்தனான அடியேன் இடம் திரு உள்ளம் இரங்கி உன்னைக் காண்பதோர் அருளல் ஆகாதோ –
———————————————————————————-
நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-
அகடிதகட நா சாமர்த்தியம் காட்டி ஆலிலைத் துயின்றவனே அடியே-கலா மாதரம் -பச்சைப் பசும் குழவி என்றபடி
அறிவு மிக்க குழந்தை -கலா -சாஸ்திரம் என்று கொண்டு என்னவுமாம்-
—————————————————————————-
பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-
மீண்டும் அகடிதகட நா சாமர்த்தியத்தை அருளிச் செய்கிறார்
பார் ஏழும் -நாவலந்தீவு -இறலித்தீவு -குசையின் தீவு -கிரவுஞ்சத் தீவு -சான்மலித்தீவு-தெங்கின் தீவு -புட்கரத் தீவு
அனைத்துக்கும் இவனே நிர்வாஹகன் -இவற்றின் ஸ்திதி எல்லாம் இவனுடைய சங்கல்ப்பாதீனம் என்றபடி
ஓர் எழுத்தோர் உருவானவனே -அகார வாச்யன் -மூல காரணம் ஆதி மூலமே-
—————————————————————————
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-
ப்ரஹ்மாதிகளாலும் அளவிட முடியாத ஸ்வரூ பாதிகளை யுடையவன்
வேத பிரதிபாத்யன் -வேதங்களை பயந்து அருளினவனே -நான்மறை யானவனே –
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி அருளினால் தான்
நான் மெய்யே இந்த சம்சார வாழ்க்கையை அருவருத்தேன் ஆவேன்
முதலாவார் மூவரே என்று ப்ரஹ்மாதிகளை பிறரது கொள்கையால்
முதல் ஆழ்வார்களைச் சொன்னதாகவுமாம்-
———————————————————
உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-
பெருக்கமோடு அமர நல்கும் பெருக்கம் -செல்வம்
செழிப்புற்று அமர்வதற்காக இந்த்ரன் வருணன் தேவதைகளை உத்தேசித்து உருக்கின நெய்யைக் கொண்டு ஹோமம் செய்வது
இருக்கு -வேதங்களுக்கு பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்கு சிறப்பு பெயரும்
இசை -லஷித லக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும் -இசை -ஸ்வரம் -ஸ்வரம் பிரணவத்துக்கு வாசகம்-
———————————————————-
காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-
இளையவர் காதல் செய்து தரும் கலவி வேதனை
நான் முன்னம் செய்த தீ வினைகள் காரணமாக இன்னம் வேதனைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று அஞ்சா நின்றேன்
உனது திருவடிகள் அஞ்சினாருக்கு புகலிடம்
நீயும் ஆஸ்ரித ரஷணம் பண்ணி அருள வளையம் சூடி யுள்ளாய்
உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம் படி
என் மீது அருள் புரிவாயாகில் நன்று என்னவு மாம்-
——————————————————————-
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத் தலைப் பெய்து ஏமாறிக் கிடந்தது அலற்றி இவை என்ன உலகு இயற்கை
இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் -இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்-
ஓதல் செய் நான்மறையாகி -ஏட்டில் எழுதப் படுக்கை அன்றிக்கே பரம்பரையா அத்யயனம் பண்ணியே
வருகின்ற நான்கு வேதங்களுக்கும் பிரவசன கர்த்தா
உம்பராதல் செய் மூவுரு வானவனே -பிரம்மா ருத்ர இந்த்ராதிகளை சரீரமாகக் கொண்டு
அந்தராத்மாவாய் இருந்து அருளி கார்யம் நடத்துபவனே-
————————————————————–
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே-6-1-10-
இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
வேண்டேன் மனை வாழ்க்கையை -என்று இவர் வேண்டாததைத் தவிர்ந்து
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் -என்று வேண்டின திருவருளைப் பெற்று பொலிவர்-
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply