ஸ்ரீ நந்தி புர விண்ணகர மங்களா சாசன திருப் பதிகம்-
தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-1-
அனைத்துக்கும் அந்தராத்மாவாய் -சகல சேதனர்கள் உடைய மநோ வ்ருத்திக்கு நிர்வாஹகனாய் –
கோபால கிருஷ்ணனாய் திருவவதரித்து -ஆஸ்ரித ஹஸ்தம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாதவனாய்-மகிழ்ச்சிக்கு போக்குவீடாக
குடக்கூத்தாடினவன்-
தீதறு -பூமிக்கு விசேஷணம்-போக மோஷம் விளைத்துக் கொள்ள பாங்கான சிறப்பால்
செற -கோபித்தல் –சிற பாடம் ஆகில் -சீற -என்றதன் விகாரம் –
நாதன் உறைகின்ற நகர் -நாதன் கோயில் என்று பிரசித்தம்
நந்தி என்னும் அரசன் பணி விடைகள் செய்தான் என்பதை மேலே ஏழாம் பாட்டில்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகர் நண்ணு மனமே -என்பர்-
———————————————————-
உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-
திருவயிற்றில் வைத்து நோக்கி அருளிய பெருமானே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
மெய்யின் அளவே அமுது செய்கை யாவது -உலகம் எல்லாம் சிறிய திரு மேனியிலே ஒடுங்கும் படி அமுது செய்கை-
————————————————————–
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-3-
கீழே அருளியதை விரித்து அருளுகிறார்
உம்பர் உலகு ஏழு -கீழ் உலகங்களுக்கும் உப லஷணம்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் -மேல் உலகங்கள்
அதல விதல ஸூ தல நிதல தராதல ரசாதல மகா தலங்கள்
ஏழு கடல்கள் -உப்பு கடல் -கருப்பங்கடல்-தேன் கடல் -நெய்க்கடல் -தயிர்க்கடல் -பாற் கடல் -புனல் கடல் –
ஏழு மலைகள் -இமயம் -மந்தரம் -கைலாசம் -வடவிந்தம் -நிடதம் -ஏமகூடம் -நீல கிரி –
கங்குல் வயல் -கருவடைந்த பயிர் ஆகையாலே வயல் இரவு போல் இருண்டு இருக்கை-
——————————————————————
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு என வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே–5-10-4-
இறைகளவை-சரீரங்கள் ஆனவை
இறை -சிவன் /கடன்/வேந்தன் /கையிறை /இறுப்பிறை/-சிறந்தோன் /சிறுமை /புள்ளிறகு/தங்கல்/
காபிமார் சென்னி /கூனிறப் பீராறே -பன்னிரண்டு பொருள்களில் -தலை என்னும் பொருளும் கொள்ளலாம்
அம்புகளை பொழிந்தோ-திரு ஆழி ஆழ்வானைப் பிரயோகித்தோ அசுரர்கள் உடம்புகளை நெறு நெறு என முறித்து
அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களையும் சிதைத்து வயிறு எரியச் செய்த பெருமான் உறையும் இடம்
சோலைகளில் மயில்கள் ஆடவும் குயில்கள் கூவவும் வண்டினம் முரலவும்
கண்ட இடங்கள் பூக்கள் சிந்தியும் மா மரங்களின் மணம் கமழவும் மேகங்கள் படிந்து இருக்கவும் பெற்றதாம் –
——————————————————–
மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர்
தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-5-
ஆசூர பிரக்ருதிகளை அழிக்க பஞ்ச ஆயுதங்களையும் ஏந்தி இங்கே சேவை சாதிக்கின்றான்-
—————————————————-
தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-6-
மாதிரங்கள் மின்னுருவில் வெண்டேர் திரிந்து வெளிப்பட்டு கல் நிரைந்து தீந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவாக் கொன்னவிலும் வெங்கானம் -பெரிய திருமடல்
காட்டின் கொடுமையை இங்கே வெம்பி எரி கானம் என்கிறார்
அயோத்தி மா நகர் -பரமபதம் போன்று இந்த திவ்ய தேசம் என்கிறார்-
—————————————–
தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே-5-10-7-
தந்தை மணம் உந்து துயர் நந்த -தந்தை யாகிய நந்தகோபன் மனத்தை சோரப் பண்ணா நின்ற –
புத்திரன் இல்லையே -என்கிற துக்கமானது -தொலையும் படி –
விறல் நந்தன் முதலை -விறல் -விசேஷணம் நந்தனுக்கும் நந்தன் முதலைக்கும்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன்
பூதன நிரசனம் சகடாசுர பங்கம் போன்ற சிறுச் சேவகங்கள்
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலேயும்
பரமேஸ்வர விண்ணகரத்தில் -பல்லவன் மல்லையர் கோன் போலேயும் –
அட்ட புயகரத்தில் வயிர மேகன் போலேயும் –
திரு நறையூரில் செங்கணான் கோச் சோழன் போலேயும்
இங்கே நந்திவருமன் என்னும் அரசன் திருப் பணிகள் செய்தானானகச் சொல்லிப் போந்தார்கள்-
—————————————————-
எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-8-
சனக சனந்தாதி மஹ ரிஷிகள் -இவனே பரதெய்வம் என்று துணிந்து பண்ணார் பாடலின் கவிகளைச் சொல்லி பாடி ஆடுகின்றார்கள்
அவர்கள் உடன் தேவர்களும் புகழ்ந்து கொண்டு திரண்டு இருக்கும் தேசம்
நினைவு எய்தி -நினைவுகளை எய்துமவன் -த்யானத்துக்கு விஷயம் ஆனவன்
எண்ணில் நினைவு எய்து –எண் இல் -கணக்கு இல்லாத -எண்ணங்களை
தொழ வேணும் துதிக்க வேணும் திரு வாராதனம் செய்ய வேணும் என்கிற பாரிப்புடன் -என்று பாடி யாட -என்றவாறு-
—————————————————-
வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்ய மாகதா ச்வர்க்கேபி நோப ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -ஸ்ரீ கீதை -14-2-போலே
சாஸ்த்ரங்களை சிர மேல் கொண்டு நடப்பவர்கள் பிரளயத்திலும் அழியாமல் மார்க்கண்டேனயனை போலே
இருப்பார்கள் -அது போலே நீயும் விரும்பி இங்கே நண்ணி பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து பல்லாண்டு ஏத்து -என்கிறார்
அவனது ஆணை -ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் ம்மை ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத பக்தோபி ந வைஷ்ணவ
பொங்கு புனல் நீர் வளம் மிக்கு பல மணிகள் கொழிக்கப் பட்டு ஒளியால் எப்போதும் பகலாய் இருக்கும் –
——————————————————-
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–5-10-10
முறை வழுவாமல் ஓத வல்ல அடியார்கள் பாவங்கள் எல்லாம் ஒழிந்து போம் –
உறை கொள் புகராழி –
விரோதி நிரசனத்துக்கு திரு மங்கை ஆழ்வார் கையில் வேல் உண்டான பின்பு திரு ஆழி உறை இட்டு இருக்கும் காண் –
உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு- சத்ரு நிரசனம் பண்ணி
கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும்-
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply