கீழ் திரு மொழியில் பட்ட பரிதாபங்கள் எல்லாம் தீரும் படி திரு வெள்ளியங்குடி யிலே முகம் காட்டுகின்றோம் வாரும்
என்று அழைக்க -மனம் தேறி அங்குச் சென்று அனுபவித்து பேசுகிறார்
வாழைப் பழத்துக்கு அழுகிற குழந்தைகளை தாய்மார் மரப்பாச்சியை தந்து ஆற்றி விடுவதும் யுண்டே –
————————————————————–
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில் களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-
மண்ணியாற்றின் தென் கரையில் உள்ள திவ்ய தேசம்
வெண்ணெய் களவு கண்ட கிருஷ்ணனே இவன் -வையம் எல்லாம் உண்ட ஆலிலை பாலகனே இவன் –
வாமனன் ஆனவனும் இவனே என்கிறார்
பாக்கு தென்னை வாழை மரங்கள் நிறைந்த ஸ்தலம் -காய்த்த -நீள் -அடை மொழி மூன்றுக்கும்
சுக்கிரன் தவம் புரிந்து பேறு பெற்ற ஸ்தலம் -அதனால் திரு வெள்ளியங்குடி திரு நாமம் ஆயிற்று என்பர்-
————————————————————
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-
தனது மேன்மை பாராதே பசுக்களையும் கன்றுகளையும் இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடினவன் இவனே
கடலிலே அணை கட்டி இலங்கையில் சென்று ராஷசர்கள் யுடைய தலைகளை உருட்டினவனும் இவனே
கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே வடிவுடையவன்
திரு உள்ளம் உகந்து வர்த்திக்கும் திவ்ய தேசம்
நிறையப் பூத்து இருக்கிற ஸூகந்த புன்னை மரங்கள் என்ன
மொக்கு விட்டுக் கிடக்கிற புன்னை மரங்கள் என்ன
இவற்றின் இடையே வண்டுகள் புகுந்து வானர முதலிகள் மதுவனத்தில் மது உண்டு ஆரவாரித்தது போலே
பருகின மதுவால் இருந்த இடம் இருக்க ஒட்டாமல் இசை பாடித் திரியப் பெற்ற சோலைகளை யுடைய ஸ்தலம்-
————————————————————–
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-3-
குரூரமான விஷத்தை கக்கும் காளியனும் இனி வேறு யமன் வேண்டா -என்னும்படி வருத்தம் உறுத்தி
பலவகை நடனங்கள் ஆடி அருளிய கண்ணபிரான் விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்
இங்கு உள்ள மாதர்கள் நாட்டிய த்வனி எங்கும் பரவி மேல் உலகங்களிலும் அதிர்ந்ததாம்
அடை புடை தழுவி -இரவும் பகலும் -அஹோராத்ரம் அணைந்து ஆகாசத்தில் நின்று கோஷியா நிற்கும் ஆய்த்து-
———————————————————
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-
தன் மேன்மையை மதியாதே இடையர் குலத்தில் பிறந்து
பசுக்களை மேய்த்து -கம்சனை முடித்து
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே வடிவு யுடையவனும்
பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனும்
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க திருப் பாற் கடலில் சாய்ந்து அருளினவனும் இவனே-
ஓங்கிய மணி மாடங்கள் யுடைய ஸ்தலம் –
—————————————————-
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-
பிரளயத்தில் உண்டு பின்பு உமிழ்ந்தவனும் அவனே
மண்ணின் பாரம் நீக்கிய பார்த்த சாரதியும் இவனே
வாத்சல்யம் அடங்கலும் திருக் கண்களிலே தோற்றும்படி இருந்து இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
ஏர்களால் உழுவதால் மீன்கள் நிர் பயமான இடம் என்று பொய்கைகளிலே புகுந்து வர்த்திக்கும் ஸ்தலம்
சம்சாரம் அஞ்சி பரம பதம் புகுவார் -முமுஷூக்கள் -போலே –
————————————————–
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-
பூளைப் பூக்கள் ஒரு ஜாதி காட்டில் உண்டே -காற்று அடித்த வாறே உரு மாய்ந்து பறந்து போகும்
அது போன்று பராக்ரமம் வாய்ந்த கோல வில்லி ராமன் அம்புகளை பிரயோகித்த பின்பு
இலங்கை அரக்கர் சேனைகள் எல்லாம் உரு மாய்ந்து ஒழிந்தன
வாழை முற்றி பழுத்த பழங்கள் விழ அவற்றை யுண்ட மீன்கள் புஜித்து செருக்கி துள்ளி விளையாடுகின்றன
கரந்தன-கரந்தல் அன்ன -என்றபடி -உருத் தெரியாது போதல்
அரந்தை -துன்பம்
கூற்று -எமன் -உயிரையும் உடலையும் வேறு கூறாக்குபவன்
ஊழ்த்தல் -உதிர்த்தல்-
————————————————–
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே -4-10-7-
ஒள்ளிய கருமம் -வேண்டியவர்க்கு வேண்டியன கொடுக்கும் ஔதார்யம்
அள்ளி -தாதுக்களை யுடைத்தாய் -எதுகை நயம் கருதி அல்லி -அள்ளி ஆயிற்று
அன்றிக்கே அளி-விரிந்து கிடந்தது -குளிர்த்தி பொருந்திய
முதல் அடியில் உணர்ந்து -என்ற பாடமும் உண்டு
திவ்ய தேசத்து வாழும் குயில்கள் ஆகையாலே ஹரிர் ஹரி ஹரிர் ஹரி -என்று சோலைத் தடங்களிலே கூவுகின்றனவாம்
வெள்ளியார் வணங்க -சத்வ குணம் உள்ளார் அத்தை வளர்க்க
அன்றிக்கே -சுக்கிரன் உபாசித்து பேறு பெற்ற –
அன்றிக்கே -பஸ்மம் பூசி வெளுத்த ருத்ரன் பாதகத்தை போக்கி அருளினவன் -என்றுமாம்-
——————————————
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே -4-10-8-
படியிடை மாடத்து தூண் அடியிடையிலே –பூமியில் யுண்டான மாடங்களில் நடப் பட்டு இருக்கிற தூண்களின் அடியிலே
தூண்களில் மணிகள் ஒளி இரவு பகல் விபாகம் இல்லாமல் –
அப்படி ஆக வேண்டும் என்று மங்களா சாசனம் செய்கிறார் என்னவுமாம் –
நரசிம்ஹ மூர்த்தியும் அவனே
அனுகூலனான என்னை மடியில் ஏற்றிக் கொண்டு மகிழ்விக்க வேண்டி இருக்க அது செய்யாதே
பிரதிகூலர்களில் தலைவனான அப்பாவிக்கு மதியிடம் கொடுப்பதே -பட்டர்
பூமியிலும் வானத்திலும் சாகக் கடவன் அல்லன் என்ற வரத்தை மெய்ப்பிக்க மடியிலே ஏறிட்டுக் கொண்டான் –
————————————————-
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே-4-10-9-
தேவர்கள் இவனுடைய பரத்வ சௌலப்ய சௌசீல்ய வாத்சல்ய குணங்களில் ஈடுபட்டு
கூடி ஏத்தும் திருப் பாற் கடல் எம்பெருமானே இவன்
ஆழியான் -திரு வாழி ஆழ்வான் தரித்தவன் -திருப் பாற் கடலை இடமாக யுடையவன்
தாமரை கரும்புக்கும் செந்நெலுக்கும் நடுவிலே அடியிலே மலர்கின்றது
இரு புறத்திலும் அவை அசைய அம் மலரின் மீது அன்னம் பேடை யுடன் வாழ்கின்றன
தாமரை மலர் சிங்காசனம் கரும்பும் செந்நெலும் சாமரம் -அன்னமும் பெடையும் எம்பெருமானும் பிராட்டியும் –
மகிஷி யுடன் ராஜ புத்திரன் இருக்கும் இருப்பு –
——————————————–
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வர் இக் குரை கடல் உலகே –4-10-10-
மகா வராஹமாய் திரு வவதரித்து இடர்ந்து எடுத்து விடாய் தீர திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளிணவனே இவன்
இத் திரு மொழியை பண்ணிலே அமைத்துப் பாடும் பாக்யசாலிகள் கடல் சூழ்ந்த மண் உலகை தாம் இட்ட வழக்காக பெறுவார்
ஹேயமான ஐஸ்வர்யம் -இவ் வாழ்வாருக்கு பின்பு கைங்கர்யத்துக்குப் பயன் பெற்றதால் உத்தேச்யம் –
ஐஹிக ஆமுஷ்மிக புருஷார்த்தத்தோடு வாசி அற எல்லாவற்றுக்கும் இத் திரு மொழியே சாதனம் –
————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply