ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-7-தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்ன-

தொடர் சங்கிலி பிரவேசம் –

கீழ் சப்பாணி முகத்தாலே
உபாய
உபேய பாவத்தில்
ஆகிஞ்சன்யத்தை அவனைக் கொண்டு வெளியிட்டார் .

இனி தளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே
அனுகூல ப்ரீதியும்
பிரதிகூல நிரசனமும் –
இவ் விரண்டும்
அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்
என்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்

(ப்ரபன்னர் -அதிகாரி போல் நாம் நடக்க -இரண்டும் சித்திக்கும்
ஆசாரம் ஒழுக்கம் -சொன்னபடி
நேர் இழை யும் இளம் கோவும் எவ்வாறு நடந்தனையே -நடையில் ஈடுபடுவோம் )

அவனுடைய ஆசாரம் –
பக்தி மூலமாகவும்
பீதி மூலமாகவும்
அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-
பிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகாரிக்கும் –

———————————————————————-

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண் கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார் பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற் கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இள நடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப் –
மத்த கஜம் ஸ்தம்பத்தை முறித்து
சங்கிலி கைத் தொடரோடு இழுத்துக் கொண்டு முதுகிலே கிடக்கிற
பொற் கயிற்றில் தூங்குகிற மணி சப்திக்க –
கயிறு -பொன்னாண்-

படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் –
மும்மதத்தால் யுண்டான ஜலம் அருவி போல் சோர –
மும்மதம் -இரண்டு கர்ணங்களிலும் தலையிலும் பாய்கிற ஜலம் –
அந்த யானையானது மத விகாரத்தாலே அவசமாக மெள்ள நடந்தால் போலே –

உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத் –
உடை மணியுடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப –
திருவரையில் நின்றும் நழுவின சதங்கை வடம் திருவடிகளிலே விழுந்து இழுப்புண்டு மிகவும் சப்திக்க –
புகுமதமும் உகு மதமுமாய் இருக்கும் இறே இங்கும் –

தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ-
நடை பொறுக்கும்படி சிக்கென்று இருக்கையாலே
தடம் தாள் என்கிறார் –

தடம் தாளிணை
தன்னில் ஒத்து உபமான ரஹிதமாய் இருக்கிற திருவடிகளாலே
ஸ்வ வசமாகவும் அவசமாகவும் நடக்கக் காண வேணும் என்று பிரார்த்திக்கிறார்

சார்ங்க பாணி –
அவதார ரஹஸ்யம் அறிவார் ஆகையாலே சார்ங்க பாணியைப் போலே இவனும்
விரோதி நிரசன சமர்த்தனாக வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
தளர் நடை நடவானோ-

——————————————————————-

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந் துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ -1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப் போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
வ்ருஷாக்ரமும் சிவக்கும்படி தோன்றின செக்கரிடையிலே
சிறு பிறை நுனிக் கொம்பு அங்குரித்து தோன்றினால் போலே என்னுதல்-
செக்கராலே சிவந்த வ்ருஷாக்ரத்திலே தோன்றின சிறு பிறை என்னுதல் –

நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
ஸ்மிதம் செய்யும் போது-திருவதரத்துக்கு மேலே அங்குரித்து தோன்றின ஒரு திரு முத்து மிகவும் பிரகாசிக்க –
நளிருகை -ஸ்நிக்ததை-

அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
வளை மணி வடம் -என்னுதல்
வெள்ளி மணி வடம் என்னுதல்
அக்கு -வெள்ளை
இத்தை திருவரையிலே சாத்தி

ஆமைத்தாலி –
திருக் கழுத்திலே ஜாதி உசிதமாகச் சாத்தின ஆபரணம்

அனந்த சயனன் –
உரக மெல்லணையான்   இறே –

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ –
மிக்க பிரகாசத்தை யுடைய நீல ரத்னம் தகுதியாம் படியான நிறத்தை யுடையவன்
உபமான உபமேயங்கள் துல்ய விகல்பமாய்த்து என்கிறது

வாசுதேவன் –
வாசுதேவ புத்திரன் வாசுதேவன் என்னுமது ஒழிய
சர்வம் வசதீதி வாசு தேவ -என்ன மாட்டார் இவர் இப்போது
இது தான் இறே அது தானும்-
(எங்கும் வசிக்கும் அவனே வாசுதேவ புத்ரன் -நந்தகோபன் குமாரன் )

————————————————————————–

ஒரு பரி வேஷ சந்தரன் –
ஒரு மேகம் –
இவை உபமானமாக அருளிச் செய்கிறார்

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ –1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையா யுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திரு வரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறை யென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ் வாபரணங்கள் திருமேனிச் சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்-
மின் கொடியோடு சேர்ந்த அத்விதீய சந்திரனும் –
அத்தைச் சூழ்ந்த பரிவேஷமும் போலே
திரு வரையிலே சாத்தின பொன் நாணும்

பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
அதிலே கோவைப்பட்டு பிரகாசியா நின்ற வெள்ளி அரசிலைப் பணியும்
அவை கீழே தோன்ற அடுக்க மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையோடும் கூட –

மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னைச் சூழ்ந்த மின்னாலே பிரகாசிக்கப் பட்ட கரிய மேகம் போலே
சாத்தின திருக் கண்டம் காறையாலே பிரகாசிக்கப்பட்ட திருக் கழுத்தோடு

தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ
முன்பு சொன்ன உபமானங்களாலே சௌந்த்ரயம் பொலிகை அன்றிக்கே
தானே தனக்குவமன் -மூன்றாம் திருவந்தாதி -38-என்கிறபடியே
தன்னிலே பொலிந்த சௌந்த்ர்யத்தை யுடையரான

இருடீகேசன் –
பொலிவாலே இந்த்ரியங்களை அபஹரிக்கவும்
தன்னாலே இந்த்ரியங்களை நியமிக்கவும் வல்லவன்
தன்னில் தன்னுடைய சௌந்த்ர்யத்தாலே 
திரு ஆபரணங்களுக்கு பொலிவு கொடுத்தவன் என்னுமாம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

அன்றிக்கே –
தன்னில் பொலிந்த –
தன் கோயிலானது முகில் வண்ண வானம் -திருவாய்மொழி -7-2-11-என்கிறாப் போலே
தன்னுடைய சௌந்த்ர்ய சாயையினாலே நிறைந்த என்னுமாம்-
(இல் -இல்லம் -பரம பதம் இவனால் பொலியுமே )

——————————————————————

இந்நடை இவனை உகவாத சத்ருக்கள் தலை மேலே
நடக்குமோ தான் என்கிறார்

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து  உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ –1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–-எனக்கு பவ்யனாய் -எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரிய பிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் எற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் –
கருப்பம் சாற்றுக் குடம் திறந்த இல்லி யூடே ஊறிப் பொசிந்து பாயுமா போலே –

கணகண சிரித்து உவந்து –
கண கண என்றது சிரிப்பை அனுகரித்தாதல்
கணகணப்பென்று -உஷ்ணத்துக்கு பேராய் வெச்சாப்புத் தோன்றச் சிரித்தான் என்னுதல்
உவந்து -பிரியப்பட்டு-

முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
முன்னே வந்து நின்று –
திருப்பவளத்தை உபகரிக்கும் –

நான் என்னுடையவன் என்று அபிமாநிக்கும் படி எனக்கு வசமாய்
கார் முகில் போன்ற திரு நிறத்தை யுடையவன் –
எனக்கு வ்சமாகைக்கு அடி அலர்மேல் மங்கை உறை மார்பன் ஆகை இறே-

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான் –
தன்னைப் புத்ரனாகப் பெற்ற பாக்யத்தை யுடைய எனக்கு
முன்பே முத்தம் தரும் -என்றும்
இப்போது வாயமுதம் தந்து -என்று அருளிச் செய்கையாலே
முற்பாடு முத்தம் தந்தருளும் என்று பிரார்த்தனையாய்
அது இப்போது சித்தித்தது என்றும் தோன்றுகிறது –

இவ் வாய் அமுதம் விளை நீராக இறே இவருடைய சத்தை வர்த்திப்பது –
ஆகை இறே தளிர்ப்பிக்கின்றான் -என்றது-

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ-
தனக்கு எதிரே வந்து சத்ருக்களாய் நிற்கிறவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ பிரார்த்திக்கிறார் ஆதல் –
நிர்ணயிக்கிறார் ஆதல் –
பயப்படுகிறார் ஆதல் –
அன்றிக்கே
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்த -கிஷ்கிந்தா -24-24-
(அனுபவித்து அருளிச் செய்கிறார் என்றபடி )

————————————————————————

ஒரு மலைக் குட்டனை ஒரு மலைக் குட்டன் தொடர்ந்து ஓடுமா போலே
ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி மூத்த பிரானை தொடர்ந்து ஓடுகிற பிரகாரத்தை அனுபவிக்கிறார்-

முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி யிடுவது போல்
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பல தேவன் என்னும்
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ –1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெரு மலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
கரு மலைக் குட்டனுக்கு முன்னே நன்றாய்
அத்விதீயமாய்
பெரிதான வெள்ளி மலைக் குட்டன்
மலை ஈன்ற குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோட
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )

பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
அக் குட்டியின் பின்னே
அஞ்சன கிரி ஈன்ற குட்டி தன் செருக்காலே அத்தை தொடர்ந்து ஓடுவது போலே-
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் –
லோகத்தில் உள்ளார் சாஸ்திரங்களையும்  ஸ்தோத்ரங்களையும்  ஆச்சார்ய முகத்தாலே ஆராய்ந்து
இடைவிடாதே ஸ்துதித்திப் போரும் படியான புகழை யுடையனாய் –

பலதேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ —
தனக்கு அக்ரஜனான நம்பி மூத்த பிரான் வெள்ளி மலைக் குட்டி போலே செருக்காலே முன்னே ஓட
பின்னே அவனைப் பிடிக்க வேணும்  என்று ஓடிச் செல்வான் 
தளர் நடை நடவானோ-

(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )

—————————————————————————–

நடந்த இடத்தில் லாஞ்சனை தோன்ற நடந்து அருள வேணும்
என்று பிரார்திக்கிறார் –

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ –1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-( காமனைப் பயந்த காளை )
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
(கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -அங்கும் ரேகை என்பாரும் உண்டே )
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த –
ஒரு காலில் உள்ளடி பொறித்து அமைந்த சங்கு
ஒரு காலில் உள்ளடி பொறித்து அமைந்த சக்கரம்
அத்விதீயமான திருவடியிலே அகவாயிலே சாத்தினால் போலே
அடி தாறு -பெருய திருவந்தாதி -31-என்கிறபடியே -ரேகா ரூபேண பிரகாசிக்கும் படி அமர்ந்த திருவாழி ஆழ்வான்-
இப்படி இருக்கிற மற்றைத் திருவடிகளில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானும்-
(நிழலும் அடி தாறும் ஆனோம் -பாத சாயை பாத ரேகை )

இரு காலும் கொண்டு –
கீழே ஒரு கால் -ஒரு கால் -என்று வைத்து
இரு கால் -என்னும் போது
கீழே உபமான ராஹித்யம் சொல்லிற்றாய்
இப்போது ஒன்றுக்கு ஓன்று ஒப்பான படி சொல்லிற்றாம் இத்தனை –
இரண்டு திருவடிகளையும் கொண்டு நடந்து அருளும் போது நடந்த விடம் –

அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் –
தூலிகையினால் எழுதினால் போலே லாஞ்சனை தோன்றக் கண்டு இன்ப வெள்ளம் பெருக வேணும் –
நம் பெருமாள் கோடைத் திருநாளில் உலாவி அருளின வெளியில்
அழகியதான லாஞ்சனை கண்டு
நம் முதலிகளுக்கும் இன்ப வெள்ளம் பெருகா நின்றது இறே  –

பின்னையும் பெய்து பெய்து –
இன்ப வெள்ளம் பின்னையும் மேன் மேலும் யுண்டாம்படி-

கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ —
கரு கார் -நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலேயும்
கடல் போலேயுமாய் இருக்கிற திரு மேனியை யுடையவன்
கரு  கார்க்கடல் வண்ணன் -என்கிறது -கார்க் கடல் வண்ணன் -என்னுமா போலே
கருமை -பெருமையுமாம்

காமர் தாதை –
அவனுக்கு
சௌந்தர்யமும் –
மார்த்தவமும் –
சித்த ஜத்வமும் ( மனதை பறிக்கும் தன்மையும் ) யுண்டாய்த்து-இவன் வயிற்றில் பிறப்பால் இறே
காமனைப் பயந்த காளை இறே
காமனைப் பயந்த பின்பும் கீழ் நோக்கிப் பிராயம் புகா நின்றான் இறே

காமர் தாதை பின்னையும் பெய்து பெய்து தளர் நடை நடவானோ-

—————————————————————————

உடை மணி கண கண என்கிற ஓசையோடு தளர் நடை
நடக்க வேணும் -என்கிறார் –

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண எனத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப் பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலி போலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல் –
சேற்று வாய்ப்பாலே படரா நின்ற
தாமரை இலை யணையப் பூத்த அந்த தாமரை
கட்டவிழ மது ஊறித் துளிக்குமா போலே
பனி -குளிர்ச்சி

இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
இடம் கொள்கையாவது -வாயில் ஒரு புடைக்குள்ளே இறே வையம் ஏழும் கண்டது –
உலகம் யுண்ட பெரு வாயன் இறே
இடமுடைத்தாய் –
சிவந்த திருப் பவளத்திலே வாக் அமிர்தம் ஊறி ஊறி இற்றிற்று வீழ  நின்று

கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்
கடிய சேவின் கழுத்தில் கட்டின மணிகள் கண கண என்று சப்திக்குமா போலே
கண கண ப்பாவது-கணார் கணார்-என்கை-
உடை மணி -திருவரையில் சாத்தின மணி –

தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ —
அழகியதாய் உறைத்த திருவடிகளைக் கொண்டு

சார்ங்க பாணி –
ஓர் அவதாரத்தில் உண்டானவற்றை எல்லா அவதாரங்களிலும்  கொள்ளலாம் இறே-

——————————————————————————–

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ –1-7-8-

பதவுரை

கரு–கரு நிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடு பள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திரு வரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
கரும் சிறு பாறை பக்கம் மீதே அருவிகள் பகர்ந்து அனைய –
கருமை யுடைய -சிறியதாய் இருக்கிற மலையின் மேலே பார்ஸ்வத்திலே
அருவிகள் நிம் நோந்தமாக சூழ்ந்தால் போலே
பகர் -ஒளி

அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
அக்குவடம் -திருவரையில் சாத்திய வளை மணி வடம் –
வெள்ளி மணி வடம் –
ஏறித் தாழ – நிம் நோந்தமாக

அணி யல்குல் புடை பெயர
அழகிய திரு மருங்கில் அசைந்து புடை பெயர –

மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
லோகத்தில் மனுஷ்யர் பெற்று அறியாத அழகிய குழவி யுருவிலே –

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ —
மா மணி தக்க வண்ணன்
மகத்தான நீல ரத்ன நிறத்தை யுடையவன்
(தக்க -அன்ன -போன்ற என்றபடி )

வாசுதேவன் -அவரும் இப்படி வளர்ந்தார் போலே காணும் –
ஆத்மாவை புத்ர நாமாசி (மந்த்ர ப்ரஸ்னம் ) இறே-
(தானே தான் தனது புத்திரனாக பிறக்கிறான் என்றபடி )

மா மணி தக்க வண்ணன் வாசுதேவன்-
உலகினில் மக்கள்  பெய்தறியா மணிக் குழவி யுருவின்-
கரும் சிறுப் பாறை பக்கம்  மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறித் தாழ
அணி யல்குல் புடை பெயர
தளர் நடை நடவானோ
என்று அந்வயம்-

————————————————————————-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரி விக்ரமன் சிறு புகர் பட வியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ  –1-7-9-

பதவுரை

திரி விக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டி யானை போல,
தெள் புழுதி–தெளிவான (வெளுத்த )புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்-
தூய புழுதியை மேலே ஏறிட்டுக்   கொண்டு
கையாலே அளைந்தும் வருவதாய்
கரிதாய் இருக்கிற இள வானைக் கன்றே போலே –

தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் –
தெள்ளிய புழுதியை அளைந்து ஏறட்டிக் கொண்டு
வாமன அவதாரத்தை த்ரிவிக்ரமனாகக் கண்டால் போலே
குண சாம்யத்தாலே
இதுவும் அதுவாக விறே இவர் காண்பது –
( உலகமாக தொட்டது அது ஊராகத் தொட்டது இது )

சிறு புகர் பட வியர்த்து-
திரு மேனியிலே புழுதிக்கு நடுவே திருமேனி நிறம் புகர்த்து வேர்ப்போடே தோன்ற –

ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே-
கமல ஒண் போது அலர்ந்தால் போலே இருக்கிற
சிறிய திருவடிகள் மிதித்த இடத்தே உறைத்து நோவாமே –
மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி –திருவாய் -9-2-10- இறே

தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ  –
குளிர்ந்த பூக்களால் அலங்கரித்த திருப் பள்ளி மெத்தை மேலே
தவிசு -படுக்கை –

—————————————————————————————————————————————

சமுத்திர மத்யே தோன்றின பூர்ண சந்தரனைப் போலே
ஒப்பனையோடு நடக்க வேணும் -என்கிறார் –

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ –1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தை யுமுடைய
கேசவன்–ப்ரசஸ்த கேசவன் -கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரை யுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதி பிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திரு முகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த நீராடிய -பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர–துளி துளியாகச் சொட்டவும்
தளர் நடை நடவானோ-.

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரைக் கிளப்பத்தை யுடைய
சமுத்திர மத்யே சலித்துத் தோன்றின சந்த்ரனைப் போலே-
(சலனம் -அசைந்து )

திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்-
சந்த்ரனிலும் நீர்மை யுடைத்தாய்
அழகியதான திரு முக மண்டலத்திலே பிரதிபிம்பிக்கிற
திருக் குழல் சுட்டியானது-புடை பெயர்ந்து எங்கும் பிரகாசிக்க –

பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்-
தீர்த்தங்களில் பிரசித்தமாய் –
பிரவாஹ ஜலம் மாறாமல் எப்போதும் அலை எறியக் கடவதாய் இருக்கிற
கங்கையிலும் பிரசித்தமாய்
உபமான ரஹிதமாய்-சகல பிரமாண வேத்ய்மாய்
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் உடன் கூடி
ரஷ்ய ரஷ்க பாவத்தை மாறாடி மங்களா சாசன பர்யந்தமான பலத்தைத் தரும்

தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ
சிறுச் சண்ண நீர் துள்ளம் சோர-
கங்கையிலும் பெரிது என்றது -பிரபஞ்ச ஆவலம்ப ஹேதுவாக –

——————————————————————————–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித்
தலைக் கட்டுகிறார்

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கரு நிற முடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர் நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவ ரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
ராஜ குலத்தில் ஆவிர்பவித்தது-
சாஷாத்கார பரரும் பிரமாணிகரும் அறியும் இத்தனை இறே-
ஆயர் குலத்தினில் தோன்றியது இறே
ஜ்ஞான அஜ்ஞான விபாகம் அற எல்லாரும் அறிந்தது
இப்படித் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை –

தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
தாய்மாரான அனுகூல ஜனங்களும்
இவர் தாமும் -மகிழ-

இவரைக் காண உகவாத அளவன்றிக்கே
நடக்கக் கற்றான் என்ற கேட்ட போதே வயிறு எரி கொழுந்தி  வந்து
பூதன சகட யமளார்ஜூனங்கள் ஆகிய இவர்களை வர விட
இவர்கள் முடிந்தமை கேட்டு
கஞ்சன் வயிற்றில் நெருப்பு -என்னும்படி –
அழன்ற சத்ருக்களும் –
ஒன்றில் அவனை ஜெயிக்க பெருகிறிலோம்
அவனை ஜெயிப்பதாக வீர வாதம் பண்ணி போனவர்களை மீண்டும் வரக் காண்கிறிலோம் –
பிறப்பதற்கு முன்னே பிடித்தும் உருவிய வாளோடு நில்லா நின்றோம்
இனி ஒரு போக்கடியும் இல்லை
இனி சாது மந்த்ரியான அக்ரூரனை அழைத்தாகிலும் உறவு செய்து  பார்ப்போம் -என்று அக்ரூரனை அழைத்து
அவர் சொன்ன வார்த்தையாலும் மிகவும் தளர்த்தியாம் இத்தனை இறே –

ப்ரதிகூலித்தாருக்கும் இருந்து தளர்வதில் காட்டிலும்
சாக அமையும் என்றாலும்
சாவு அரிதாய் இருக்கும் இறே –

அனுகூலித்தாரும் மங்களா சாசன ரூபேண-இவனுக்கு என் வருகிறதோ –
என்று கிலேசித்தாலும்
கிலேசிக்கை அரிதாய் மகிழ்ச்சியோடு தலைக்கட்டும் இறே அவன் உகப்பிக்கையாலே

(இருவருக்கும் கிலேசம் உண்டு
இவர்களுக்கு கிலேசம் உத்தேசம் -யுக்தம் )

தளர் நடை நடந்தனை –
அவன் இப்படி நடந்த பிரகாரத்தை  –

வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
வேயர் என்று பட்டர் பிரான் ஆகையாலே
குடிப் பெரும் சொல்ல வேணும் இறே

அன்றிக்கே
வேயர் என்று
பிராமணருக்கு சந்த்யா வந்தனம் விசேஷண நிரூபகமாய் இருக்குமா போலே
இடையருக்கும் குழல் கோவலர் -என்று நிரூபகமாகையாலும்
இவர் தாம் கோப ஜென்மத்தை ஆஸ்தானம் செய்கையாலும்
அவன் தானும்
ராஜ குலத்திலும் ஆயர் குலத்திலும் ஆவிர்பவித்தால் போலே  இறே
இவரும்
இரண்டு குலத்திலும் ஆவிர்பவித்து மிக்க புகழை யுடையரான படி –

விட்டு சித்தன் –
இவர் வாசுதேவன் என்றால் போலே இறே -விஷ்ணு சித்தன் என்கிறபடியும்
அன்றாகில்
வஸ்து நிர்த்தேசமும் ஆஸ்ரயணீத்வமும் கூடாது இறே
வ்யாபக மந்த்ரங்களுக்கும் பிரணவ நமஸ் ஸூக்களோடு ஒழிய
வ்யதி ரேகத்தால் ஸ்திதி இல்லை இறே

(ஸர்வத்ர வசதி -வாசுதேவன்
விஷ்ணுவை சித்தமாகக் கொண்டவர் -இரண்டுக்கும் சாம்யம் பொருத்தம்
வஸ்துவுக்கு அடையாளமும் சொல்லி -அப்படி இருப்பதால் தான் சர்வருக்கும் ஆஸ்ரயணீத்வம் கூடும்
ஓம் -ஸ்வரூபமும்
நம -எனக்கு நான் அல்லேன் நீயே உபாயம்
ஆஸ்ரயிப்பதே பலம் இத்தகு தான் காட்டும்
வாசுதேவன் மட்டும் இருந்தால் எங்கும் உளன் கண்ணன் என்பதையே தான் காட்டும் )

சீரால் விரித்தன –
சீரால் விரிக்கை யாவது –
குணாஸ்ரய தர்சனமும் –
குண பிரகாச ஹேதுவும்-
குண பிரகாச பிரயோஜனமும் -இறே

(மயர்வற மதி நலம் -ஞானம் தர்சனம் பிராப்தி மூன்றையும் சொன்னவாறு )

உரைக்க வல்லார் –
இவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-

மாயன் மணி வண்ணன் தாள் பணியும் –
ஆச்சர்யமான கல்யாண குணங்களையும்
ஆத்ம குண நாநாத்வத்தையும்
நீல ரத்னம் போன்ற வடிவழகையும் யுடையவன் -திருவடிகளிலே பணியும்

பணியும் -என்ற வர்த்தமானம் –
உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –
உத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-

(தன்னிலை உத்தமன் –
பணிந்து கொண்டே இருக்கும் நிகழ் காலம் -பணிந்த பணியப்போகும் இல்லையே
த்வய உத்தர வாக்ய பிரார்த்தனை என்றுமாம் – )

மக்களைப் பெறுவர்களே-
புத்ரர்களைப் பெறுவர்கள்-
அவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –
தாசவத் புத்ரர்கள் ஆதல் –
சிஷ்ய தாசர்கள் ஆதல்  –

இது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி –
இவர் அருளிச்  செய்ததை ஓதி –
ஒதுவித்துப்
போருமவர்களுக்கும் -கூடும்

எங்கனே என்னில்
இவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –
ஸூக தாதம் -(வியாசர் ஸூக மகரிஷிக்கு தந்தை )
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-
நந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-
(பெறாமலே பாக்யம் பெற்றது போல் சிஷ்யர்களாக தாசர்களாக இருந்தாலும்
அவர்கள் நினைவாலே ஆகுமே என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

கூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு
கூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய
ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு
இதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு
ஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே

(கூரத்தாழ்வானை -பணியும் மக்களைப் – பெற்றது கண்டு –
கூரத்தாழ்வார் நடந்த வ்ருத்தாந்தந்தம் பிரமாணம் )

அன்றிக்கே
சாபிப்ரயமாக  வல்லார்க்கு சொல்ல வேண்டா விறே-

(பாசுரம் மட்டும் சொல்வாருக்கே இப்படி பாக்யம் என்றால்
ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து சொல்வாருக்குச் சொல்ல வேண்டாம் அன்றோ )

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading