மாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –
கீழே -ஆடுக ஆடுக -என்று ஆயாசிப்பித்தார்
இத்தால் பிரயோஜனம் –
அவதாரத்தில் மெய்ப் பாடு தோன்றின ஒழுக்கம் ஆகையால் (பருவத்துக்கு ஏற்ற செயல் )
வர்ணாஸ்ரமாதிகளுக்கும் -சாஸ்திர சித்தமாய் -சக்தி அநுகுணமாய் –
மங்கள பர்யந்தமான -ஸ்வரூப அநு ரூபமான நடப்பு வேணும் என்றது ஆயத்து –
இனி மேல் –
சப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –
(சப்பாணி -கை கூட்டி அஞ்சலி -கைம் முதல் ஒன்றும் இல்லாமையைக் காட்டிய படி –
போக்கிடம் இல்லாமல் -கால்களை சேர்த்து
இவற்றைக் காட்டவே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நால்வரைக் கூட்டி வந்தான் )
———————————————————————
மாணிக்கக் கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த வாய் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்திலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-
பதவுரை
ஆணிப் பொன்னால் செய்த–மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்–(வேலைப் பாட்டிற் குறை வில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி–பொன் மணிக் கோவையை
உடை-உடைய
மருங்கின் மேல்–இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப–ஒலி செய்யவும்
பவளம்–பவழம் போன்ற
வாய்–வாயிலே
முத்து–முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கவும்
பண்டு–முற் காலத்திலேயே
காணி–பூமியை
கொண்ட–(மஹாபலிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்–திருக் கைகளாலே
பேணி–விரும்பி
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு–கரு நிறமான
குழல்–கூந்தலை யுடைய
குட்டனே–பிள்ளாய்!
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்.
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னால் செய்த வாய் பொன்னுடை மணி
ஆணிப் பொன்னால்
வாய் அழகியதான உடை மணியை யுடைய மருங்கின் மேல்
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப –
பொன் -அழகு
மாணிக்கக் கிண்கிணி சப்திக்குமோ என்னில்
நா-மாணிக்கம் ஆகையாலே -சப்திக்கும் –
கிண்கிணிக்கு மாணிக்கம் புறம்பே பதித்தாலும் சப்தியாது –
பேணிப் பவளவாய் முத்திலங்கப் பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி-
விருப்பத்தோடு திருப் பவளத்தில்
திரு முத்து தோன்றும்படி ஸ்மிதம் செய்து கொண்டு
குடங்கையில் மண் கொண்டு அளந்து -4-3-9-என்கிறபடியே
முன்பு ஒரு காலத்தில்
மகா பலி யஞ்ஞ வாடத்திலே சென்று
தன் குடங்கை நீர் ஏற்றான் -மூன்றாம் திருவந்தாதி -62- என்கிறபடியே
உதக பூர்வகமாகக் கொண்ட கைகளால் சப்பாணி –
கரும் குழல் குட்டனே சப்பாணி –
கருகின திருக் குழலையும்
பிள்ளைத் தனைத்தையும் யுடையவனே -சப்பாணி
சப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது
இரு கால் -சப்பாணி -என்கையாலே
உபாய பாவத்திலும்
உபேய பாவத்திலும்
ஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –
காணி -என்கையாலே
பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து
பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்
இந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது –
அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –
——————————————————————-
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி –1-6-2-
பதவுரை
பொன்–ஸ்வர்ண மயமான
அரை நாணொடு–அரை நாணோடு கூட
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
தன் அரை–தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட–அசைந்து ஒலிக்கவும்
தனி–ஒப்பற்ற
சுட்டி–சுட்டியானது
தாழ்ந்து–(திருநெற்றியில்) தொங்கி
ஆட–அசையவும்
என் அரை மேல் நின்று–என்னுடைய மடியிலிருந்து
இழிந்து–இறங்கிப் போய்
உங்கள்–உன்னுடைய (பிதாவான)
ஆயர் தம் மன்–இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய
அரை மேல்–மடியிலிருந்து
சப்பாணி கொட்டாய்-;
மாயவனே–அற்புதமான செயல்களை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-;
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட –
தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு
கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க
திருக் குழலிலே சாத்தின சுட்டியானது திரு நெற்றியிலே தாழ்ந்து அசைய
என்னரை மேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி –
தன்னரை மேல் இருந்து அவர்க்கு உகப்பாமா போலே
தனக்கு அவர் மடியிலே
இவனைக் காண்கை பிரியம் ஆகையாலே -என்னரை மேல் நின்று இழிந்து -என்கிறாள் –
உங்கள் தமப்பனாராய்
ஆயர்க்கு எல்லாம் நிர்வாஹகராய்
இருக்கிறவர் உடைய
மடியிலே இருந்து கொட்டாய் -என்கிறாள்
மாயவன் -ஆச்சர்ய சக்தி யுடையவன் –
——————————————————————–
ஸ்ரீ நந்த கோபர்
யசோதை பிராட்டி மருங்கிலே காண்கை தனக்கு அபிமதம் ஆகையாலே
மீண்டும் உன் மாதாவின் மருங்கிலே இருந்து விளையாடு என்கிறார் –
பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல்
நின்மணி வாய் முத்திலங்க நின்னம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங்கையனே சப்பாணி –1-6-3-
பதவுரை
என்–என்னுடைய
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்–பலவகைப் பட்ட
மணி–சதகங்களையும்
முத்து–முத்துக்களையும்
இன் பவளம்–இனிய பவழத்தையும்
பதித்த–அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன–அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு–விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்–பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து–உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்–உன் தாயினுடைய (நின்னையே மகனாகப் பெற்ற ஏற்றம் கொண்டவள் )
அம்மணி மேல்–இடையிலிருந்து (அம்மணம் -இடை )
சப்பாணி கொட்டாய்-;
ஆழி–திருவாழி மோதிரத்தை
அம் கையனே–அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;
பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன
பன் மணி யாவது
மாணிக்கம் மரகதம் புஷ்பராகம் வைரம் நீலம் கோமேதகம் வைடூர்யம் -என்கிற மணி வகை ஏழும்
முத்தும்
இனிய பவளுமுமாகிய நவ ரத்னங்கள் பதித்து -(செய்த தோடு )
அன்ன –
நிம்நோந உத்தமம் ஆகாயாமை -ஒத்து
(இவற்றுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் ஒத்து )
என் மணி வண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல்
என்னுடையவன் என்று தன்னுடையவனான நான்
அபிமாநிக்கும்படி பவ்யனாய்
நீல ரத்ன நிறத்தை யுடையனான உன்னுடைய திருக் காதிலே சாத்துகையாலே
அதி பிரகாசகமான பொற்றோட்டின் மேல்
ஆழியங்கையனே சப்பாணி –
நின்மணி வாய் முத்திலங்க –
உன்னுடைய அழகியதான திருப் பவளத்தில் திரு முத்தும் பிரகாசிக்க –
நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி –
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -2-2-4-
ஸூக தாதம்-சஹஸ்ரநாமம் -என்னுமா போலே -நின்னம்மை -என்கிறார்
தன்னுடைய அம்மணி மேல்
அம்மணி -அம்மணம் -என்றும் அரைக்கு பெயர் -ஒக்கலைக்கு பேர்
ஒக்கலையில் இருந்து கொட்டாய் சப்பாணி –
ஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –
இவன் சப்பாணி கொட்டும் போது
இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து
திருக் கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று
இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே
அருகாழி யாகவுமாம் –
என் மணி வண்ணன் –பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன இலங்கு பொற்றோட்டின் மேல் -என்று அந்வயம் –
—————————————————————————-
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா வம்புலீ சந்த்ரா வா வென்று
நீநிலா நின் புகழா நின்றாயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே கொட்டாய் சப்பாணி –1-6-4-
பதவுரை
வான்–ஆகாசத்திலே
நிலா–விளங்குகின்ற
அம்புலி–அம்புலியே!
சந்திரா–சந்திரனே!
தூ–வெண்மையான
நிலா–நிலாவை யுடைய
முற்றத்தே–முற்றத்திலே
போந்து–வந்து
நீ–நீ
விளையாட–(நான்) விளையாடும்படி
வா–வருவாயாக
என்று–என்று (சந்திரனை அழைத்து)
நிலா–நின்று கொண்டு
நின்–உன்னை
புகழாநின்ற–புகழ்கின்ற
ஆயர் தம்–இடையர்களுடைய
கோ-தலைவராகிய நந்த கோபர்
நிலாவ–மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா வம்புலீ சந்த்ரா வா வென்று –
யசோதை பிள்ளையை ஒக்கலையில் எடுத்துக் கொண்டு
தூயதான நிலா முற்றத்திலே புறப்பட்டு
ஆகாசத்திலே சஞ்சரிக்கிற அம்புலீ சந்த்ரா என்று
அம்புலீ-என்று பிள்ளை அழைக்கும் பேராலே அழைக்கிறாள்
வா வென்று –
பிள்ளையோடு விளையாட வா என்று நியமித்து
நீ நிலா –
நீ நின்று –
நின் புகழா நின்ற-
உன்னை மேன்மையையும்
பிள்ளைத் தனத்தில் நீர்மையையும்
சொல்லிப் புகழா நிற்பானாய்-
ஆயர் தம் கோ –
அறிவு கேட்டால் தனித் தனியே கர்த்தாக்களாய் இருக்கிற
இடையரையும் தம்முடைய
குண அனுபவத்தாலே நியமித்து
ஆள வல்லவர் ஆகையாலே -ஆயர் தம் கோ -என்கிறார் –
நிலாவக்-
அவன் நிலை பெற –
அவன் சத்தை பெற்று வர்த்திக்க –
கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே கொட்டாய் சப்பாணி –
திகழக் கிடந்தாய் கண்டேனே -திருவாய் -5-8-1-
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -திருச் சந்த விருத்தம் 61-
என்னவும் கண் வளர்ந்து அருளுகிறவனே-
(அழகும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் திகழும் படி கிடந்தாய்
உத்யோக சயனம் இன்றும் சேவிக்கிறோமே )
தூ நிலா முற்றத்தே போந்து -வானிலா வம்புலீ சந்த்ரா-விளையாட -வா வென்று
நின் புகழா நின்றாயர் தம் -நீநிலாவக கொட்டாய் –
குடந்தைக் கிடந்தானே
நீ நிலாவக் கொட்டாய் சப்பாணி –
என்று அந்வயம்-
(கிடந்த ஆராவமுதனை நின்று சப்பாணி கொட்ட அழைக்கிறார் )
———————————————————-
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டயமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் யுண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்ப நாபா கொட்டாய் சப்பாணி –1-6-5-
பதவுரை
புட்டியில்–திருவரையிற் படிந்த
சேறும்–சேற்றையும்
புழுதியும்–புழுதி மண்ணையும்
கொண்டு வந்து–கொணர்ந்து வந்து
அட்டி–(என் மேல்) இட்டு
அமுக்கி–உறைக்கப் பூசி
அகம் புக்கு–வீட்டினில் புகுந்து
அறியாமே–(எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்–சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்–மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்–வெண்ணெயையும்
உண்–உண்ணுகின்ற
பட்டி கன்றே–பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா–ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-.
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டயமுக்கி –
மத்யம அங்கத்தில் சேறும் புழுதியும் –
சொட்டுச் சொட்டு -1-9-1- என்று துளியா நின்றால் சேறு தன்னடையே உண்டாம் இறே-
புழுதி அளைந்து விளையாடா நின்றால் -நனைந்த இடம் சேறாய்-நனையாத இடம் புழுதியுமாய் இறே இருப்பது –
மற்றைப் படி யாகிலுமாம் இறே –
(வியர்வை
எச்சில்
மூர்த்தம் -இத்யாதி )
உன்னோடு தங்கள் கருத்தாயின -1-5-8-
புட்டி என்று ஜெகன பார்ச்வத்துக்கு பெயர்-(புற இடுப்பு )
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும் போது நீஹாரங்களும் வேணும் இறே –
(நீஹாரம்- உடம்பில் இருந்து வெளி வரும் கழிப்பு
கர்மத்தால் இல்லை -இச்சையால் மெய்ப்பாடு -தோன்ற )
அட்டியமுக்கி –
சேற்றையும் புழுதியையும் மேலே கொடு வந்திட்டு கையாலே உறைக்கப் பூசா நின்றால்
நிஷேதிக்கில்
பிள்ளை சீறும் என்று மந்த ஸ்மிதம் செய்து இருக்கும் இறே –
யகம் புக்கறியாமே-
உள்ளே புக்கு இவன் காணாமை மறைய வைத்து –
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் யுண்-
பாத்ரங்களில் தயிரும்
வெண்ணெயும் அமுது செய்யா நிற்கும் –
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி-
பட்டி புகாமல் வேலி அடைத்து வைத்த கர்ஷகன் அறியாமல் பயிர்களைக்
களவிலே போய்த் தின்றுமது இறே பட்டிக் கன்று –
அது போலே அகம் புக்கு
அறியாமே வைத்தவற்றை நான் அறியாதபடி உண்கையாலே பட்டிக் கன்றே -என்கிறார் –
பற்பநாபா கொட்டாய் சப்பாணி –
சகல ஜகத் காரணமான தாமரையை
திரு நாபியிலே யுடையவன் ஆகையாலே பற்ப நாபன் -என்கிறார்-
—————————————————————————–
தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்து மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்து கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி –1-6-6-
பதவுரை
தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்–பேச்சை
தாரித்து கொள்ளாது–(மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து–யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்–(போர்க் களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்–ராஜ்யத்தை
ஆள–(தாமே) அரசாளுவதற்கு
பாரித்த–முயற்சி செய்த
மன்னர்–அரசர்களுமாகிய
நூற்றுவர்–நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட–மாண்டு போகும்படி
அன்று–(பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே
பஞ்சவர்க்கு–பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த–(பார்த்த ஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்–திருக் கைகளாலே
சப்பாணி-;
தேவகி சிங்கமே–தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக் குட்டி போன்றவனே!
சப்பாணி-.
தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது –
இவர்களுக்கு ஸ்திதி எங்கே –
அவர்கள் ஐவர் -நாங்கள் நூற்றுவர் என்கிற பஹூ மானத்தாலே
நிருபாதிக பித்ரு பரிபாலனம் செய்யாதே –
போருய்த்து வந்து புகுந்தவர்
ஸ்ரீ கிருஷ்ண பஷபாதிகளோடே போரை நடத்துவதாக
யுத்த பூமியிலே முற்பட அணியும் கையும் வகுத்து புகுந்தவர்
மண்ணாளப் பாரித்து மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்து கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி-
பூமி யெல்லாம் நாங்களே ஆள வேணும் என்று மநோ ரதித்த ராஜாக்கள்
தழைத்த மரங்கள் எல்லாம் நின்றவாறு அறியாமல் பட்டு விழுந்தால் போலே முடிந்து போக –
மன்னர் என்கிற பன்மை –
பட -என்கிற ஒருமையால்
அவர் பட்டார் இவர் பட்டார் -என்கிற பர்வ க்ரமம் இல்லை என்கிறது –
சிலர் பிராணனோடு நின்றார்களாக இவர் காணாமையாலே-
பஞ்சவர்க்கு அன்று தேருய்த்து கைகளால் சப்பாணி –
பாண்டவர்களுக்கு என்னாதே-ஐவர் -என்றது முன்பே நூற்றுவர் -என்று பரிகணிக்கையாலே-
அன்று –
தங்கள் வெறுமை தோன்ற நின்ற அன்று –
ஸ்ரீ பார்த்த சாரதி -என்னும்படி ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று விலக்குகையாலே
தேர்க் காலாலே துகைத்தான் இறே –
உய்த்தல் -நடத்தல் –
தேர் உய்த்த கைகளால் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் அங்கே யுன்டானால் போலே
இங்கும் என் அபேஷைக்கு ஈடாக செய்து அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் –
தார் உய்த்து -என்ற பாடமான போது –
தார் -என்று அணி வகுக்கையாய் -அணி வகுத்து என்ற படி
தேவகி சிங்கமே சப்பாணி-
தேவகி பெற்ற
ராஜ குலத்வமான கர்வம் தோன்ற சிம்ஹக் கன்று போலே இருக்கிறவனே-
தந்தை சொற் கொள்ளாது-தாரித்து -மண்ணாளப் பாரித்து மன்னர்
மண்ணாளப் பாரித்து மன்னர் நூற்றுவர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்து கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே சப்பாணி-
என்று அந்வயம்
—————————————————————————
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சாரங்க வில் கையனே சப்பாணி –1-6-7-
பதவுரை
பரந்திட்டு நின்ற–(எல்லை காண வொண்ணாதபடி) பரவி யுள்ள
படு கடல்–ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட–(வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்–கையின் மேலே
எறி திரை–வீசுகின்ற அலைகளினால்
மோத–மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற–(முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்–அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க–கலங்கி விடும்படி
சரம்–அம்புகளை
தொட்ட–தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;
சார்ங்கம் வில்–ஸ்ரீசார்ங்க மென்னும் தநுஸ்ஸை
கையனே–(அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –
ஆயாம விஸ்தாரங்கள் எல்லை காண ஒண்ணாதபடி யாகப் பரந்து-
இரந்திட்ட கை மேல் எறி திரை மோதக்-
தன்னை ஆஸ்ரயித்து வந்தார்க்கு
தன் பக்கல் யுண்டான ரத்னாதிகளைக் கொடுத்து
வற்றாமல் நின்ற சமுத்ரம் தன்னை
படு -என்று
ஆழ்தல்-ரத்நாகாரம் ஆதல் –
முன்பு இது செய்து போந்த ஔதார்யத்தைக் கணிசித்தும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -16-31-என்கிற
உபதேசத்தாலே இறே இவர் தாம் சரணம் புக்கது –
அது பலிப்பது குணாதிக விஷயத்திலே இறே
தன்னை இரந்திட்ட கை மேலே திரைகளை எறிந்து கொண்டு மோத விட –
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரந்தொட்ட –
சரண்யதவத்தை மறைத்து நின்று
சமுத்ரம் ஹிருதயம் கலங்கி வந்து திருவடிகளில் விழும்படியாக
சாபமா நாய சராம்ச் ச -யுத்த -21-22-என்ற
சரம் தொட்ட கைகளால்-
கடல் என்று
நியந்த்ருத்வேன விசேஷ்ய பர்யந்தமாக
அபிமானியான வருணனைக் காட்டுகிறது
சார்ங்க வில் கையனே –
திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கம் திரு வில்லை வாங்கின போதே
சரம் தொடும் கை மிகையாம்படி இறே
சமுத்ரம் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக
பீதியாலே கலங்கின படி-
————————————————————————
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையனே சப்பாணி –1-6-8-
பதவுரை
குரை–கோக்ஷியா நின்ற
கடல் தன்னை–ஸமுத்ரத்தை
நெருக்கி–(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு–குரங்குகளினுடைய
இனத்தாலே–கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி–ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்–பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை–லங்கையிலுள்ள
அரக்கர்–ராக்ஷஸர்களெல்லாம்
அவிய–அழிந்து போம்படி
அடு கணையாலே–கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய–நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;
நேமி–திருவாழி ஆழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி-
ஸ்ரீ வானர சமூஹத்தாலே
பெரிய முழக்கத்தை யுடைய சமுத்ரத்தை இரண்டு அருகிலும் தேங்கிப் போரும்படி நடுவே அணை கட்டி –
குரங்குகள் வர்த்திப்பது பர்வதாக்ரங்களிலும் வர்ஜஜல பீதியாலே பர்வத குகைகளிலும் இறே-
அவற்றுக்கும் சமுத்ரத்துக்கும் என்ன சேர்த்தி தான் –
அவன் நினைத்தால் சேராதது இல்லை இறே-
நீள் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி-
கடலை அகழாக யுடைய இலங்கையை இருப்பிடமாக யுடையோம் என்கிற கர்வத்தை யுடையராய்
போக்த்ருத்வ நிபந்தனமான ஸ்வா தந்த்ர்ய அக்நி தோன்ற வர்த்திக்கிறவர்கள் இறே ராஷசர் –
அந்த அக்னி விளக்குப் பிணம் போலே யுரு மாய்ந்து போம்படி அடு கணையால் அவித்து
அவர்கள் வயிற்றிலே யாம்படி நெருக்கினான் இறே
குரக்கினத்தால் கடலை நெருக்கி
அடு கணையாலே அரக்கரை நெருக்குகையாலே
அவன் ஏவும் காலத்து குரங்கு அம்பு என்கிற வாசி கண்டிலோம் –
அடு கணை தான் அரக்கர் அவிய என்கையாலே
நெருப்புக்கு நீராய்
சாகரம் சோஷயிஷ்யாமி-யுத்தம் -21-22- என்கையாலே
நீருக்கு நெருப்பாயும் இருக்கும் இறே
(ஸ்வா தந்தர்யம் ஆகிய நெருப்புக்கு அவன் நீர் போல்
நீர் -கடல் -அபிமானதுடன் வராமல் இருக்க -நீருக்கு நெருப்பு போல் அவன் அம்புகள் )
ஒரு வாலி -ஒரு கர தூஷணாதிகள்-ஒரு மாரீசன் முதலானாரைக் கொல்லுகையாலே
அடு கணை என்று
நிரூபகம் ஆகிறது என்கிறவுமாம்
நெருக்கிய கைகளால் சப்பாணி –
நேமி யங்கையனே சப்பாணி –
விரோதி நிரசனத்துக்கு அடு கணை அமைந்து இருக்கையாலே
திரு வாழி
அழகுக்கு யுடலாம் இத்தனை இறே
அம் -அழகு
அன்றிக்கே
கருதுமிடம் பொரும் போதைக்கு –
நேமி -அம்பு -குரங்கு -என்று
ஒரு வாசி இல்லை போலே காணும்-
———————————————————————–
அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-
பதவுரை
அளந்திட்ட–(தானே) அளந்து கட்டின
தூணை–கம்பத்தை
அவன்–அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட-புடைக்க
ஆங்கே–(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வாள் உகிர்–கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உரு ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்
வளர்ந்திட்டு–வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
(ஒரு கால் இவ் விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
உளம்–(அவ் விரணியனது) மநஸ்ஸு
தொட்டு–பரி சோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்–அவ் விரணியனுடைய
ஒளி–ஒளி பொருந்திய
மார்பு அகலம்–மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட–(நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி
பேய்– பூதனையின்
முலை–முலையை
உண்டானே–உண்டவனே!
சப்பாணி-;
அளந்திட்ட தூணை யவன் தட்ட –
அவன் தோளுக்கு பொருந்தின பரிமாண மாகவும்
புரை யடங்கவும் அளந்திட்ட கல் தூணை –
தன்னை ஒழிய தேவதா சத் பாவம் நாஸ்தி -என்று இருக்கிற அவன் தட்ட
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச்-
அவன் தட்டின விடத்தே வளருகிற –
சிங்க யுருவாய் –
ஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே
வ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அது பாராமல் –
மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே
இவர் நாராயணா என்றதும்
இங்கே அங்கன் அன்றிக்கே
அஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே
எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று
வ்யாப்தியைக் கணிசித்து
அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே
கண்ணன் என்ற பாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே
முன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன்
இப்போது
அவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-
இத்தால்
அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்
அப்பொழுது -என்கையாலே – காலாந்தர வ்யாவ்ருத்தியும்
அவன் வீய -என்கையாலே – தேகாந்தர வ்யாவ்ருத்தியும்
தோற்றினாப் போலே
அவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவை எல்லாம் தோற்றிற்று இறே –
திவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே
வாள் உகிர் -என்கிறது –
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
அவனுடைய ஹிருதய பரிஷை செய்து –
1-இவன் நலிவு ப்ரஹ்லாதனுக்கு தட்டாமையாலே செருக்கு வாடி அனுகூலிக்கவுமாம்-
2-இனியாகிலும் ஒரு அஞ்சலி பண்ணாய் -என்று அவன் உபதேசிக்கையாலே கீழ் நாளைய
அபராதத்தை நினைத்து அனுதபித்து அனுகூலிக்கவுமாம்-
3-நாஸ்தி -என்கிற இடத்தில் -அஸ்தி-என்னும்படி தோன்றுகையாலே
அவன் வ்யாப்தியில் சத் பாவத்தை நினைத்து லஜ்ஜையாலே அனுகூலிக்கவுமாம்
4-உக்ரம் வீரம் -என்கிற கொடிய வடிவைக் காண்கையாலே பீதி மூலமாக அனுகூலிக்கவுமாம் –
5-தன்னுடைய பிரதிஞ்ஞா சக்தி குலைந்த பின்பும் ராவணன்
சசால சபாஞ்ச முமோச வீர -யுத்த -56-140-என்ற பின்னும் வெறும் கை வீரனாய்ச் போக்கு வரத்துச் செய்தான் இறே
அதுவும் இல்லாத அசக்தியாலே அனுகூலிக்கவுமாம்
6-வாய் தகர்த்து -பெரிய திருவந்தாதி -35-என்றும்
உரத்தினில் கரத்தை வைத்து -திருச் சந்த விருத்தம் -25-என்றும்
உகிர்த் தலத்தை ஊன்றினாய்-என்றும்
பர்வ க்ரமம் தோன்றுகையாலே வ்யசன பரம்பரைகளால் அனுகூலிக்கவுமாம்
இன்னமும்
இப் புடைகளிலே இப்போது அனுகூலிக்குமோ என்று பார்த்தது இறே –
இரணியன் ஒண் மார்வகலம் –
பிறை எயிற்று அனல் விழி -பெரிய திருமொழி -2-3-8-என்று நெருப்பை உமிழ
நெருப்பின் முகத்திலே பொன் போலே பொன்னுருக்கி நிறம் பெறுகையாலே-
ஒண் மார்பு -என்கிறார்
திரு உகிர்கள் சேர விழுகைக்கு இடம் போருகையாலே –
அகலம் -என்கிறது
பிளந்திட்ட கைகளால் சப்பாணி –
பூம் கோதையாள் வெருவ-முதல் திரு -23-
இவன் முருட்டு எலும்பிலே உறைக்குமாகில் என் வருகிறதோ -என்று வெருவும்படி இறே பிளந்திட்டது
இவர் பிளந்த பின்பும் திரு விரல்களிலே உளைவு உண்டாகில் தெரியும் என்று இறே
சப்பாணி கொட்டு என்கிறதும் –
பேய் முலை யுண்டானே சப்பாணி —
இங்கு ஒரு உளைவு காணாமையாலே
பேய் முலை யுண்டு பிழைத்தவனுக்கு ஒரு உளைவு வருமோ -என்று தேறுகிறார் –
—————————————————————————
அடைந்திட்ட மரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி
வடம் சுற்று வாசுகி வன் கயிறாகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி –1-6-10-
பதவுரை
(துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அமரர்கள்–தேவர்கள்
அடைந்திட்டு–(உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை–ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு–நெருங்கி
மந்தரம்–மந்தர பர்வதத்தை
மத்து ஆக–(கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி–நேராக நிறுத்தி
வாசுகி–வாசுகியென்னும் பாம்பாகிய
வன்வடம்–வலிய கயிற்றை
(அந்த மந்தரமலையாகிற மத்திலே)
கயிறு ஆக சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட–கடைந்த
கைகளால் சப்பாணி-;
கார்முகில் வண்ணனே–காளமேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;
அடைந்திட்ட மரர்கள் ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி –
சாபோபஹதரான இந்த்ராதி தேவர்கள் நெருங்கி வந்து
(அமரர்கள் மிடைந்து -நெருங்கி -அடைந்திட்டு என்று இங்கே )
எங்களை ரஷிக்க வேணும் என்று ஆஸ்ரயித்த படியாலே
அவர்களுக்காக அம்ருத மதனம் செய்வதாக
அத்யகாதமான ஷீராப்தியை
ஓஷதி விசேஷத்தாலே தத்த்யவஸ்தமாக்கி-( தயிர் உறை குத்துவது போல் )
அதிலே மந்த்ரத்தை -மலை ஆமை மேல் வைத்து -நான்முகன் திரு -49- என்கிறபடி மத்தாக நாட்டி
இட்டு -கடைவதாக இட்டு
நாட்டி -என்றது
கூர்மாகாரத்தின் உடைய முதுகில் மலை செல்லாதபடி
பாலுறைவு தாங்குகையாலே இறே இட்டு நாட்ட வேண்டிற்று –
வடம் சுற்று வாசுகி வன் கயிறாகக் –
இப்படி ஊன்ற நாட்டின மந்த்ரத்திலே பெரும் தேர் நடத்தும்
வடம் போலே இருக்கிற வாசூகியை வலிய உயிர்க் கயிறாகச் சுற்றி –
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி —
லோக உபகாரகமாக நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலே இருக்கிற திரு மேனியை யுடையவனே –
———————————————————————-
ஆட் கொள்ளத் தோன்றிய வாயர் தம் கோவினை
நாட கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –1-6-11-
பதவுரை
ஆள் கொள்ள–(அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய–திருவவதரித்த (திரு ஆய்ப்பாடியிலேயே திரு அவதரித்ததாக அன்றோ இவர் திரு உள்ளம் )
ஆயர் தம் கோவினை–இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்–ஆசையினால்
நாள்–எந்நாளிலும்
கமழ்–மணம் வீசுகின்ற
பூ–புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்–சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்–சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்–இஷ்டத்தோடு
சொல்லுவார்–ஓதுகிறவர்களுடைய
வினை–பாபங்கள்
போம்–(தன்னடையே )அழிந்து போம்.
நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
ஆட் கொள்ளத் தோன்றிய வாயர் தம் கோவினை
ஆட்கொள்வானாக விறே அடிமைக்கு இசையாத மண்ணின் பாரங்கள் வர்த்திக்கிற வட மதுரையை விட்டு
திரு வாய்ப்பாடியிலே அவதரித்ததும்-
இங்கு தான் அடிமைக்கு இசைந்தார் யுண்டோ என்னில்
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னன் –2-5-1-என்றார்களே –
அர்ஜுனனையும் கரிஷ்யே வசனம் தவ -கீதை -18-73-என்ற பின்பு
ஸ்ரீ கிருஷ்ண தாசன் -என்று இறே உடையவர் அருளிச் செய்வது
பாவோ நான்யத்ர கச்சதி -என்ற பின்பு இறே ஸ்ரீ ராம தாசன் என்றதும்
சொன்னது செய்வேன் என்றவனுக்கும்
செய்யேன் என்றவனுக்கும்
தாசஸ்த்வம் குண பரமாக யுண்டாய்த்து இறே
இவருக்கு ஸ்ரீ ராம குணம் சாத்மியாது இருந்தது ஸ்ரீ ராம பாக்யத்தாலே இறே
நான்யத்ர என்னாதே கூடப் போருவேன் என்றார் ஆகில்
திரு உள்ளத்தை வ்யாகுலிப்பித்தார் ஆவார் இறே
(குணத்தால் இவரை வெல்ல முடிய வில்லையே என்று வ்யாகுலம் )
அடிமை செய்து இறே அடிமை கொள்வதும்
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் ஆகையாலே -பெரிய திருவந்தாதி -32-
(அடிமையாய் இருந்து ஆள வந்த கோ என்னப் பண்ணுபவன் )
அடிமை புக்கவர்களும் –
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு -நான் முகன் திரு -50 என்றார்கள் இறே
ஆயர் தம் கோவினை
ஆயர்களுக்கு நிர்வாஹகன் ஆனவனை
நாட் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
நாள் பூக்கள் கமழும்படியான சோலையாலே சூழப் பட்ட ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அகால பலிநோ வ்ருஷா-யுத்த -127-18-என்கிறபடி
பழம் பூ நாற்றம் தோன்றாமல் செல்லும் இறே
(அகால பூக்களே இல்லையே இங்கு
அங்கு பூக்க வேண்டாத காலத்தில் பூத்தது )
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
இவர் விஞ்சின விருப்பத்தால் அருளிச் செய்த
ஆகிஞ்சன்ய பிரகாசகமான –
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே —
இவருடைய பாவ பந்தம் இல்லையாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாத்ரத்தை விருப்பத்தோடு சொல்லுவாருக்கு
இவரைப் போலே மங்களா சாசனம் பண்ணப் பெற்றிலோம்
என்கிற வினை போம் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply