பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -தனியன்/ 1-1-வாடினேன் வாடி வருந்தினேன்-

திருமங்கை நாடு -சோழ மண்டலம் -திருக்குறையலூர் -கள்ளர் குடியில் -கலி யுகம் -398-வருஷம் -நள ஆண்டு –
வியாழக் கிழமை -பௌர்ணமி -திருக் கார்த்திகையில்-திருக் கார்த்திகை நாள் திருவவதாரம் -நீலன் -பரகாலன்
திருமங்கை நாட்டரசன் –
நீர்மேல் நடப்பான் -நிழலில் ஒதுங்குவான் -தாளூதுவான் -தோலா வழக்கன் -நால்வர்
ஆசுகவி மதுர கவி விஸ்தார கவி -சித்ர கவி
ஆலிநாடன் அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்-

———————————————

திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த தனியன் –

கலயாமி கலித்வம்சம் கலிம் லோகதிவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம –
கோ -கிரணம் சொல் ஆவித்யம் –அவித்யயா க்ருதம்-அஞ்ஞானம்

———————————————–

எம்பெருமானார் அருளிச் செய்த தனியன்

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரம் கொள்
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்

————————————————-

ஆழ்வான் அருளிச் செய்த தனியன் –

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே
அஞ்சு -எழுத்து -சொல் -பொருள் -யாப்பு அணி -லஷணங்கள்-

———————————————————-

எம்பார் அருளிச் செய்த தனியன்

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –
———————————————————-

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அல்லது ஸ்ரீ சோமாசியாண்டான் அருளிச் செய்தது

மாலைத் தனி வழியே பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே -வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து –

——————————————————-

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-1-

உய்வதோர் பொருளால் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து -ஜ்ஞானம் என்கிற சிறந்த ஸ்தானத்தில் அடி வைத்து
பெரும் பதம் தெரிந்து -பாட பேதம்
பழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுதேன்
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா விருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
சம்சார சாகரம் கோரம் அனந்த க்லேச பாஜனம்
திரு நாமமும் -திரு நாமத்துடன் கூடிய திரு அஷ்டாஷர மந்த்ரத்தளவும்-

———————————————————

ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் –1-1-2-

வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்துறையும் இன் துணைவன் –
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும்-பெருமாளும் பிராட்டியாரும்- நித்யவாசம் செய்யும் திருக்குடந்தை
அபராதங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாதே -நித்யவாசம் செய்யும் திருக்குடந்தை
சரம பிரபந்தத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று அருளி தலைக்கட்டுவர்-

———————————————————–

சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி –
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

பேதை-5-7/பெதும்பை -8-12/மங்கை -13/மடந்தை -14-19-/அரிவை -20-25/தெரிவை -26-32
பொதுப் பெயராகவும் ஸ்திரீகளுக்கு பிரயோகம் உண்டு

—————————————————————–

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி
வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத் தேனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -8-8-3- மேலும் அருளிச் செய்வர்-

———————————————————————-

கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன்
கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன்
நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

எம்பெருமான் உடைய ஆத்ம வஸ்துவை அபஹரித்தேன்

——————————————————————–

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -ஸூ பால உபநிஷத் –
திருமந்தார்த்தம் அருளிச் செய்கிறார் இதில்-

—————————————————————–

இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர்களைக் கண் என்று வுலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின்
நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

இல் அறியீர் பிறப்பு அறியீர் -இழிவான அனுஷ்டானம் இழிவான குலம்
கற்பகம் புலவர்களைக் கண்-கற்பக விருஷம் என்றும் -புலவர் என்று -ரஷகர் என்றும் -புலவர்களுக்கு ரஷகர் என்றுமாம் –
இவரவர் -இன்னார் இனையார்
சொல் பொருள் ஆளீர் -சொல் இன்பம் பொருள் இன்பம் கொண்டு கவி பாட வல்லீர்-

————————————————————–

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

செற்றமே வேண்டி -தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு-

——————————————————-

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நிலம் தரும் -தரை மட்டம் ஆக்கிவிடும்
பெரு நிலம் -கைங்கர்ய சாம்ராஜ்யம்
வலம் -பகவத் அனுபவத்துக்கு பாங்கான சக்தி
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
செல்வம் -அந்தரிஷத கத ஸ்ரீ மான் /லஷ்மணோ லஷ்மி சம்பன்ன /சது நாகவர ஸ்ரீ மான் /
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -பெருமாள் திருமொழி
படு துயர் -அனுபவித்தே தீர வேண்டியவை
நிலம் தரம் -விலகிப் போகும் என்றுமாம்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றுக் கண்டிலமால்
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக –

————————————————————

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை
இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

திருமந்த்ரமே சம்சாரம் வேர் அறுக்க வல்லது
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் -நமோ நாராயணமே-6-10-6- மேலே அருளிச் செய்வர்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading