ஷீராப்தி வைபவம் –
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை
சுடராழி சங்கி இருபால் பொலிந்து தோன்ற
திருமடந்தை மண்மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி யாயிரம் மின்ன
கடலோதம் கால் அலைப்ப
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்டு
இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனனும் இறைஞ்சி ஏத்த
கொந்தலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருந்து
—————————————————————————————————————————————————————————
அவதார காரணம்
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
பாரேறு பெரும் பாரம் தீர
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீங்குதற்கே-வேண்டித்
வேண்டித் தேவர் இரக்கச் சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற -இவனைப் பெற்ற
வயிறு உடையாள் என்னும் வார்த்தை எய்துவிக்கத்
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த
தாயைக் குடல் விளக்கம் செய்யக்
———————————————————————————————————————————————————————————
அவதாரம் –
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வடமதுரையில்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பெரியாத தேவகி தன வயிற்றில்
அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிக்
கஞ்சன் வலைத்தவன்று காரிருள் எல்லில் பிழைத்து
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர்ச் சிறுவன் என்னக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரனாய்த்
தெய்வ நங்கை யசோதைக்கு
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பல தேவற்க்கோர் கீழ்க் கன்றாய்
ஆயர்கள் நாயகனாய்
ஆயர் பாடிக்கு அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்துக்கும் கொழுந்தாய்
காண்டலின்றிக்
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்து
——————————————————————————————————————————————————————-
ஆயர்பாடியில் மங்களம் கொண்டாடுதல்-
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட
அயலிடத்து பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்த மனையாள் அசோதை என்னப் பேணிச் சீருடைப் பிள்ளை
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
————————————————————————————————————————————
பூதனை வதம்
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொடு
வன் பேய்ச்சி தன்மகனாகத் தான் முலை உண்ணக் கொடுக்க
முலை உண்பான்போல் முனிந்துண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கி
சூருருவின் பேயளவு கண்டு
——————————————————————————————————————————————–
சகட பங்கம் –
மாணிக்கம் கட்டி வயிர மிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
உறங்குவான் போலே கிடந்தது
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே -தாளை நிமிர்த்து
தாளை நிமிர்த்து
உருளும் சகடம் உதைத்து
—————————————————————————————————————————————————
கண்ணனுக்கு நாமகரணம் செய்தல்
ஆய்ப்பாடியாயர்
பத்துநாளும் கடந்த விரண்டா நாள் எத்திசையும் சயமரம் கோடித்துக்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த
——————————————————————————————————————————————————-
பால லீலைகள் –
மாயக்கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண் கிணி யார்ப்ப புழுதி யளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச்
கோமள வெள்ளி முளைப் போல் சில பல் விலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தந்தந்து -ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணை புரட்டி விழித்துக் கழை கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய வுறங்கி
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாரும் சிரிப்ப
மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால்
வாணிலா வம்புலீ சந்த்ரா வா வா என்று
அம்புலி விளித்து
———————————————————————————————————————————————————————
யசோதை பிள்ளை வாயுள் வையம் ஏழும் கண்டது
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறந்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வாயுள் வையம் ஏழும் காண
ஆடியாடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
————————————————————————————————————————————————————–
யசோதை கண்ணனை உரலில் கட்டுதல் –
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணெய் யைத்
தாயார் மனங்கள் தடிப்ப
உளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி
சீரால் அசோதை
அன்புற்று நோக்கி யடித்தும் பிடித்தும்ம் அனைவர்க்கும் காட்ட
ஊரார்கள் எல்லாரும் காண
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து
விண் எல்லாம் கேட்க அழுது
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி
————————————————————————————————————————————————————————————
மருத மரங்களை முறித்தது –
மணமருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப்போய் உரலோடும்
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊறு கரத்தினொடும் உந்தி
எண்டிசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்திட்டு
————————————————————————————————————————————————————————
மாடு கன்றுகளை மேய்த்தல் –
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்தும் எங்கும் ஆர்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் தன நம்பியோட பின் கூடச் சென்று
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு
வெண்ணெய் விழுங்கி வெருங்கலத்தை வெற்ப்பிடை இட்டு அதனோசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லவம் புகுந்தவர் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களைஇனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல் வனமாலை மினுங்க நின்று விளையாடி
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழலூதி
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைய குழல்களும் கீதமுமாகி
முற்றத்தூடு புகுந்து தன முகம் காட்டி புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன் வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியோமே
ஆயிர நாழி நெய்யைப் பாகம் தான் வையாது உண்டு
————————————————————————————————————————————————————————–
வத்சாஸூர பகாஸூர வதம் –
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ளவசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்டு
———————————————————————————————————————————————————————
தேணுகாஸூ ர வதம் –
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி
நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோள் இல்லையாக்கி
——————————————————————————————————————————————————————-
காளிய மர்த்தனம் –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப்
பூத்த நாள் கடம்பேறித் தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப் படம்பாடு பைந்தலை
மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்து
வேயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
————————————————————————————————————————————————————–
பிரலம்ப வதம் –
பாண்டி வடத்தில்
பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வெல்ல
——————————————————————————————————————————————————————–
கண்ணன் காட்டுத் தீயை விழுங்கல்-
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று
தான் விழுங்கி உய்யக் கொண்டு
————————————————————————————————————————————————————————–
கண்ணன் வேணு கானம் செய்தல் –
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிடத் துள்ளி
விளையாடித் தோழரோடு
கானகம் பாடி உலாவி
உலாவிச் சிறு விரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்கக்
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவலர் சிறுமியர்
இளங்கொங்கை
குதுகலிப்ப மேனகையோடு திலோத்தமை யரம்பை
உருப்பசியரவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறப்பப்
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க
மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த
புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலங்கா புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய
மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக்
கொழுத்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி
—————————————————————————————————————————————————————-
கோபியர் வஸ்தராபஹரணம்-
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் ஆயர் மட மக்களைப் பின்னே
சென்று ஒளித்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு
அரவேரிடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி
——————————————————————————————————————————————————————-
வேள்வி மங்கையர் போகய அன்னம் சமர்ப்பித்தது –
பத்த விலோசனத்தில் வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
வேண்டடிசில் உண்டு
————————————————————————————————————————————————————–
கோவர்த்தனத்தைக் குடையாக எடுத்தது –
இந்தரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில்
பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெருமலை போல்
அமைந்த சோறது எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண
மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டு வர
காள நன்மேகமவை கல்லோடு கார் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பமாக மடுத்து மணி நெடும் தோள்
காம்பாகக் கொடுத்துக் கல் எடுத்துக் கன்மாரி காத்து
———————————————————————————————————————————————————————
கண்ணன் கோபிமாரோடு விளையாடுதல் –
மங்கல நல் வனமாலை மார்விலி லங்க
மயில் தழைப் பீலி சூடி
பொங்கிள வாடை யரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
குலைந்து குழல் இனிதூதி
கொல்லமை செய்து குரவை பிணைந்து
சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்து
—————————————————————————————————————————————————————-
கேசி வதம் –
மாவாயின் அங்கம் மதியாது கீறி –
————————————————————————————————————————————-
கண்ணனும் பலராமனும் மதுரைக்கு எழுந்து அருளுதல் –
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி-
————————————————————————————————————————————–
கூனியினுடைய கூனலை நிமிர்த்தல்
நாறிய சாந்தம் நமக்கு நல்கு எண்ணத்
தேறி அவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனினை உல் ஒடுங்க அன்று ஏறி யுருவி-
—————————————————————————————————————————————
குவலயா பீட வதம் –
வில் பிடித்து இருத்து
வள வெழும் தவள மாடம் மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மறுப்பு ஓன்று பறித்து-
—————————————————————————————————————————–
மல்லர் வதம் –
இருமலை போல் எதிர்ந்த மல்லர் இருவர்
வலிய முடி இடிய வாங்கி-
——————————————————————————————————————————
கம்ச வதம் –
செம்பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டோடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
கேடகம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து
உயிரது உண்டு
அவன் மாளக் கண்டு
—————————————————————————————————————————————–
சாந்தீபன் புத்ரனை மீட்டுக் கொடுத்தது –
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா யுரு யுருவே கொடுத்து –
—————————————————————————————————————————-
ருக்மிணி பரிணயம் –
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைபிடித்து
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய்
பெண் அமுதுண்டு
————————————————————————————————————————-
ஏழ் விடை செற்று பின்னையை மணந்தது –
துப்புடையார்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல் நல தோகை மயிலனைய
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழ் அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று –
——————————————————————————————————————————–
நரகாசுர வதம்
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து-
——————————————————————————————————————————–
த்வாரகை ஏற்படுத்தியது –
பதினாறாயிரம் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராக வீற்று இருந்து –
———————————————————————————————————————————-
பாரிஜாத அபஹரணம் –
என்னாதான் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்த்ரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து –
————————————————————————————————————————————-
வாணன் ஆயிரம் தோளும் துணித்தது –
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலை கட்டழித்துப்
பரிவின்றி வாணனை காத்தும் என்று அன்று
படையொடும் வந்து இருந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவி
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய ஆழி சுழற்றிய-
———————————————————————————————————————————–
பௌண்டரக வாசுதேவ பங்கம் –
புகராருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு
அரசன் நகராயின பால்பட நாமம் எறிந்து
காய் சினந்த காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து-
———————————————————————————————————————————-
சிசுபால வதம் –
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடையப்
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாள்
இணைக் கீழ் சேர்த்துப் –
—————————————————————————————————————–
தந்த வக்கரனை முடித்தல் –
பொங்கரவ வக்கரனைக் கொன்று –
——————————————————————————————————————
த்ரௌபதி கண்ணனை சரணம் அடைதல் –
அனந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணி இழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்ன
——————————————————————————————————————-
கண்ணன் விஸ்வரூபம் எடுத்தது –
பங்கயக் கண்ணன்
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதன்னாய் மன்னவனால் சொல்லுண்டு
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
ஓர் பாரதமாம் பெரும் போரில்-
—————————————————————————————————————
பார்த்தன் தேரில் கண்ணன் பாகனாய் நின்றது –
பற்றலர் வீயக் கையில் கோல் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை –
——————————————————————————————————————————-
அர்ச்சுனன் கண்ணன் சேவை மேல் அர்ச்சித்த
பூவை சிவபெருமான் முடியிலே கண்டது –
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய –
——————————————————————————————————————
ஸ்ரீ கீதை யுபதேசம் –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத் தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையினால் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்து நின்று –
——————————————————————————————————————
ஜெயத்ரனை மடித்தது-
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப
சயத்திரன் தன் தலையைப்
பாழில் உருளப் படை பொருது
——————————————————————————————————————-
பரிஷித்தை உயிர் மீட்டு அருளியது –
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்து
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து
அவர்களையே மன்னராக்கி –
————————————————————————————————————————-
வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தல் –
வேதவாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தாலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும்-என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் போழ்தில்
எல்லா வுலகும் கழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்
உடனேறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து-
————————————————————————————————————–
ஆதி அஞ்சோதி உருச் சேர்த்தல் –
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ உலகில் புக உய்த்து
கதையின் திருமொழி யாய் நின்று
நல்குரவும் செலவும் நரகமும் ச்வர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்து
வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
மால்வண்ணன் தாள் தாமரை யடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திச்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி
ஏதமில் தண்ணுமை யக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கி திருவடி தொழ
பாடுநல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவ அமளியில் அறி துயில் அமர
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே நம்பால் –
—————————————————————————————————————————————————
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைத்
தொழுது நன் மொழியால் தொகுத்துரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்
சித்தமும் திருவோடு மிகுமே
பொலிக பொலிக பொலிக
———————————————————————————————————————————————–
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply