ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -தனியன்/-அவதாரிகை/முதல் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

ஸ்ரீ திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமையில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு-

இரு விகற்ப நேரிசை வெண்பா –
இதில் ஆண்டாளின் ஐஸ்வர்யமும் அபிஜாத்யம் முதலான
வைபவங்கள் கூறப்படுகின்றன –
பெரிய பிராட்டிக்கு தோழியாகவும் –
மணமகளும் திருவும் நிழல் போல்வனர் -திரு விருத்தம் –
பூமிப் பிராட்டியின் அம்சமாக அன்றோ ஆண்டாளின் திருவவதாரம் –

மல்லி நாட்டை -ஆளுகை யாவது –
அங்கு உள்ளாரை தனது குணங்களால் தன்னிடம் ஈடுபடுத்துகை

மட மயில்-பெரியாழ்வார் இடம் ஒதுங்கி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்றபடி
பெரியாழ்வார் அபிமானத்தால் வளர்ந்தமை சொல்லுகிறது

மெல்லியலாள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தனக்குமேல் எனதாவி தங்குமே –
என்னும்படி ஷண காலமும் பிரிவு பொறுக்க மாட்டாத சௌகுமார்யம்

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-
சௌகுமார்யத்தால் பிரிவாற்ற மாட்டாமல்
என்னாகத்து இளங் கொங்கை விரும்பித் தான் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே–என்னும்படி
கண்ணபிரான் திருமேனியில் பொருத்தமுற்று இருக்குமவள் -என்கை-

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு –
இத்தால் ஆபி ஜாத்யத்தாலும் இவள் கண்ணபிரானுக்கு ஏற்றவள் என்கை –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்குக்கு
வேயர் பயந்த விளக்கு அநு ரூபமாய் இருக்கும் என்கை

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் -5-4-11—என்றபடி –
அமுதனார் குடி மூங்கில் குடி போலே
பெரியாழ்வார் குடி வேயர் குடி எனப்படும் –

—————————————————————————————-

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

கட்டளைக் கலித்துறை

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை நோக்கி -சங்கே -எம்பெருமானுடைய திருப்பவளச் செவ்வாய்
கற்பூரம் நாறுமோ –கமலப் பூ நாறுமோ சொல்லாய் -ஏழாம் திரு மொழியின் அர்த்தம்
அதன் குணத்தை வினவுகின்றமை உணர்த்துகிறது –

தென் திரு மல்லி நாடி –
தலைவியும் –

செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் –
சூடிக் கிடைத்த நாய்ச்சியார் என்று பெரியாழ்வார்
திரு நாமம் சாத்தும் ஐதிகம் –

மதிப்புடைய சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

பாட்டுக்கு முத்தமிழ் வில்லி புத்தூர் வரும் பாவை குழல்
சூட்டுக்கு நல்லவர் தென்னரங்கோர்–திருவரங்கத்து மாலை

————————————————————————-

அவதாரிகை –

நாத முனிகள் -இத்தை முதல் ஆயிரத்தில் நான்காவது பிரபந்தமாக சேர்த்து அருளினார் –
நாய்ச்சியார் திருமொழி -நாச்சியார் திரு மொழி –
மூ வுலகுங்களுக்கும் தலைவியாய்
சர்வேஸ்வரனுக்கு தேவி -என்றபடி
பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளையை பிரகரணத்தால் உணர்த்துகிறது
ஆண்டாள் உடைய சிறந்த வார்த்தை –
ஆண்டாள் திருவாய் மலர்ந்து அருளின திவ்ய பிரபந்தம் –
மேன்மையான சொல்களினால் ஆகிய நூலைக் குறிக்கிறது-

கீழ் திருப்பாவையில்
உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -என்று
சித்த சாதன ஸ்வீகாரமும்
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் -உனக்கே நாம் ஆட்செய்வோம் –
என்று பிராப்ய நிஷ்கர்ஷமும் செய்யப் பட்டன –

பேற்றுக்கு உறுப்பாக்க இவ்வளவு பிரதி பத்தி ஆண்டாளுக்கு பிறந்த அளவிலும்
கண்ணபிரான் இவளுடிய அபி நிவேச அதிசயத்துக்கு தக்கவாறு வந்து கலவி செய்து வந்து நிற்க காணாமையாலே
ஆண்டாள் யுகத அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாளாய் கலங்கி
மடல் எடுப்பது போலே
பிரிந்தவர்களை கூட்டுகையே இயல்பாக உடைய காமன்
காலிலே விழத் தொடங்குகிறாள்
முதல் திரு மொழியிலே

சாத்விகரான பெரியாழ்வார் திருமகளாய்
மறந்தும் புறம் தொழாது இருக்க வேண்டி இருக்க
ஸ்வரூப விருத்தமாக தேவதாந்த்ரத்தின் காலில் விழுவது பொருந்துமோ –
பொருந்தும்

பிராப்ய வஸ்துவின் இடம் பிராவண்யம் அடியாக உண்டாகின்றதே
அன்று
தேவதாந்தரத்தில் ஸ்வ தந்தரமாக பரத்வ புத்தி பண்ணியது அடியாக அல்லவே
பிரேம பரவசர் கலக்கத்தினால் செய்யும் செயல் தானே இது

ஞானம் கனிந்த நலம் –ஞான பரிபாகமான பக்தியின் காரணமாக
பிராப்த அப்ராப்த விவேக சூன்யதையால் வந்த
பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் புகழத் தக்கனவேயாம்
கருமம் அடியாக அஞ்ஞானத்தால் வருமவையே ஹேயம்

இந்த அதிபிரவ்ருத்தி
சித்த உபாயமான எம்பெருமான் பண்ணின கிருஷியின் பலன் –
மயர்வற மதிநலம் அருளினான் –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –
பக்தியைப் பிறப்பித்து -வளரச் செய்து -எம்பெருமான் கிருஷி பண்ண
இந்த பக்தி பாரவச்ய நிபந்தனமான இந்த ப்ரவ்ருத்தி உபாய பலம்

மேலும் கண்ணாம் சுழலை இட்டு இத்தலை படுகிற அலமாப்பு எல்லாம்
நம்மை ஆசைப் பட்டு இப்படி படப் பெறுவதே என்று
அவன் திரு முகம் மலருகைக்கு உறுப்பாக
மடல் எடுக்கை
நோன்பு நோற்கை
இவை கைங்கர்யத்தோடு ஒக்க -உபேயத்தில் அந்தர் பூதமாகும்-

சக்கரவர்த்தி திரு மகனை அல்லாது மற்று அறியாத அயோத்யா வாசிகளும்
அவருக்கு நன்மையை விரும்பி சகல தேவதைகள் காலில் விழுந்தார்களே
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே-
திருவடியும் கடலைக் கடக்கும் பொழுது இதே போலே –

குழந்தைக்கு ஆமமற்று பசிக்கும் தனையும்
சோறிடாத் தாய் போலே
ஆசை கடல் போலே பெருகி வர வேண்டும் என்றே தாழ்கின்றான் -என்க–

————————————————————————

கண்ண பெருமானை பெருகைக்காக மார்கழி மாசம் முழுவதும் நோன்பு நோற்றும் கலக்கக் காணாமையால்
தரித்து இருக்க மாட்டாளாய்
பிரிந்து இருப்பவர்களைக் கூட்ட வல்ல காமனை நோக்கி
உன்னையும் உம்பியையும் தொழுதேன் –
நீ என்னை கண்ண பிரான் உடன் கூட்டி விட வேண்டும் -என்று
அவன் காலில் விழுந்து இரக்கும் படியைக் கூறும் திருமொழி –

தன் கார்யம் செய்யும்படிக்கு ஈடாக ஆராதிக்க நினைத்து
அவன் வர வேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து
அழகிய சிறு மணல்களாலே அலங்கரித்து
அழகு பெறவித்து மண்டல பூஜைக்காக மண்டலாகாரமான மேடை இட்டு
அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம்

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

பதவுரை

அனங்க தேவா–காம தேவனே!
தைஒரு திங்களும்–தை மாதம் முழுதும்
தரை விளக்கி–நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு–குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசிமுன் நாள்–மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில்
ஐய நுண்மணல் கொண்டு–அழகிய சிறிய மணல்களினால்
தெரு–(நீ எழுந்தருளும்) வீதிகளை
அழகினுக்கு அணிந்து அலங்கரித்து–அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து
உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி–(காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி
உன்னையும்–(காமனாகிய) உன்னையும்
உம்பியையும்–உன் தம்பியான சாமனையும்
தொழுதேன்–வணங்கா நின்றேன்
வெய்யது–(ப்ரதி கூலர் பக்கலில்) உக்கிரமானதும்
தழல் உமிழ்–நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான
ஓர் சக்கரம்–ஒப்பற்ற திரு வழி யாழ்வானை
கை–திருக் கையில் அணிந்துள்ள
வேங்கடவற்கு–திருவேங்கட முடையானுக்கு
என்னை–என்னை
விதிக்கிற்றி–கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும்
(ஏ-ஈற்றசை)

“உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில்,
ஸ்வரூப நாசத்தை விளைவிக்க வல்ல தேவதையைப் பற்றினமையால் இப்பற்று உஜ்ஜீவந ஹேதுவாமோ? அன்றி,
கீழ் விழுகைக்கு ஹேதுவாமோ? என்று நெஞ்சு தளும்புகிறபடி,

திங்கள் – சந்திரன்: அமாவசைக்கு அமாவசை ஒருமாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற் காலத்தை
வரையறுக்கும் சாந்திரமானரீதிபற்றி, ‘திங்கள்’ என்று மாதத்திற்குப் பெயர்; வழங்கலாயிற்று:
மதி என்பதும் இது; இலக்கணை.

தரை – பூமிக்கு வாசகமான் ‘யாரோ’ என்ற வடசொல் தரையெனத்திரியும்.
விளக்கி-விளங்கச் செய்து என்றபடி.
மண்டலமிடுகையாவது மண்டல பூஜை யென்கிற ஒரு ஆராதனத்தைச் செய்வதற்காக மண்டல வடிவமான காலைக் கொண்டு
நடக்குமிடத்தில் பெரிய மணல்களிருந்தால் காலில் உறுத்துமென்று நொய் மணல்களாக ஆராய்ந்து அலங்கரித்தபடி.

அணிந்து- என்று சொல்லி வைத்து,
மீண்டும் “அழகினுக்கு அலங்கரித்து” என்றது புநருக்தமாகாதோ எனில்: ஆகாது
‘தெருவை அலங்கரித்து’ என்றவாறே வேறொரு பிரயோஜனத்தை உத்தேசித்து அலங்கரித்தபடியோ,
அழகு பெறுவித்தலையே ப்ரயோஜனமாகக் கொண்டு அலங்கரித்தபடியோ? என்று சங்கையை ஏறிட்டுக் கொண்டு,
‘அழகினுக்கலங்கரித்து’ என்றதென்க.
மீமிசைச் சொல்லுமாம்: ‘தொழுதிறைஞ்சி, ஏத்தித் துதித்து’ என்பன போல.

அனங்கதேவா! – இது வடமொழி விளி. அனங்கன் – உடம்பில்லாதவன்: காமன் உடலிழந்தவரலாறு:-
முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிற் பரம சிவன், ஸநகர்; முதலிய நால்வாக்கு யோக நிலையை உணர்த்துதற்காகத்
தான் யோகஞ்செய்து கொண்டிருக்கையில், பிரமனது ஏவலால் மலரம்புகளை எய்து தனது தவத்தைக் கெடுக்கலுற்ற
மன்மதனைச் சினந்து நெற்றிக் கண்ணை விழித்து அதன் நெருப்புக்கு இரையாய் உடலெரிந்து சாம்பலாய்ப் போம்படி செய்தனனென்பதாம்.
மன்மதனுக்குப் பல பெயர்களிலிருக்க, அவற்றை விட்டு ‘அனங்க தேவா!’ என்றழைத்தமையால்,
‘நீ உன் உடம்பை இழந்தும் பிரிந்தாரைக் கூட்டுமவனல்லையோ’ என்னுங் கருத்துத் தோற்றுமாறு காண்க.

“என்று சொல்லி” எனறவிது – வார்த்தைப்பாடு: ‘என்று நினைத்து’ என்பது அதன் பொருள்.
‘நீ இங்கிருப்பாயென்று சொல்லி நான் வந்தேன்’ என்றால்
‘நீ இங்கிருப்பாயென்று நினைத்து நான் வந்தேன்’ எனப் பொருளாகக் கடவதிறே:

(உன்னையும் இத்யாதி.) மனமதனை மாத்திரம் தொழுதாற் போராதோ? கூட அவன் தம்பிக்கும் வந்த வாழ்ணுவு என்? எனில்;
ஆண்டாள் திருப் பாவையில் கண்ண பிரானைப் பற்றும் போது நம்பி மூத்த பிரான் முன்னாகப் பற்றினளாதலால்,
அந்த வாஸனையாலே இங்கும் மன்மதனை உடன் பிறந்தானோடு கூட உபாஸிக்கிறபடி.

உம்பி – ‘உன் தம்பி’ என்பதன் மரூஉ.
“காமன் தம்பி சாமன்” என்று பெரியவாச்சான் பிள்ளை உரைத்தருளினார்’
அதன் விவரணம்’ கண்ண பிரானுக்குத் தேவிமார் பலர் உளரென்றும்,
அவர்களுள் ருக்மிணிப் பிராட்டியிடத்தில் மனமதாம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனன் என்றும்.
ஜாம்பவதி தேவியினிடத்தில் ‘ஸாம்பன்’ என்பவன் பிறந்தனன் என்றும்,
ஸ்ரீபாகவதத்திற் கூறியுள்ளதனாலும், இங்குச் சாமன் என்பது ஸாம்பனையே யாகையாலும்
காமனுக்குச் சாமன் தம்பியாயினனென்க. (வேற்று வயிற்றுத் தம்பி.)

மன்மதனைத் தொழுகைக்கு ப்ரயோஜநஞ் சொல்லுகிறது-நான்காமடி.
ஸ்ரீ வைகுண்டத்தில் அயர்வறுமரர்கட்குக் காட்சிக் கொடுத்துத் தன் செருக்குத் தோற்ற வீற்றிருக்குமவன்
‘ஸம்ஸாரிகளும் இப் பேற்றைப் பெற்று வாழ வேணும்’ என்று அங்கு நின்றும் போந்து முதற்பயணமெடுத்து விட்டு,
அடியாருடைய விரோதிகளை ஒழிக்கு மியல்வின்னான திருவாழி யாழ்வானைக் கையிலுடையனாய்க் கொண்டு
திருமலையில் வந்து நிற்கிறவனோடே என்னைக் கூட்ட வேணுமென்கிறாள்.

(விதிக்கிற்றி) விதிக்க + கிற்றி, விதிக்கிற்றி’ விகாரப் புணர்ச்சி.
இனி, கிற்றியே’ என்றவிடத்துள்ள ஏ என்பதை அசையாகக் கொள்ளாமல் வினாக் குறிப்பாகக் கொண்டு,
எம்பெருமானோடு என்னை நீ கூட்ட வல்லையோ? என வினவியதாகவும் உரைப்பர்.

———————————————————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே–1-2-

பதவுரை

காமதேவா–மன்மத தேவனே!
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு
முள்ளும் இல்லா சுள்ளி–(எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை
எரி மடுத்து–நெருப்பிலிட்டு
முயன்று–(இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து
உன்னை தோற்கின்றேன்–நோன்பு நோற்கா நின்றேன்’
(ஆன பின்பு,)
கள் அவிழ்–தேன் பெருகா நின்றுள்ள
பூ புஷ்பங்களாகிற கணை–அம்புகளை
தெரு அணிந்து–வீதிகளை அலங்கரித்து,
வெள் வரைப் பதன் முன்னம்–கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே
துறை படிந்து–நீர்த் துறைகறில் முழுகி,
தொடுத்துக்–கொண்டு (வில்லில்) தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி–கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை
(அம்பிலே) எழுதிக் கொண்டு
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில்–‘பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன்,
என்னும் ஓர் குறியாகிற அக்கடல்வண்ணன் பக்கலில்)
புக–(நான்) சென்று சேரும்படி என்னை என்னை
எய்கிற்றி (நீ) சேர்ப்பிக்கவேணும்.

சிறிய வெண்மணல்களைக் கொண்டு வீதிகளை அலங்கரித்தலும், நாட்காலே நீராடுதலும்,
ஸமித்துக்களை நெருப்பிலிட்டுத் தீவளர்த்தலும் இங்குக் காமநோன்புக்கு உறுப்பாகச் செய்யுமவை யென்க.
ஸ்ரீ எம்பெருமான்றானே வந்து நம்மை ஸ்வீகரிக்க நிற்றல் ஸ்வரூபாநு ரூபம் என்று அறுதியிட்டு நிற்கக் கடவளான நான்,
இப்போது அவனைப் பெறுகைக்குச் செய்யும் முயற்சி இது காணாய் என்கை.

இம்முயற்சிக்கு ப்ரயோஜநங் கூறுவன, பின்னடிகள்.
கள்ளவிழ்பூங்கணை- அரவிந்தம், அசோகம், மா, நவமல்லிகை, கருநெய்தல் ஆகிய இவ்வைந்து மலர்களும் மன்மதனுக்கு அம்புகளாம்.

(கடல்வண்ணன் இத்யாதி.) ‘எழுதி’ என்றது – அம்பிலே எழுதி என்றனவாறுமாம்’
நெஞ்சிலே எழுதிக் கொண்டு என்றவாறுமாம்’ நெஞ்சிலே எழுதிக்கொண்டு என்றவாறுமாம்’

‘அம்பிலே எழுதிக் கொண்டு’ என்ற பக்ஷத்தில் ‘ச்ரமஹரமான வடிவையுடைய உன்னை ஆண்டாள் ஆசைப்பட்டாள்’ என்று
அம்பிலே எழுதி எய்து அவ்வழியாலே அவனுக்கு என்மீது ஆசையை உண்டாக்கிப் பின்னே
அவனோடு என்னைச் சேர்க்கவேணுமென வேண்டுவதாகக் கருத்து உணரத்தக்கது’

இனி ‘நெஞ்சிலே எழுதிக்கொண்டு’ என்ற பக்ஷத்தில்,
இன்னானோடு இவளைச் சேர்ப்பிக்கவேணுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு என்றபடி.

“வெள்வரைப்பதன் முன்னம்” என்றது ‘வரைவெளுப்பதன் முன்னம்’ என்றபடியாய்’
உதயகிரி வெளுப்பதற்குமுன்னே எனப்பொருள்படுமென்பர்.

புள்ளினைவாய் பிளந்த வரலாறு:- ஒரு காலத்தில் கண்ணபிரான் பலராமனோடும் இடைப் பிள்ளைகளோடுங் கன்றுகளை
மேய்த்துக் கொண்டு யமுநாநதியைச் சேர்ந்து, யாவருங் கட்டுச்சோறு தின்று யமுனையிலிறங்கி நீர் குடித்துக்
கன்றுகளையும் நீரூட்டிக் கரையேறுகையில், தன்னை நலிவதற்காகக் கம்ஸனால் ஏவப்பட்டுக் கொக்கின் வடிவங்கொண்டு வந்த
பகாஸுரனைக் கண்டு பலராமன் முதலியார் கூப்பாடுபோட,
அதுகண்டு ஸ்ரீகிருஷ்ணன், இது வெறும் பட்சியே யென்று ஸாமாந்யமாக நினைப்பவன் போலப் புன்முறுவல் செய்து நிற்க,
அப்போது அவ்வசுரன் கண்ணனை விழுங்கிவிட, பலராமன் முதலியோர் சொல்ல முடியாத வளவு துக்கத்தை யடைந்து கதற,
அவ்வசுரனுடைய நெஞ்சில் ஸ்ரீ கிருஷ்ணன் நெருப்புப் போல எரிக்கவே, அவன் பொறுக்க முடியாமல் கண்ணனை
வெளியே உமிழந்து மூக்கினால்; குத்த நினைக்கையில், கண்ணபிரான் அவனது வாயல்குகளைத்
தனது இருக்கைகளினாலும் பற்றி விரைவாகக் கிழித்திட்டனன் என்பதாம்.

இலக்கு – ஆண்டாள் தன்னுடைய ஆசை சென்று சேரும்படியான குறிப்பிடம்.
எய்கிற்றியே? – சேர் ப்பிக்கவல்லையே? என்றுமாம்.
என்னை என்பதை உருபு மயக்கமாகக் கொண்டு, ‘எனக்காக’ எனப் பொருள் கொண்டு,
எய்கிற்றி – புஷ்ப பாணங்களைக் கண்ணபிரான் மீது பிரயோகிக்க வேணும் என்றவாறாகவு முரைக்க இடமுண்டு.

———————————————————————————————–

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

பதவுரை

(காமதேவா!’
நல்நறு மத்த மலர்—நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும்
முருக்கமலர்கொண்டு–முருக்க மலர்களையுங் கொண்டு
முப்போதும் மூன்று காலங்களிலும்
உன் அடி வணங்கி–உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான்தெய்வம், என்று
சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி
கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு–கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற
புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி–கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக–அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே
என்னை விதிக்கிற்றி–என்னை நீ செய்ய வேணும்.

மன்மதன் ரஜோ குண ப்ரசுரனாதலால் மதகரமான மலர்கள் அவனுக்கு இடத் தக்கவை யென்று கொண்டு
ஊமத்தை மலர்களையும் முருக்க மலர்களையுமிடுகிறபடி.
முப்போது – இரண்டு சந்தியும் ஒரு உச்சிப் போதும்.

இரண்டாமடியின் கருத்து: – நான் உன் அடி பணிவதற்குப் பலனாக என் மநோரதத்தை நீ நிறைவேற்றுதொழியில்,
எனது நெஞ்சானது மிகவுங் கொதிப்படைந்து, ‘மன்மதன் மெய்யே பலன்தருந் தெய்வமல்லன்’
இவன் பொய்த்தெய்வம்’ என்று நாடெங்குமறியும்படி நான் உன் மஹிமையை அழித்து நிந்திக்க நோpடும்’
அப்படிப்பட்ட பரி பவத்தை நீ அடையாது தப்பாமல் பேறு பெறுவிக்கப் பாராய் என்கை.

தத்துவம் – உண்மை; இலி – இல்லாதவன்.
வாசகத்து என்றது – நெஞ்சில் நினைக்குமளவே யன்றியே வெளிப்படையாகக் கூறுதலைக் கூறியவாறு.

(கோவிந்தனென்பதோர் பேரேழுதி)
கீழ்ப்பாட்டில் “கடல்வண்ண னென்பதோர் பேரேழுதி” என்றவிடத்து உரைத்தவையெல்லாம் இங்குக் கொள்ளத்தக்கன.

வித்தகன் – ஆச்சாரியப்படத் தகுந்த குணசேஷ்டிதங்களை யுடையவன் என்றபடி.

வாணன் என்பது. ‘வாழ்நன்’ என்பதன் மரூஉ.
திருவேங்கமுடையானை விளக்கென்றது – அவன் தன்னுடைய குணங்களெல்லாம்
திருமலையில் -வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் – –

———————————————————-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

பதவுரை

புராண–நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காம தேவா–மன்மதனே!
சுவரில்–சுவரிலே
நின் பேர் –உனது பெயர்களை
எழுதி–எழுதி
சுறவம் நல் கொடிகளும்–மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்
துரங்கங்களும்–குதிரைகளையும்
கவரி பிணாக்களும்–சாமரம் வீசுகின்ற பெண்களையும்
கரும்பு வில்லும்–கரும்பாகிற தநுஸ்ஸையும்
காட்டித் தந்தேன் கண்டாய்–உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன
அவரைப் பிராயம் தொடங்கி–இளம் பருவமே தொடங்கி
என்றும் ஆதரித்து–(அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி
எழுந்த–கிளர்ந்த
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளை
துவரைப் பிரானுக்கே–த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே
சங்கற்பித்து–(அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து
தொழுது வைத்தேன்–(உன்னை) தண்டனிடா நின்றேன்
(இந்த மநோரதத்தை)
ஒல்லை விதிக்கிற்றி–(நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும்.

கண்ண பிரானைக் காண வேணுமென்ற ஆவலுடைய ஆண்டாள் அவனைக் கண்டால்
பின்பு காமதேவனை மறக்க்க் கூடுமாதலால், அங்ஙனம் மறதி நேரிடாமைக்காக,
அந்த மன்மதனைப் பாரிஜந பாரிவாரங்களுடன் சுவரில் எழுதி வைக்கும்படியைக் கூறுவன, முன்னடிகள்.

புராண – பிரிந்தவர்களைக் கூட்ட வல்லவனாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளனவனே! என்றுங் கூறுவர்.
சுறவம்= மத்ஸ்யவிசேஷம். காமன் மீனைக் கொடியாகவுடையவனாதல் அறிக,
துரங்கம் வடசொல்.
கவரி – கஸாP என்ற வடசொல் விகாரம்.
பிணா – பெண் பொதுப் பெயர்
கரும்பு+வில். கருப்புவில்’ காமனுக்கு ‘இக்ஷுதந்வா’ என்று வடமொழியிற் பெயர் வழங்குமாற்றிக.

பின்னடிகளில், கண்ணபிரானை யன்றி மற்றொரு தேவதையை அநுபவிக்கத் தனக்கு ருசியில்லாமையும்,
அந்த ருசியைப் பயன் பெறுவிக்க வேண்டுமென்பதையும் கூறுகின்றனள்.

(அவரைப் பிராயம் இத்யாதி,) “பிராயந்தொடங்கி அவரை ஆதரித்து” என்று உரைப்பார் உளரேனும்
அது இகழத் தக்க உரையாம்’ ‘கவர’ என்ற வடசொல் இங்கு அவரை என்று திரிந்ததென்னலாம்.

துவரை – ?????? என்ற வடசொற்சிதைவு.
ஆண்டாளுடைய கொங்கைகளோடே ஆடல் கொடுக்கைக்குப் பதினாறாயிரம் பெண்களுக்கும் முன்னோட்டுக் கொடுத்த
கண்ணபிரான் வேணுமாய்த்து என்று ரஸோக்தியாக உரைப்பர்.

(தொழுது வைத்தேன்) இத்தொழுகையைக் காமனிடத்து அந்வயிப்பியாமல்
முலைகளிடத்தே அந்வயிப்பித்துப் பொருள் கொள்ளதலும் மிகச் சிறக்கும்.
அதாவது – கண்ணபிரானிடத்தில் ஆதாரமே எருவாக வளர்ந்த இம்முலைகள் அவனுக்கே யென்று ஸங்கல்பித்துக் கொண்டு,
இம்முலைகளைத் தொழாநின்றே னென்கை’ அவற்றைத் தொழுவானென் எனில்’
எம்பெருமானுடைய விபூதி களையெல்லாம் வணங்குங்குடியிலே பிறந்தவளாதலால்,
அவனுக்கென்று ஸங்கல்பிக்கப்பட்ட தன் முலைகளையும் பகவத் விபூதித்வ ப்ரதிபத்தியாலே தொழலாமிறே.
“அவனுக்கென்று ஸங்கல்பித்தால் பின்னை அவன் குணங்களோபாதி உபாஸ்யமாமித்தனையிறே” என்பது
பொரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல்.

ஒல்லை – இம் முலைகளின் செவ்வி அழிவதற்கு முன்னமே என்று கருத்து.

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
புராண –
நெடுநாளாக எனக்கு உபகரிக்குமவனே
பிரிந்தவர்களைக்கூட்ட வல்லவனாக புராணங்களிலே கூறப் பட்டுள்ளவனே -என்றுமாம் –
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
சுறவம் -மத்ஸ்ய விசேஷம் –
காமன் மீனைக் கொடியாக உடையவன்
துரங்கம் -குதிரை

கவரிப் பிணாக்ககளும் –
சாமரம் வீசுகின்ற பெண்களையும்

கருப்பு வில்லும் –
கரும்பு வில் -இஷூ தந்வா-என்னக் கடவது இ றே–

காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா

கண்ணபிரானை தவிர மற்று ஒரு தேவதையை அனுபவிக்க ருசி இல்லாமையும்
அந்த ருசியை பயன் பெறுவிக்க வேண்டும்படியையும்
மேலே சொல்கிறாள் –
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
இளம் பிராயம் தொடங்கி தொடங்கி
பிராயம் தொடங்கி அவரை ஆதரித்து -என்றும் உரைப்பர் -அது இகழத் தக்க உரை

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
த்வாரகை க்கு தலைவனான
அந்த கண்ணபிரானுக்கே-
ஆண்டாள் உடைய கொங்கைகள் உடன் ஆடல் கொடுக்கைக்கு
பதினாறாயிரம் பெண்களுக்கு முன்னோட்டம் கொடுத்த த்வாரகா தீசன் வேணும் ஆய்த்து-ரசோக்தி-

தொழுது வைத்தேன் –
காமன் இடத்து அன்வயிக்காமல்
கொங்கைகள் இடம் -அவன் ஆதாரமே எருவாக வளர்ந்த முலைகள்
அவனுக்கே என்று சங்கல்ப்பித்துக் கொண்டு
அவன் விபூதியும் உத்தேச்யம் என்பதால் –
அவனுக்கு என்று சங்கல்பித்தால்
பின்னை அவன் குணங்களோ பாதி
உபாஸ்யமாம் இத்தனை இறே -என்று ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூகதி

ஒல்லை விதிக்கிற்றயே-
இம்முலைகளின் செவ்வி அழிவதற்கு முன்பே -என்று கருத்து –

———————————————————————————————

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5-

பதவுரை

மன்மதனே!-
வானிடை–ஸ்வர்க்க லோகத்தில்
வாழும்–வாழுகின்ற
அவ் வானவர்க்கு–விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர்–ப்ராஹ்மணர்
வேள்வியில்–யாகத்தில்
வகுத்த அலி–கொடுத்த ஹவிஸ்ஸை
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து–காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளானவை
மானிடவர்க்கு என்று பேச்சு படில்–(அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப–கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல
ஊனிடை — (தனது) திருமேனியில்
ஆழி சங்கு–திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)
உத்தமற்கு என்று–புருஷோத்தமனுக்காக
உன்னித்து எழுந்த–ஆதரவுடன் கிளர்ந்த யவை) என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால்
வாழகில்லேன்–உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’
(கண்டாய்–முன்னிலையசை.)

இந்நிலவுலகில் அந்தணர்கள் அனுட்டிக்கும் யாகங்களில் என்று இந்திரன் முதலிய தேவர்கட்குவகுக்கும் புரோடாசத்தை,
மிகவும் அற்பஜந்துவாகிய ஒரு காட்டு நரி கிட்டி அந்த ஹவிஸ்ஸைக் காலால் கடந்தும் மூக்கால் மோந்தும் நஷ்டமாக்குவது போல்,
கண்ணபிரானக்காகக் கிளர்ந்தெழுந்த என் கொங்கைகளை மானிடர்க்கு உரியனவாகப் பேசும் பேச்சொன்று
இப் பூமண்டலத்தில் கிளம்புமேயாகில் எனது உயிர் உடனே மாய்ந்துவிடும்,
அப்பேச்சுத் தானே எனக்கு விஷமாகுமென்று காமனை நோக்கிக் கூறுகின்றாள்.

இதனால் மநுஷ்யனாய்ப் பிறந்த ஒரு பிள்ளைக்கு ஆண்டாளைத் தாரை வார்த்துத் தரலாமென்ற ஒரு பேச்சு
ஒரு காபுருஷன் வாயில் வந்தாலும் அது தனக்கு அஸஹ்ய மெனக்கூறும் முகத்தால்
‘கண்ணபிரா னொருவனையே தான் பதியாகப் பெற விரும்புமாற்றைக் கூறியவாறு.

‘அங்கைத் தைலத் திடையாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று செங்கச்சுக் கொண்டு
கண்ணாகிக் காணீர் கோவிந்தனுக்.. கல்லால் வாயில் போகா” என்று மேலும் கூறுவள்.
தேவர்களுக்கு இட்ட புரோடாசத்தை நரி கெடுக்குமாபோல – என்ற இவ்வுவமையினால்
‘இவளுடைய கொங்கை மானிடர்க்கு உரியன என்னும் பேச்சு உலகிலுண்டானால் பின்பு
அம்முலைகள் எம்பெருமானுக்கு ஹேயமா மென்னுமிடம் தோற்றுவிக்கப்படும். அவி-ஹவிஸ் என்ற வடசொல் விகாரம்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி-
இந்த நிலங்களில் அந்தணர்கள் அனுட்டிக்கும் யாகங்களில்
இந்த்ரன் முதலான தேவர்கட்கு வைக்கும் புரோடசத்தை

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
மிகவும் அல்ப ஜந்துவாகிற
ஒரு காட்டு நரி கிட்டி
அந்த ஹவிஸ் சை காலால் கடந்தும்
மூக்கால் மோந்தும்
நஷ்டம் ஆக்குவது போலே –

ஊனிடை யாழி சம்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தடமுலைகள் –
கண்ணபிரானுக்காக கிளர்ந்து எழுந்த
என் கொங்கைகளை

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்-வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
மானிடர்வர்க்காக உரியனவாக பேசும் பேர் ஓன்று
இப் பூ மண்டலத்திலே கிளம்புமே யாகில்
என் உயிர் உடனே மாய்ந்து விடும் –
அப் பேச்சு தானே தனக்கு விஷம் ஆகும் என்று
காமனை நோக்கிக் கூறுகின்றாள் –
இதனால்
மனுஷ்யனாய் பிறந்த ஒரு பிள்ளைக்கு
ஆண்டாளைத் தாரை வார்த்துத் தரலாம் என்ற
ஒரு பேச்சு ஒரு கா புருஷன் வாயில் வந்தாலும்
அது தனக்கு அசக்யம் என்னும் கூறும் முகத்தால்
கண்ணபிரான் ஒருவனையே தான் பதியாக விரும்புமாற்றை கூறிய வாறு –

அங்கைத் தலைத்திடை ஆழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்து சிறு மானிடவரைக் காணில் நானும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -என்று மேலும் கூறுவள் –

தேவர்களுக்கு இட்ட புருடோசத்தை நரி கெடுக்குமா போலே -என்ற இந்த உவமையினால்
இவளுடைய கொங்கை மானிடவர்க்கு உரியன என்னும் பேச்சு
உலகில் உண்டானால்
பின்பு அம முலைகள் எம்பெருமானுக்கு ஹேயமாம் என்னும் இடம் தோற்று விக்கப்படும்

அவி -ஹவிஸ்

————————————————————————————————–

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் —1-6–

பதவுரை

காமதேவா–மன்மதனே!
உரு உடையார்–அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள்–யௌவன பருவமுடையராயும்
நல்லார்–காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள்–பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில்
திருந்தவே நோற்கின்றேன்–நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’
கரு உடை முகில் வண்ணன்–(நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்
காயா வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
ஒத்து வல்லார்களை கொண்டு–காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு
வைகல்–நாள்தோறும்
தெருவிடை–நீ வரும் வழியிலே
எதிர் கொண்டு–எதிரே சென்று
கருவிளை போல் வண்ணன்–காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான்
கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால்–செந்தாமரை மலரின் நிறம் போன்ற
காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்
எனக்கு–என் விஷயத்தில்
திருந்தவே நோக்க–விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி
அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

எம்பெருமானை அடிபணிய வேண்டுவோர்
“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
வேத வித்துக்களான வைதிகரை முன்னிட்டுப் பணிவது போல், ராஜஸ தேவதையான காமனைக் குறித்து
நோன்பு நோற்கைக்கு ஆண்டாள் சில அதிகாரிகளை முன்னிட்டுக் கொண்டு இழியுமாறு கூறுவன, முன்னடிகள்.

ஒத்து-ஓதப்படுவது ப்ரகரண பலத்தினால் காமஸூத்ரமாகிற வேதத்தை இங்குக்கூறும்’
அதாவது – வாத்ஸ்யாயந சாஸ்த்ரம்

தெருவிடை எதிர்கொள்ளுகை – ஆதராதியத்தின் காரியம்.

திருந்தவே நோற்கின்றேன் என்றது-காமனைத் தொழுகை ஸ்வரூபநாசக மன்றோவென்று
இறாய்க்காமல் நோற்கின்றேன் என்றவாறு.

கருவுடைமுகில் – நீர்கொண்டெழுந்த காளமேகம். நோக்கு + எனக்கு, நோக்கெனக்கு’ தொகுத்தல் விகாரம்.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவது போலே
ராஜச தேவதையான காமதேவனை குறித்து
நோன்பு நோற்க அதிகாரிகளை முன்னிட்டு இழியுமாறு
ஒத்து –ஓதப்படுவது –
பிரகரண பலத்தாலே இங்கு காம சூத்ரமான வேதத்தைக் கூறும்
தெருவிடை எதிர் கொள்ளுகை-ஆதார அதிசயத்தின் கார்யம்
திருந்தவே நோற்கின்றேன்
ஸ்வரூப நாசம் அன்றோ என்று இறாய்க்காமல் நோற்கின்றேன்
கருவுடை முகில் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் –

——————————————————————————————————

காயுடை நெல்லொடு கரும்பமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வணங்குகின்றேன்
தேசமுன் அளந்தவன் திரிவிக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே—-7–

பதவுரை

மன்மதனே மன்மதனே!
காய் உடை நெல்லோடு–பசுங்காய் நெல்லும்
கரும்பு–கரும்பும்
அமைத்து–சமைத்து
(அதனோடு கூட)
கட்டி–கருப்புக் கட்டியும்
அரிசி–பச்சரிசியும்
அவல்–அவலும்
(ஆகிய இவற்றையும்)
அமைத்து–சமைத்து
அளந்தவன் -(திருவடிகளால்) அளந்தருளினவனும்
திருவிக்கிரமன்–திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்
என்னை–என்னுடைய
சாய் உடை–ஒளியை யுடைய
வயிறும்–வயிற்றையும்
மென் தடம் முலையும்–மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும்
வாய் உடை–நல்ல ஸ்வரத்தையுடையராயும்
மறையவர் -காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய
மந்திரத்தால்–மந்திரத்தினால்
உன்னை வணங்குகின்றேன்-’-
முன்–மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்
தேசம் ஸகல லோகங்களையும்
திருக் கைகளால்- (தனது) திருக்கையினால்
தீண்டும் வண்ணம்–ஸ்பர்சிக்கும்படி பண்ணி
தரணியில்–(இப்) பூமண்டலத்தில்-
தலைப் புகழ்–நிலை நின்ற கீர்த்தியை
தர கிற்றி–(நான்பெறும்படி) தந்தருள வேணும்.

கட்டி -கருப்புக் கட்டி
சாய் வுடை-ஒளியை உடைய
தலைப் புகழ் -நிலை நின்ற கீர்த்தி

பால்மாறாத பசுங்காய் நெல்லும், கரும்பும், கருப்புக்கட்டியும், பச்சரிசியும், அவலுமாகிற இவை
ரஜோ குண ப்ரசுரனான காம தேவனுக்கு ஆமவையென்க.
“வாயுடைமறையவர் மந்திரத்தால்” என்றது – காம சாஸ்த்ரமாகிய வாத்ஸ்யாயநத்திற் கூறியமுறை வழுவாமல் என்றபடி.

தேசமுன்னளந்த வரலாறு:- மஹாபலி என்னும் அஸுரராஜன் தன் வல்லமையினால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று
மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்த பொழுது அரசிழந்த தேவர்கள்
திருமாலைச் சரணமுடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு அந்த மாவலியினடஞ்சென்று
தன் காலடியால் மூவடி மண் வேண்டி அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து
ஓரடியாற் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து மூன்றும் அடிக்காக அவன் முடியிற் காலை வைத்து
அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.

ஆண்டாள் இங்கு இவ்வபதாநத்தைக் கூறியது – ‘என்னைத் தீண்டவேணும்’ என்று ஒருவரும் விரும்பாதிருக்கத்
தானே உலகங்களையெல்லாம் தீண்டியருளினவன் தீண்டு தீண்டென்று வைகலும் வாய்வெருவுகின்ற என்னைத் தீண்டவேணும்’ என்று
ஒருவரும் விரும்பாதிருக்கத் தானே உலகங்களையெல்லாம் தீண்டியருளினவன் தீண்டு தீண்டென்று
வைகலும் வாய்வெருவுகின்ற என்னைத் தீண்டினால் வரும் பாவமென்னோ? என்று வருந்துகின்றமையைக் காட்டுதற்கென்க.

என்னை – உருபு மயக்கம். சாய்-ஹாயா என்கிற வடசொற்சிதைவு.
முலைக்கு மென்மையாவது – காதலனுடைய பிரிவைக் கணப்பொழுதும் பொறுக்ககில்லாமை.
தரணி-யரணீ;. தலைப்புகழ் – தலையான புகழ்’ சிறந்த புகழ் என்கை:
‘எம்பெருமானாலே தீண்டப்பெற்றவள் இவள்’ என்று அனைவராலுங் கொண்டாடப்பெறுகை.
கிற்றி-கில் என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த முன்னிலை யொருமை வினைமுற்று.

பால் மாறாத பசுங்காய் நெல்லும்
கரும்பும்
பச்சரிசியும்
கருப்புக் கட்டியும்
அவலும்
இவை ரஜோ குண பிரகரனான காம தேவனுக்கு ஆமவை
வாயுடை மறையவர் மந்திரத்தால்
வாத்சாயயானத்தில் கூறிய முறை வழுவாமல் -என்றபடி –

என்னைத் தீண்ட வேண்டும் என்று ஒருவரும் விரும்பாது இருக்க
அன்று தானே உலகங்களை எல்லாம் தானே தீண்டி அருளினவன்
தீண்டு தீண்டு என்று வைகலும் வாய் வெருவுகின்ற என்னை தீண்டினால்
வரும் பாவம் என்னோ -என்கிறபடி
முலைக்கு மென்மையாவது -காதலன் பிரிவை ஷணப் பொழுதும் பிரிய ஆற்றாமை
தலைப் புகழ் –
எம்பெருமானாலே தாண்டப் பெற்றவள் இவள் என்கிற நிலை பெற்ற புகளை பெற -என்றபடி –

——————————————–

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பதவுரை

தேச உடை–(பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும்
திறல் உடை–மிடுக்கை யுடையவனும்
எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா–மன்மதனே!
மாசு உடை–அழுக்குப் படிந்த
உடம்பொடு–உடம்போடே கூட
தலை–தலை மயிரை
உலறி–விரித்துக் கொண்டு
வாய்ப் புறம் வெளுத்து–(தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று
ஒரு போது உண்டு–ஒரு வேளை புஜித்து
(இப்படிப்பட்ட வருத்தத்துடன்)
நோற்கின்ற நோன்பினை–(நான்) நோற்கின்ற நோன்பை
குறிக்கொள்–(நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’
இங்கு–இப்போது
பேசுவது ஒன்று உண்டு–சொல்ல வேண்டுவது ஒன்று உளது
(அதைச் சொல்லுகிறேன் கேள்’)
பெண்மையை–(என்னுடைய) ஸத்தையை
தலை யுடையத் தாக்கும் வண்ணம்–ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக
கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும்–கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற
இப் பேறு–இப் புருஷார்த்தத்தை
எனக்கு அருள்–எனக்கு அருளவேணும்.
(கண்டாய் – முன்னிலையசை.)

மாசுடை உடம்போடு – உடம்பில் அழுக்கேறும்படி முழுகாமலிருந்து என்றபடி.
கண்ணபிரானோடு கலக்கப் பெறாத சோகத்தினால் உடம்பழுக்குப் போகக் குளிக்கமாட்டிற்றிலள் என்க.
தலை உலறி ஸ்ரீகுழலில் பூக்களை அணிந்து கொள்ளாமலிருக்கையைக் கூறியவாறு.

வாய்ப்புறம் வெளுத்து – வெற்றிலை தின்கைக்கு ப்ரஸக்தியுமில்லாமையால் அதரம் வெளுக்க வேணுமத்தனையிறே.
‘ஒருபோதும் என்றவிடத்து உம்மை – இசைநிறையென்னலாம்.
‘என்றைக்காவது ஒருநாள் கண்ணபிரான் வந்து கூடுவன் கொல்’! என்னும் நசையினால் ஒருவேளை
உண்டு உயிரைக் காக்கின்றாள் போலும்.
குறிக்கோள் ஸ்ரீ ‘ஆண்டாள் இவ்வளவு வருத்தப்பட்டு ஒரு நோன்பை நோற்றாளே!’ என்று
உன் நெஞ்சில் எப்போதும் பட்டிருக்கவேண்டுமென்றபடி.

கண்ணபிரானுக்குத் திருவடி வருடும்படியான பாக்கியம் எனக்கு வாய்த்தாலன்றி என் ஸத்தை ஜீவியாதென்கை பின்னடிகளின் கருத்து.
அவனை முலையாலணைக்க வேண்டுகின்றவிவள் கால் பிடிக்கப் பெறவேண்டுவானென்? எனில்’
காலைப் பிடித்துக் கொண்டால் ஆகாத காரிய மொன்று மில்லையே யென்று நினைவு போலும்.

கேசவன் – பிரம ருத்திரர்கட்குத் தலைவன்’ கேசியைக் கொன்றவனென்றுமாம்.

மாசுடை யுடம்போடு தலை யுலறி
அழுக்கு உடம்புடன் தலையை விரித்துக் கொண்டு
கண்ண பிரான் உடன் கலக்காமல் இருக்கும் சோகத்தால் குளிக்காமல்
குழலில் பூக்களை அணிந்து கொள்ளாமல்
வாய்ப்புறம் வெளுத்து –
தாம்பூல சர்வணம் இல்லாமையாலே
வெத்திலை திண்கைக்கு பிரசங்கமும் இல்லை –

ஒரு போதும் உண்டு –
கண்ணபிரான் வந்து ஒரு நாள் கலப்பான் என்கிற நசையால்
ஒரு வேளை உண்டு உயிர் காக்கின்றாள் போலும்

தேசுடைத் திறலுடைக் காமதேவா-
பிரிந்தாரை சேர்ப்பதால் உண்டாகும் தேசு –

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
ஆண்டாள் இப்பாடு படுகிறாள் என்பதை நெஞ்சில் கொள்வாய் –

பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
ஜீவித்து இருக்கும் படி செய்வதற்கு உறுப்பாக

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய்
கண்ணபிரான் திருவடி வருடும்படியான பாக்கியம்
வாய்த்தால் அன்றி என் சத்தை ஜீவியாது -என்கிறாள்
அவனை முலையால் அணைக்க வேண்டியவள்
திருவடி பிடிக்க வேண்டுவான் என் என்னில்
திருவடி பிடித்துக் கொண்டால் ஆகாத கார்யம் ஓன்று இல்லை
கேசவன் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் தலைவன்
கேசியை நிரசித்தவன்
கேச பாசம் உள்ளவன்

—————————————————————————————————

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—19-

பதவுரை

முப்போதும்–(இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி–ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி–உன் பாதங்களில்
தூ மலர் தூய்–பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது–ஸேவித்து-
ஏத்துகின்றேன் நான்–ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்
பார் கடல் வண்ணனுக்கே– பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே
பழுது இன்றி–குற்றமொன்றுமில்லாமல்
பணி செய்து–கைங்கரியம் பண்ணி
வாழப் பெறா விடில்–உஜ்ஜீவியா தொழிவேனாகில்
அழுது அழுது–(பின்பு நான்) பல காலும் அழுது
அலமந்து–தடுமாறி
அம்மா வழங்க–‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய
வழங்க -சஞ்சரித்து
அது–அப்படி என்னைத் துடிக்க விடுவது
ஆற்றவும்–மிகவும்
உனக்கு உறைக்கும்–உன் தலை மேல் ஏறும்’ (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது
உழுவது ஓர் எருத்தினை–ஏருழுகின்ற ஒரு எருதை
நுகம் கொடு பாய்ந்து–நுகத் தடியால் தள்ளி
ஊட்டம் இன்றி –தீனி யில்லாமல்
துரந்தால் ஒக்கும்–ஒட்டி விடுவதைப் போலாம்

ஸாத்விகராயிப்பார் பகவதாராதநம் பண்ணித் தலைக் கட்டின பிறகு திருவடிகளிலே விழுந்து
‘நான் தொடங்கின திருவாராதநத்தைத் தலைக்கட்டினேன்,
திரு வுள்ளத்திற்குப் பாங்கான படியே போது போக்கி யருள வேணும்’ என்று ஸ்தோத்ர ரூபமானவற்றை விண்ணப்பஞ் செய்வது போல்,
இவள் மன்மதனிடத்திற் சில விண்ணப்பஞ் செய்கிறாள்.

“தூரிமலர்தூவி” என்ற பாடம் மறுக்கத் தக்கது.
“ஏத்துகின்றேன்’ என்பதை, வினைமுற்றாகவும், வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம்.

(பழுதின்றி) பணிசெய்கையில் பழுதில்லாமையாவது – ஸ்வப்ரயோஜநத்வ புத்தி கலசாமல் கைங்கரியம் பண்ணுகை’
“மற்றைநங் காமங்கள் மாற்று” என்றது காண்க. “வழுவிலா அடிமை செய்யவேண்டும்” என்றார் ஆழ்வாரும்.

நான் இத்தனை காரியஞ்செய்து உன்னடி பணியச் செய்தேயும் நீ உபேக்ஷித்து
என்னைக் கண்ணபிரானோடு கூட்டாதொழிவையாகில், நான் துக்கம் பொறுக்கமாட்டாமல்
மிகவு மழுது அம்மா! என்று கதறித் திரியும்படி நேரிடும்’
அந்தப் பாதகம் உன்தலைமேலேறும் ஆதலால் நீ என்னை உபேக்ஷி தொழியவேனுமென்கை மூன்றாமடியின் கருத்து.

பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் — சரணாகதனை நோக்கா விட்டால் இவனுடைய பாப பலத்தை
அவன் அநுபவித்து அவனுடைய ஸுக்ருதபலம் இவன் பக்கலிலே வருவதாகச் சொல்லாநின்றதிறே’
அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின் ஆச்ரயணத்துக்கு ஒருபலின்றிக்கே யொழியுமாகில்
அது உனக்குப் பொல்லாதாங்கிடாய்.” என்பதாம்.

கடையடியின் கருத்து:-நான் உனக்கு இன்றளவுஞ் செய்த பணிவிடைகளை நீ ஏற்றுக்கொண்டு
என் காரியத்தைச் செய்து முடிக்காமற் போவது –
உழவன் தன் ஜீவநத்துக்காக எருதினிடத்தில் பூர்ணமாக வேலையை வாங்கிக் கொண்டு, பின்பு அதற்குத்
தீனி இடாமல் நுகத்தடியால் அடித்துத் தள்ளி ஒட்டுவது போலாம்.
கொடு – கொண்டு என்பதன் சிதைவு.

சாத்விகராய் இருப்பார்
பகவத் ஆராதனம் பண்ணி தலைக் கட்டின பின்
திருவடிகளிலே விழுந்து
நான் தொடங்கின திரு வாராதனத்தைத் தலைக் கட்டினேன்
திரு உள்ளத்துக்குப் பாங்கான படி போது போக்கி அருள வேணும்
என்று ஸ்தோத்ர ரூபம் ஆனவற்றை விண்ணப்பம் செய்வது போலே
மன்மதன் இடத்தில் விண்ணப்பம் செய்கிறாள்

பழுதின்றி –
ஸ்வ பிரயோஜ நத்வ புத்தி கலசாமல் கைங்கர்யம் பண்ணுகை
மற்றை நம் காமங்கள் மாற்று -போல
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆழ்வார்

நான் இத்தனை பட்டாலும்
கண்ணபிரான் உடன் சேர்க்காமல் ஒழிவையாகில்
நான் துக்கம் பொறாமல்
அழுது அம்மா என்று கதறித் திரியும்படி நேரிடும்
அந்தப் பாதகம் உன் தலை மேல் ஏறும் ஆதலால்
நீ என்னை உபேஷியாது ஒழிய வேணும்

சரணாகதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாப பலத்தை அவன் அனுபவித்து
அவனுடைய ஸூ க்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக
சொல்லா நின்றது இ றே
அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின
ஆஸ்ரயணத்துக்கு ஒரு பலம் இன்றிக்கே ஒழியுமாகில்
அது உனக்கு பொல்லாங்கு ஆம் கிடாய் –
நான் உனக்கு இன்றளவும் செய்த பணிவிடைகளை
நீ ஏற்றுக் கொண்டு என் கார்யம் முடிக்காமல் போவது
உழவன் தன ஜீவனத்துக்காக
எருதுவினிடத்தில் பூரணமாக வேலை வாங்கிக் கொண்டு
அதற்கு தீவனம் போடாமல் நுகத்தடியால் அடித்துத் தள்ளி ஓட்டுவது போலாம் –
கொடு -கொண்டு -என்பதன் சிதைவு
தூ மலர் தூவி -பாடம் மறுக்கத் தக்கது –

———————————————————————————————-

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

பதவுரை

கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை–கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய
கழல் இணை பணிந்து–இரண்டு பாதங்களையும் வணங்கி
அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று–
கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும்
பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று
பொருப்பு அன்ன –மலை போன்ற
மாடம்–மாடங்கள்
பொலிந்து தோன்றும்–மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற
புதுவையர் -ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு
கோன்–ஸ்வாமியான
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய (மகளாகிற-)
கோதை–ஆண்டாள் (அருளிச் செய்த)
விருப்புடை–விருப்பமடியாகப் பிறந்த
இன் தமிழ் மாலை–இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
விண்ணவர் கோன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
நண்ணுவர்–கிட்டப் பெறுவர்

இத் திருமொழி கற்றார் பெறும் பேறு கூறுமிப்பாசுரம் திருநாமப்பாட்டென்றும்
பல ச்ருதியென்றும் வழங்கப்பெறும்.

கரியலற மருப்பினை யோசித்த வரலாறு :- வில்விழா என்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு
ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுமளவில், அவ்வரண்மனை வாசல் வழியில்
தம்மைக் கொல்லும் பொருட்டு அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயா பீடமென்னும் மத யானை சீறிவர
அவ்யாதவவீரர்; அதனை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பது போல
எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்வானையை உயிர் தொலைத்து விட்டு
உள்ளே போயினரென்பதாம்.

புள்வாய் பிளந்த வரலாற்றை, கீழ் இரண்டாம் பாட்டினுரையிற் காண்க.

விட்டுசித்தன் ஸ்ரீ “வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே,- கோயில் கொண்ட கோவலன்” என்றபடி
பெரியாழ்வார் எம்பெருமானுக்குத் தம் திருவுள்ளத்தையே கோயிலாக அமைத்தருளினமையால்
விஷ்ணுசித்தரெனக் காரணப் பெயர் பெற்றனரென்க.

“விருப்புடன்” என்ற பாடத்தில், ‘விருப்புடன் வல்லார்’ என இயையும்.

ஸாத்விகாக்ரேஸரரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக
மடலெடுப்பாரோ பாதி காமன் காலிலே விழவேண்டும்படியான இவளைப் போலன்றிக்கே
இப்ரபந்தங் கற்றவர்கள் ஸம்ஸாரத்தை விட்டு, நித்யாநுபவம் பண்ணுகிற
நித்யஸூரிகளோடே ஒரு கோவையாய் அநுபவிக்கப் பெறுவர்கள்.” .

நிகமத்தில்
பல சுருதி அருளி தலைக் கட்டுகிறார்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் –
என்பதால் விஷ்ணு சித்தர்
விருப்புடன் வல்லார்
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து
பகவல் லாபத்துக்காக
மடல் எடுப்பாரோபாதி காமன் காலிலே விழ வேண்டும்படியான
இவளைப் போல் அன்றிக்கே
இப்பிரபந்தம் கற்றார்கள்
சம்சாரத்தை வீட்டு நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக அனுபவிக்கப் பெறுவார்கள் –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply