ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -78 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால்
நமக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது
நிற்க ஒண்ணாது கிடீர்
என்கிறார் –

———————–

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பை நாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய
திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

————————–

வியாக்யானம் –

இடரார் படுவார் –
அவனைப் பிரிந்தால் வரும் கிலேசம்
அனுபவிக்க வல்லார் தான் ஆர்
சோறு உண்டாய் இருக்க யார் பசியோடு இருக்க வல்லார் -என்னுமா போலே

எழு நெஞ்சே –
அறிவுடைய நீ சடக்கென புறப்பட்டு
இனி நமக்கு இடர் வந்ததாகில்
முதலை பட்டது படும் அத்தனை –

வேழம்  தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த-
வேழத்தை தொடரா நிற்பதாய்
தான் பலத்தை யுடைத்தாய்
நெஞ்சில் இரக்கம் அற்று இருந்துள்ள முதலையை முடித்த –

படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்-
ஸ்வ சம்ஸ்லேஷத்தாலே வந்த ஹர்ஷம் தோற்றும்படியான
பணங்களை யுடையனுமாய்
விஸ்தருதனுமாய் இருந்துள்ள
திரு வநந்த   வாழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படியான ஸ்வ பாவத்தை
உடையவன் திருவடிகளை ஆஸ்ரயிப்போம்

இத்தால்
ஆஸ்ரிதர் பக்கலிலும்
அநாஸ்ரிதர் பக்கலிலும்
அவன் இருக்கும் படி சொல்லுகிறது

விரோதியைப் போக்கி
திரு அநந்த ஆழ்வானைப் போலே அடிமை கொள்ளும் -என்றபடி   –

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —
கொய்யப் படுவதான நாகத்தின் உடைய போக்யமான புஷ்பத்தைக் கொண்டு கை தொழுதும்

நாகப் பூ -என்றவத்தால்
அப்ராக்ருதமான புஷ்பம் வேண்டாம்
காட்டிலே ஒரு பூ அமையும் -என்கிறது

வனசரர் ஆகையாலே
வந்யம் ஆன புஷ்பங்கள் அறிந்து இருப்பார் -என்று சீயர் அருளிச் செய்வர்

பண்டு பூப் பறித்தான் ஒருவன் இடரைப் போக்கித் தனக்காக்கிக் கொண்டான் கண்டாயே
நமக்கும் அப்படியே செய்யும் காண் –

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்-
இடரார் படுவார் எழு நெஞ்சே-என்று அந்வயம் –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading