ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -48 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே -நமக்கு இத் தேவைகள் எல்லாம் வேண்டா கிடாய்
அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான்
ஆன பின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய்
என்கிறார் –

———————–

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து
ஓர் கை மேல்–மற்றொரு திருக் கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலை யுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

————————————–

வியாக்யானம் –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றி  –
ஒரு திருவடிகளை மேலே எடுத்து
ஒரு கையாலே சத்ருக்களைச் சுழற்றினான் ஆய்த்து –

அன்றிக்கே
ஒரு திருக் கையாலே நமுசியினுடைய காலைச் சென்று பற்றிச்
சுழற்றி எறிந்தபடி யாகவுமாம் –

யோர் கை மேல்  சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் –
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
ஒரு திருக் கையிலே மறுகிக் கொடு வருகிற
தேவர்களோடு அசுரர்களோடு வாசியற
வெருவும்படிக்கு ஈடாக பிரதி பஷத்தின் மேலே நெருப்பைத் தூவும் ஸ்வ பாவத்தை யுடைத்தாய்
யுத்தத்துக்கு பரிகரமான திரு வாழியை தரித்தான் ஆய்த்து-

அநுகூல பிரதிகூல விபாகம் அற அஞ்சும் படி இறே
அப்போதைய வியாபாரம் தான் இருந்தபடி

அவன் சிவந்த திருவடிகளிலே கிட்டும்படி வாசனை பண்ணு
சேவடி தானே  இருந்த இடத்திலே வந்தால்
இறாயாமையே வேண்டுவது  –

மருவாழி நெஞ்சே மகிழ்ந்து –
அளவுடைய நெஞ்சே
அது செய்யும் இடத்தில் தேவைக்கு ஒரு கால் செய்ததாக ஒண்ணாது
ப்ரீதி பூர்வகமாய்க் கிட்டும்படி வாசனை பண்ணு –

விரோதிகளைப் போக்குவானும்
திருவடிகளைத் தருவானும்
ப்ரீதன் ஆவானும்
அவன் ஆனால்
அனுபவித்து மகிழ மாட்டாயோ –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading