அவதாரிகை –
விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து
சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு
ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது
என்கிறார் –
————————————–
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–
பதவுரை
மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.
——————————————————————————-
வியாக்யானம் –
வாரி சுருக்கி-
ஆனைக்கு பலம் குறைக்கைக்காக தண்ணீரைக் குறைப்பார் ஆய்த்து –
அதுக்குத் தண்ணீர் உடைய ஸ்தானே
இவற்றுக்கு விஷயங்கள் அத்தனை இறே
போகாதிகளைக் கொடு போய் க்ரமத்தாலே குறைப்பது –
கடுக மாற்றில் அது தானே குதறு காட்டுகைக்கு உடலாய் இருக்குமதாய்த்து –
அன்றியிலே
முடிய வதிலே விட்டு வைத்தான் ஆகில்
செருக்காலே அவை தாம் தமக்கு உரியன அல்லாத படி கொண்டு கிளரும்
அது புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி -யாய் விடும்
ஆன பின்பு இரண்டுக்கும் நடுவாக
சத்தா மாதரத்துக்கு வேண்டுவது செய்து கொண்டு போருகை –
மதக் களிறு ஐந்தினையும்-
மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –
சேரி திரியாமல் செந்நிறீஇ –
பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில்
விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இறே-யானை
அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால்
பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து –
கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே-
அதாவது ஸூஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய்
தர்மி க்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –
அது தான் விஹித கர்மங்களை பலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து
ஷீண பாபனாய் –
ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய்
ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து
உபாசனம் த்ருவாஸ்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி என்றும்
விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று
சொல்லுகிறபடியே
அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள் –
பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்–கீதை -18-55-
மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்-
இவர்கள் காண்பார்கள் என்னும் இடத்துக்கு திருஷ்டாந்தம் மேல்
பண்டு ஒரு நாள் ஓர் யானையானது புறம்புத்தை அந்ய பரதைகள் அடைய அற்று
அவன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணுவோம் என்று ஸ்ரத்தை பண்ணி
ஒரு பொய்கையிலே புக்கு இடர்ப்பட்ட அதற்காகத்
தன் திருவடிகளிலே அடிமை கொண்டவனுடைய
திருவடிகளைக் காணப் பெறுவார்கள் –
இத்தால் –
விரோதியான முதலையைப் போக்கி
தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே
இவர்கள் உடைய பிரதிபந்தகங்களைப் போக்கித்
தன்னைக் காட்டிக் கொடுக்கும் -என்கிறது –
சேரி திரியாமல் செந்நிறீ –
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே—கீதை -2-59-
நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம் பொருளைக் கண்டதும்,
ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்து விடும்.
தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன.
எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை.
பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
கூரிய மெய்ஞ்ஞானம் –
ஸூபாஸ்ரயமாயும்
உபாய உபேயமாயும் அனுசந்திக்கை –
———————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply